அன்பே தளிகையாய்…

-ச.சண்முகநாதன்

தமிழை உருகி உருகிக் காதலிக்கிறார்கள் வைஷ்ணவர்கள். பொதுவாக தமிழை உயிர்ப்புடன் வைத்திருப்பது பக்தி இலக்கியங்களே என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம்.... எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதனின் அனுபவக் கட்டுரை...

சமீபத்தில் ஒரு வைஷ்ணவ நண்பர்  வீட்டுக்  கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. 

வைபவம் முழுவதும் தமிழும் தளிகையும் நடமாடின. 

வைபவம் நடக்கும் தேதியைக் குறித்த கையோடு தளிகைக்கு (சமையல் எனும் ) மெனு போடுவார்கள் என்றே நினைக்கிறேன். அன்பே தளிகையாய் ஆர்வமே நெய்யாக இன்புருகு  சிந்தையெல்லாம் இடுமெனுவாக இருக்கிறது.

இந்த சுவைமிக்க தளிகையை விட  தமிழின் சுவை இந்த வைபவங்களில் ஓங்கி நின்றது. தரையில் அமர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தத்திலிருந்து ஆழ்வார் பாசுரங்கள் இரண்டு மணி நேரம் படிக்கிறார்கள். இரண்டு மணி நேரம்! நேரம் போனதே தெரியவில்லை. சுவையைக் கூட்டுவதற்கோ என்னவோ, சில பாசுரங்களை மெதுவான tempoவில் பாடுகிறார்கள்.  தமிழ் மிகவும் அழகாகத் தெரிகிறது இவர்கள் பாடுகையில். 

ஆழ்வார் தமிழ்,  அருமையான உச்சரிப்பு, அத்தனை அர்ப்பணிப்புடன். இரண்டு பக்கமும் பாசுரம் படிப்பவர்கள் உட்கார்ந்து கொண்டு “ஒரு பாசுரத்தில் இரண்டு வரிகளை இவா உருட்ட அடுத்த இரண்டு வரிகளை அவா உருட்ட..” என்கிற வர்ணனை தான் சரி, அந்த அனுபவத்தை விவரிக்க. 

ஆண்டாள் பாசுரங்கள் மீது இவர்களுக்கென்ன இப்படி ஒரு காதலோ. ஆண்டாள் பாசுரங்கள் பாடும்பொழுது ஒரு புதுவித உற்சாகம் அனைவரிடமும். 

இரண்டு மணிநேர பாசுரப்  பிரவாகம். ஆண்டாளின்  ‘சிற்றஞ்சிறு காலே’ சொல்லி ‘வங்கக் கடல் கடைந்த மாதவனை’ப் பாடும்பொழுது தேவலோகத்தில் இருப்பது போல உணர்வு.

அங்கே மொழிக்கும் பக்திக்கும் இடையேயான மெல்லிய திரை அறுந்து விழுகிறது. தமிழ் மொழியும் பக்தியுணர்வும் வேறல்ல என்ற நிலை ஏற்படுகிறது. தமிழே பக்தி என்று, தமிழும் உணர்வும் ஒன்றாகிப்போகும் தருணத்தை அழகாக உருவாக்குகிறார்கள். 

தமிழை உருகி உருகிக் காதலிக்கிறார்கள் வைஷ்ணவர்கள். ஓதுவார்கள் ஓதியும் ஒருநாள் கேட்க வேண்டும். பொதுவாக தமிழை உயிர்ப்புடன் வைத்திருப்பது பக்தி இலக்கியங்களே என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம். 

தமிழ் அமுதம் முடிந்தவுடன் வயிற்றுக்கு ஈயப்பட்டது.  அதன் பின்னர் சாமவேதம் ஓதப்பட்டது. 

வைபவத்தில், நெற்றியில் நாமம் தரித்த ஒரு வைஷ்ணவர் அறிமுகமானார். “உங்க பேரு?” என்று கேட்டே பழகிப் போயிருக்கிறோம். ஆனால் அன்பர் என்னிடம் திரும்பி “உங்கள் திருநாமம் என்னவோ?” (இதே வார்த்தைகளில் ) என்று கேட்டார். இவ்வளவு அழகாக என்னிடம் யாரும் என் பெயர் கேட்டதில்லை. கிட்டத்தட்ட ஏ.பி.நாகராஜன் படத்தில் நடிப்பதைப் போல உணர்ந்தேன்.

மதிய உணவின் பொழுது பாயசம் வேண்டும் என்று கேட்டேன். “திருக்கண்ணமுது கொண்டு வாங்க” என்று அழகான தமிழுக்கு என்னுடைய ‘பாயசம்‘ மொழி பெயர்க்கப்பட்டது ஒரு தெய்வீகக் குரலால். திருக் கண்ணனுக்கு அமுது படைத்ததால் பாயசம் திருக்கண்ணமுது  என்றழைக்கப்படுகிறது என்ற வியாக்கியானமும் செவிக்கு உணவாகப்  படைக்கப்பட்டது. செவிக்கும் வயிற்றுக்கும் விருந்து. 

சுற்றியிருக்கும் திவ்ய தேசங்களுக்குச் சென்றால் அழகாக ஆழ்வார் பாசுரம் சொல்லி இறைவனை ஆராதிக்கிறார்கள். 

“காலம் பெறஎன்னைக் காட்டுமின்கள்
    காதல் கடலின் மிகப்பெரிதால்
நீல முகில்வண்ணத்து எம்பெருமான்
    நிற்குமுன் னேவந்தென் கைக்கும்எய்தான்
ஞாலத் தவன்வந்து வீற்றிருந்த
    நான்மறை யாளரும் வேள்விஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரிவீசும்
    கூடு புனல்திருப் பேரெயிற்கே”

     (திருவாய்மொழி / நம்மாழ்வார்)
     (பிரபந்தப் பாசுரம்- 3480) 

தமிழ் வாழ்வது பக்தியிலும், பக்தர்கள் நாவிலும்,  எண்ணத்திலும் தான். 

$$$

Leave a comment