-திருநின்றவூர் ரவிகுமார்
திரு. தி.ச.வைகுண்டம் எழுதியுள்ள ‘ஸ்ரீ B.பாஸ்கர் ராவ்: சங்கமென்னும் நந்தவனத்தில் பூத்த ஒரு குறிஞ்சி மலர்’ என்ற நூல் குறித்த மதிப்புரை இது. திருநின்றவூர் ரவிகுமார் தனக்கே உரிய பாணியில் இந்நூலின் அவசியத்தை விளக்கி இருக்கிறார்.

அண்மையில் வெளியான ஒரு செய்தியைப் பற்றி நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ தலித்துக்கள் சர்ச் செயல்பாடுகளில் தலித் என்பதால் புறக்கணிக்கப்படுவதாகவும் அது பற்றிய பிஷப்பிடம் மட்டுமின்றி அரசிடமும் புகார் அளித்துள்ளதாகவும், பிஷப்பும் தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் செய்தியாளரிடம் குறைபட்டுக் கொண்டார்கள்.
(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 02.06.2023)
இச்செய்தியைக் குறிப்பிட்ட நண்பர், கடலூரிலும் இதேபோல செய்தி வந்திருக்கிறது என்று சொல்லியதுடன், ஜாதி என்பது ஹிந்து மதம் சார்ந்த பிரச்னை என்பது மாறி, அது இந்தியப் பிரச்னையாகி விட்டது என்றார்.
‘இதைத்தான் பாதிரியார்கள் விரும்புகிறார்கள்’ என்று நண்பரைப் பார்த்துச் சொன்னதும் அவர் முகம் மாறிவிட்டது. நண்பர் ஹிந்துதான். ஹிந்து உணர்வு உள்ளவர்தான். ஆனாலும் எல்லோரையும் போல அப்பாவியாக இருக்கிறார்.
ஆரம்பத்தில் ‘ஜாதி வேற்றுமை என்பது ஹிந்துக்களின் பிரச்னை, அதற்குக் காரணம் ஹிந்து மதம், அதன் நூல்கள்’ என்று கூறி பைபிளை கையில் கொடுத்தார்கள். கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றினார்கள். ஆனால், இட ஒதுக்கீடு சலுகை பெற வேண்டுமானால் ஹிந்துவாக இருந்தாக வேண்டும். எனவே, வெளிப்படையாக கிறிஸ்தவர்கள் என்று ஆவணப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இப்போது ஜாதி வேறுபாடு என்பது மதத்திற்கும் அப்பால் இந்திய சமூகப் பிரச்னை என்று கூறி கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
ஜாதிகளே இல்லாத மதம்/ சமுதாயம் என்று கூறியவர்கள் இன்று இட ஒதுக்கீட்டுக்காக, அரசுச் சலுகைகளுக்காக மாற்றிப் பேசுகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து மதமாற்ற சக்திகளுக்கு பணம் வருவது ஓரளவுக்கு தடுக்கப்பட்டதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வு, ஜாதிக் கலப்புத் திருமணம் என்று டாக்டர் அம்பேத்கர், வீர சாவர்க்கர், மகாத்மா காந்தி போன்ற பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம், தமிழகத்தில், ஈரோட்டில் நடைபெற்றது. அதையொட்டி ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் மோகன் ராவ் பகவத் அளித்த நேர்காணலில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளது.
ஈரோடு என்பதாலோ என்னவோ, கேள்வி கேட்டவர் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு பற்றிக் கேள்வி கேட்டார். அது தொடர்பாக பதிலளித்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஒரு சுவாரசியமான சவாலை முன்வைத்தார். அவர் சொன்னார், “ஜாதி முறைமையை ஒழித்துக் கட்ட நாங்கள் கச்சை கட்டிக்கொண்டு இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஜாதி முறைமை என்பது பொருளற்றுப் போய்விட்டது. அது தானே அழிந்துவிடும்….
“காதல் திருமணங்கள் மூலம் ஜாதிக் கலப்பு சகஜமாகி வருகிறது. என்னிடம் இப்பொழுது புள்ளிவிவரங்கள் இல்லையென்றாலும் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். தேசிய அளவில் ஜாதிக் கலப்புத் திருமணம் செய்தவர்களில் பெரும்பாலோர் ஆர்எஸ்எஸ் காரர்கள் தான். நீங்கள் வேண்டுமானால் கணக்கெடுத்து பாருங்கள்” என்றார்.
அப்படி என்றால் ஆணவக் கொலையிலும் ஆர்எஸ்எஸ் காரர்கள் பலியாகி இருப்பார்கள் இல்லையா என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. அண்மையில் படிக்க நேர்ந்த சிறு நூலில் அதற்கு விடை மட்டுமல்ல, மேலும் பல விஷயங்கள் தெளிவாகின.
பம்மிடிபாடி பாஸ்கர் ராவ் என்ற ஆர்எஸ்எஸ் தலைவரின் வாழ்க்கையைப் பற்றி வைகுண்டம் என்பவர் எழுதிய நூலைப் படித்தேன். அதில் வரும் காட்சி இது…
ஆர்எஸ்எஸ் செயல்வீரர் ஒருவர் வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனால் ஜாதி மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. மணமகள் வீட்டாருக்கு ஆர்எஸ்எஸ் பற்றி எதுவும் தெரியாது. பையன் ஆர்எஸ்எஸ் காரன் என்று தெரிந்ததும், ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு வந்து, அந்தப் பையனை பதவியில் இருந்து நீக்கு என்று சண்டையிட்டனர்.
அங்கிருந்த ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் (பாஸ்கர் ராவ்), “காதல் அவரது தனிப்பட்ட விஷயம். ஆர்எஸ்எஸ் ஸுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நீங்கள் பிரச்னையை தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் அல்லது சட்டரீதியாகத் தீர்த்துக் கொள்ளலாம். அதை விடுத்து பதவியிலிருந்து நீக்கு, கிளைச் செயல்பாட்டை முடக்குவோம் என்றெல்லாம் இங்கு வந்து மிரட்ட வேண்டாம். அமைப்பை எப்படி நடத்துவது என்று எங்களுக்குத் தெரியும், நீங்கள் போகலாம்” என்றாராம்.
தனிப்பட்ட வாழ்க்கை என்று சொன்னாலும் ஆர்எஸ்எஸ் தனது உறுப்பினர்களை எப்பொழுதும் விட்டு கொடுத்ததில்லை. அதே வேளையில் அவர்களுடைய வாழ்க்கையை எப்படி நன்னெறிப் படுத்தியது, வழி நடத்தியது என்பதற்கு பல உதாரணங்கள் அதே நூலில் உள்ளன.
வேறொரு ஆர்எஸ்எஸ் காரர் இதேபோல காதலித்து ஜாதிக் கலப்பு திருமணம் செய்து கொண்டார். மணமகன் வீட்டில் ஏகப்பட்ட அழுத்தம். சமரசமாக, தங்கள் ஜாதியில் வேறொரு பெண்ணை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். மணமகளும் ஒரு கட்டத்தில் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால் விஷயத்தைக் கேள்விப்பட்ட பாஸ்கர் ராவ் அந்த ஊழியருக்கு, “இரண்டாம் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது உன் வாழ்க்கையை நரகமாக்கி விடும்” என்று கூறி அவர் வாழ்க்கையை சரியாக நெறிப்படுத்தியுள்ளார்.
ஜாதிக் கலப்பு திருமணங்கள் பற்றி ஆர்எஸ்எஸ் ஸின் அனுபவங்களைத் தொகுத்தால் அது பல்வேறு கோணங்களில் இப்பிரச்னை பற்றியும், அதில் வரும் இடர்பாடுகள் பற்றியும், அவற்றைக் கடப்பதற்கான வழிகள் பற்றியும் ஒரு சிறந்த ஆவணமாக விளங்கும் போல இருக்கிறது. அதே வேளையில், இவ்விஷயம் பற்றி எழும் வெற்று அரசியல் கூச்சல்களையும் ஒரே அடியில் வீழ்த்திவிடும் போலிருக்கிறது.
இவ்விடத்தில், மேற்சொன்ன இரண்டு சம்பவங்களிலும் சரியான வழிகாட்டுதலைக் கொடுத்த பாஸ்கர் ராவ் பற்றி சில விஷயங்களைப் பார்க்கலாம்.
பம்மிடிபாடி என்ற குடும்பப் பெயரைக் கொண்ட பாஸ்கர் ராவ், இன்றைய ஆந்திராவில் 1939-இல் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து 1994-இல் தனது 55 வயதில் தமிழ்நாட்டில் மதுரையில் காலமானார். ஒப்பீட்டளவில், இந்தக் குறுகிய கால வாழ்வில் தேசப்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, செறிவான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.
சிறு வயதிலேயே அவருக்கு ஆர்எஸ்எஸ் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. பட்டப் படிப்புக்குப் பின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் குமஸ்தாவாகப் பணிபுரியும் போது ஆர்எஸ்எஸ் ஈடுபாடு தீவிரமானது. அதனால் அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் ஸின் முழுநேர ஊழியராக – பிரசாரக்காக – ஆனார். குடும்பச் சூழ்நிலை அவரை பிரசாரக்காக நீடிக்க விடவில்லை.
குடும்பத்தின் பொருளாதார நிலையைச் சீராக்க அவர் 1968இல் தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் உள்ள ஏவிசி கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். இங்கே வரும்போது அவருக்கு தமிழ் தெரியாது. ஆனால் தமிழ்நாடு அவரது செயல்களமாக ஆனதுதான் வினோதம். குடும்பச் சூழ்நிலை சீரானதும் அவர் மீண்டும் (1973) பிரசாரக் ஆனார். இது ஒரு அரிதான நிகழ்வு.
மீண்டும் ஆந்திரம் சென்று பணி செய்ய நினைத்த அவரை ஆர்எஸ்எஸ் தலைமை தமிழ்நாட்டிலேயே பணி செய்யுமாறு ஆணையிட்டது.
அவரது தாய்மாமன் அந்தக் காலத்தில் பிரபல ஹோமியோபதி மருத்துவர்; டாக்டர் பூரண சித்தாந்தி என்று பெயர். ஆந்திராவில் உள்ள தெனாலியில் மிகவும் பிரபலமானவர். பாஸ்கர் ராவ் அவரிடம் முறையாக ஹோமியோபதி மருத்துவம் கற்றவர். பின்னர், பன்மொழி வித்தகரும் பிரபல ஹோமியோபதி மருத்துவராக இருந்த டாக்டர் சி.வி.யோகி என்பவரிடம் மேலும் கற்றறிந்தார்.
ஆர்எஸ்எஸ் பணியில் தனது ஹோமியோபதி மருத்துவ அறிவைப் பயன்படுத்தினார். பலர் அவரது ஹோமியோபதி மருத்துவ சிகிச்சையால் பயனடைந்துள்ளனர். தென்தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சிக்கு பாஸ்கர் ராவின் பங்களிப்பு முக்கியமானது. அவரது ஆளுமையில் பிரதானமானது ஹோமியோபதி மருத்துவர் என்பதுதான். அதுவே நடைமுறையில், ஆர்எஸ்எஸ்ஸை நோக்கிப் பலரையும் ஈர்க்கக் காரணம் என்று அநேகர் சொன்னாலும் அது உண்மையல்ல.
அடிப்படையில் அவர் ஒரு ஆசிரியர். கற்பிப்பதும் கற்றுக் கொள்வதும் ஆரம்பத்தில் அவரது பணியாகவும் பின்பு இயல்பாகவும் இருந்துள்ளது. கற்றுக் கொடுப்பதில் நிபுணர் மட்டுமல்ல, கற்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியும் கொண்டவராக இருந்துள்ளார். உதாரணத்திற்கு…
1988இல் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் திருப்பராய்த்துறையில் நடந்தது. வழக்கம் போல அதில் வாத்திய இசை சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. டிரம் (ஆனெக்- கொட்டு பறை) வாசிக்க குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சேர்ந்தார். ஆனால், ஏனோ பிடிக்கவில்லை என்று மறுநாளில் இருந்து வகுப்புக்கு வரவில்லை. பாஸ்கர் ராவ் அவரைத் தேடிப் பிடித்து, அவருக்கு ஏற்றாற்போலப் பேசி, பழகி டிரம் வாசிப்பதில் ஈடுபாடு கொள்ள வைத்து, பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளார்.
அவர் கற்றுக் கொடுத்த விதத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் பயிற்சியாளர் பின்னாளில் டிரம் வாசிப்பதில் நிபுணராகி விட்டார். 2006இல் குருஜி கோல்வல்கரின் நூற்றாண்டை ஒட்டி புதுதில்லியில் ஆர்எஸ்எஸ் வாத்திய இசையினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதற்கு நாடு முழுவதிலும் இருந்து கடுமையான தேர்வுக்குப் பிறகு 2,500 பேர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவராக, பாஸ்கர் ராவினால் 1988 தேடிப் பிடித்து டிரம் வாசிக்க்க் கற்றுத் தரப்பட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊழியர்களிலும் பெரும்பாலோர் ‘ஹிந்தி தெரியாது போடா’-வாக இருந்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் தேசிய இயக்கம்; பல தேசிய தலைவர்களுடன் பேசி பழக, ஹிந்தி கற்றுக் கொள்வது அவசியம் என்று பாஸ்கர் ராவ் கருதினார். குறைந்தபட்சம், ஆர்எஸ்எஸ்ஸின் முழுநேர ஊழியர்கள் ஹிந்தி கற்றுக்கொள்ள பயிலரங்கு ஒன்றுக்கு அவர் ஏற்பாடு செய்தார்.
ஆரம்பத்தில், அது பற்றி விவாதம் எழுந்தது. ஏற்பாடுகள் செய்வது பற்றியும், களப் பணியில் இருந்து ஊழியர்களை சிறிது காலம் விடுவிப்பது தொடர்பாகவும், சர்ச்சை செய்யப்பட்டது. ஆனால் பாஸ்கர் ராவின் தெளிவான கருத்து மற்றும் வாதங்களை முன்வைத்த விதத்தால் அது மாறிவிட்டது. ஹிந்தி கற்றுத் தர தன்னுடன் வேறு சிலரையும் சேர்த்துக் கொண்டு பாடம் எடுத்துள்ளார். ஆர்வம் ஏற்பட்ட பிறகு ஹிந்தி பிரசார சபாவில் சேர்த்துள்ளார். அதுமட்டுமன்றி குழுவாக சிலரை காசிக்கு அனுப்பி, அங்குள்ள முழுவதும் ஹிந்தி மயமான சூழ்நிலையில், ஹிந்தி கற்க ஏற்பாடு செய்துள்ளார்.
அது போலவே, சமஸ்கிருதம் கற்றுத் தரவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார். 45 வயதில் அவர் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் என்பது, கற்றுக் கொடுப்பதில் மட்டுமல்ல, கற்றுக் கொள்வதில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.
பொதுவாக, ஆசிரியர்கள் நெகிழ்வற்றவர்களாக, தான் சொல்லுவது மட்டுமே சரி என்று கூறக் கூடியவர்களாக, சற்றே இறுகியவர்களாக இருப்பதைக் காணலாம். ஆனால், பாஸ்கர் ராவ் அப்படிப்பட்டவராக இல்லையெனத் தெரிகிறது.
மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் முகாம் ஒன்றில் தங்கும் இடம் ஓரிடத்திலும், பயிற்சி மைதானம் சற்றுத் தள்ளியும் இருந்துள்ளன. தங்கும் இடத்திலிருந்து பயிற்சி மைதானத்திற்கு சரியான நேரத்தில் சிலர் வருவதில்லை. வேண்டுமென்றே வருவதில்லை என்று தெரிந்த பிறகு அவர்களைக் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று பாஸ்கர் ராவ் கருதினார்.
ஆனால், அதற்கு உடனிருந்த அரங்கராஜன் என்பவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். சங்கம் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறது. ஆனால் அது சுயக்கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்பதை தேசிய தலைவர் ஒருவரின் பேச்சை சுட்டிக்காட்டி உள்ளார். பாஸ்கர் ராவ் அதை ஏற்றுக் கொண்டு, குறித்த நேரத்துக்கு வராதவர்களைத் தண்டிக்கவில்லை; மாறாக பேசி திருத்தினார்.
அவர் ஆசிரியராக இருந்து பலரை திருத்தியுள்ளார். பலரை உருவாக்கியுள்ளார். என்றாலும், அது அவரது ஆளுமையின் சாரமா? என்றால் இல்லையென்றே சொல்லலாம். பின் எது அந்த மனிதரின் உள்ளார்ந்த ஆளுமை?
ஒருவர் ஆர்எஸ்எஸ் தொடர்புக்கு வந்தார். பாஸ்கர் ராவுக்கு அறிமுகமானார். ஆனால் அவருக்கு ஆர்எஸ்எஸ்-ஸை விட ராமகிருஷ்ண மடம் / மிஷன் மீது ஈடுபாடு அதிகம். ஒருசமயம், அவர் தனது பணியிடம் மாற்றலாவதை ஆர்எஸ்எஸ் நண்பர்களுக்குச் சொல்லிவிட்டு ஆனால் புதிய விலாசம் தராமல் போய்விட்டார். சில காலம் கழித்து அவர் மாற்றலானதைப் பற்றி அறிந்த பாஸ்கர் ராவ் அந்த நபர் முன்பு நின்று இருக்கிறார். அவர் ஆச்சரியப்பட்டார், எப்படி விலாசம் தெரிந்தது என்று.
அதற்கு பாஸ்கர் ராவ், “நீங்கள் ராமகிருஷ்ண மடத்துடன் நெருக்கமானவர் என்பது தெரியும். அவர்கள் மூலமாக விலாசம் தெரிந்து கொண்டேன். உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். வேறு விசேஷமில்லை” என்று சொன்னாராம்.
ஒரு மாணவன் ஆர்எஸ்எஸ் கிளைக்கு வந்திருக்கிறான். பாஸ்கர் ராவுக்கு அறிமுகம் ஆகியுள்ளான். அந்த மாணவன் கல்லூரிக்குப் போன போது கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஈர்க்கப்பட்டு, ஆர்எஸ்எஸ் தொடர்பை விட்டுவிட்டான். இந்த விஷயம் தெரிந்தும், பாஸ்கர் ராவ் எப்போதெல்லாம் அந்தப் பக்கம் போனாலும் அந்த மாணவனைப் பார்த்து, பொதுவாகப் பேசிவிட்டுப் போவாராம்.
ஒருமுறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏதோ சிரமம் ஏற்பட, விஷயம் தெரிந்தவுடன் அந்த மாணவன் தன்னிச்சையாக வந்து பல வேலைகளைச் செய்து கொடுத்துள்ளான். பாஸ்கர் ராவுக்காக இதைச் செய்ததாகக் கூறிச் சென்றுள்ளான்.
நெல்லை மாவட்டத்தில் முன்னீர்பள்ளம் என்ற ஊரில் பம்பாய் பரமசிவ தேவர் என்ற போக்கிரி எப்படியோ பாஸ்கர் ராவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அவரும் அந்த பக்கம் போகும்போதெல்லாம் தேவருடன் ஓரிரு வார்த்தை பேசிவிட்டுப் போவாராம்.
கல்லூரி ஆசிரியராக இருந்தவருக்கு அவரிடம் பேச என்ன விஷயம் இருந்திருக்கும் என்பது அந்தப் பரமசிவனுக்கே வெளிச்சம். கேட்டால் தேவரிடம் இந்து உணர்வுள்ளது என்பாராம் பாஸ்கர் ராவ். முன்னீர்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் எந்த ஹிந்து விழாவோ ஊர்வலமோ நடந்தால் பம்பாய் பரமசிவ தேவர் முன்னால் வந்துவிடுவார். அதனால் அந்தப் பகுதியில் ஹிந்து விரோத சக்திகளின் கொட்டம் அடக்கி வைக்கப்பட்டது என்பது நிதர்சனம்.
இதேபோல இன்னும் சில சம்பவங்கள் அந்த நூலில் உள்ளன. இங்கு குறிப்பிட வந்த விஷயம் வேறு. எதிர்பார்ப்பு இல்லாமல் எந்த உறவும் இல்லை என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுவார். கணவன்- மனைவி, தாய்- மகவு உறவிலும் எதிர்பார்ப்பு உண்டு என்பார் அவர்.
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தேசத்திற்கு அர்ப்பணிப்போடு சேவை செய்ய ஆர்எஸ்எஸ் வலியுறுத்துகிறது. தேசம், சமுதாயம் என்பது முகமற்ற கருத்துரு. நடைமுறையில்? சந்திக்கும் மனிதர்கள் எல்லோரிடமும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசமுடன் பழகுவது என்று நடைமுறையில் காட்டியுள்ளார் பாஸ்கர் ராவ். இதுவே அவரது ஆளுமையின் சாரமாக இருந்துள்ளது. இதனால் தான் பலர் ஆர்எஸ்எஸ் மீது ஈர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் ஈர்ப்பதற்காக அவர் அப்படி இல்லை; இயல்பாகவே அப்படி இருந்திருக்கிறார். இப்படிப்பட்ட பலரை உருவாக்கியுள்ளது என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வெற்றி.
1981 மீனாட்சிபுரம் மதமாற்றம் நாட்டையே உலுக்கியது. 1982 புளியங்குடிக் கலவரம் மாநிலத்தை அசைத்தது. பத்துகாணி என்ற மலைக் கிராமத்தை ஒட்டுமொத்தமாக கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய முயன்றபோது மாவட்டமே அதிர்ந்தது. இவை அத்தனையையும் தீர்த்து, தென் தமிழகப் பகுதிகளில் தேசிய சக்தி வளர பாஸ்கர் ராவின் பங்களிப்பை, தலைமைத்துவப் பண்பை, இந்த நூலின் இறுதிப் பகுதி சொல்லிச் செல்கிறது. அதுவும் எதிர்பார்ப்பு இல்லாத நேசம் என்ற அவரது ஆளுமையின் விரிவாகவே நமக்கு விளங்குகிறது.
வீர சாவர்க்கர் இயற்றிய பாடல் ஒன்றில் பாரதத் தாயை ‘பஹூ ரத்ன பிரசவி’ என்று குறிப்பிட்டுள்ளார். ரத்னம் போன்று ஒளிரும் பல மாமனிதர்களைப் பெற்றெடுத்தவள் பாரதத்தாய் என்று புகழ்கிறார். அப்படிப் பட்ட ரத்தினங்களில் ஒருவர் பாஸ்கர் ராவ்.
இந்த ரத்தினத்தை நன்றாகப் பதித்து நம் கையில் தந்திருப்பவர் மதுரையைச் சேர்ந்த ஆடிட்டர் வைகுண்டம். முன்னுரைப் பகுதியில் தன்னை ஒரு தேர்ந்த எழுத்தாளன் இல்லை என்கிறார். இனி அவர் அப்படிச் சொன்னால் அது பொய்யுரையாகும்.
நூல் குறித்த விவரம்: ஸ்ரீ B.பாஸ்கர் ராவ்: சங்கமென்னும் நந்தவனத்தில் பூத்த ஒரு குறிஞ்சி மலர் ஆசிரியர்: தி.ச.வைகுண்டம் விலை: ரூ. 150/- வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம், 12, எம்.வி.தெரு, சேத்துப்பட்டு, சென்னை - 31 தொடர்புக்கு: +91 89391 49466
$$$