வீரத்துறவி விவேகானந்தரும் மகாகவி பாரதியாரும்

-திருவாரூர்  இரெ.சண்முகவடிவேல்

திருவாரூர் திரு.  இரெ.சண்முகவடிவேல், தமிழ்ப் புலவர்; தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்க்கும் இலக்கிய சொற்பொழிவாளர்; ‘தமிழகம் அறிந்த சான்றோர்’, ‘திருக்குறள் கதையமுதம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இனிய கட்டுரை இங்கே…

ஒரே ஒரு நாள் ஒரே ஒரு இடத்தில் சொற்பொழிவாற்றி உலகப் புகழ் பெற்றுவிட முடியுமா? என்று யாரை வேண்டுமானாலும் கேளுங்கள். ‘அது எப்படி முடியும்? முடியவே முடியாது’  என்று தான் பதில் சொல்வார்கள்.

 ‘1893 ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 11-ம் நாள் சிகாகோவில் நடந்த சர்வ சமயப் பேரவையில் ‘Sisters and Brothers of America’ என்று தொடங்கி விவேகானந்தர்  பேசிய போதே உலகம் முழுதும் அவருடைய புகழ் பரவிவிட்டதே’ என்று அவரிடம் மறுகேள்வியைக் கேட்டால்,   ‘அட ஆமாம், அதை மறந்துவிட்டேனே’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு,   உள்ளத்தில் உவகை பொங்க உண்மையை ஒப்புக் கொள்வார்கள்.

அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்த நானூறாவது ஆண்டை அமெரிக்கா கொண்டாடிக் கொண்டிருந்த அந்த நாளில், சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில் உரையாற்றி, இந்து மதத்தையும் இந்திய மக்களையும் உலகம் உற்றுப் பார்க்கவும் அண்ணாந்து நோக்கவும் வைத்தவர் நமது வீரத்துறவி விவேகானந்தர்.

விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டின் தலைசிறந்த கவிஞராய் வாழ்ந்தவர் மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

இருவரில், மகாகவி அவர்கள் இல்லறமேற்று இனிதே வாழ்ந்தவர்; விவேகானந்தரோ துறவறமேற்றுப் பயனுற வாழ்ந்தவர்.  இதுவே இவர்கள் இருவருக்குமுள்ள வேறுபாடு.  மற்றபடி இவர்கள் இருவருமே எளிய மக்களின் மேம்பாட்டுக்காக வாழ்ந்த ஏந்தல்கள்.

இருவரும் விரும்பிய சமய ஒற்றுமை:

பல்வேறு சமயங்கள் இருப்பது தவறில்லை.  ஆனால், அவர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பது தான் தவறு.  ஒவ்வொன்றிலும் நன்மைகள் உண்டு.  எந்த மதத்தில் நன்மை இருந்தாலும் அதைப் போற்றி ஏற்றுக்கொள்ள, பிற சமயங்கள் தயாராக இருக்க வேண்டும்.  இந்த நெறியை ஏற்றுக்கொண்டு வளர்ந்து வருவது தான் இந்துமதம்.

‘சமணம் கூறிய நல்லவற்றை இந்து மதம் ஏற்றுக் கொண்டது.  இந்த மதம் எப்போதும் திறந்த மனத்தோடு பிறரின் நல்ல கருத்துகளை ஏற்றுக் கொண்டுள்ளது.  இதனை எல்லாச் சமயங்களும் ஏற்றுக் கொண்டால், உலகில் பூசல் ஏது?  போர் ஏது?  சமரச சன்மார்க்கம் தழைக்காதா?  மக்கள் எல்லோரும் சகோதரர்களாக வாழ மாட்டார்களா?’ என்று கேட்டார் விவேகானந்தர்.

Universal Religion –  அதாவது உலகம் முழுவதற்குமான ஒரே மதம் உருவாக வேண்டுமானால், இறைவனைப் போன்றே அது  எல்லையற்றதாக இருக்க வேண்டும்.  சூரியன் எப்படித் தன் ஒளிக்கதிர்களை எந்த பேதமும் இல்லாமல் எல்லார் மேலும் பரப்புகிறதோ, அதைப் போன்று கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள் என எல்லோரையும் சமமாகப் பாவிக்க வேண்டும்.

பிராமண மதமாகவோ, பௌத்த மதமாகவோ, கிறிஸ்தவ மதமாகவோ, முகம்மதிய மதமாகவோ இல்லாமல், இவற்றின் ஒட்டுமொத்தமாக இருக்கவேண்டும்.  ‘எல்லா ஆறுகளும் கடலில் தான் கலக்கின்றன.  எல்லா மதங்களும் இறைவனைத் தான் வணங்குகின்றன.  அப்படியிருக்க வீணான வேறுபாடுகளும் மாறுபாடுகளும் ஏன்?  எல்லோரும்  ஒன்றுபடுவோம்’ என்று ஒற்றுமை கீதம் இசைத்தார் அந்த இணையில்லாத் துறவி.

இன்றைய நிலையில் மதத்தின் பெயரால் கலவரங்களும் குண்டுவெடிப்புகளும் எதனால் ஏற்படுகின்றன?  எல்லோரும் மனிதர்களே; எல்லாமே மதங்கள் தான்; எல்லோருக்கும் தலைவன் இறைவன்; நாம் யாவரும் அவனுடைய பிள்ளைகள் – என்ற  எண்ணம் இல்லாததுதான் காரணம்.

யார்  மீதும் வெறுப்புக் கொள்ளாமல் ஒரு சகோதரனைப் பார்ப்பது போன்ற சினேகப் பார்வை பார்க்கப் பழகிக் கொண்டால் உலகமே சொர்க்க பூமியாகிவிடும்.

இதை அப்படியே தன் கொள்கையாகக் கொண்டு கவிதை தந்தவர் நமது  மகாகவி சுப்ரமணிய பாரதியார். “ஈசன் வந்து சிலுவையின் மாண்டான்”   என்பது பாரதியின் கவிதா வாக்கியம்.  ஈசன் என்பது சிவபெருமானைக் குறிப்பது.  சிலுவையில் மாண்டவர் யேசு கிறிஸ்து.  பாரதியார் சிவபெருமானே சிலுவையில் அடியுண்டதாகக் கூறுகிறார்.  அவர் பார்வையில் இயேசுநாதரும் சிவபெருமானும் ஒன்றாகவே தெரிகிறார்கள்.  உலகம் அப்படிப் பார்க்க வேண்டும் என்பதையே அவர் குறிக்கிறார்.

எல்லா மதங்களையும் சமநோக்கில் கொண்டு அவர் பாடுவது, மக்களிடையே சமரச நோக்கத்தை உண்டாக்கி உலகை அமைதிப் பூங்காவாக ஆக்கிப் பார்ப்பதற்காகவே ஆகும்.

ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டு பாற்கடல் மிசைகிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதன்நிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவோம்.

(புதிய ஆத்திச்சூடி)

-என்பது பாரதியாரின் பரந்த பார்வை.  எல்லோரும் ஏற்கும் ஒளியுறும் அறிவைப் பரம்பொருளாக்கிப் பரவசப்படுகிறார் பாரதியார்.  காவி முண்டாசு கட்டிய விவேகானந்தரும், வெள்ளை முண்டாசு கட்டிய மகாகவியும் ஒத்த சிந்தனை கொண்டவர்களாக, உலகை உய்விக்க வந்தவர்களாகத் தோன்றுகிறார்கள்.  அவர்கள் இருவரையும் வணங்குவோம்.

பெண்ணுரிமையும் சாதிக்கொடுமையும்:

விவேகானந்தர் பெண்களுக்கு முழு உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதி கொண்டிருந்தார்.

சமூகத்தில் பாதியாக இருக்கும் பெண்ணை, நாம் சாஸ்திரம், சம்பிரதாயம் என்று சொல்லி எவ்வளவு  கீழ்மைப்படுத்துகிறோம் என்பதைக் கண்டு வேதனைப்படுகிறார் அந்தத் துறவிகளின் தலைவர்.

மூட நம்பிக்கைகளையும் சாத்திரங்களின் பேரால் நடக்கும் கொடுமைகளையும், சாதி வேறுபாடு கூறி உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று கேவலப்படுத்துவரையும் வன்மையாகக் கண்டிக்கிறார் விவேகானந்தர்.

‘இந்துமதம் சாதிப் பாகுபாடுகளைத் தொழில்ரீதியாகக் கொண்டிருந்ததே தவிர, அதில் இவன் உயர்ந்தவன் என்றும், அவன் தாழ்ந்தவன் என்றும், ஒருபோதும் போதித்ததில்லை.  சுயநலம் காரணமாக உண்டாக்கப்பட்ட அந்த பேதத்தை ஒழிப்போம்’ என்று சூளுரைக்கிறார் விவேகானந்தர்.  இந்த ஏற்றத்தாழ்வை இடையில் வந்தவர்கள் உண்டாக்கியதால் இந்து மதம் இன்று பெற்றிருப்பதெல்லாம் கெட்ட பெயர் ஒன்று தான் என்று அவர்  வேதனைப்படுகிறார்.

மகாகவியும் இதே கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை, காலத்தால் அழியாத அவருடைய கவிதைகள் காட்டுகின்றன.

பெண்ணுக்கு முழு உரிமையும் வழங்க வேண்டும் என்பது பாரதியாரின் அழுத்தமான குறிக்கோள். அதனைப் பாடவந்த அவர்,

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம்

என்கிறார்.

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்

என்று முரசறைந்து முழக்கமும் செய்கிறார்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!

என்று சமஉரிமை கீதத்தைப் படைத்தளிக்கிறார்,

சாதிகள் இல்லையடி பாப்பா -  குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

என்று சின்னக் குழந்தைக்கு – அதுவும் பெண் குழந்தைக்கு – பால் ஊட்டுவது போல சாதி மறுப்பை ஊட்டி வளர்க்கிறார்.

பெண்ணுரிமை பேசுவதிலாகட்டும், சாதி பேதங்களைச் சாடுவதில் ஆகட்டும், இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவராக இல்லாமல் ஒருவரை ஒருவர் மிஞ்சி நின்று போர்முரசு கொட்டுகிறார்கள்.

எளிய மக்களிடம் இருவரும் கொண்ட அக்கறை:

“வெறும் வயிற்றோடு கிடப்பவனிடம் வேதாந்தம் பேசுவது போன்ற பாவம் வேறொன்றும் இல்லை” என்பது விவேகானந்தர் கூறும் பொன்னான வாக்கியம்.

“ஏழை எளிய மக்கள், அறியாமையில் கல்வி அறிவு கிடைக்கப் பெறாமல் பாடும் பாமரர்கள் ஆகியோர் வீதியோரத்தில் நடைபாதையிலேயே குடும்பம் நடத்துகிறார்கள்.  அவர்கள் எல்லாம் யார்?  நம் இந்து மக்கள் தானே?  அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வெறும் தத்துவ விளக்கம் செய்வதால் என்ன பயன்?  அந்த நடைபாதைவாசி மூன்று வேளையும் சாப்பிட்டது உண்டா?  கிடையாதே!  சரி, அவன் சாப்பிட எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடக்கிறானே, அவனுக்கு உணவு தர என்ன செய்யலாம் என்று இந்துமதத் தலைவர்கள் யாராவது கவலைப்பட்டார்களா?  இவர்கள் சமயப் பிரசாரம் செய்து என்ன சாதிக்கப் போகிறார்கள்?”  என்று கவலையுடன் பேசுகிறார் விவேகானந்தர்.  பட்டினி மட்டுமா? கல்வி அறிவும் இல்லையே!  “முட்டாள்களாகவும் அறியாமையில் உழலும் பாமரர்களாகவும் இருக்கும் இந்திய மக்களை உயர்த்துவதே என் முதல் வேலை” என்கிறார்  அந்த வீரத்துறவி.

விவேகானந்தருக்கிருந்த அதே கவலையும் அக்கறையும் பாரதியாரிடமும் நிறைந்து காணப்படுகிறது.

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதலை நினைத்துவிட்டால்…

என்று பொங்கியெழுகிறார் மகாகவி,

கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவும் இல்லார்
பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துச்
துஞ்சி மடிகின்றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையே!

என்பது பாரதியாதின் மனத்துயர் காட்டும் மகா வாக்கியங்கள்.

ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை சாதியில்.
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே!
வாழி கல்வி, செல்வம் எய்தி
மனம் மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே!

-இவ்வாறாக பாரதியின் நெஞ்சம் அறியாமைக்காகவும் அல்லல்படும் வறுமைக்காகயும் கொதித்தெழுந்து பாடுகிறது..

நிறைவுரை:

புலவர் இரெ.சண்முகவடிவேல்

மாமனிதர்கள் ஒன்றாகவே சிந்திக்கிறார்கள்  என்பார்கள்.  விவேகானந்தரும் பாரதியாரும் ஒத்த சிந்தனை கொண்டவர்களாக நம் நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். 

ஏழைகளையும் பெண்களையும் உயர்த்தி நாட்டை மேன்மைப்படுத்த இருவரும் உழைத்தார்கள்.  பழமை, புதுமையென்று பாராமல் எதில் நன்மை இருந்தாலும் எடுத்துக்கொண்ட பெரியவர்கள் இருவரும்.

அவர்களின் வழியே  நாட்டை உயர்த்தும் நல்வழி, அவர்களின் நெறியே நன்னெறி.

அவர்கள் தலைவர்களாக இருக்கத் தகுதியுடையவர்கள்.  அவர்கள் வழி நடக்கும் தூயமனம் பெற்று நாட்டை உயர்த்த நன்னடை கொள்வோம் என்று உறுதி மேற்கொள்வோம்,  வாரீர்!

$$$

Leave a comment