-சேக்கிழான்
பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியம், ‘படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பது பொருட்களும் வேந்தர்க்கு உரியவை’ என்று கூறுகிறது. இவை அனைத்திற்கும் மேலானதாக செங்கோல் மன்னனின் அடையாளம் என்கிறது தொல்காப்பியம்....

பகுதி-5: மணிமேகலையில் மன்னரின் மாண்பு
.
6. தொல்காப்பியத்தில் செங்கோல் குறிப்பு
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழும் தொன்மையான மொழி தமிழ் மொழி. உலகில் சமஸ்கிருதம் தவிர்த்த வேறெந்த மொழிக்கும் ஈராயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இலக்கியப் பாரம்பரியம் இல்லை.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே (திருவெம்பாவை-9)
என்று மாணிக்கவாசகரால் சிவன் போற்றப்படுவது போலவே, நம் தாய்மொழியாம் தமிழும் பழமைச் சிறப்பும் புதுமைப் பொலிவும் அமையப் பெற்றிருக்கிறது. இதற்குக் காரணம், நாம் மொழியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான இலக்கணச் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பது தான்.
இலக்கியமின்றி யிலக்கணமின்றே எள்ளின்றாயினெண் ணெயுமின்றே எள்ளின் றெண்ணெயெடுப்பது போல இலக்கியத்தினின்றே பெருமிலக்கணம்
– என்று கூறும் பேரகத்தியம்.
எனவே நமது வரலாற்றுப் பதிவுகளான இலக்கியங்களின் சாறே இலக்கணம் எனில் மிகையில்லை. அந்த வகையில் தமிழின் தொன்மைக்கு இன்றும் சான்றாக விளங்குவது பொ.யு.மு. 711 காலத்தில் இயற்றப்பட்ட தொல்காப்பியமே.
தொல்காப்பியம், எழுத்து (9 இயல்கள்- 483 நூற்பாக்கள்), சொல் (9 இயல்கள்- 463 நூற்பாக்கள்), பொருள் (9 இயல்கள்-664 நூற்பாக்கள்) என, 3 அதிகாரங்கள், 27 இயல்கள், 1,610 நூற்பாக்களால் இயற்றப்பட்டுள்ளது. இதில், பொருள் அதிகாரம், அக்காலத்தில் வழங்கிய சொற்களின் பொருளையும் அவற்றின் விளக்கத்தையும் சுருக்கமாகப் பதிவு செய்கிறது.
தொல்காப்பியர் காலத்தில் சமுதாயம் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகையாகப் பிரிந்திருந்தது. இவர்களின் இயல்பு, இவர்களுக்கு உரிய தொழில், பொருட்களை தொல்காப்பியர் மரபியலில் தனித்தனி நூற்பாக்களில் பட்டியலிட்டுள்ளார்.
தொல்காப்பியம் கூறும், வேந்தனின் இலக்கணம் கூறும் நூற்பாக்களும் அவனது தொழிலை விளக்கும் நூற்பாக்களும் கவனிக்க வேண்டியவை.
“தானே சேறலும் தன்னொடு சிவணி,
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே”
(தொல். அகத்திணையியல். 3.1.29)
என்ற நூற்பா, வேந்தன் தானே செல்லுதலும், ஏனையோருடன் வேந்தன் செல்லுதலுமாகிய போர்த் தொழிலே வேந்தனுக்கு உரியது என்று கூறுகிறது. அதேபோல,
“வேந்துறு தொழிலே யாண்டினது அகமே”
(தொல். கற்பியல் 3.4.187)
-என்று ஓராண்டிற்கு உட்படவே இத்தொழில் அமையும் என்பதையும் குறிப்பிடுகிறது.
மேலும், ‘படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பது பொருட்களும் வேந்தர்க்கு உரியவை’ என்று கூறுகிறது. இவை அனைத்திற்கும் மேலானதாக செங்கோல் மன்னனின் அடையாளம் என்கிறது தொல்காப்பியம். இதோ அந்த நூற்பா:
“படையுங் கொடியுங் குடியும் முரசும்
நடை நவில் புரவியும் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய”
(தொல். மரபியல் 3.9.72)
நன்னூலில் செங்கோல் குறிப்பு:
தொல்காப்பியத்தின் எழுத்து, சொல் அதிகாரங்களை விளக்கி, 1,400 ஆண்டுகளுக்குப் பின், பொ.யு.பி. 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் இயற்றப்பட்டது நன்னூல்.
தமிழில் சிறந்த இலக்கண நூலாக விளங்கும் நன்னூலின் சிறப்புப் பாயிரத்தில், அதன் ஆசிரியர் பவணந்தி முனிவர், நூலின் புரவலரான, இந்த நூல் இயற்றப்படக் காரணமான வள்ளல் மன்னன் சீயகங்கனை செங்கோலுடன் சிறப்பான ஆட்சி செய்பவன் எனப் பாராட்டியுள்ளார். இதோ அந்தப் பாடல்:
மலர்தலை உலகின் மல்கு இருள் அகல இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும் பரிதியின் ஒருதான் ஆகி முதல் ஈறு ஒப்பு அளவு ஆசை முனிவுஇகந்து உயர்ந்த அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின் மன இருள் இரிய மாண்பொருள் முழுவதும் முனிவுஅற அருளிய மூஅறு மொழியுளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கு எல்லையின் இருந் தமிழ்க் கடலுள் அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத் தொகைவகை விரியின் தருகெனத் துன்னார் இகல் அற நூறி இருநிலம் முழுவதும் தனது எனக் கோலித் தன்மத வாரணம் திசைதொறும் நிறுவிய திறல் உறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோல் * சீய கங்கன் அருங்கலை வினோதன் அமரா பரணன் மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின் வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன் பொன்மதில் சனகைச் சன்மதி முனி அருள் பன்னருஞ் சிறப்பின் பவணந்தி என்னும் நாமத்து இருந்தவத் தோனே.
- (திருந்திய செங்கோல் – நேர்மைமிகும் செங்கோல்).
இலக்கியங்கள் மட்டுமல்ல, பழமையான இலக்கண நூல்களிலும் செங்கோல் குறித்து பதிவு செய்யப்பட்டிருப்பது நமது தமிழின் ஆன்ற சிறப்பாகும்.
$$$
2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 6”