-சேக்கிழான்

5. கற்பவை கற்போம்!
கல்வியின் முக்கியத்துவம், கல்விச்சாலைகளின் அவசியம், அங்கு பயிற்றுவிக்கப்பட வேண்டிய கல்வியின் அடிப்படை அம்சம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட மகாகவி பாரதி, கல்வியின் வேரான அம்சமாக ஆன்மிகக் கல்வியை வலியுறுத்துகிறார்.
இந்த இடத்தில் பண்பாட்டுக் கல்வியின் அவசியம் குறித்து பூஜனீய ஓம்காரானந்த சுவாமிகள் கூறிய கருத்தைக் காண்போம்:
“நம் பாரத தேசத்தில் உள்ள அறிவுச் செல்வங்களில் ஒரு சிலவற்றை மேலோட்டமாக கற்பதற்குக்கூட நம் வாழ்நாள் போதாது. வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் அவற்றை ஒட்டி எழுந்த தர்ம சாஸ்திரங்கள் என் அனைத்து மொழிகளிலும் ஒப்புயர்வற்ற, வாழ்க்கைக்கு பயனுள்ள கருத்துக்களைக் கூறுகின்ற நூல்கள் எண்ணிலடங்காதவை.
மனிதனின் துன்பத்திற்கு காரணத்தை எடுத்துக் கூறி, அதனை அடியோடு நீக்குவதற்கு வழியையும் கூறி, மனிதன் தன்னைப் பேரின்ப வடிவமாக உணர்ந்துகொள்ளச் செய்வதே பண்டைய பாரத தேச பண்பாட்டுக் கல்வியின் நோக்கமாகும்.
‘ஸா வித்யா யா விமுக்தயே:’ எது மனிதனை அனைத்து தளைகளினின்றும் விடுவிக்குமோ , அதுவே கல்வி என்கிறது விஷ்ணு புராணம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அத்தகைய அமரத்துவம் வாய்ந்த நூல்கள் இன்று நூலகங்களிலும் , குறுந்தகடுகளிலும் வலைத்தளத்திலும் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் கற்கின்ற மாணவர்களும் , நம் தேசத்தின் மக்கள் தொகையில் வெகு சிலரே ஆவர்.
இன்று பெரும்பாலான பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. திருக்குறள் முதலான நீதி நூல்கள் பெயரளவுக்குத் தான் கற்பிக்கப்படுகின்றன.
அறிவுநலம், மனநலம், சொல்நலம், செயல்நலம் , உடல்நலம், உறவுநலம் , பொருள்நலம் ஆகிய அனைத்து நலன்களும் இணைந்தது தான் ஆன்மநலம். உடலில் வாழ்கின்ற உயிராகிய ஆன்மா நலமாக வாழ வேண்டுமானால் ஆன்மிகக் கல்வியை பெறுவது மிக முக்கியமாகும்.”
(கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்)
-என்று கூறுவார் சுவாமி ஓம்காரானந்தர் (1956- 2021). சுவாமி விவேகானந்தர் கூறிய அறிவுரையே இக்கருத்துகளின் அடிப்படை. அவர் கூறுகிறார்:
“ஆன்மிக ஞானத்தை போதித்தால், அதன் பின்னர் உலக அறிவும் நீங்கள் விரும்புகின்ற மற்ற எல்லா அறிவும் உங்களைத் தொடர்ந்து வரும். ஆனால் மதத்தை விலக்கி விட்டு வேறு எந்த அறிவைப் பெற நீங்கள் முயன்றாலும் உங்கள் முயற்சி வீண் என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.” (ஞான தீபம் 5.157-8)
மகாகவி பாரதி தான் முன்வைத்த தேசியக் கல்வி என்ற திட்ட்த்தில் வலியுறுத்தும் பாடங்கள்: 1. எழுத்து, படிப்பு, கணக்கு, 2. இலேசான சரித்திரப் பாடங்கள், 3. பூமி சாஸ்திரம், 4. மதப்படிப்பு, 5. ராஜ்ய சாஸ்திரம், 6. பொருள் நூல், 7. ஸயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம், 8. சரீரப் பயிற்சி, 9. யாத்திரை (Excursion) ஆகியன. இவற்றில் மதக்கல்வியின் அவசியம் குறித்து பாரதி எழுதி இருப்பதில் சில பத்திகள் இதோ…
நான்கு வேதங்கள், ஆறு தர்சனங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிஹாஸங்கள், பகவத்கீதை, பக்தர் பாடல்கள், சித்தர் நூல்கள் – இவற்றை ஆதாரமாகக் கொண்டது ஹிந்து மதம். ஹிந்து மதத்தில் கிளைகள் இருந்த போதிலும், அக்கிளைகள் சில சமயங்களில் அறியாமையால் ஒன்றையொன்று தூஷணை செய்து கொண்ட போதிலும், ஹிந்து மதம் ஒன்றுதான்; பிரிக்க முடியாது. வெவ்வேறு வ்யாக்யானங்கள் வெவ்வேறு அதிகாரிகளைக் கருதிச் செய்யப்பட்டன. பிற்காலத்தில் சில குப்பைகள் நம்முடைய ஞான ஊற்றாகிய புராணங்கள் முதலியவற்றிலே கலந்துவிட்டன. மத த்வேஷங்கள், அனாவசிய மூட பக்திகள் முதலியனவே அந்தக் குப்பைகளாம். ஆதலால், தேசியப் பள்ளிக்கூடத்து மாணாக்கர்களுக்கு உபாத்தியாயர் தத்தம் இஷ்ட தெய்வங்களினிடம் பரம பக்தி செலுத்தி வழிபாடு செய்து வரவேண்டும் என்று கற்பிப்பதுடன், இதர தெய்வங்களைப் பழித்தல், பகைத்தல் என்ற மூடச் செயல்களைக் கட்டோடு விட்டுவிடும்படி போதிக்க வேண்டும்.
‘ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வ தந்தி’ (கடவுள் ஒருவரே, அவரை ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர்) என்ற ரிக் வேத உண்மையை மாணாக்கரின் உள்ளத்தில் ஆழப் பதியுமாறு செய்ய வேண்டும். மேலும், கண்ணபிரான் “எல்லா உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்” என்று கீதையில் கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர் — எல்லா உயிர்களும் பரமாத்மாவின் அம்சங்களே என்பதை நன்கறிந்து, அவற்றை மனம் மொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையை செய்துவர வேண்டும் என்பது ஹிந்து மதத்தின் மூலதர்மம் என்பதை மாணாக்கர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.
(தேசியக் கல்வி- சுதேசமித்திரன்- 1920)
ஆன்மிகக் கல்வி மட்டுமல்ல, தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதே தேசியக் கல்வியின் இலக்கணம் என்கிறார் மகாகவி பாரதி.
தேச பாஷையே பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும்.
(தேசியக் கல்வி- சுதேசமித்திரன்- 1920)
தனது ‘போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்’ கவிதையில்,
வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ!
என்று விரட்டும் மகாகவி பாரதி,
மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வா!
(தேசிய கீதங்கள்- போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்)
-என்று வரவேற்கிறார்.
உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம்போல் விளங்குகிறோம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப்போல வலிமையும், திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமேயில்லை.
என்று ‘தமிழ்’ (சுதேசமித்திரன் – 3.4.1916) கட்டுரையில் கூறும் மகாகவி பாரதி,
புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
(தமிழ்த்தாய்: 9)
என்றும் பாடுவதைக் கவனிக்க வேண்டும். வெற்று தாய்மொழிப் பற்று மட்டும் கூடாது; உலக சாத்திரங்கள், அறிவுக் கருவூலங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அவை மாணவர்களால் பயிலப்பட வேண்டும் என்பதே பாரதியின் துணிபு.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
-என்பது அவரது ஆணை. தனது ‘புதிய ஆத்திசூடி’யில் இளைஞர்கள் எவ்வெவற்றைப் பயில வேண்டும் என்று குறிப்பாகக் கோடிட்டுக் காட்டுகிறார் பாரதி. அவை:
சரித்திரத் தேர்ச்சி கொள் (25)
நீதிநூல் பயில் (57)
ராஜஸம் பயில் (90)
(உ)லோகநூல் கற்றுணர் (101)
வானநூல் பயிற்சிகொள் (104).
(புதிய ஆத்திசூடி)
புதிய ஆத்திச்சூடியில் பாரதி கூறி இருப்பவை அனைத்தும் மாணவர்கள் பயின்று பின்பற்ற வேண்டியவை என்பது கூறாமலே விளங்கும்.
(தொடர்கிறது)
$$$