-பேரா. இளங்கோ ராமானுஜம்
மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இளங்கோ ராமானுஜம், திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…

இந்த உலகம் ஓர் விளையாட்டு மைதானம். இங்கே மனிதன் இன்ப, துன்பங்களைச் சந்தித்தே ஆக வேண்டும். இன்பத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக் குதிக்காமலும், துன்பத்தைக் கண்டு சோர்ந்து, துவண்டு விடாமலும், சம நிலையில் இருந்து மனிதன் தன்னைப் பக்குவப்படுத்தி, வாழ்க்கைப் பயிற்சி பெற்று, சான்றோனாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அவன் லட்சியமாக இருக்க வேண்டும்.
சூழ்நிலைகள் அவனை அழுத்திக் கொண்டிருக்கின்றன. அவன் முயற்சி செய்து, தன்னை அவற்றின் பிடியினின்று விடுவித்துக் கொண்டு, நிறைநிலை அடைந்து, நிறைமாந்தனாக அவன் வாழ்க்கையில் பரிணமிக்க வேண்டும் என்று விவேகானந்தர் விளம்புகிறார்.
நிறை மனிதனாக மனிதன் மிளிர முடியும், அவன் தன்னிடம் குடி கொண்டிருக்கும் இறைவனை உணர்ந்தால்! இதைப் பறைசாற்றும் வேதாந்தம் மனிதனுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கிறது.
பரம்பொருளே பிரபஞ்சமாகக் காட்சி அளிக்கிறார். உயிருள்ள அனைத்து ஜீவராசிகளிடமும், உயிரற்ற ஜடப் பொருள்களிடத்தும் இறைவன் உறைந்து இருக்கிறான் என்பதை மனிதன் அறிந்து கொள்ளும்போது அவன் தன்னை இறை அவதாரமாகவே உணர்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் இறை அவதாரமே! அறிவியலின் அரசனாக விளங்கும் வேதாந்தம் இதை அழுத்தந் திருத்தமாகக் கூறும் போது, ‘அனைவரும் பிறப்பால் சமமே’ எனும் அரிய கருத்து உணரப்படுகிறது. இதை மனதார அறிந்தால் பொதுவுடமைவாதிகளும் பகுத்தறிவாளர்களும் நிச்சயம் மகிழ்வர்!
புராணங்கள் இப்பூவுலகில் தோன்றிய அவதார உத்தமர்களைப் பற்றிக் கூறுவது இந்த வேதாந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே! ஆனால் சரிசமமான வாய்ப்புகள் அனைவருக்கும் கொடுக்கப்படுகின்றன என்பதே வேதாந்தம் கூறும் உண்மை.
பின்பு ஏன் புராணங்கள் அவதார புருஷர்களை மட்டும் சிலாகித்துச் சொல்கின்றன?
இது தேவையா என்றால், கட்டாயம் தேவையே! இந்த உதாரண உத்தமர்கள் தோன்றியதன் காரணம் ‘எப்போதெல்லாம் உலகில் தர்மம் அழிந்து, அதர்மம் தலைதூக்குகின்றதோ, நல்லோர் நலிந்து, தீயோர் வலிந்து வலம் வருகிறார்களோ அப்போதெல்லாம் பரம்பொருள் பூமியில் அவதாரப் பிறப்பெடுத்து அதர்மத்தையும், தீயோரையும் அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவார்’ என்று புராணங்கள் பகர்கின்றன.
இந்த அவதார புருஷர்கள் மனிதர்கள் மத்தியில் நம்பிக்கை எனும் விதையை விதைக்கிறார்கள். ஆன்மிகப் பயணத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இது நல்ல பயிற்சி அளித்து, அவர்கள் தங்கள் பயணத்தில் உயரே போக மிகவும் உதவியாக இருக்கும். அவ்வளவுதான்!
மற்றபடி அனைவரும் இறை அவதாரங்களே! இதை உணர்ந்தவர் இறை அவதாரமாகப் பரிணமிக்க வாய்ப்புகள் உள்ளன.
நாம் அனைவரும் பகவானை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் சம பலத்தையும், சம ஆற்றலையும் கொடுத்த இறைவன் அனைவரின் உள்ளத்திலும் நிறைந்து, அனைவரோடும் சேர்ந்தே பயணிக்கிறார். இந்தப் பயணத்தில் தன்னுள் உள்ள இறைவனை உணர்ந்தவன் வெற்றி பெறுகிறான்; உணராதவன் இருந்த நிலையிலேயே இருந்து முன்னேற்றம் இன்றி துன்புறுகின்றான். ஒவ்வொரு பிறவியும் அவன் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள பரம்பொருள் தரும் வாய்ப்பே!
ஜார்ஜ் ஆர்வல் தன்னுடைய உருவகப் புதினமான (Allegorical Novel) ‘விலங்குப் பண்ணை’யில் (Animal Farm) “பிறப்பால் அனைவரும் சமமே! ஆனால் ஒரு சிலரே அவர்களில் சிறப்படைகின்றனர்” (All are born equal; but some are more equal) என்று கூறுவது வாழ்க்கைப் பயணத்தில் பங்கெடுத்தவர்களுக்குப் பொருத்தமான விளக்கமாகும்.
மனிதப் பிறவிகள் அனைவரும் இறை அவதாரத்தின் வடிவங்களாகவே பிறக்கின்றனர். ஆனால் அவர்களில் சிலர் தங்களைச் சீர்படுத்தி, செம்மையாக்கி, அறவழியில் நின்று, மனதை காம, குரோதாதிகளிடமிருந்து விடுவித்து, தூயதாக்கி, நிறைமாந்தர் ஆகி, அதை இறைவன் வீற்றிருப்பதற்கு ஏதுவான அரியணையாக்கி, அவதார புருஷர்களாகப் பரிணமிக்கின்றார்கள். இவர்களே புராணங்கள் கூறும் அவதாரங்கள்.
இவர்கள் வானத்தில் பளிச்சென்று தோன்றி மறையும் மின்னல்கள் அல்ல! மாறாக, இவர்கள் சூரிய வெப்பத்தில் கடல் நீர் ஆவியாகி, வானத்திற்குப் பயணித்து, கரு மேகங்களாகக் கர்ஜித்து, மழையாகப் பொழிந்து, உயிரினங்களை வாழ வைப்பது போல தங்களைப் பக்குவப்படுத்தி மனித இனத்திற்குக் காவலாக இருப்பவர்கள்.
ஹிந்து மதத்தின் அஸ்திவாரமாக இருப்பது வேதாந்தம் எனும் அற்புத விஞ்ஞானம். இங்கே கற்பனைக்கு இடமில்லை. பகுத்தாய்ந்து, கருத்துக்களின் தரத்தை எடை போட்டுப் பகரும் அறிவியலே வேதாந்தம். இக்கருத்தை நன்கு ஆராய்ந்து சுவாமி சித்பவானந்தர் தனது, ‘Ramakrishna Lives Vedanta’ (வேதாந்தமாகவே வாழும் ராமகிருஷ்ணர்) என்ற ஆன்மிக ஆராய்ச்சி நூலில் இவ்வாறு கூறுகிறார்:
ஆன்மிகத்தின் ஆரம்ப நிலையில் இருக்கும் சாதகர்களுக்கு அவதார புருஷர்கள் கோட்பாடு நல்ல பயிற்சி கொடுக்கும். இந்த அளவில்தான் வேதாந்தம் இந்தக் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. வேதாந்தம் எனும் அளவுகோல் ஒரே தெய்வீகப் பிறவியே ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகிறார் எனும் கருத்தை ஏற்பதில்லை. அந்த ஆன்மிகப் பெரியவர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த யுகத்தின் சச்சிதானந்த சாகரத்தில் தோன்றும் பிரம்மாண்ட அலைகளே! சாதாரண மக்கள் அதே சச்சிதானந்த சாகரத்தில் காணப்படும் சிற்றலைகளே! முயன்றால் சிற்றலைகளும் பிரம்மாண்ட பேரலைகளாகப் பரிணமிக்கலாம். ஒரு யுகத்தில் ராமபிரானும், மற்றொரு யுகத்தில் கிருஷ்ணரும் மிகப் பெரிய ஆன்மிக அலையாகத் தோன்றி மக்களை உய்வித்திருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு ஆன்மிகப் புனிதர்களே! ஆனால் புராணங்கள் இவர்கள் இருவரும் ஒருவரே என்று கூறுவது, சாமானியன் திசை தப்பிப் போகாதிருக்க உதவும் கலங்கரை விளக்கங்களாக.
-என்று விளக்கம் அளிக்கிறார் (பக்கம்: 431).
தைரியமான கருத்துக்களை உரக்கச் சொல்லத் தயங்காத சுவாமி சித்பவானந்தர், “இருபதாம் நூற்றாண்டின் சச்சிதானந்த சாகரத்தில் தோன்றிய மிகப் பெரிய அலையே ராமகிருஷ்ண பரமஹம்சர். புராணங்கள் இயம்பக் கூடிய அவதார புருஷர்களின் அனைத்து குண நலன்களும் ராமகிருஷ்ணரிடம் காணப்படுகிறது” என்கிறார். பரமஹம்சர் அவதார புருஷரே எனும் கருத்து ஆரம்ப நிலை சாதகர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுமாயின் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.
ஆனால் ஆராய்ச்சி செய்து பார்க்குமிடத்து, ராமகிருஷ்ணர் வேதாந்தத்தின் மொத்த உருவமாகவே வாழ்ந்து காண்பித்தார். பிறந்ததினின்று மறையும் வரை மனத்தூய்மை, இறைபக்தி, பெண்களை பராசக்தியின் மறு உருவமாகப் பார்க்கும் பாங்கு; ஓடும், இரு நிதியும் ஒன்றாகக் கண்ட அவரின் கண்கள், அவரின் சித்த நினைவிலும், செய்யும் செயலிலும் பரம்பொருள் நிறைந்திருந்தது பிரமிப்பாக இருக்கிறது.
கன்னங்கரேரென்ற காமாதி ராட்சசப் பேய்கள் அவரிடம் நெருங்கவில்லை. வஞ்சனையும், பொய்யும் அழுக்காறும் ஒருபோதும் அவர் நெஞ்சில் குடியேறவில்லை. உயர்ந்தவன் – தாழ்ந்தவன் எனும் பாகுபாடு அவர் எண்ணத்தில் இல்லவே இல்லை. சமத்துவம் எனும் வேதாந்தக் கருத்து அவர் மனதில் நிறைந்திருந்தது. சொல்லும், பொருளும் அற்று பர சிந்தனையில் அல்லும் பகலும் தியானத்தில் இருந்தார்.
ஒரு நொடி பகவான் சிந்தனை அகன்றாலும் அன்னையிலாச் சேய்போல அலக்கண் உற்றார்; சும்மா இருந்து, சுட்டற்ற பூரணத்தில் நிலைத்திருந்தார்; சிந்தை அவிழ்ந்து, அவிழ்ந்து இறைவன் திருவடியில் இன்ப நிலை துய்த்தவர் அவர்.
ராமகிருஷ்ணர் எனும் பிரம்மாண்ட சச்சிதானந்த அலை, தன்னிடம் சரணடைந்த கிரிஷ் சந்திரகோஷ் போன்ற பாவங்களின் மொத்த வியாபாரிகளை (‘Wholesale Sinners’ as described by Swami Chidbhavanada ji) ஆன்மிகப் பாதையில் சிறக்க செய்தது. இதற்கு நம்பிக்கை கொடுத்தது ராமகிருஷ்ணரிடம் இருந்த வேதாந்த சக்தி. சிற்றலையாகிய கிரிஷ் சந்திரகோஷை ராமகிருஷ்ணர் தன் ஆன்மிகப் பாதையில் அரவணைத்து அழைத்துச் சென்று ஆட்கொண்டார்.
கிரிஷ் சந்திரகோஷ் போன்ற முழு நேரப் பாவிகள் வேதாந்தக் கோட்பாடுகளாகவே வாழ்ந்த ராமகிருஷ்ணரிடம் சரண் புகுந்து உய்வடைய முடியும் எனில், இதைப் பார்க்கும் சாதாரண மனிதன் மனதில் நம்பிக்கைத் துளிர் விடுகிறது.
- (கட்டுரையாளர் குறிப்பு: இக்கட்டுரை, சுவாமி சித்பவானந்தரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது).
$$$