இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு!

-சுவாமி அபிராமானந்தர் 

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியான அமரர் பூஜ்யஸ்ரீ  சுவாமி அபிராமானந்த மகராஜ் அவர்களின் நான்காவது ‘விவேகானந்தம்’ கட்டுரை, வெளிநாடுவாழ் இந்தியரான திரு. மஹா சின்னத்தம்பி குறித்த ஓர் அற்புதமான நூலுக்கான அறிமுகம்...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் தூண்டப்பட்டுத் தங்களது தொழிலில் பெரும் வெற்றி பெற்ற இந்தியர், அமெரிக்கர் மற்றும் ஐரோப்பியர் என்று பலர் உள்ளனர்.

சுவாமிஜியின் கொள்கைகளை வாழ்வில் செயல்படுத்தும்போது  அவை வெற்றியைத் தேடித் தந்து ஒருவரைப் பெரும் சிகரங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு மஹா சின்னத்தம்பி ஓர் உதாரணம்.

மஹா சின்னத்தம்பியின் வெற்றிக்கதை Stop Not Till The Goal is Reached என்ற ஆங்கில நூலாக கேரன் மெக்ரடி என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய வம்சாவளியில் வந்தவர், மலேசியாவில் பிறந்து பின் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து அங்கே வெற்றித் தடம் பதித்தவர் மஹா சின்னத்தம்பி.

மஹா தனது வாழ்வில் பின்பற்றிவரும் சுவாமி விவேகானந்தரின் பத்துக் கொள்கைகளே இதற்குக் காரணம். அதன் விளைவாக ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ் லாண்ட் பகுதியில் மதிப்பாரற்றுக் கிடந்த புதர் நிலத்தை ஸ்பிரிங் ஃபீல்டு என்ற வளர்ந்து வரும் நகரமாக மாற்றிய பெருமையைப் பெறுகிறார் மஹா. அசாதாரணமான தொலைநோக்கு, மாறாத இலக்கு, தளராத உறுதி இவற்றால் படைக்கப்படும், காலத்தால் அழியாத சாதனைகளுக்கு இந்த நகரம் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.

இந்தப் பத்துக் கொள்கைகளைப் பற்றி ஒரு கண்ணோட்டம் பார்ப்போம்:

***

ஓர் எண்ணம் நிறைவேறுவதே உன் வாழ்வின் இலக்கு என்று கொள்!

உன்னதமான ஒரு குறிக்கோளை எடுத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் ஒதுக்கிவிட்டு அந்தக் குறிக்கோளையே உயிர்நாடியாகக் கொண்டு செயல்படும்போது மட்டுமே வெற்றி கிட்டும்.

உலகில் பல மெய்ஞானிகளும், விஞ்ஞானிகளும் உருவாக இந்தக் கொள்கையே காரணம். இதை நம் வாழ்விலும் கடைப்பிடித்தால் பல தொடர் நிகழ்வுகள் இயல்பாகவே அதன் படிகளாக அமைந்து வெற்றிப் பாதையில் நம்மை இட்டுச் செல்லும்.

மனித வாழ்வு ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே. வாழ்வில் ஒரே குறிக்கோள் – அதுவே வாழ்க்கை என்ற எண்ணத்தை மனதில் நிறுத்தி இடைவிடாது செயலாற்றினால் தான் குறுகிய காலத்தில் ஒரு சிறப்பான செயலைச் சாதிக்க முடியும். இல்லாவிடில் மனிதப் பிறவியின் பயன்தான் என்ன?

விவேகானந்தரின் இந்த முதல் உபதேசத்தைச் செயல்திட்டமாக்க மஹாவின் நோக்கில் ஒருவர் செய்ய வேண்டியவை.

ஒரு குறிக்கோளுக்கு நம்மை அர்ப்பணம் செய்து கொள்வது.

குறிக்கோளை அடைவதற்கான செயலை உடனே தொடங்குவது.

நமது குறிக்கோளைப் புரிந்து கொள்பவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது.

எழுந்திரு! விழித்திரு! இலக்கை எட்டும் வரை நில்லாது உழைத்திரு!

நமது குறிக்கோளை அடைவதற்கு நாம் நீண்ட காலம் கடுமையாக உழைக்க வேண்டுமென்பதை ஒரு தாரக மந்திரமாகவே கொள்ள வேண்டும். அயராத உழைப்பு இல்லாத மேன்மையான குறிக்கோள் மட்டும் பயன் தராது. நமது இலக்கை எட்டுவதற்கான வழியை ஆராய்ந்து உறுதியுடனும், விடாமுயற்சியுடனும் செயலில் இறங்க வேண்டும். செயலாற்றும்போது இடையூறுகள் ஏற்படும். அவற்றைக் கடந்து கவனத்துடன் தொடர்ந்து உழைப்பது மட்டுமே வெற்றிக்கான வழி. பெரும் செயல்கள் எதையும் எளிதாகச் செய்துவிட முடியுமா?

சுவாமிஜியின் இந்த இரண்டாவது உபதேசத்தைச் செயல்படுத்த மஹா தினமும் மேற்கொண்ட செயல்திட்டம்.

துணிச்சலான ஒரு குறிக்கோளுக்காக உழைப்பது.

அதிகாலையில் எழுந்து ஆக்கபூர்வமாகச் செயல்படுவது.

கடுமையாக உழைத்திரு!

செயல்புரிய நமக்கு உரிமை உண்டே தவிர அதனால் விளையும் பலனை எதிர்பார்ப்பதற்கு உரிமை இல்லை என்ற கீதை தத்துவத்தை சுவாமிஜி குறிப்பிடுகிறார்.

செயலாற்றும்போது குறிக்கோளுடன் பந்தப்பட்டுவிடக் கூடாது என்று அவர் அறிவுறுத்துகிறார். காரணம், பலனை எதிர்பார்த்துச் செயல்புரியும்போது செயல்முறையில் நம் கவனத்தை முழுமையாக ஈடுபடுத்த முடியாது. எனவே பலன், புகழ் எதிலும் நம் கவனம் இருக்கக் கூடாது.

செயலுக்காகவே செயலாற்ற வேண்டும், பலனுக்காக அல்ல என்ற சுவாமி விவேகானந்தரின் அறிவுரையைச் செயல்படுத்த மஹா மேற்கொண்ட செயல் திட்டம்.

ஈடுபாட்டுடன் உழைத்திடு. வேண்டியது எல்லாம் வந்து சேரும்.

உன்னால் மேலும் நன்கு செயலாற்ற முடியும் என்று உணர்.

ஆம் என எண்ணிவிட்டு எப்படி என்று திட்டமிடு.

அச்சம் தவிர்! அரக்கர்களை எதிர்!

அச்சம், எதிர்ப்பு, இடையூறு, இன்னல் என்ற அரக்கர்களை எதிர்த்து நில் என்று சுவாமி விவேகானந்தர் அடிக்கடி கூறுவார்.

இடையூறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாததால் அவற்றை எதிர்கொள்ளும்போது பயம் ஏற்படுகிறது. வாழ்வின் போக்கே குழப்பமாகவும், புரியாத புதிராகவும், துன்பம் தருவதாகவும் பலர் எண்ணுகின்றனர்.

இதற்குக் காரணம் பயமே. ஆபத்துகள் நேரும்போது தளர்ந்துப் போவதைவிட அவற்றை எதிர்த்து நின்று வெற்றி பெறுவதற்கான அச்சமின்மையை நாம் பின்பற்ற வேண்டும். மனம் தளர்ந்து துணைகளைத் தேடாமல் நம்முள் புதைந்து கிடக்கும் வலிமையைத் தேட வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு நேர் வழியில் செயலாற்ற வேண்டும்.

சுவாமி விவேகானந்தரின் இந்த நான்காவது அறிவுரையைச் செயலாற்ற மஹா மேற்கொண்டவை:

வீண் வழிகளைத் தவிர்.

பற்றற்று இருக்கப் பழகு.

தளராது தீர்வுகளைத் தேடு.

கருமை மிக்க இரவு, கவின் மிக்க காலைக்கு முன்னோடி!

தோல்விகளைக் கண்டு தளரக் கூடாது. தோல்விகள் நிகழ்வது இயற்கையே. தோல்விகளும், போராட்டங்களும் நம்மை வாழ்க்கையில் மேலும் விழிப்புடன் செயலாற்ற வைக்கின்றன.

தோல்விகளிலிருந்து தவறுகளை உணர்ந்து தனது இலக்கை நோக்கித் தீவிரமாகச் செயல்படுபவனையே வெற்றி நாடி வருகிறது. அத்தகைய நேரங்களில், இதுவும் கடந்து போகும், நாளை நமதே என உற்சாகத்துடன் தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.

சுவாமிஜியின் இந்த ஐந்தாம் அறிவுரையைக் கடைப்பிடிக்க மஹா கூறுவது:

வாய்ப்புகள் எதனையும் தவறவிடக் கூடாது.

எக்காலத்திலும் பிறரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டும்.

ஒருபோதும் மேற்கொண்ட செயலைக் கைவிடக் கூடாது.

தூய்மையால் எழும் சிந்தனை, சொல், செயல்.

நம் ஒவ்வொரு சிந்தனையும், சொல்லும், செயலும் எப்போதும் நம்முடனேயே இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவேதான் தூய சிந்தனைகளைச் சிந்தித்து, நல்லதையே பேசி, உன்னதச் செயல்களையே செய்ய வேண்டும். தூய எண்ணங்களே சொற்களாகப் பரிணமித்து, மகத்தான செயல்களைச் செய்வதற்கான ஆற்றலைத் தருகின்றன. எனவேதான் சுவாமிஜி தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துவார்.

தூய்மையே வெற்றிக்கு மூலதனம். சிந்தனை, சொல், செயல் ஆகிய இம்மூன்று அம்சங்களும் தூய மனதுடன் ஒன்று சேர்ந்தால் பிரமிக்கத் தக்க சாதனைகளைப் புரிவது நிச்சயம்.

சுவாமி விவேகானந்தரின் இந்த ஆறாம் அறிவுரையைச் செயல்திட்டமாக்க மஹா மேற்கொண்டவை.

எல்லா எதிர்மறைகளையும் ஒதுக்குதல்.

சிந்தனை, சொல், செயல்களில் ஒருமைப்பாட்டுடன் செயலாற்றுதல்.

பொறுப்புடன் பணிபுரிதல்.

ஆயிரம் அடிச்சறுக்கல்களே நன்மையை நிலைநாட்டும்!

மகத்தான சாதனைகள் புரிவதற்கு நீண்டகால, குறிக்கோளிலிருந்து தவறாத, இடைவிடாத முயற்சிகள் வேண்டும். செயலாற்றும்போது நாம் சந்திக்கும் சவால்கள், மிகுந்த கஷ்டத்தையும் வேதனையையும் கூடவே விளைவிக்கும்.

ஆனால் இத்தகைய அடிச்சறுக்கல்களைச் சமாளித்து நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு பல இன்னல்களுக்கிடையேயும் விடாமுயற்சியுடன் செல்பவர்களுக்கே வெற்றி சாத்தியம். ஆயிரம் அடிச்சறுக்கல்களுக்குப் பிறகே ஒருவரது நற்பண்பு வலுப்படும்.

சுவாமி விவேகானந்தரின் இந்த ஏழாம் அறிவுரையைச் செயல்படுத்த மஹா மேற்கொண்டவை:

ஆமாம் என்று தோன்றினாலும், செயல் முடியும் வரை இல்லை என்றே எண்ணுவது.

விழுந்தாலும் முன் நோக்கி விழுவது.

எதையும் தளர்த்திக் கொள்ள ஒப்புக் கொள்ளாதிருப்பது.

அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே!

ஒருவரது கடமையை அவரே செய்தாக வேண்டும். அதுபோல் பிறரது வழியில் நாம் குறுக்கிடவும் கூடாது. உலகில் நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் கருணையால் ஓர் இடமும், செய்வதற்கு ஒரு பொறுப்பும் தரப்பட்டுள்ளன.

அவற்றைச் செவ்வனே செய்வதே நம் கடமை. ஒரு கூட்டு முயற்சியில் பலரும் தத்தம் கடமைகளைச் சிறப்பாகச் செய்தாலன்றி அந்த முயற்சி வெற்றி அளிக்காது. மாறாக, அந்த முயற்சி வெற்றி அளித்தால் அதில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் வெற்றி பெற்றவர்களாகவே கருதப்படுவர்.

சுவாமிஜியின் இந்த எட்டாம் அறிவுரையைச் செயலாக்க மஹா மேற்கொண்டவை:

சரியான நபருக்குச் சரியான கடமையைத் தருவது.

அனைவரும் ஆற்றும் பணி சிறப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது.

வலுவான உறவை வளர்த்துக் கொள்வது.

உன் விதியை உன் மதியால் உருவாக்கு!

நமது விதியை நாமேதான் உருவாக்கிக் கொள்கிறோம் என்பது சுவாமி விவேகானந்தரின் தலையாய தத்துவம். தனது குறைகளுக்குப் பிறரைக் குற்றம் சாட்டுவது மிகப் பெரிய தவறு.

குறைகளும் தடுமாற்றங்களும் ஏற்படும்போது அதை முழுப் பொறுப்புடன் அகற்றுவது நம் கடமை. நீ எதுவாக ஆக விரும்புகிறாயோ அப்படியே ஆவாய் என்ற சுவாமி விவேகானந்தரின் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்வது அவசியம்.

அளவற்ற ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்றினால் நமது எண்ணங்கள் நிறைவேறுவதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சுவாமிஜியின் இந்த ஒன்பதாம் கருத்தைச் செயல்திட்டமாக்க மஹா பின்பற்றியவை:

உங்களை முழுமையாக நம்புங்கள்.

தீர்வுகளைக் கண்டறியும் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மனதைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.

எல்லா சக்தியும் உன்னுள் இருக்கிறது!

எல்லா சக்திகளும் நம்முள் புதைந்து கிடக்கின்றன. தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் உற்சாகத்தை மனதில் நிறுத்தி நம்முள் உறையும் தெய்விக சக்தியை நாம் வெளிப்படுத்த வேண்டும். நடைமுறை வாழ்வில் இந்த ஒரு கருத்தைக் கொண்டு பலர் மேன்மையான பல சாதனைகளைச் செய்துள்ளனர். தேவையான அனைத்துச் சக்தியும் இங்கேயே இப்போதே இருக்கிறது என்பதை இதயபூர்வமாக நம்புபவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சுவாமிஜியின் இந்த விலை மதிப்பற்ற பத்தாவது கருத்தைச் செயல்திட்டத்தில் கொண்டு வர மஹா செய்பவை:

ஊக்கமளிக்கும் காரணிகளைக் கண்டறிதல்.

புத்துணர்ச்சியுடன் செயல்படுதல்.

சினம், ஆசை, அச்சம் தவிர்த்தல்.

***

இப்படி, மஹாவிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய சுவாமி விவேகானந்தரின் வாழ்விற்கு உயிரூட்டும் உபதேசங்கள் ஒருவரை வெற்றியின் உச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதை இப்புத்தகம் தெளிவாக நமக்கு விளக்குகிறது.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகம் நமது இளைஞர்களுக்குப் பெரும் எழுச்சி ஊட்டும் என்பதில் ஐயமில்லை.

  • நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்  (ஜனவரி 2014)
நூல் விவரம்:

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு
ஆசிரியர்: கேரன் மெக்ரடி
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 17
விலை: ரூ. 300-
Tel: +91-44-2433 8712
Whatsapp: +91-9884822125

$$$

Leave a comment