-திருநின்றவூர் ரவிகுமார்
‘Integration of princely states’ எனும் நூலில் நாம் அறிந்திராத சம்பவங்களும் படேலும் வி.பி.மேனனும் புரிந்த சாகஸக் கதைகளும் உள்ளன. அவற்றை ஒன்றுதிரட்டி ஒரு கட்டுரையாகத் தந்துள்ளார் நமது இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிக்குமார். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப நாட்களில் நிகழ்ந்த சில காட்சிகளைக் காட்டுவதன் மூலமாக, கட்டுச்சோற்று மூட்டையில் பெருச்சாளியாக இருந்த ஒருவரை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை…

உலகப் போருக்கு பிறகு இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் விலகுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்தியாவுக்கு விடுதலை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாத வின்சென்ட் சர்ச்சில், இந்தியாவை – பாகிஸ்தான், ஹிந்துஸ்தான், பிரின்ஸிஸ்தான் (மன்னர் ஆட்சிப் பகுதி) – என மூன்றாகப் பிரிவினை செய்ய வேண்டுமென்றார்.
சர்ச்சிலுக்கு எதிரான கட்சி எனக் கருதப்படும் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்து, அட்லி பிரதமரானார். எதிர்க்கட்சியானாலும் சர்ச்சிலின் கருத்தை மனதில் உள்வாங்கிக் கொண்ட அட்லி, இந்தியாவுக்கு விடுதலை தந்தபோது ‘பிரிட்டிஷ் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு கப்பம் கட்டிய மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகளைப் பற்றி எந்த விதமான முடிவையும் தெளிவாகக் கூறவில்லை. மாறாக, அவை மன்னரின் விருப்பப்படியோ அல்லது அந்த மக்களின் விருப்பப்படியோ தங்கள் விருப்பம் போல எந்த அடிப்படையில் வேண்டுமானாலும் முடிவெடுத்து, இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ அல்லது சுதந்திரமான தேசமாகவோ தங்களை அறிவித்துக் கொள்ளலாம்’ என்று விடுதலை அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது சுமார் 564 சமஸ்தான அரசுகள் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, அதே வேளையில் அவர்களின் நேரடி ஆட்சியில் இல்லாமல் இருந்தன. அதில் பல அரசுகள் பெரிய சமஸ்தானங்கள், பல சிறிய ஜமீன்கள் என்று பரப்பளவில் வேறுபட்டவை. அப்போதிருந்த ரயில் நிலையங்கள், ரயில்வே வழித்தடங்களில் அறுபது சதவீதம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சுமார் ஐம்பது சதவீத நிதி அவர்கள் வசம் இருந்தது.
இன்றைய பாகிஸ்தான், பங்களாதேஷ் பகுதியில் இருந்த முஸ்லிம் அரசர்கள் இஸ்லாமிய பாகிஸ்தானை எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக் கொண்டனர். ஆனால், ஹிந்துஸ்தான் பகுதியில் இருந்த முஸ்லிம், ஹிந்து ராஜாக்கள் சிலர் இந்தியாவில் சேருவதை விரும்பாமல் தனித்து ஆட்சி செய்ய விரும்பினார்கள்.
அவற்றில் பிரச்னைக்குரியவையாக இருந்தவை காஷ்மீர், இன்றைய குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத், இன்றைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், இன்றைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருவிதாங்கூர் அரசுகளாகும். இன்றைய ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அரசர்கள் சலுகைகள் கேட்டார்களே தவிர முரண்டு பிடித்து பெரிதாக பிரச்னை செய்யவில்லை.
***
மன்னராட்சிப் பகுதிகளையும் இந்தியாவுடன் இணைத்த பெருமை ‘இந்தியாவின் பிஸ்மார்க், குஜராத்தில் இருந்து வந்த இரும்பு மனிதர்’ என்று வைஸ்ராய் வாவல் பிரபுவினால் பாராட்டப்பட்ட வல்லபபாய் படேலைச் சேரும். பிரபல செய்தியாளரான எம்.வி.காமத் எழுதுகிறார்:
“சமஸ்தானங்களை இணைத்து ஐக்கிய இந்தியாவை உருவாக்கிய புகழ் சர்தார் படேலுக்கு என்றாலும், அவர் அதில் வெற்றியடையக் காரணமாக இருந்தவர் வாபல் பங்குனி மேனன். அவருக்குதான் இந்திய மன்னர்களின் மனப்போக்கும் உளவியலும் நன்கு தெரியும். வி.பி.மேனனின் முழுமையான ஒத்துழைப்பு படேலுக்கு இருந்ததால்தான் அவரால் சமஸ்தானங்களை இணைக்க முடிந்தது…
வி.பி.மேனனின் இளமைக் காலம் பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை. அவர் ஆரம்பத்தில் மவுன்ட்பேட்டன் பிரபுவுக்கும், பின்னர் சர்தார் வல்லபாய் படேலுக்கும் வலதுகரமாகச் செயல்பட்டவர். அவர் விரும்பியிருந்தால் எந்தப் பதவியையும் அதிகாரத்தையும் அடைந்திருக்க முடியும். ஆனால் அவர் தானாகவே முடிவெடுத்து தன்னை மறைத்துக் கொண்டார். சுவடுகள் இல்லாமல் இருளில் கரைந்து போனார் அந்த மாமனிதர்” என்கிறார் எம்.வி.காமத்.
மேனன் வைஸ்ராய்க்கு வலதுகரம். பிறகு அமைச்சரவைச் செயலாளர். நேருவுக்கு நெருக்கமானவர் என்றாலும், படேலுக்கு வலதுகரமாக செயல்பட்டவர்; அதனால் நேருவின் கோபத்துக்கு ஆளானவர். இத்தனைக்கும் மேலாக தன் கடமை என்னவென்று தெரிந்து அதை சிறப்புடன் செய்த தேச பக்தர். அவர் அப்போதைய இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த சர் ராய் புச்சரின் துரோகத்தை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அவரை மடக்கியவர்.
***



வங்கதேசம் பிறப்பதற்குக் காரணமான இந்திய – பாகிஸ்தான் போரை வெற்றிகரமாக நடத்தியவர் ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக் ஷா. இந்திய விடுதலைக் காலத்தில் அவர் கர்னலாக இருந்தார். வி.பி.மேனன் பல்வேறு சமஸ்தான அதிபர்களைச் சந்தித்து, அவர்களை இந்தியாவுடன் ஐக்கியப்படுத்திய போது அவருடன் மானெக்ஷா இருந்துள்ளார். காஷ்மீர் அரசராக இருந்த ஹரிசிங்கை மேனன் சந்தித்துப் பேசி இணைப்புக் கடிதத்தைப் பெற்றபோது மானெக் ஷா அவருடன் இருந்துள்ளார். அதுபற்றி பின்னாளில் பிரபலச் செய்தியாளர் பிரேம் சங்கர் ஜா என்பவருக்கு அளித்துள்ள நேர்காணலில் பல விஷயங்களைச் சொல்லி உள்ளார். அதில் அவர் கூறியது:
“அப்போது நான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநரகத்தில் இருந்தேன். இந்தியா முழுக்க, குறிப்பாக மேற்கத்தியப் பகுதியிலும் பஞ்சாப்பிலும் அப்போது நடந்த ராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாளராக இருந்தேன். காஷ்மீரின் நிலைமை என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும்.
ஆரம்பத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்த பழங்குடியினர் காஷ்மீருக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் டாம் டைக்கஸ் அவரது மனைவியுடன் பாரமுல்லாவில் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தார். ஊடுருவல் காரர்களால் அவர்கள் கொல்லப்பட்டனர்.
மகாராஜாவின் படையில் ஐம்பது சதவீதம் பேர் முஸ்லிம்கள். மீதி பேர்கள் டோக்ராக்கள். மகாராஜாவின் படையில் இருந்த முஸ்லிம்கள், பாகிஸ்தான் பழங்குடியினருடன் சேர்ந்து கொண்டதாக பல இடங்களிலிருந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
மதியம் இரண்டரை மணி வாக்கில் ஜெனரல் சர் ராய் புச்சர் என் அறைக்குள் நுழைந்து, ‘நீ வி.பி.மேனனுடன் ஸ்ரீநகர் போக வேண்டும். விமானம் நான்கு மணிக்கு. தயாராகு’ என்றார். ‘எதற்கு… நான்…’ என்றேன். ‘அங்குள்ள படைகளின் நிலையை கணிக்கத்தான்’ என்றார் அவர். மகாராஜா இணைப்புக் கடிதத்தில் கையெழுத்திடாமல் நாம் எதுவும் செய்ய முடியாது. எப்பொழுது வேண்டுமானாலும் கிளம்பத் தயாராக இந்திய ராணுவம் விமான நிலையத்தில் காத்திருந்தது. ராஜாவிடம் கையெழுத்து வாங்க மேனனுடன் நானும் சென்றேன்.
ஸ்ரீநகரில் இறங்கினோம். எந்த ஒழுங்குமற்ற குழப்பமான சூழ்நிலை அங்கு நிலவியதைப் பார்த்தேன். மகாராஜா இந்த அறைக்கும் அந்த அறைக்குமாக ஓடிக் கொண்டிருந்தார். ஒரு பெரிய அறையில் நகைகள் குவிந்து கிடந்தன. முத்துமாலை, பவள மாலை என இவ்வளவு நகைகளை என் வாழ்நாளில் முதன்முதலில் பார்த்தேன். நகைகளைக் கொண்டு செல்ல வண்டிகள் காத்திருந்தன.
‘இந்தியா எனக்கு உதவி செய்யாவிட்டால் நானே என் படைகளுடன் சேர்ந்து அவர்களுடன் போரிடுவேன்’ என்று சொல்லியபடி மகாராஜா ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்குள் சென்றார். எனக்குத் தாங்கவில்லை, ‘மகாராஜா, அதுவே சரியான செயல். அது படையினருக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும்’ என்று சொன்னேன்.
சூழ்நிலையைப் பற்றி பலரிடம் பேசி அறிந்து கொண்டேன். பாகிஸ்தானின் ஊடுருவல்காரர்கள் ஸ்ரீநகருக்கு அருகில் சுமார் 8 -10 கி.மீ. தூரம் வரை வந்துவிட்டார்கள் என்பது புரிந்தது. மேனன் மகாராஜாவிடமும் மந்திரியிடமும் பேசி இணைப்புக் கடிதத்தில் கையெழுத்து வாங்கினார். நாங்கள் இரவு அங்கிருந்து புறப்பட்டு தில்லி வந்தோம். அப்போது அதிகாலை மூன்று அல்லது நான்கு மணியிருக்கும்.
நான் தளபதி சர் ராய் புச்சரிடம் சென்று விஷயத்தைச் சொன்னேன். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார். ‘சரி, போய் குளித்துத் தயாராகு. ஒன்பது மணிக்கு அமைச்சரவை கூட்டம். என்னுடன் நீயும் வா. நான் போகும் வழியில் உன்னையும் காரில் ஏற்றிக் கொள்கிறேன்’ என்றார்.
கூட்டம் தொடங்கியது. இணைப்புக் கடிதம் கொடுக்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்துச் செய்ய வேண்டியது பற்றி ஆரம்பித்தார்கள். நேரு வழக்கம் போல, ரஷ்யா, ஆப்பிரிக்கா, ஐ.நா.மன்றம் என்று உரை நிகழ்த்தினார். எல்லோரும் நெளிந்து கொண்டிருந்தோம். படேல் பொறுமை இழந்தார்.
“ஜவஹர்லால், காஷ்மீர் உங்களுக்கு வேண்டுமா? அல்லது அவர்களுக்குக் கொடுத்துவிடப் போகிறீர்களா?” என்று காட்டமாக கேட்டார். “காஷ்மீர் எனக்குத் தேவை” என்றார் நேரு. “அப்படியானால் உத்தரவு கொடுங்கள்” என்று கூறிய படேல், நேரு வேறு எதுவும் சொல்வதற்குள் என்னை திரும்பிப் பார்த்து, “உங்களுக்கு உத்தரவு கிடைத்துவிட்டது. ஆக வேண்டியதைப் பாருங்கள்” என்றார். பதினோரு, பன்னிரண்டு மணிவாக்கில் இந்திய ராணுவ வீரர்களின் முதல் படையணி விமானத்தில் புறப்பட்டுச் சென்றது.
-மேற்கண்ட மானெக் ஷாவின் வார்த்தைகள் அன்றைய சூழ்நிலை பற்றிய ஒரு சிறு பகுதிதான்.
அதே நாட்களில் தான் ஹைதராபாத் ராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிந்தாலும் இருநாட்டு ராணுவத் தளபதிகளாக இருந்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் தான். அவர்கள் அப்போது வகித்த பதவிக்கு ஏற்ப அந்தந்த நாட்டிற்கு விசுவாசமாக இல்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சொல்லியபடி செயல்பட்டார்கள்.
பிரிட்டனுக்கு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது பிடிக்கவில்லை. காஷ்மீர் யாருக்கு என்பதில் இருநாட்டுப் படைகளும் மோதிக் கொள்வதில் பிரிட்டனுக்கு ஆர்வம் இல்லை. ஏனெனில் போர் என்று வந்தால் இந்திய ராணுவம் வென்று விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். காஷ்மீர் மகாராஜாவையும் அவரது பிரதம மந்திரியையும் தனித்தனியாக்கினார்கள். ‘இந்தியாவுடன் ஐக்கியமாகாமல் இருந்தால்…..’ என்று அவர்கள் மனதில் ஆசையை விதைத்தார்கள். இந்தியாவுடன் இணைவதை தாமதப்படுத்தினார்கள்.
இருநாட்டுப் படைகளிலும் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பிரிட்டன் அரசு உத்தரவு பிறப்பித்தது – ‘இந்தியாவுக்கு இடையூறாகச் செயல்பட வேண்டும்; தடைகள் போட வேண்டும். எதிராகச் செயல்பட வேண்டும். எதுவும் முடியாத சூழ்நிலையில், முக்கியமான நேரத்தில் பதவியை விட்டு விலகி, இந்தியாவைத் தவிக்க விட வேண்டும்’. அவ்வாறே செயல்பட்டார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள்.
***
ஹைதராபாத் நிஜாமுக்கு ஆதரவாக பம்பாய், ஆமதாபாத் நகரங்கள் மீது ஆங்கில- பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தலாம் என்ற வதந்தியை இந்தியாவில் கிளப்பி விட்டனர். இந்திய ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சர் ராய் புச்சர், ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக பிரிட்டன் இருக்கும் நிலையில் இரண்டு நாட்டு ராணுவமும் மோதுவது சரியல்ல. அது மட்டுமன்றி ஜம்மு- காஷ்மீர் பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலையில் இந்திய ராணுவம் இல்லை’ என்று நேரு காதில் ஓதினார். ஆனால் அமைச்சரவைக் கூட்டத்திலோ வேறு மாதிரியாக, காஷ்மீரைக் காப்பாற்ற இந்திய ராணுவத்தை அனுப்புவதென்று முடிவெடுக்கப்பட்டது.
முடிவு உறுதியானதும் ஜெனரல் புச்சர் எழுந்து நின்றார். ‘சிக்கலானதொரு விஷயம் குறித்து நீங்கள் முடிவெடுத்துள்ளீர்கள். காஷ்மீருக்குப் படை அனுப்பவும், அதேவேளையில் ஹைதராபாத்தில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவெடுத்துள்ளீர்கள். இரண்டும் ஒரே காலகட்டத்தில் என்பதால் அவை எப்பொழுது, எப்படி முடியுமென்று கூற முடியாது. எனவே இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டாம் என்று உங்களுடைய தலைமைத் தளபதியாக நான் ஆலோசனை கூறுகிறேன். என்னுடைய ஆலோசனையை நீங்கள் ஏற்காவிட்டால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்’ என்று அச்சுறுத்தினார்.
பிரிவினையின் போது இந்திய ராணுவத்தில் உயர் பதவியில் இந்தியர்கள் மிகவும் குறைவு. அவர்களும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இணையான அனுபவம் பெற்றவர்கள் இல்லை. அப்போது இந்தியர்கள் எட்டிய அதிகபட்ச உயரம் பிரிகேடியர் பதவிதான் என்கிறார் ஜெனரல் எஸ்.கே.சின்ஹா. ஆறு பிரிகேரியர்கள் அப்பொழுது இருந்தார்கள். அவர்களில் ஒருவர் முஸ்லிம்; அக்பர் கான் என்ற அவர் பிரிவினையின் போது பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டார். அங்கு குறுகிய காலத்தில் ஜெனரலாகவும் ஆக்கப்பட்டார். பழங்குடியினர் என்ற பெயரில் முதன்முதலில் நடந்த ஊடுருவலின் போது அவர் பாகிஸ்தானின் ஜெனரலாக, ராணுவத்த்தில் இரண்டாம் இடத்தில் இருந்தார். கர்னல், லெப்டினன்ட் கர்னல் நிலையில் 35-40 பேர்கள் இருந்தார்கள்.
நேரு குழப்பத்தில் கலக்கமுடன் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆனால் எந்தத் தயக்கமும் இல்லாமல் படேல், “ஜெனரல் புச்சர் நீங்கள் ராஜினாமா செய்யலாம். முடிவெடுத்தபடி இரண்டு ராணுவ நடவடிக்கைகளும் நடக்கும்” என்றார். ஜெனரல் புச்சர் கோபத்துடன் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
***



ஹைதராபாத் நிஜாம் மிகப் பெரும் பணக்காரர். சுதந்திரம் குறித்த தகவல் தெரிந்தவுடன் அவர், ஜூன் 1947இல், தான் தனி நாடாக இருக்கப் போவதாக அறிவித்தார். தன் ஆட்சியில் இருந்து முன்பு பிடுங்கப்பட்ட பிரார் பகுதி (தற்போது மகாராஷ்டிராவில் உள்ளது) தனக்கு மீண்டும் தரப்பட வேண்டுமென்றார். பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் மூன்றாவது நாடாக தான் இணைய விரும்புவதாகச் சொன்னார். இதற்கெல்லாம் விதையிட்டவர் பிரிட்டிஷ் அரசுப் பிரதிநிதிக்கு ஆலோசகராக இருந்த சர் கான்ராட் கார்ஃபீல்ட்.
கோவா துறைமுகத்தைப் பயன்படுத்த போர்ச்சுகீசியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார் நிஜாம். அதன்மூலம் தன் நாட்டிற்கு கடல்வழித் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முயன்றார். அது மட்டுமன்றி பாகிஸ்தான் அரசுக்கு (அந்தக் காலத்தில்) ரூபாய் 20 கோடிக்கு இந்திய முதலீட்டுப் பத்திரங்களை கடன் என்ற பெயரில் கொடுத்தார். அவர்கள் பத்திரங்களைக் காட்டி இந்தியாவிடம் பணம் கேட்டார்கள். அதேசமயம் ஹைதராபாத் பகுதியில் ‘ரசாக்கர்கள்’ என்ற பெயரில் முஸ்லிம் மதவெறியர்கள் ஹிந்துக்களைத் தாக்கினார்கள்.
இந்த நிலையில் இந்தியாவின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என்ற செய்தியுடன் நிஜாமைப் பார்க்க கே.எம்.முன்ஷியை படேல் அனுப்பினார். ‘இந்தியப் படைகள் வந்தால் அவர்கள் இங்குள்ள ஒன்றரை கோடி ஹிந்துக்களின் சாம்பலையும் எலும்புகளையும்தான் பார்க்க வேண்டியிருக்கும்’ என்று கொக்கரித்தான் ரசாக்கர் படைத்தலைவன் காசிம் ரஸ்வி.
ஒருபுறம் நிஜாம் தனது பிரதிநிதி, பிரதம அமைச்சர் மூலம் நேரு, மவுன்ட்பேட்டன் உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். காலதாமதமாவதைத் தவிர்க்க படேல், மேனன் வேண்டுகோளின்படி பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற இந்திய அரசுப் பிரதிநிதியான கே.எம்.முன்ஷியை வீட்டுக்காவலில் வைத்தார் நிஜாம்.
***
இந்நிலையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் படேல் ‘ஹைதராபாத்துக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்’ என்றார். ஹைதராபாத் பிரச்னையையும் ஐ.நா.மன்றத்திற்குக் கொண்டுசெல்ல நினைத்த நேரு இதனால் கடுப்பானார். படேலைப் பார்த்து, “நீங்கள் முழுக்க முழுக்க மதவாதச் சிந்தனை கொண்டவர். இனி உங்கள் ஆலோசனைகள் எதையும் நான் ஏற்கப் போவதில்லை” என்று ஆத்திரத்தோடு கத்தினார். அமைச்சரவைக் கூட்டத்தில் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்பட்ட படேல், வேதனையில் இறுகிய முகத்துடன் எழுந்து கூட்டத்திலிருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் உயிரோடு இருந்த இரண்டு ஆண்டுகளில் எந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.
படேல் அவமானப்படுத்தப்பட்டு வெளியேறியதைப் பார்த்த மேனன் பிறகு தானும் வெளியேறினார். ராஜாஜியிடம் விஷயத்தைச் சொன்னார். ராஜாஜி இருவரையும் சமரசம் செய்ய தன் மாளிகைக்கு அழைத்தார். மேனனையும் அந்தச் சந்திப்புக்கு ராஜாஜி அழைத்திருந்தார்.
கூட்டத்திற்குப் புறப்படும் போது மேனனிடம் ஒரு உறையைக் கொண்டுவந்து கொடுத்தார் அரசு உயர் அதிகாரி ஒருவர். அதை வாங்கிப் படித்தார் மேனன். பிறகு அந்தக் கடித உறையை அப்படியே கொண்டுபோய் ராஜாஜியிடம் கொடுத்தார். ராஜாஜி அந்தக் கடிதத்தைப் படித்தார். அதில் ஹைதராபாத்தில் எழுபது வயது கிறிஸ்துவ கன்னியாஸ்திரி ஒருவர் ரசாக்கர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டதற்கு பிரிட்டிஷ் ஹைகமிஷனர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
நேருவும் படேலும் வந்தவுடன் கூட்டம் தொடங்கியது. சர்வதேச நாடுகளின் கருத்து பற்றி நேரு கவலைப்பட்டார். ராஜாஜி கடிதத்தை நேருவிடம் கொடுத்தார். அதைப் படித்தவுடன் நேருவின் முகம் சிவந்தது. மேஜையை ஓங்கி கையால் குத்தி, “அவர்களுக்கு (ரசாக்கர்களுக்கு) தக்க பாடம் புகட்ட வேண்டும். காலம் கடத்த வேண்டாம். உடனே நடவடிக்கை எடுங்கள்” என்று கூவினார். “அறுவைச் சிகிச்சை செய்தால் வலிக்குமே என்று தயங்கக் கூடாது. புற்றுநோயை வெட்டி எறிவதுதான் சரி” என்று நேருவை சமாதானப்படுத்தும் விதமாக பேசிய ராஜாஜி, மேனனைப் பார்த்து “ஜெனரல் ராய் புச்சருக்கு செய்தியைச் சொல்லுங்கள்” என்றார்.
ஜெனரல் புச்சருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. புச்சருக்கு முன் இந்திய ராணுவத்திற்குத் தளபதியாக இருந்த ஜெனரல் லாக்கார்ட் இந்தியாவுக்கு துரோகம் இழைத்தது நிரூபணமானதால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். புச்சர் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று கடவுளின் பெயரால் சத்தியம் செய்து பதவி ஏற்றவர். செய்தி கிடைத்ததும் அவர் மறுநாள் காலை ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராணுவ அதிகாரி சௌத்ரிக்கு உத்தரவிட்டார்.
அன்று இரவு ஏழு மணியளவில் ஜெனரல் புச்சர் கராச்சியில் பாகிஸ்தான் படையின் தலைமைத் தளபதியாக இருந்த பிரிட்டிஷ் தளபதியை தொலைபேசியில் அழைத்தார். இருவரும் பிரஞ்சு மொழியில் பேசிக் கொண்டார்கள்.
அன்றிரவு பன்னிரண்டு மணிக்குப் பிறகு ஜெனரல் புச்சர் நேருவுக்கும் படேலுக்கும் தொலைபேசினார். தொலைபேசியை எடுத்த படேலிடம், “பாகிஸ்தானுக்கு ஆதரவாக பிரிட்டன் விமானப்படை பம்பாய் மற்றும் ஆமதாபாத்தைத் தாக்கப் போவதாக தகவல் வந்திருக்கிறது. எனவே ஹைதராபாத் நடவடிக்கையை ஒத்தி வைக்கலாமா?” என்றார். “உலகப் போரின் போது லண்டன் தாக்கப்பட்டது. அதுபோல பம்பாய், ஆமதாபாத் நகரங்களும் தாக்குதலை எதிர்கொண்டு நிற்கும்” என்று பட்டேல் கூறிவிட்டார்.
***



மறுநாள் காலை பத்து மணியளவில் வி.பி.மேனன் ஜெனரல் புச்சரின் அறைக்குள் நுழைந்தார். ஹைதராபாத் நடவடிக்கை பற்றிக் கேட்க வருவதாக நினைத்து அதுபற்றி புச்சர் எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட பின்னர் மேனன், “அதெல்லாம் எனக்குத் தெரியும். நான் வேறொரு விஷயம் பற்றிப் பேச வந்தேன். நீங்கள் நேற்று மாலை பாகிஸ்தான் தளபதியுடன் பேசினீர்களா?” என்று கேட்டார். இந்த வார்த்தையைக் கேட்டதும் புச்சரின் முகம் வெளிறியது.
”வி பி., நண்பர்கள் பேசிக்கொள்ளக் கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்களா?”
“அது நட்புரீதியிலான பேச்சு தானா?”
“அதில் உங்களுக்கு சந்தேகமா?”
“ஏன் பிரஞ்சு மொழியில் பேசினீர்கள்?”
“நீங்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்க ஆரம்பித்து விட்டீர்களா?”
“தேவை ஏற்பட்டால் செய்ய வேண்டாமா? அது உண்மையிலேயே நட்பு ரீதியான உரையாடல் தானா?”
“ஆமாம். நிச்சயமாக!”
உடனே, வி.பி.மேனன் ஒரு ஆவணத்தை எடுத்து புச்சரிடம் கொடுத்தார். முந்தின நாள் புச்சர் பிரெஞ்சு மொழியில் பேசியதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அதில் இருந்தது. அதன் விவரம்:
புச்சர்: ஹைதராபாத் மீதான தாக்குதல் இன்று இரவு தொடங்கப் போகிறது. அது நீண்ட நாட்கள் தாங்காது. நீங்கள் எதையாவது செய்வதாக இருந்தால் அதை உடனடியாகத் தொடங்கவும்.
பாகிஸ்தான் தளபதி: தகவலுக்கு நன்றி. நான் உடனடியாக லியாகத் அலிக்கு தகவல் தெரிவித்து விடுகிறேன். ஜின்னா மரணப்படுக்கையில் இருக்கிறார்.
புச்சர்: என் கடமை முடிந்ததும் உங்களிடம் நான் வந்து விடுகிறேன்.
தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதற்காக அவமானப்பட்டதாக நடித்த புச்சருக்கு இப்பொழுது வேர்த்து ஊற்றியது. கவலை தோய்ந்த முகத்தோடு வி.பி.மேனனைப் பார்த்து, “நான் என்ன செய்வது, வி.பி.? நான் ஒரு தவறு செய்து விட்டேன். அதற்காக வருத்தப்படுகிறேன்” என்றார்.
“பைபிளை கையில் வைத்துக்கொண்டு கடவுளின் பெயரால் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று நீங்கள் சத்தியம் செய்தீர்கள் இல்லையா?” என்று வி.பி.மேனன் கேட்டார்.
புச்சர்: வி.பி, தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். நான் செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்கிறேன். என்னை அவமானப்படுத்தாதீர்கள். நம் பழைய நட்பிற்காகக் கேட்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்.
புச்சரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுக் கொண்டார் மேனன். அதில், “என் உடல்நிலை காரணமாகவும் தனிப்பட்ட காரணங்களினாலும் ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து இதை ஏற்றுக்கொண்டு என்னை உடனடியாக விடுவிக்கவும்” என்றிருந்தது.
ஆயினும், வழக்கம் போல எதிரிகளையும் துரோகிகளையும் மன்னிக்கும் ஹிந்துவின் அசட்டுத்தனத்தால், அவர் உடனடியாக நீக்கப்படாமல் பணிக்காலம் முடிந்த பிறகு கொழுத்த ஓய்வூதியத்துடன் இங்கிலாந்து சென்றார்.
***
புச்சர் பயமுறுத்தியது போல பம்பாயும் ஆமதாபாத்தும் தாக்கப்படவில்லை. அவர் அச்சுறுத்தியது போல பதவியும் விலகவில்லை. ‘ஆபரேஷன் போலோ’ என்ற பெயரில் ஹைதராபாத்துக்குள் இந்திய ராணுவம் சென்றபோது ரசாக்கர் படைத்தலைவன் காசிம் ரஸ்வி சூளுரைத்தது போல ஒன்றரை கோடி ஹிந்துக்களின் சாம்பலும் எலும்பும் அங்கிருக்கவில்லை.
1948 செப்டம்பர் 13 தொடங்கி 17 க்குள் ‘ஆபரேஷன் போலோ’ முடிந்துவிட்டது. முதலிரண்டு நாட்களில் இருந்த எதிர்ப்பும்கூட அதற்கடுத்து இல்லை. சுமார் 800 ரசாக்கர்கள் இறந்து போனார்கள். இந்துக்கள் மீது நடத்திய கொலை, கொள்ளை, கற்பழிப்புகளை ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரிய எண்ணிக்கை இல்லை என்றே கருதப்பட்டது. காசிம் ரஸ்வி கைது செய்யப்பட்டார். லைக் அலி தலைமையில் இருந்த நிஜாமின் அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது. அவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். நிஜாம் தனது ராணுவத்தை சரணடையச் செய்தார்.
மேஜர் சௌத்ரியின் தலைமையிலான இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஹைதராபாத் சமஸ்தானம் வந்தது. கே.எம்.முன்ஷி வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். நிஜாம் அவரிடம் நேரில் சென்று எல்லா தகவல்களையும் கூறி, தில்லிக்கு மரியாதையாக அனுப்பி வைத்தார். இது தொடர்பாக நாடு முழுவதிலும் எந்த இடத்திலும் ஒரே ஒரு மதக் கலவரம் கூட நடக்கவில்லை.
***
கே.எம்.முன்ஷி எழுதியுள்ள ‘சுதந்திரத்துக்கான புனிதப் பயணம்’ (Pilgrimage to Freedom) என்ற நூலில் குறிப்பிட்டுள்ள ஒரு விஷயத்தை இங்கு நினைவுகூர்வது சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்திய அரசுப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட கே.எம்.முன்ஷி தில்லி வந்ததும் தன் பணி முடிந்து விட்டது என்பதால் அந்தப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதை ஏற்றுக்கொண்ட அரசு, தனக்கிடப்பட்ட பணியை அவர் திறம்பட நிறைவேற்றியதற்காகவும் அவரது நேர்மையான பணித்திறத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுவதாகச் சொல்லியது.
படேல் முன்ஷியிடம் நேருவைப் பார்த்துவிட்டு வரும்படி வற்புறுத்திக் கூறினார். அவர் சொன்னதற்காக மரியாதை நிமித்தமாக நேருவைப் போய்ப் பார்த்தார் முன்ஷி. “நான் நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குப் போனேன். உள்ளறையில் இருந்து அவர் வந்தார். இறுகிய முகத்துடன் என்னைப் பார்த்து, ‘ஹலோ, முன்ஷி’ என்றார். ‘நான் இப்பொழுது தில்லிக்கு வந்து விட்டேன். உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்’ என்று சொன்னேன். அவர் எதுவும் சொல்லாமல் போவதற்காகத் திரும்பினார். பிறகு என்ன நினைத்தாரோ, திரும்பி என் கையைக் குலுக்கினார். பிறகு சென்று விட்டார்.”
நான் படேலிடம் போனேன். “உங்கள் அறிவுரையை ஏற்று ஜவஹர்லாலைப் பார்க்க நான் சென்றிருக்கக் கூடாது. அதற்காக வருத்தப்படுகிறேன்” என்றேன். படேல் வாய்விட்டுச் சிரித்தார். “ஹைதராபாத்தின் அதிகாரத்தை நிலைகுலைய வைத்ததற்காக சிலர் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள். நிஜாமை ஒழித்துக் கட்டவில்லையே என்று உங்கள் மீது சிலர் ஆத்திரத்தோடு அலைகிறார்கள். சிலருக்கு அவர்களது கோபத்தை என் மீது காட்ட முடியவில்லை. அதை உங்கள் மீது காட்டி இருக்கிறார்கள்” என்று கூறினார்.
***
ஹைதராபாத்தைப் போல் காஷ்மீர்ப் பிரச்னையை அவ்வளவு சுலபமாக முடிக்க விடவில்லை பிரிட்டிஷார்.
இக்கட்டான சூழ்நிலையில் ஸ்ரீநகரில் இறங்கியது இந்திய ராணுவம். ராணுவத்தினர் முன்னூறு பேர் மட்டுமே. ஊடுருவல்காரர்களோ ஆயிரம் பேர். பழங்குடியினர் என்ற போர்வையில் சீருடை இல்லாமல் சாதாரண உடையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவர்களுடைய ஆயுதங்களுடன் வந்திருந்தார்கள். இந்திய ராணுவத்தினர் முதலில் பாராமுல்லாவை நோக்கிச் சென்றனர்; அந்த இடம் வரை வந்திருந்த பாகிஸ்த்தான் ஊடுருவல்காரர்களை விரட்டி யடித்தனர்.
பிறகு இந்தியப் படையினரின் வலிமை அதிகரித்தது. அங்கிருந்து நூறு கி,மீ. தூரத்தில் உள்ள ஊரியை நோக்கிச் சென்ற ராணுவம், அங்கிருந்த ஊடுருவல்காரர்களை விரட்டியது. அங்கிருந்து முசாபராபாத் நோக்கிப் பயணித்தது. அதுதான் ஊடுருவல்காரர்களின் முக்கிய வழி. அங்கிருந்த இரண்டு பாலங்களைக் கைப்பற்றி விட்டால், ஊடுருவலை ஏறத்தாழ நிறுத்தி விடலாம் என்பது நிலைமை.
முசாபராபாத்திற்குச் செல்லும் போது பாதி வழியில் தில்லியில் இருந்து ‘மேற்கொண்டு போக வேண்டாம்’ என்று செய்தி வந்தது. படைத்தலைவர் ஆச்சரியம் அடைந்தார். நிலைமை இந்தியப் படைகளுக்கு சாதகமாக இருப்பதை தில்லிக்கு விளக்கமாகத் தெரிவித்தார். ஆனால் தில்லியோ ‘மேலும் ஒரு அடி கூட முன்னே செல்ல வேண்டாம்’ என்று உத்தரவிட்டது.
தன்னிச்சையான போர் நிறுத்த அறிவிப்பை நேரு வெளியிட்டார். பிரச்னையை ஐ.நா.மன்றத்திற்குக் கொண்டு சென்றார். அதன் விளைவு, பிரச்னை இன்றுவரை நீடிக்கிறது.
***



அதேபோல காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது நேரு அரசு. ஷேக் அப்துல்லா கேட்டுக் கொண்டதற்காக 370வது ஷரத்து மூலமாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடிவு செய்தார் நேரு. முதலில், அது பற்றிய அரசியல் சாசனத்தை எழுதியவரும் சட்ட நிபுணருமான டாக்டர் அம்பேத்கரைச் சென்று பார்க்குமாறு ஷேக் அப்துல்லாவிடம் சொன்னார்.
ஷேக் அப்துல்லா சொன்னவற்றையெல்லாம் செவி மடுத்த டாக்டர் அம்பேத்கர், “உங்களுக்கு பாதுகாப்பு, நிதி, வாழ்வாதாரம் எல்லாவற்றையும் இந்தியா கொடுக்க வேண்டும். பதிலுக்கு நீங்கள் ஒன்றும் கொடுக்க மாட்டீர்கள். மாறாக காஷ்மீருக்குள் வருவதற்கே உங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்பதெல்லாம் அநியாயம். நான் இதை ஏற்க மாட்டேன்” என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்.
பிறகு நேரு மத்திய அமைச்சரான கோபால்சாமி ஐயங்கார் மூலம் ஷேக் அப்துல்லாவின் திட்டத்தை (370 சட்டப் பிரிவை) முன்னெடுத்தார். நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் கட்சியிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. ‘எப்படியாவது இதை நிறைவேற்றுங்கள்’ என்று ஐயங்காரிடம் சொல்லிவிட்டு நேரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.
ஐயங்கார் படேலை அணுகி, ‘நேருவின் விருப்பம்’ என்றார். படேலுக்கும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் விருப்பம் இல்லை. நேருவால் அவமானப்படுத்தப்பட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையிலும், தன் விருப்பத்திற்கு மாறான போதிலும், பெருந்தன்மையுடன் படேல் அந்த சட்ட ஷரத்தை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கும்படிச் செய்தார்.
அதனால் ஏற்பட்ட ‘ஒரே நாட்டில் இரண்டு கொடி, இரண்டு பிரதமர்’ என்ற அவலத்தை, ஜனசங்கத்தை நிறுவிய டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜி 1953 ஜூன் 23 ஆம் தேதி தனது பலிதானத்தால் முறியடித்தார். ஆனாலும் 370 சட்டப் பிரிவு தொடர்ந்தது. அதை பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியில் வந்து 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஜனாதிபதியின் ஆணையின் மூலம் உடைத்தெறிந்தது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைப் போல காஷ்மீரும் ஒரு மாநிலம் என்றானது. ஆனால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
***
1952 ஜூலை 24 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 370 சட்டப் பிரிவை ஆதரித்து நேரு பேசினார். அந்தப் பேச்சில் ‘ஜம்மு- காஷ்மீர் விஷயத்தைக் கையாண்டது முழுக்க முழுக்க சர்தார் படேல் தான்’ என்று கூறினார். 1950 இல் படேல் காலமாகிவிட்டார். பி.சங்கர் என்ற மத்திய அரசின் துணைச் செயலாளராக இருந்தவர் நேருவின் பேச்சு பற்றி அமைச்சராகவும் காஷ்மீர் விஷயத்தில் ஈடுபட்டவருமான கோபால்சாமி ஐயங்காரிடம் சொன்னார்.
அதைக் கேட்ட ஐயங்கார், “அந்தச் சட்டத்தின் விளைவுகளை அப்போதே நன்றாக மதிப்பிட்ட படேல் தனது கணிப்புக்கு மாறாக பண்டிட்ஜியின் விருப்பத்திற்காக ஏற்றுக்கொண்டார். அந்தப் பெருந்தன்மைக்குப் பதிலாய்க் கிடைத்தது இழிவரவு மட்டுமே” என்று வருத்தத்துடன் சொன்னாராம். படேலுக்கு மரணத்துக்குப் பின்பும் இழைக்கப்பட்ட அநீதி இது.
***
படேல் காலமானபோதும் நேரு அவரை அவமரியாதை செய்துள்ளார். அது எம்.கே.கே.நாயர் என்ற அரசு அதிகாரி எழுதிய ‘வித் நோ இல் ஃபீலிங் டு எனிபடி’ (With no ill feeling to anybody) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1950 டிசம்பர் 15 ஆம் தேதி படேல் பம்பாயில் காலமானார். அச்செய்தியைக் கேட்டவுடன் நேரு இரண்டு உத்தரவுகளை வி.பி.மேனனுக்கு அனுப்பினார். ஒன்று, படேல் பயன்படுத்திய கடிலாக் கார் உடனடியாக பிரதமர் அலுவலகத்திற்கு வர வேண்டும். இரண்டு, படேலின் இறுதிச் சடங்கில் எந்த அரசு அதிகாரியாவது கலந்துகொள்ள வேண்டுமென்றாலும் அவரவர் சொந்தச் செலவில் தான் செல்ல வேண்டும்.
ஆனால் வி.பி.மேனன் எல்லாத் துறை செயலாளர்களையும் கூப்பிட்டு “யார், யார் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க பம்பாய் போக விரும்புகிறீர்கள்?” என்று பட்டியல் கேட்டார். நேருவின் உத்தரவு பற்றி எதுவும் சொல்லவில்லை. அத்தனை பேர்களின் விமான பயணச் செலவையும் மேனனே ஏற்றுக்கொண்டார். இது நாயர் எழுதிய நூலில் உள்ளது.
சமஸ்தானங்கள் இணைந்து ஐக்கிய இந்தியா உருவானது பற்றிய உண்மையான விபரங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்று படேல் விரும்பினார். அதை ஆவணபடுத்தும்படி மேனனிடம் கேட்டுக்கொண்டார். படேலின் விருப்பத்திற்கு இணங்கி மேனன் பிறகு ‘தி ஸ்டோரி ஆஃப் இன்டக்ரேஷன் ஆஃப் தி இந்தியன் ஸ்டேட்ஸ்’ (The Story of Integration of Indian States) என்ற நூலை 1955இல் வெளியிட்டார். அதன் இரண்டாம் பாகத்தை ‘தி டிரான்ஸ்பர் ஆஃப் பவர் இன் இந்தியா’ (The Transfer of Power in India) என்ற பெயரில் 1957இல் வெளியிட்டார்.
அதன்மூலம் அவர் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு நீதி கிடைக்கச் செய்தார்.
$$$