முதல் பக்கம்
31. பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்

இந்திய சமூக வாழ்வில் பசுக்களுக்கு பிரதான இடமுண்டு. அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்த அடிப்படை ஆதாரத்தின் மீது கொடூரத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக சமுதாயம் கடுமையாகவும், துணிச்சலாகவும் தொடர்ந்து போராடியிருக்கிறது. அதற்கான சான்றாவணமே ‘பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்’ என்னும் இந்நூல்.
ஆங்கிலேயர்களால் இந்தியா ஆளப்பட்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் நிகழ்ந்த பசுக்கொலைகளையும், அதன் பின்னணியையும், லண்டனிலுள்ள இந்தியா ஆஃபீஸ் நூலக ஆவணக் காப்பகத்தில் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே ஆய்வு செய்து நூலாகப் படைத்திருக்கிறார் காந்திய அறிஞரும் சரித்திர நூலாசிரியருமான தரம்பால். அவருடன் சென்னையைச் சார்ந்த ஆய்வாளர் டி.எம்.முகுந்தனும் (சென்டர் ஃபார் பாலிஸி ஸ்டடிஸ்) தரவுகளைத் தொகுத்திருக்கிறார்.
இந்தியாவின் பெரும் பகுதியில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஆண்ட தருணங்களிலும், முதல் இந்திய சுதந்திரப் போரின்போதும், ஹிந்துக்களின் நன்மதிப்பைப் பெற முயன்ற இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பசுக்களைக் கொல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருப்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது. ஆங்கிலேயர் லண்டனில் வைத்திருக்கும் இந்தியா தொடர்பான ஆவணங்களையே ஆதாரமாகக் கொண்டு, நமது மன்சாட்சியைத் தட்டி எழுப்பும் வகையில் அறிஞர் தரம்பால் எழுதி இருக்கும் இந்நூல் கவனம் பெறுகிறது.
32. தமிழ் இலக்கியத்தில் செங்கோல்

நாட்டு மக்கள் நலம் பெற வேண்டுமாயின், நடுநிலைமை பேணும், நேர்மை மிகுந்த, அனைவரையும் சமமாகக் கருதக்கூடிய, மக்களை பகைவரிடமிருந்து காக்கும் திறன் பெற்ற, எளியவர்களின் துயர் துடைக்கக் கூடிய, தன்னலமற்ற நாயகன் ஒருவனது தலைமையில் நாடு இயங்கியாக வேண்டும். நாட்டின் ஆட்சித் தலைவனான அந்த நாயகனுக்கு என்றும் செங்கோன்மையை நினைவுறுத்தும் ஒரு அணிகலனே ‘செங்கோல்’.
நமது தாய்த் தமிழ் மொழியின் தொன்மை போலவே, நாட்டு மக்களை ஓர் ஒழுங்கில் வாழ வைத்த நல்லாட்சியும் தொன்மை மிக்கது. பல சிற்றரசர்களும் பேரரசர்களும் இந்த மண்ணை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் லட்சியக் கனவாகக் கொண்டிருந்தது, செங்கோல் ஏந்திய செங்கோன்மை ஆட்சியைத் தான். காலந்தோறும் படைக்கப்பட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பயின்று வரும் செங்கோல் குறித்த செய்திகள் கூறுவது இந்த உண்மையைத் தான். இது தொடர்பான ஓர் ஆய்வை நமது தளத்தில் பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் நிகழ்த்தினார். அந்த ஆய்வுத் தொடர், 21 அத்தியாயங்களாக ‘பொருள் புதிது’ தளத்தில் வெளியானது.
நமது தாய்நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்களின் அதிகாரபீடமான நாடாளுமன்றத்திற்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 2023 மே 28ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. அந்தத் தொடக்க விழாவில், நல்லாட்சியின் சின்னமான செங்கோலை சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பாரதப் பிரதமர் நரேந்திர மோதி. அந்த நிகழ்வே, செங்கோல் குறித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் பதிவுகள் அனைத்தையும் ஆராய்வதற்கான தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. அதன் தொடர் விளைவே இந்த இனிய நூல். தெய்வப்புலவர் திருவள்ளுவரில் தொடங்கும் இந்த ஆய்வு நூல், மகாகவி பாரதியின் லட்சிய நல்லரசுக் கனவுடன் நிறைவடைகிறது.
33. என்றும் வாழும் சநாதன தர்மம்

அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பிரிவான தமுஎகச சென்னையில் நடத்திய ‘சநாதன ஒழிப்பு மாநாடு’ தான் அந்தச் சர்ச்சைக்கு அச்சாரமிட்டது. அந்த அநாகரிக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அறியாமையை வெளிப்படுத்தினார் திமுகவின் இளவரசராக முன்னிறுத்தப்பட்டு வரும் திரு. உதயநிதி ஸ்டாலின். சநாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல், சநாதனம் என்பது ஹிந்து தர்மம் தான் என்ற அடிப்படை அறிவும் இல்லாமல், அந்த மேடையில் “சநாதனத்தை ஒழிப்போம்” என்று முழங்கியதன் மூலம், நாடு முழுவதும் கண்டனங்கள் குவியவும் காரணமாகி இருக்கிறார்.
அதையடுத்து உதயநிதியின் ஆணவப் பேச்சுக்கு எதிராக தமிழக அறிவுலகம் கிளர்ந்தெழுந்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தது. குறிப்பாக சநாதனத்தின் சிறப்புகளை அனைவருக்கும் தெரியப்படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பையே உதயநிதியின் உளறல் உருவாக்கிக் கொடுத்தது.
அவற்றில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட 70-க்கு மேற்பட்ட பதிவுகளை ’பொருள் புதிது’ தளத்தில் தொடர்ந்து தொகுத்தோம். அப்போதுதான், பெருவாரியான தமிழக மக்கள் சநாதனம் விஷயத்தில் திமுக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக இருப்பது தெரிய வந்தது. அந்த இணையத் தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 37 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, இப்போது ‘என்றும் வாழும் சநாதன தர்மம்’ என்ற நூலாக வெளியாகி இருக்கிறது. தொகுப்பாசிரியர் திரு. சேக்கிழானின் அரிய முயற்சியில் வெளியாகியுள்ள இந்நூல், சமகால வரலாற்றுப் பதிவு எனில் மிகையில்லை.
மகாத்மா காந்தி, மகரிஷி அரவிந்தர், சுவாமி விமூர்த்தானந்தர், சத்குரு ஜக்கி வாசுதேவ், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி; மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், எல்.முருகன்; பத்திரிகையாளர்களான எஸ்.எஸ்.மகாதேவன், எஸ்.குருமூர்த்தி, பத்மன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், ரங்கராஜ் பாண்டே, கோதை ஜோதிலட்சுமி, குரு.சிவகுமார், வ.மு.முரளி; எழுத்தாளர்களான வித்யா சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை பிரபாகர், செ.அருட்செல்வப் பேரரசன், திருநின்றவூர் ரவிகுமார், காம்கேர் கே.புவனேஸ்வரி, ஆய்வாளர்களான பேராசிரியர் ப.கனகசபாபதி, ராம் மாதவ், ஜெயஸ்ரீ சாரநாதன்; கவிஞர்களான மரபின்மைந்தன் முத்தையா, பி.ஆர்.மகாதேவன், வ.ச.ஸ்ரீகாந்த்; சமூக ஊடகப் பதிவர்களான ஜடாயு, இளங்கோ பிச்சாண்டி, வானவில் ரவி, ஷோபனா ரவி, இந்துவன்; பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட பலரின் பதிவுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

பாரதியின் படைப்புகளைத் தொகுக்கும் பணியில் அறிஞர்கள் சிலர் எந்தப் பயனும் கருதாமல் தொடர்ந்து உழைத்து வருவதால் தான், அவை நமக்கு கிடைத்து வருகின்றன. மகாகவி பங்களித்த பத்திரிகைகளிலும், பணிபுரிந்த பத்திரிகைகளிலும் வெளியான படைப்புகள், மொழிபெயர்த்த நூல்கள், எழுதிய கடிதங்கள் ஆகியவை பாரதி கருவூலமாக தற்போது தொகுக்கப்படுகின்றன. பாரதியியல் ஆய்வு ஒரு தனித் துறையாகவே வளர்ந்துள்ளது.
இந்த ஆய்வாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரு. ரா.அ.பத்மநாபன். அவரது அற்புதமான முயற்சியின் பயனே இந்த நூல். மகாகவி பாரதி தனது வாழ்நாளில் எத்தனையோ கடிதங்களை எழுதி இருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் நமக்குக் கிடைக்கவில்லை என்பது வருந்தக் கூடிய நிகழ்வே. எனினும், கிடைத்திருக்கும் அரிய கடிதங்களையேனும் பொக்கிஷமாகப் பாதுகாப்பது, தமிழ் ஆர்வலர்களின் கடமை. அந்தக் கடமையை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார் திரு. ரா.அ.பத்மநாபன். தவிர, ஒவ்வொரு கடிதத்தின் பின்னணியையும், அந்தக் கடிதத்தின் சரித்திர முக்கியத்துவத்தையும் தொகுப்பாசிரியராக அவர் முன்வைத்திருப்பது சிறப்பு.
இந்நூலில் 23 கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இச்சிறிய நூல், பாரதி கருவூலத்தின் அற்புதமான வைரம் எனில் மிகையல்ல. பாரதி ஆர்வலர்கள் ஒவ்வொருவரது இல்லத்திலும் இருக்க வேண்டிய இனிய நூல் இது.
35. கடமையைச் செய்!

பாரதத்தின் ஞானக் கருவூலங்களில் பகவத் கீதை தலையாயது. மகாபாரதக் காப்பியத்தின் இடையே ஞானப் பொக்கிஷமாக கீதை பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது அன்பிற்குரிய சீடனும் நண்பனுமான அர்ஜுனனுக்கு உபதேசித்தார் என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை.
மகாகவி பாரதி 1912ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழிபெயர்த்ததாக அறிகிறோம். ஆயினும் அவரது மறைவுக்குப் பிறகே இந்நூல் அச்சாக்கம் பெற்றது. பகவத் கீதையின் சுலோகங்கள், மிகக் கச்சிதமான வாக்கிய அமைப்புகளில் பாரதியால் வழங்கப்பட்டிருக்கின்றன.
தனது மொழிபெயர்ப்பின் நடுவில் எந்த விளக்கவுரையையோ சுய ஆலாபனையையோ கொண்டு வராமல், மூலத்துக்கு நியாயமான, எளிய தெளிவுரையே பாரதி செய்திருக்கும் அற்புதமான பணி. மாறாக, தனது நெடிய முன்னுரையில் பட்டினத்தார், தாயுமானவர், திருநாவுக்கரசர் போன்றோரின் மேற்கோள்களோடு பகவத் கீதையின் சாராம்சம், அது முன்வைக்கும் தத்துவம், வேதம்- உபநிடதங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகள், வேதங்கள் மிக மிகப் பழைய சமஸ்கிருத மொழியிலும், பிற்காலத்திய உபநிடதங்கள் பண்பட்ட சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டிருப்பது குறித்த விளக்கங்கள், கீதை குறித்த மேம்போக்கான தவறான அபிப்பிராயங்கள் போன்றவற்றை விளக்குகிறார்.
- காண்க: கடமையைச் செய்! – நூல் பதிப்புரை
- காண்க: கடமையைச் செய்: நூல் அறிமுகம்
36. சனாதன தர்மம் (கையடக்கத்தில்) ஒரு நுண்ணிய பார்வை

சநாதனம் என்ற சொல் தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் தீய பிரசாரத்தால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அமுதத்தை விஷமென்று தூற்றும் அறிவிலிகள் நிறைந்த கூட்டத்தின் இடையே நின்று, அமுதத்தின் சுவையை ஓங்கி முழங்க வேண்டி இருக்கிறது.
பாரதத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் வேராக விளங்கும் சநாதன தர்மம், காலம் கடந்த நமது வாழ்வியல் நெறி. ஒரு வகையில் இன்றைய ஹிந்து தர்மத்தின் (ஹிந்து என்பது மதமல்ல, அது ஒரு வாழ்வியல் நெறிமுறை என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது) முந்தைய பெயராகவும் காட்சி அளிக்கிறது. இது குறித்த சுருக்கமான விளக்கத்தை அளிக்கிறது இந்நூல்.
பேரா. பா.மஹாதேவன், பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐஐஎம்- பெங்களூரு) 30 ஆண்டுகளாகப் பணியாற்றுபவர். மேலாண்மைத் துறையில் பல நூல்களை எழுதியுள்ள இவர், இந்திய கலாச்சாரம், சநாதன தர்மம், பகவத் கீதை போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்து, குறிப்பிடத்தக்க நூல்களை எழுதி இருக்கிறார். சநாதனம் குறித்த இவரது அறிமுக நூல், படிப்படியாக, சநாதனத்தின் அம்சங்களையும் சிறப்புகளையும் விளக்குவதுடன், அது குறித்த விமர்சனங்களுக்குத் தெளிவான பதில்களையும் அளிக்கிறது.
37. ஆலயம் காணும் அயோத்தி நாயகன்

பொ.யு. 1528இல் அந்நிய ஆக்கிரமிப்பாளன் பாபரால் தகர்க்கப்பட்டு, அங்கு அடிமைச் சின்னம் அமைக்கப்பட்டது. அந்த அவமானத்தைத் துடைத்தெறிந்துவிட்டு, அதே இடத்தில் 2024இல் ஸ்ரீராமனுக்கான மாபெரும் ஆலயம் அமைந்திருக்கிறது. உலகம் வியந்து நம்மைக் காணும் உற்சாகத் தருணம் இது.
ஆனால், இந்த வெற்றி எளிதில் அடையப்படவில்லை. இதற்காக எண்ணற்ற ராம பக்தர்கள் போராடி இருக்கின்றனர். இந்த ராமகாரியத்தில் லட்சக் கணக்கானோர் தமது இன்னுயிர் ஈந்துள்ளனர்; கோடிக் கணக்கானோர் தங்கள் கடும் உழைப்பை நல்கி இருக்கின்றனர். இவை வருங்காலத் தலைமுறைக்குக் கூறப்படுவது அவசியம். இந்த வெற்றிச் சரித்திரத்தின் பக்கங்களைத் தொகுத்துப் பதிவு செய்வது இன்றியமையாத கடமை என்ற எண்ணத்தில் எழுதியதே இந்நூல்.
ஆலயம் காணும் அயோத்தி மாநகரம், ஹிந்துக்களின் வரலாற்றில் மாபெரும் வெற்றிச் சின்னம். எனவே, எந்த ஒரு நிகழ்வின் இடமும் நாளும் தெளிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அதனை மனதில் கொண்டே, இந்நூலின் அத்தியாயங்களைப் பகுத்துக் கொண்டேன். இந்நூலின் இரண்டாம் அத்தியாயமான ‘அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை’, காலவரிசையில் அயோத்தி இயக்க நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறது. அதனைப் படிக்கும்போது, இந்தப் போராட்டத்தின் சிக்கல்களும், அதனை எதிர்கொண்ட நமது சமுதாயத்தின் தீரமான செயல்பாடுகளும் நமக்குப் புரிய வரும்.
38. ஸ்ரீ ராம ஜென்மபூமி – வெற்றி வரலாறு

ராமருக்கு ஏன் இந்த மகத்துவம், தமிழகத்தில் ராமாயணத்தின் தாக்கம் என்று தொடங்கும் இந்த நூலில், அயோத்தி ராமர் பிறந்த இடத்தில் பாபர் காலத்தில் நடந்தது தொடங்கி இப்பொழுது அமைந்துள்ள பிரம்மாண்டமான கோயிலின் சிறப்பு வரை தொகுக்கப்பட்டுள்ளது (தொகுப்பாசிரியர்: பசுத்தாய் கணேசன்).
பாரத நாட்டில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியிலும் மிகச் சிறந்த கவிஞர், இலக்கியவாதி யார் என்று பார்த்தால் அவர் ராமாயணத்தை அந்த மொழியில் எழுதி இருப்பார், பாடியிருப்பார். ராமன் புகழைப் பாடுபவர்தான் சிறந்த கவிஞர் என்று பாரத மக்கள் கருதுகிறார்கள். பாரத நாட்டு மொழிகளில் உள்ள ராமாயணத்தின் பெயர்கள், அதை எழுதியவர்கள் யார், யார் என்று தொகுத்துக் கூறுகிறது ஒரு கட்டுரை.
‘உலகில் ஒவ்வொரு நாட்டின் தோற்றத்திற்கும் இருப்பிற்கும் ஒரு காரணம் உண்டு’ என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். ‘பாரதத்தின் இருப்பிற்குக் காரணம் தர்மம். அதை உலகிற்குக் கொடுக்கவே பாரதம் உயிருடன் உள்ளது’ என்பது அவரது கூற்று. அறத்தின் நாயகனான ராமன் புகழ் உலகமெங்கும் பரவி உள்ளதே இதற்கு சான்று. உலக மொழிகள் பலவற்றிலும் எழுதப்பட்டுள்ள ராமாயணத்தைப் பற்றிக் கூறுகிறது ஒரு கட்டுரை.
39. பாரதி போற்றும் தேசியக் கல்வி

உலக நாடுகள் அனைத்தும் லௌதீக வாழ்க்கையிலும், ஆதிக்க மனப்பான்மையிலும் கட்டுண்டு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில், உலகை உய்விக்கக் கூடிய ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உயர் சிந்தனை கொண்ட நாடாக நாம் மிளிர்கிறோம். நமது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கோட்பாடு, வெற்று முழக்கமல்ல. நம்மைப் பொருத்த வரை, உலக மாந்தர்கள் அனைவரும் சகோதரர்களே. இந்த உலகை போட்டி, பொறாமைகளிலிருந்து காக்கும் அருமருந்து பாரதம் வலியுறுத்தும் சகோதரத்துவமே.
ஆனால், இக்கருத்தை உலகம் ஏற்க வேண்டுமானால், நாம் இன்னமும் சக்தி படைத்தவர்கள் ஆக வேண்டும். நாம் சக்தி படைத்தவர்களாவது, பிறரை அடக்கி ஆள்வதற்காக அல்ல; மாறாக, உலகை அன்பால் பிணைத்து, அறிவால் இணைத்து, அறத்தால் வழிநடத்தவே. அதற்கு நமது இளைஞர்களின் கல்வித்தகுதியும் தலைமைப்பண்பும் உயர்ந்தாக வேண்டும்.
அதற்காகவே, இந்நூலை வெளியிடுகிறோம். பாரதம் உயர வேண்டும்; அதற்கு நமது கல்விமுறையில் மாற்றம் வர வேண்டும் என்று நூறாண்டுகளுக்கு முன்னமே சிந்தித்துச் செயலாற்றிய, தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதியின் சிந்தனைகளை அடித்தளமாகக் கொண்டு இந்நூலை பத்திரிகையாளர் திரு.சேக்கிழான் எழுதி இருக்கிறார். அவருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி. தேசியக் கல்வியால் மட்டுமே நமது நாட்டின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற மகாகவி பாரதியின் அற்புதமான கருத்துகளை இந்நூலில் கண்டு மகிழ்கிறோம்.
40. ஆத்மஞான ரத்தினம்

அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் ஆன்மிகப் பேரொளியை ஏற்றியவர் சுவாமி விவேகானந்தர். அவர் கூறிய ஹிந்து ஆன்மிகத்தின் அடிநாதம் விடுதலை. விடுதலை என்ற வார்த்தை, அடிமைப்பட்டிருந்த நாட்டு இளைஞர்களுக்கு ‘தேச விடுதலை’ என்று பொருள்பட்டது. ‘மதத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை’ என்று மேலை நாட்டினருக்கு அர்த்தமானது. ‘பந்தங்களிலிருந்து விடுதலை’ என்று பொருளானது துறவிகளுக்கு. இப்படி பலருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப விவேகானந்த கீதை விளங்கியது; வாழ்வியலில் வழிகாட்டியது.
பாரத நாட்டில் தீவிர தேச பக்தியுடன், ஆயுதமேந்தி அன்னிய ஆங்கிலேய ஆட்சியை அகற்றப் போராடிய, வீரமுள்ள இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் வாய்மொழி வேதமானது. பலரும் அவரை ஆழ்ந்து கற்றார்கள். விடுதலைப் போராளியானார்கள். அவர்களில் ஒருவர் ‘வீர முரசு’ சுப்பிரமணிய சிவா. சுப்பிரமணிய சிவா சுவாமி விவேகானந்தரில் ஆழ்ந்தவர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன, அவர் பின்னாளில் எழுதிய நூல்கள். அதில் ஒன்று இந்த நூல்.
அன்றாட வாழ்வில் நமக்கு வழிகாட்டக் கூடிய, துணை நிற்கக்கூடிய வகையில், சின்ன சின்னதாக சுவாமிஜியின் 1004 உபதேச மொழிகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து வெளியிட்டுள்ளார் சுப்பிரமணிய சிவா. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1922இல் இந்த நூலைப் பிரசுரித்தவர் சை.ந.பாலசுந்தரம் என்பவர். ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புஸ்தகசாலை, பார்க் டவுன், சென்னையில் அச்சிடப்பட்டு வெளியாகி உள்ளது.
41. THE STRUGGLE OF MY LIFE – Swami Sahajananda Saraswathy

சகஜானந்தர் தனது காலத்தில் இரண்டு விஷயங்களுக்காகப் போராடினார். ஒன்று, ஒன்றுபட்ட பாரத தேச விடுதலை. இரண்டு, ஜமீன்தாரி முறையை ஒழிப்பது. ஜமீன்தாரி முறை என்பதை, சுரண்டல், ஒடுக்குமுறை என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
இன்று, இந்தியா ஒரு தேசம் என்ற கருத்தியலே தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. பிரிவினைவாதமானது, காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், தமிழ்நாடு என பல பகுதிகளில் எழுப்பப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். அந்த வகையில் சகஜானந்தரின் கருத்துக்கள் இன்றும் தேவையானவை; பொருத்தமானவையே.
இரண்டாவதாக, அவர் தன்னலத்தைத் துறந்து, சமுதாயத்திற்காக அர்ப்பணிப்போடு வாழ்ந்தார். 1907இல் துறவறம் பெற்றதிலிருந்து 1950 இல் அவர் காலமாகும் வரை அதே தியாக உணர்வுடன் கூடிய அர்ப்பணமான வாழ்வு வாழ்ந்தார். தனிமனித மோட்சத்தை விடுத்து நாட்டிற்காகவே வாழ்ந்தார். அரசியல் கட்சியின் வாலாக, எடுபிடியாக சமூக அமைப்புகளும் இயக்கங்களும் இருக்கக் கூடாது என்றார் சகஜானந்தர். அதேபோல பொதுப்பணத்தைக் கையாள்வதில் அவருக்கு இருந்த நேர்மை இன்று மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது.
42. ரத்தத்தில் முளைத்த என் தேசம்

வரலாற்றை மறந்தவனும் அறியாதவனும் நிகழ்காலத்தில் தவறிழைத்து எதிர்காலத்தை இழந்து விடுகிறார்கள். எனவேதான் வரலாறு முக்கியமானதாகிறது. ஆனால், நாம் பயிலும் வரலாறு உண்மையானதா? வரலாறு என்ற பெயரில் நமது கல்வி நிறுவனங்களில் புகுத்தப்படும் பல பொய்மைகளைத் தோலுரிக்கிறது, திரு. பி.பிரகாஷ் எழுதிய ‘ரத்தத்தில் முளைத்த என் தேசம்’ என்ற இந்த நூல். இதனைப் படித்து முடித்தபின் ஓவென்று அழுகை வரும். இது நார்மல் பிஹேவியர் தான். நூலைப் படித்தபின் பாரத கலாச்சாரத்துக்கு நாம் கிஞ்சித்தாவது செய்தோமா என்கிற குற்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
நூலில் வரும் கோயில்களுக்கும், வரலாற்று இடங்களுக்கும் செல்லும் போது, பக்தி மற்றும் வரலாற்று உணர்வை மீறி அழுகை வரும். மற்றவர்கள் பார்வைக்கு ஆளாக நேரிடும். அடுத்த விடுமுறைக்கு சிவாஜியின் கால் பதித்த இடங்களைப் புண்ணிய தரிசனம் செய்துவரக் கிளம்பிவிடுவீர்கள்.
ஒவ்வொரு முறையும் மதுரை மீனாட்சியை வழிபடும்போது எப்பேர்ப்பட்ட இன்னல்களில் இருந்து மீண்டு வந்து இன்றும் நமக்கு அருள்பாலிக்கிறாள் என்கிற எண்ணத்தோடு அவளைப் பார்க்கத் தோன்றும்.நூலைப் பத்து பிரதிகளாவது வாங்கி நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்னும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
43. தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்

இந்நூலில் 15 அத்தியாயங்கள் இதில் உள்ளன. முதல் அத்தியாயம் முருக வழிபாடு கௌமார சமயமாக – முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது – தனித்து விளங்கியதையும் பின்னர் பகவத் பாதரால் அது இன்றைய ஹிந்து மதத்தின் ஒரு அங்கமாக ஆனதையும் சொல்கிறது. மற்ற அத்தியாயங்கள் 14 முருக பக்தர்களைப் பற்றியும் அவர்கள் இயற்றிய நூல்களையும் கூறுகின்றன.
நக்கீரர், ஔவையார், போகர்; அகத்தியர்; பாம்பாட்டி சித்தர்; சிவவாக்கியர் என்று சித்தர் மரபில் வந்தவர்கள், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், பகழிக் கூத்தர், குமரகுருபர சுவாமிகள், ‘வண்ணச்சரபம்’ தண்டபாணி சுவாமிகள், வள்ளலார், பாம்பன் சுவாமிகள், ‘தணிகைமணி’ செங்கல்வராய பிள்ளை, கந்த சஷ்டி கவசம் இயற்றிய தேவராய சுவாமிகள், வாரியார் சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் பற்றிய கட்டுரைகள் உள்ளன.

முன்னெல்லாம் ஒரு திட்டத்தை துறை சார்ந்த அதிகாரிகள் முன்வைத்தால் கொள்கை அளவில் ஒப்புதல் பெறவே குறைந்தது நாலைந்து வருடங்களாவது ஆகும். வந்தே பாரத் திட்டம் கருவாகி உருவாகி உயிராக வர வெறும் 18 மாதங்களே ஆனதென்பது, இந்திய சாதனை மட்டுமல்ல – உலக சாதனையும் கூட.
இவ்வளவு வேகமும் தரமும் கொண்ட ஒரு ரயிலை இறக்குமதி செய்திருந்தால் இதைவிட மூன்று மடங்கு அதிகப் பணம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். அதாவது முன்னணி நாடுகளில் தயாரிப்புச் செலவுக்கு ஆகும் தொகையைவிட மிக மிகக் குறைவான தொகையில், அதே தரத்துடன் செய்துகாட்டி விட்டோம்.
இந்தத் திட்டத்தின் தலைமை அதிகாரியாக இருந்த சுதான்ஷு மணி இந்தத் திட்டம் மற்றும் அவருடைய ரயில்வே துறை அனுபவம் சார்ந்து இந்த நூலை எழுதியிருக்கிறார். 35 வருடங்கள் ரயில்வே துறையில் இயந்திரப் பொறியியல் அதிகாரியாகப் பணியாற்றியவர்; அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐ.சி.எஃப்பின் பொது மேலாளரானார். இரண்டு வருடங்களில் பணி ஓய்வும் பெற்றார். ஆனால், அந்த கடைசி இரண்டு ஆண்டுகளில்தான், இந்த வந்தே பாரத் திட்டம் திட்டமிடப்பட்டுச் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது.
45. நூற்றெட்டு திருப்பதி களஞ்சியம்

வைணவர்கள் போற்றி வழிபடும் தலங்களில் பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்டவை (மங்களா சாசனம் செய்யப்பட்டவை) 108 திவ்ய தேசங்களாகும். இந்த 108 திருப்பதிகளுக்கும் சென்று வழிபடுவது ஒவ்வொரு வைணவரின் லட்சியக் கனவாகும். இந்த தலங்கள் பற்றி தமிழில் பல நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நூல், அவற்றிலிருந்து வேறுபட்டது. 108 திவ்ய தேசங்கள் குறித்த இலக்கியப் பதிவுகள் அனைத்தையும் ஒரே நூலில் தொகுத்திருக்கும் அற்புத முயற்சி இது.
மேற்கண்ட நூல்கள் அனைத்தையும் அரிதின் முயன்று, பலரது அனுமதி பெற்று தொகுத்திருப்பதில் திரு. மகர சடகோபனின் கடின உழைப்பு புலப்படுகிறது. இந்நூல் மிக முக்கியமான வைணவ சமயம் சார்ந்த ஆவணமாகத் திகழ்கிறது.
இவை அல்லாது, ஸ்ரீ. உ.வே.பார்த்தசாரதி அய்யங்கார், பெங்களூர் அவர்கள் தொகுத்து, மாறன் பதிப்பகம் வெளியிட்ட ‘108 திவ்யதேச ஸ்தல வரலாறு’ என்ற நூலும் 108 வண்ணப் பக்கங்களாக நூலின் இறுதியில் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பு. அதில், ஒவ்வொரு திருப்பதியிலும் கோயில் கொண்டுள்ள மூலவர், தாயார், கோயில் விமானம், தீர்த்தம், மங்களா சாசனம் செய்த ஆழ்வார்கள், ஸ்தலப் பெருமை ஆகியவை சுருக்கமாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
46. சங்க செயல்முறையின் வளர்ச்சி

நாகபுரியில் நான்கைந்து சிறுவர்களுடன் ‘விளையாட்டாக’ டாக்டர் ஹெட்கேவார் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் தொடங்கிய ஷாகா என்ற தினசரி கூடுதல் என்ற அற்புதமான நடைமுறை, இன்று உலகளாவிய சங்க செயல்முறை ஆகி இருக்கிறது. இன்று உலகின் மாபெரும் தன்னார்வலர் இயக்கமாகவும், பாரதத்தின் வரலாற்றைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் ஆர்.எஸ்.எஸ். விளங்குகிறது.
இந்த அமைப்பு எவ்வாறு வளர்ந்தது? ஆரம்ப காலத்தில் இதனை எவ்வாறு ஒரு சிற்பி போல டாக்டர் ஹெட்கேவார் செதுக்கினார்? அதில் சங்க உறுப்பினர்களை (ஸ்வயம்சேவகர்கள்) எவ்வாறு அவர் ஈடுபடுத்தினார்? சங்கத்தின் ஒவ்வொரு செயல்முறையும் எவ்வாறு ஸ்வயம்சேவகர்களால் வடிவமைக்கப்பட்டன?
இந்தக் கேள்விகளுக்கான பதிலே இந்த நூல். ஒரு மொட்டு பூவாக மலர்வது போல, ஒரு சிசு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வது போல, சங்க செயல்முறை இயல்பாக வளர்ந்தது. டாக்டர்ஜி கால ஸ்வயம்சேவகரான பாபுராவ் வராட் பாண்டே மிகவும் அற்புதமாக இந்நூலை எழுதி இருக்கிறார்.

தென்திருப்பேரை தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்த தலம். இத்தலத்து இறைவனான மகரநெடுங்குழைக்காதரை அவர்கள் பலரும் பாடி மகிழ்ந்திருக்கின்றனர். அவ்வாறு எழுதப்பட்ட பல தமிழ் இலக்கியங்களையும் மிகவும் கடினமாக உழைத்து, ஒன்றுசேர்த்து, அரிய, புனிதமான படையலாக அளித்திருக்கிறார் திருவாளர் மகர சடகோபன்.
வளைகுடா நாடுகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உயர்பதவிகளில் பணி புரிந்துள்ள மகர சடகோபனுக்கு, தனது பூர்வீக வாசம் மறக்கவில்லை. தனது பூர்விகமான திருத்தலம் குறித்த அற்புதமான நூலை அளித்திருப்பதே இவருக்கு பெரும் ஆன்ம திருப்தி அளிக்கும் தெய்வீகச் செயலாக இருக்கிறது.
தனது நூலை மூன்று பாகங்களாகப் பகுத்துக்கொண்டு, 28 அத்தியாயங்களில் இலக்கியக் கதம்ப மாலையாகத் தொகுத்திருக்கிறார். வைஷ்ணவப் பெரியார்கள் பலரது ஸ்ரீமுகங்கள் நூலுக்கு மெருகூட்டுகின்றன. பிரம்மோற்சவ நிகழ்வுகள், ஸ்ரீ கிருஷ்ண கெருடன் தல வரலாறு உள்ளிட்ட திருத்தலம் குறித்த நூலாசிரியரின் தகவல்கள் நிறைவை அளிக்கின்றன. நூலின் இடையிடையே அற்புதமான வண்ணப் படங்கள் கண்களுக்கு விருந்தாகவும் பக்திமணம் கூட்டுவதாகவும் காட்சி அளிக்கின்றன.

சங்கரன்கோவில் திருத்தலத்தில் உறையும் தேவி கோமதி அம்மன். சீராசை நகர் என்று அழைக்கப்படும், சைவ – வைணவ ஒற்றுமைக்குப் பாலமாகத் திகழும் இத்தலத்து அம்மையை தமது செந்தமிழால் பாடிப் பரவுகிறார், சென்ற நூற்றாண்டின் மையத்தில் சைவத்தமிழ் வளர்த்த சைவ சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளையவர்கள்.
அவர் இயற்றிய ‘கோமதி சதரத்ன மாலை’ என்னும் சிற்றிலக்கியம், நாலடிப் பாக்களால் ஆனது. கோமதி அம்மனின் பெருமைகளை விவரிக்கும் இந்த நூறு பாடல்களும் ரத்தினம் போல மிளிர்கின்றன. இந்நூலுக்கு சைவ சித்தாந்த நன்மணி ச.ரத்னவேலன் அளித்த உரையும் ஒவ்வொரு பாடலுடனும் இடம் பெற்றுள்ளது. அமரர் பழனி ஈசான சிவாசாரிய சுவாமிகளின் ஆசியுரை நூலுக்கு மகுடமாக இலங்குகிறது.
49. சங்கரநயினார் கோயில் தலபுராணம்

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநயினார் கோயில் சைவ- வைணவ ஒற்றுமைக்குச் சான்றாக விளங்குகிறது. இங்குள்ள இறைவன், மாலவனை உடலில் ஒருபாதியாகக் கொண்டு சங்கரநாராயணராக கோமதி அம்மைக்குக் காட்சி அளித்தார் என்பது தல வரலாறு. இத்தலம் குறித்து சீவலமாற பாண்டியனும், முத்துவீரப்ப கவிராயரும் இயற்றிய தலபுராணம் இது.
இந்த நூல் இதுவரை பல பதிப்புகள் கண்டிருந்தாலும் செம்மையான பதிப்புக் காணவில்லை என்ற குறையை நீக்கி இருக்கிறது குகபதி பதிப்பகம். கீழவயலி அம்பிகைதாசன் அளித்த உரையுடன் சங்கரநயினார் கோயில் புராணத்தை மீளாக்கம் செய்திருக்கும் நண்பர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மதுரை தமிழ்ச் சங்க பெரும்புலவர் மு.ரா. அருணாசலக் கவிராயர் அளித்த அரும்பதவுரை (சில சருக்கங்கள் மட்டும்) இந்நூலில் உடன் இணைக்கப்பட்டுள்ளது. செய்யுள் முதற்குறிப்பு அகராதி நூலின் இறுதியில் இடம் பெற்றிருப்பது சிறப்பு.
50. VEER SAVARKAR: THE MAN WHO COULD HAVE PREVENTED PARTITION

திருவாளர்கள் உதய் மஹூர்கர், சிராயு பண்டிட் ஆகியோர் எழுதிய இந்த நூல், பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் சுதந்திர பாரதத்தைப் பற்றிய சாவர்க்கரின் நெடுநோக்கை முன்வைப்பதன் மூலம் தேசத்திற்கு பெரிய தொண்டு செய்துள்ளது. தேசத்திற்கு அவரை புரட்சியாளராக நன்கு தெரியும். ஆனால் தேசம் குறித்த அவரது நெடுநோக்கு பலரும் அறியாதது.
தேசப் பிரிவினைக்கு வித்திட்ட பிரிவினைவாத சக்திகள், ஓட்டுக்காக தாஜா செய்யும் பலவீனமான கொள்கைகள் ஆகியவை இன்றும் உள்ளன. பாரதம் ஒரே தேசமாக எழுச்சி பெற அவை பெரும் தடையாக உள்ளன. அவற்றை எதிர்த்துப் போராட சாவர்க்கரின் நெடுநோக்கு இன்று தேவைப்படுகிறது.
‘வீர சாவர்க்கர்: இவரால் பிரிவினையைத் தடுத்திருக்க முடியும்’ என்ற இந்த நூல், பிரிவினைக்குப் பின்னால் இருந்த உண்மையான காரணங்கள் எவை, காங்கிரசின் தாஜா செய்யும் கொள்கைகளுக்கு எதிராக சாவர்க்கர் எழுப்பிய எச்சரிக்கைகளை நாடு பின்பற்றி இருந்தால் பிரிவினையை எப்படி தடுத்திருக்க முடியும் ஆகிய விஷயங்களைப் பற்றி மிக ஆழமாக அலசி ஆய்வு செய்கின்ற அரிய நூல்.
51. தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தென்திருப்பேரை, 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இங்கு புலவர் பெருமக்கள் பலர் வாழ்ந்து இலக்கியங்கள் பலவற்றைப் படைத்துள்ளனர். அவற்றுள் ஒன்று, நாராயண தீட்சிதர் இயற்றிய ‘மகரநெடுங்குழைக்காதர் பாமாலை’ நூலாகும்.
இந்த நூலுக்கு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் பதவுரை எழுதி இருக்கிறார். அவர் இந்நூலை ‘சிறை மீட்ட செய்யுள்’ என்று குறிப்பிடுவதிலிருந்து நூலின் பெருமை புலப்படும்.
மேலும் பலர் இந்நூலின் சிறப்புக் கருதி உரையுடன் வெளியிட்டுள்ளனர். நூறு பாடல்கள் கொண்ட இப்பாமாலை நூலை, தற்காலத்திற்கு ஏற்ற வகையில், பிழையின்றியும் திருத்தமாகவும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் நூலாசிரியர் மகர சடகோபன்.
52. திராவிட கேள்வியும் தேசிய பதிலும்

எண்பது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் வினோதமான பல கருத்துருவாக்கங்கள் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. தமிழ்த் தேசியம் என்ற பெயரில் பிரிவினை சிந்தனை, ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் மொழி வெறுப்பு, பகுத்தறிவுவாதம் என்ற பெயரில் ஹிந்து சமய நம்பிக்கைகளை எள்ளி நகையாடுதல், சமூகநீதி என்ற பெயரில் பிராமண வெறுப்பு, மதச்சார்பின்மை என்ற பெயரில் சிறுபான்மையினருக்குக் கொம்பு சீவுதல், சமஸ்கிருத எதிர்ப்பு என்ற பெயரில் ஆலய வழிபாடுகளில் தலையீடு, இனப்பெருமை என்ற பெயரில் ஆரிய- திராவிட இனவாதம் என்ற தவறான கற்பிதம், கூட்டாட்சி என்ற பெயரில் ஒன்றிய அரசு என மத்திய ஆட்சியை ஏளனம் செய்தல் உள்ளிட்ட உண்மைக்கு மாறான சிந்தனைகள் பலவும் விதைக்கப்பட்டு, அவை விஷ விருட்சங்களாகி நிற்கின்றன.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வராதா, தேசத்திற்கே வழிகாட்டிய தேசியவாதிகளின் மண்ணில் மீண்டும் தேசியம் மலராதா என்ற ஏக்கம் பரவி வரும் சூழலை நாம் இப்போது காணத் தொடங்கி இருக்கிறோம். அதன் ஒரு வெளிப்பாடுதான், எழுத்தாளர் திரு. பா.பிரபாகரன் அவர்களின் இந்நூல்.
தமிழகத்தில் வெகுஜன ஊடகங்களில் பணிபுரிவோர் பலரும் திராவிட அரசியல் கருத்தாக்கங்களுக்கு தங்களை அடியாட்களாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் ஊடகவெளியில் விதைக்கும் பலவிதமான நச்சுக் கருத்துகளுக்கு தனது நூலில் எளிய பதில்களை தர்க்கரீதியாகவும், சில இடங்களில் புரிய வேண்டியவர்களுக்குப் புரியவைக்கும் விதமாக குதர்க்கரீதியாகவும் கூறுகிறார் நூலாசிரியர்.
53. அந்த 15 நாட்கள்

சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானில் அப்போது கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்), மேற்கு பாகிஸ்தான் (இன்றைய பாகிஸ்தான்) என்ற இரு பகுதிகள் இருந்தன). அப்பகுதிகளில் வாழ்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் நிலைமை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. தேசப் பிரிவினையை அவர்கள் ஆதரிக்கவில்லை. என்றபோதும் அவர்கள் மீது பிரிவினை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. அதன் விளைவாக அவர்கள் அடைந்த இன்னல்கள் நமது சரித்திரத்தின் பக்கங்களில் பூசி மெழுகப்பட்டுள்ளன.
எனவேதான், அன்றைய காலகட்டத்தில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நாட்களில், பிளவுபடாத பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவிய இருண்ட காட்சிகளை ஒளிவு மறைவின்றிப் பதிவு செய்திருக்கிறார் இந்நூலாசிரியர் பிரசாந்த் போலே. குறிப்பாக 1947 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 15 வரை, அவரது வரலாற்றுப் பயணம், திகிலூட்டும் திரைக்கதை போலப் பயணிக்கிறது.
சரித்திரம் தயவு தாட்சண்யமற்றது. தன்னை மறப்பவர்களுக்கு சரித்திரம் பாடம் கற்பித்துக் கொண்டே இருக்கும். சுதந்திர இந்தியாவில் இந்த உண்மையை நாம் முற்றாக உணர்ந்திருக்கிறோமா?
‘அந்த 15 நாட்கள்’ நூல் வெறும் சரித்திர நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல, இது நமது வாழ்க்கையோடு விதி விளையாடும் நர்த்தனத்தின் முன்னோட்டம். சரித்திரத் தவறுகளிலிருந்து பாடம் கற்பதே, நமது வருங்காலத் தலைமுறையினரைக் காக்கும் கேடயமாக இருக்கும்.
54. சங்கப்பணியில் சமர்ப்பணமான சுந்தர.ஜோதிஜி

ஜோதிஜி பிரசாரக்காக (ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர ஊழியர்) வருவதற்கு அவருடைய தந்தை சுந்தரம்ஜி முக்கிய பங்காற்றியுள்ளார் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தன் ஒரே மகன் சங்க பிரசாரக்காக தொடர்ந்து பணி செய்ய அவருடைய தந்தை அளித்த ஆக்கமும், ஊக்கமும் மிகவும் ஆச்சரியப்பட வைப்பவை. அவர் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு முதிர்ந்த, பண்பட்ட காரியகர்த்தரின் மனநிலை காணப்படுகிறது.
ஜோதிஜியுடன் அடியேன் சுமார் 11 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். அவர் ‘விஜயபாரதம்’ வார இதழின் ஆசிரியராக இருந்தபோது, நான் அதன் அலுவலக மேலாளராக இருந்தேன். பிறகு நான் சென்னை ஆர்.எஸ்.எஸ். காரியாலய பிரமுக்காக (அலுவலக நிர்வாகி) இருந்த போது, அவர் சக காரியாலய பிரமுக்காக இருந்தார். அவருடன் பழகிய பலரும் அவரைப் பற்றிய தனது அனுபவங்களை அளித்துள்ளார்கள். அவற்றின் தொகுப்பே இந்தப் புத்தகம்.
55. ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

அறிவுலகில் நீலகண்ட சாஸ்திரியும் (சோழர்கள்), பொதுவெளியில் கல்கி வார இதழில் தொடராக கிருஷ்ணமூர்த்தியும் (பொன்னியின் செல்வன்), அண்மையில் திரைப்படமாக மணிரத்னமும் (PS I & II), சோழ வரலாற்றைப் பற்றி தமிழர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளனர்.
சாஸ்திரியின் நூலில் சில விஷயங்கள் தெளிவாக இல்லை. அது அவர் காலத்தின் போதாமையேயன்றி, அவரது போதாமையல்ல. கிருஷ்ணமூர்த்தி அந்தத் தெளிவற்ற இடங்களை தன் கற்பனையால் நிரப்பி நாவலை எழுதினார். அதில் உண்மை எது கற்பனை எது என்பதையும், இக்கால நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாஸ்திரி காலத்தின் போதாமைகளை நீக்கியும், தெளிவைக் கொண்டு வரும் வரலாற்று ஆய்வைச் செய்துள்ளார் ஜெயஸ்ரீ ஸாரநாதன்.
வரலாறு நெடுகிலும், குழப்பமான காலகட்டத்தில்தான் பேரரசுகள் உருவாகி எழுந்துள்ளன. சோழப் பேரரசு உருவான காலகட்டத்தில் இருந்த குழப்பமான சூழ்நிலையில் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டது ஏன்? எப்படி? அவன் வீரபாண்டியனைக் கொல்லக் காரணம் என்ன? என்பதையும், நாவல் மற்றும் திரைப்படத்தில் சொல்லப்பட்டது போல கரிகாலன் தன் தந்தையின் வாழ்நாளிலேயே கொல்லப்படவில்லை. தந்தைக்குப் பின் அரசுப் பட்டம் ஏற்று ஆட்சி செய்தான் என்பதை கல்வெட்டுகளின் சான்றுகளுடன் தெளிவுபடுத்துகிறார் நூலாசிரியர்…
56. வீர வாஞ்சி

தமிழ்நாட்டின் நினைவிலேயே ஏறக்குறைய விலகிவிட்டிருந்த ‘திருநெல்வேலிப் புரட்சி’யையும் அதன் முக்கியப்புள்ளியான வாஞ்சிந்தாதனின் வீர வரலாற்றையும் குறித்து பல்லாண்டு கால உழைப்பைச் செலுத்தி, ஆதாரங்களைத் திரட்டி அதன் அடிப்படையில் மிகச் சொற்பமான புனைவுத்தன்மை சேர்த்து ரகமி எழுதிய நூல் இது. அச்சில் இல்லாதிருந்த இந்த நூலை, சுதந்திரப் பவள விழா ஆண்டில் பாரதி நூலகம், மறுபதிப்பு செய்துள்ளது. அதே பழைய எழுத்துருவில், படங்களுடன் சேர்த்து வெளியிருப்பது மிகச் சிறப்பு. இதன் பின்னுள்ள நண்பர்களுக்குப் பாராட்டுக்கள்.
நெல்லைச் சீமையில் கிளர்ந்த சுதேசி இயக்கம், ரகசியக் கூட்டங்களில் காளி சிலை முன்பு கைவிரல் இரத்தத்தைச் சிந்தி சபதம் செய்யும் பாரதமாதா சங்கத்து உறுப்பினர்கள், சிதம்பரம்பிள்ளைக்கும் சிவாவுக்கும் கடும் தண்டனை அளித்த பிரிட்டிஷ் ஆட்சி மீது கனலும் கோபம், புதுச்சேரியில் பாரதியார், வ.வே.சு. ஐயர் முதலானவர்களுடனான தொடர்புகள், ஆஷ் கொலைக்குப் பின் போலிசாரின் அடக்குமுறைகள், அம்பலமாகும் புரட்சிக்குழுவினரின் நடவடிக்கைகள் நம்பிக்கைத் துரோகங்கள் என்று பலவற்றையும் தொட்டுச் செல்லும் வரலாற்று ஆவணம் இந்தச் சிறிய நூல்.
57. வேத காலம்

பாளா சாஸ்த்ரி ஹர்தாஸ் ஒரு வேத விற்பனர். ‘வேதகால வாழ்வியல்’ என்ற அவரது புகழ் பெற்ற மராட்டிய நூல் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. அந்த நூலின் சுருக்கப்பட்ட பதிப்பாக இந்த நூலை சென்னையில் உள்ள சுவாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
வேதங்கள் நான்கு. அவை ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்பது பொது வழக்கு. ஆனால் நால் வேதங்கள் (மந்திரங்கள்), பிரமாணங்கள் (யாகங்கள் மற்றும் அதன் செயல்முறைகள்), ஆரண்யகங்கள் (யாகங்களைப் பற்றிய விளக்கங்கள், விளைவுகள், அது குறித்த ஆய்வுகள்), உபநிடதங்கள் (தத்துவ சிந்தனைகள்), ஆகியவை எல்லாம் சேர்ந்ததுதான் வேதம் என்று விளக்குகிறார் பாளா சாஸ்த்ரி.
இந்நூலைப் படித்தால், இன்று உலகில் ஆதிக்கம் செய்து கொண்டிருக்கும் மேற்கத்திய சிந்தனைகள் தாழ்வானவை மட்டுமல்ல, உலகை அழிவுக்கு இழுத்துச் செல்பவை என்பதும் புரியும். நாம் வேதகால வாழ்க்கைக்கு மீண்டும் செல்ல முடியாது என்றாலும் கூட, நாம் அதன் பலவீனமான வாரிசுகள் என்பது பெருமித உணர்வை இந்நூல் ஏற்படுத்துகிறது.
58. சிங்கப்பாதை

சாதாரண ஜனங்களையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் மகாத்மா காந்திஜி. ஆனால் அவர் பிறப்பதற்கு (1869-1948) முன்பே 1857 இல் அகில இந்திய அளவில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் சுதந்திர போராட்டம் தொடங்கிவிட்டது. அதற்கும் முன்பே தென்னிந்தியாவில் ஆங்காங்கே தனித்தனியாக போராட்டங்கள் நடந்தன. அவை எல்லாவற்றிலும் ரத்தக்கறை உள்ளது. எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.
இதற்காக ஆயுதம் ஏந்திப் போரிட்ட வீரர்களின் தியாக வரலாற்றை சுருக்கமாக கூறிச் செல்கிறது இந்நூல். பலரும் அறியாத தியாகிகள் அவர்கள். ராஜாஜியின் வேதாரண்ய உப்பு சத்தியாகிரகம் பற்றிப் பேசப்படும் தமிழ்நாட்டில், காங்கிரஸ் போராட்டத்தினால் உப்பளம் அதிகாரியான லோன் என்ற ஆங்கிலேயனை பொதுமக்கள் வெட்டிக் கொன்ற வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படக் காரணமான சம்பவம் இது. அதுபற்றி இந்நூலில் உள்ளது.
இப்படி மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட பல ஆயுதப் போராளிகளின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் அதே வேளையில், அகிம்சை போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் எழுதப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பு.
59. நாவுக்கரசரும் நாவாய் நாயகரும்

பாரத தேசம் விடுதலை பெற அரும்பாடு பட்டவர்களின் உண்மை தியாகம் இன்று பலருக்கும் தெரியாமல் மண்மூடி கண்மூடி போய் விட்டது. அக்குறை நீங்க தெய்விகத்தோடு தேசியத்தைப் பற்றிப் பேசும் நூல் தான் இது.
சுதந்திரம் என்றால் அந்த மூவர் கொண்ட அணியினரைப் பேசாமல் எழுதாமல் அவ்விடத்தை விட்டு நகர முடியாது. அதையும் மீறி ஒருவர் சுதந்திரம் பற்றி எழுதுகிறார், பேசுகிறார் என்றால் அது பொய்யுரை. அப்படியானால் எது மெய்யுரை எனத் தெரிய வேண்டுமாயின் சமீபத்தில் யாப்பு வெளியீடு செய்த ‘நாவுக்கரசரும் நாவாய் நாயகரும்’ என்ற நூலினை வாசியுங்கள்.
இந்நூலிற்குப் பயன்பட்ட சான்று நூற்கள், செய்யுள் முதற்குறிப்பகராதியைப் பார்க்கும் போது மற்றவர்களும் இப்பணியில் ஈடுபட்டால் அவர்கள் எந்த விதத்திலும் தடுமாற்றம் அடையக் கூடாது என்ற ஆசிரியரின் உயர்ந்த உள்ளம் புலப்படும். உள்ளன்போடு கற்றவர்கள் வரவேற்று மகிழ்வர். அதைப் பெற்றவர்கள் போற்றித் துதிப்பர். உற்றவர்கள் உச்சி முகப்பர் என்றால் அது மிகையல்ல.
வேறுபட்ட இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த இருபெரும் சான்றோர்களை உணர்வுப்பூர்வமாக ஒப்பிட்டு, அறிவார்ந்தும் அழகாகவும் காட்டியுள்ளார் அறிவழகன் அவர்கள்.
60. தற்கால சூழலில் ஹிந்துத்துவ தெளிவுரை

ஹிந்துத்துவம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். “5ஆயிரம் ஆண்டுகால நமது பாரம்பரியத்தின் பண்பாடே மதச்சார்பின்மைதான்” என்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி . இந்த மேற்கோளைக் காட்டுகிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத்.
‘தீண்டாமையை ஆதரிக்கிறது, சமூக சமத்துவத்துக்கு எதிரானது, பெண் உரிமையை மறுக்கிறது ஹிந்துத்துவம்’ என்கிறார்கள் திராவிட கட்சியினர். ஆனால், தீண்டாமையைத் தூக்கி எறி , வழிபாட்டு முறையில் வேற்றுமை, மொழி, உணவு, உடை, பழங்குடியினர் × மற்றவர்கள் என வேற்றுமைகளைக் களைவதைப் பற்றி ஆர் எஸ் எஸ் ஸின் அணுகுமுறை பற்றி கூறுகிறார் சுரேஷ் சோனி.
அரசியல் சாசனத்துக்கு ஹிந்துத்துவத்தால் ஆபத்து என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்துள்ள அரசியல் சாசனத்தில் ஹிந்துத்துவத்தின் ஆன்மா உள்ளது என்கிறார் அருண்குமார்.
ஆர் எஸ் எஸ் ஊழியர்கள் களத்தில் தங்களுக்கு எதிரானவர்களின் வாதங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி நடைமுறை சார்ந்து விளக்கியுள்ளார்.
மேற்சொன்ன மூவரும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள். அவர்கள் ஹிந்துத்துவத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப விளக்குகிறார்கள். வெவ்வேறு நிகழ்வுகளில் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு இந்நூல்.
61. ஜெய் சோம்நாத்!

நவீன இந்திய வரலாற்றில் மறக்க முடியாத படையெடுப்பாளன் கஜினி அமீர் முகமது. கஜினி என்பது ஊரின் பெயர், அமீர் என்றால் தலைவன். 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்து வந்து கோயில்களையும் வழிபாட்டு விக்கிரகங்களையும் உடைத்தெறிந்து அங்கிருந்து செல்வங்களையும் கொள்ளையடித்துச் சென்றான். நகரங்களை சிதைத்து சூறையாடினான். அதில் முக்கியமானது சோமநாதர் ஆலயம் என்று வரலாறு சொல்கிறது.
அந்தக் காலத்தில் மிகவும் பணக்காரக் கோயில் சோமநாதர் ஆலயம். கஜினிக்கு முன்பும் அந்தக் கோயில் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. ஆனால் அது கொள்ளை மட்டுமே. கஜினி செய்தது இஸ்லாமிய மத அடிப்படையிலான தகர்ப்பு. அதைப்பற்றிப் பேசுகிறது ‘ஜெய் ஸோம்நாத்’ என்ற இந்த நாவல்.
இதை எழுதியவர் ‘குலபதி’ கே எம் முன்ஷி (கன்னையாலால் மனேக்லால் முன்ஷி). காந்தி, படேலுக்கு நெருக்கமானவர், வழக்கறிஞர்,கல்வியாளர். பன்மொழி அறிஞர். இலக்கியவாதியாகத் தடம் பதித்தவர். விடுதலைக்கு பின் மத்திய அமைச்சராக, மாநில ஆளுநராக இருந்தவர்; சோமநாதர் ஆலயப் புனரமைப்புக் குழுவின் தலைவராக இருந்தவர்; பாரதிய வித்யா பவன் என்ற கல்வி அமைப்பை ஏற்படுத்தியவர். ராஜாஜியுடன் இணைந்து சுதந்திரா கட்சியை நிறுவியவர் என்று பன்முகம் கொண்டவர்.
முன்ஷி எழுதிய நூல்கள் பல. அதில் பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது ஜெய் ஸோம்நாத் . 1940இல் வெளியானது இந்த நூல் . அதை மொழி பெயர்த்து தொடராக வெளியிட்டது இலக்கிய மாத இதழான ‘காவேரி’ என்கிறார் அல்லயன்ஸ் சீனிவாசன்.
62. நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகன்

ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பற்றிய உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற எளிய நோக்கில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
தனது ஷாகா அனுபவங்களின் அடிப்படையிலும் ஆர்.எஸ்.எஸ். பற்றிய ஓர் அம்பேத்கரியரின் பார்வை என்ற கோணத்திலும், இந்த நூலை ம.வெங்கடேசன் எழுதியிருக்கிறார்.
ஆர்எஸ்எஸ்-ஸின் உண்மைக் குறிக்கோள் என்ன?
வர்ணங்கள் பற்றி சாதி , தீண்டாமை பற்றி ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறது?
பட்டியல் சமூகத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு என்னவெல்லாம் செய்து வருகிறது?
மனு ஸ்மிருதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது, கலப்புத் திருமணம், இட ஒதுக்கீடு பற்றியெல்லாம் ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறது?
டாக்டர் அம்பேத்கரைப் பற்றி ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்லியிருக்கிறது? என அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதார நூல்களையும், ஹிந்து மதத்தின் புனித நூல்களையும் மேற்கோள்காட்டியிருப்பதுடன், தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையிலும் இந்த நூலை எழுதியிருக்கிறார்.
63. அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி

மகாகவி பாரதி வாழ்வில் ஒரு சில ஆண்டுகள் கவிதை எழுதாமல் இருந்தார். அது ஏன் என்று ஆராய்கிறது இந்த நூல். கவிதை எழுதாமல் இருந்த காலத்தில் இருந்த தன்னை சுப்ரமணிய பாரதியார் பன்றியோடு ஒப்பிடுகிறார். தான் வாழ்ந்த வாழ்க்கையை இழித்துப் பேசுகிறார். இது சாதாரண பன்றி அல்ல. ரிஷியாக இருந்தவன், மேலும் ரிஷியாக இருக்க வேண்டியவன் பன்றியாக வாழ்கிறான். எனவே இது ‘அருந்தவப்பன்றி’ என்கிறார். பாரதியார் உருவாக்கிய புதிய சொல்லாடல் இது.
இந்நிலை மாற கவிதாதேவியின் அருளை வேண்டுகிறார். சிறு வயதிலேயே கவி பாடி ‘பாரதி’ என்று பட்டம் பெற்ற சுப்ரமணிய பாரதியை விட்டு கவிதாதேவி பிரிந்தது ஏன்? பன்றியென தன்னையே கூறுமளவுக்கு அவர் வாழ்ந்த வாழ்க்கை இழிவானது என்று ஏன் கருதினார்? கவிதாதேவி மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்த பிறகு நடந்த மாற்றங்கள் என்று நூலாசிரியர் பாரதியாரின் வாழ்க்கையை அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என அகச்சான்றுகள் மூலம் விவரிக்கிறார்.
இந்த இழிந்த வாழ்க்கையிலிருந்து தன்னை மீட்க வேண்டும் என்று கவிதாதேவியிடம், “வாராய் கவிதையா மணிப் பெயர்க் காதலி! வந்தெனக்கு அருளுதல் வாழி நின் கடனே!” என்று இறைஞ்சுகிறார் பாரதி.

தமிழிலும் தமிழ்நாட்டிலும் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பாரதியாரைப் பற்றியும், அவரது படைப்புகளைப் பற்றியும் ஓரளவுக்கு நிறைய எழுதப் பட்டிருக்கிறது என்பது நாம் உண்மையிலேயே பெருமை கொள்ள வேண்டிய விஷயம். ‘பாரதி இயல்’ என்று பெயர் தரும் அளவுக்கான ஆய்வுகளும் வந்துள்ளன.
ஶ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள “வேதம் புதுமை செய்த பாரதி” (2024) இதுவரை யாரும் தொடாத, வெளிச்சம் பாய்ச்சாத பாரதியின் ஒரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வருகிறது என்பதால் மிகவும் முக்கியமான நூலாகிறது.
“வேதம் புதுமை செய்” என்று தான் புதிய ஆத்திச்சூடியில் எழுதியதைத் தாமே செய்தும் காட்டியிருக்கிறார் பாரதியார் என்பது ஆசிரியரின் கருத்து. “வேதரிஷிகளின் கவிதை” என்ற தலைப்பில் சில வேத ஸூக்தங்களை பாரதியார் தமிழாக்கம் செய்து அவற்றின் பொருளை விளக்கி கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் என்ற விஷயம் கூட, தமிழர்களில் பலரும் அறியாத தகவல். ஆனால், “வேதம் புதுமை செய்தார்” என்பது இந்தச் சின்ன விஷயத்தை மாத்திரம் வைத்து அல்ல. வேத மெய்யியலில் பாரதியாரின் உறுதியான ஈடுபாடு என்பது அவரது கவிதைகள் உட்பட பலதரப்பட்ட எழுத்துகளிலும் வெளிப்படுகிறது என்பதோடு, சாதி வேறுபாடுகளை எதிர்த்த பாரதியின் சமதர்ம சிந்தனை, புதுமைப் பெண்ணைப் பாடிய அவரது பெண்விடுதலைச் சிந்தனைகள் ஆகியவற்றுக்கான தூண்டுதலும் வேத ரிஷிகளிடமிருந்தே வருகிறது என்பதையும் பல்வேறு மேற்கோள்களுடனும் ஆதாரங்களும் நூலாசிரியர் நிறுவிச் செல்கிறார்.

உலகப் போருக்கு இணையான உயிரிழப்பும், சொத்து இழப்பும், பெண்கள் மீது வன்முறையும் நிகழ்ந்தது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது என்று சொல்லப்படுகிறது. ஒருங்கிணைந்த இஸ்லாமிய சமயத்தினர், அவர்களுக்கு ஆதரவான முஸ்லிம் லீக் கட்சி, பக்கச் சாய்வு கொண்ட ஆங்கிலேயர்கள் என கூட்டாக, இயல்பாகவே ஒருங்கிணைப்பு இல்லாத ஹிந்துக்கள் மீது கட்டமைத்து விடப்பட்ட கொடுமைகள்.
தேசம் துண்டானாலும் பரவாயில்லை, தங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் போதும் என ஹிந்துக்களைக் கைவிட்டு ஓடிய காங்கிரஸ். முஸ்லிம் லீக் உடன் சேர்ந்து கொண்டு பிரிவினையை ஆதரித்து ஹிந்துக்களை சூறையாட வழிவகுத்த கம்யூனிச துரோகிகள். ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் பாதுகாத்து, இந்தியாவுக்கு அழைத்து வந்து, நிவாரண உதவிகளைச் செய்த ஆர்எஸ்எஸ்… என பிரிவினை நேரத்தில் நடந்தவற்றை உள்ளதை உள்ளவாறே ஆவணப்படுத்தி உள்ளார்கள் நூலாசிரியர்கள்.
பாகிஸ்தானில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியா வந்த ஹிந்துக்களாலும் சீக்கியர்களாலும் ‘கருப்பு தொப்பி அணிந்த தெய்வங்கள்’ என்று போற்றப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பிரிவினையின் போது களத்தில் நின்று நடத்திய போராட்டத்தையும் தியாகத்தையும் பற்றி விவரிக்கிறது இந்த நூல்.
66. பண்டைய இந்திய நாணயங்கள் – ஓர் அறிமுகம்

தமிழகத்தில் சங்ககாலத்தில் வேப்பம் பழம் போல் உருண்டையான காசுகள் ஆரம்பத்தில் இருந்துள்ளன என்று சங்கப் பாடல்கள் மூலம் தெரிகிறது. பிறகு அவை தட்டையாக உருமாற்றம் பெற்றன. சதுரம், நீள் சதுரம், வட்டம் என பல வடிவங்களில் நாணயங்கள் கிடைத்துள்ளன. அதில் மன்னர்களின் வடிவம் மட்டுமின்றி பட்டப் பெயர்களும் 3 ,4 வரிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
நாணயங்களில் கிரந்த , பிராமி , தமிழ், தெலுங்கு , சமஸ்கிருதம் எழுத்துக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
தங்கம், வெள்ளி, ஈயம் , செப்பு , போன்ற உலோகங்கள் நாணயத் தயாரிப்பில் பயன்படுத்தப் பட்டுள்ளன. தமிழக நாணயங்கள் சீனா, கிரேக்கப் பகுதிகளிலும் சீன, கிரேக்க நாணயங்கள் இந்தியா, இலங்கையிலும் கிடைத்துள்ளதைக் கொண்டு வர்த்தகப் பரிமாற்றம் இந்தப் பகுதிகளில் நடந்துள்ளதை அறிய முடிகிறது.

களா ஈசனை வாழ்த்த வந்த சிறிய பெருந்தகையார் கருவாபுரி, பா.ஸ்ரீராமகிருஷ்ணன் அவர்கள் ஒப்பனையம்பாள் சமேத சுயம்பு மூர்த்தி பால்வண்ணநாத சுவாமிகளின் திருவருளை நிரம்பப் பெற்றவர். தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுதற்கிணங்க நுண்புலனும், நுழைபுலனும், மாண்புலனும் உடையதாய் அவர் தம் ஆய்வு மிளிர்கிறது.
கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகளின் திருவாசகம், திருக்கோவையாரையும் ஓதாது உண்ணாத்திறம் கூறி உயிர்ப்பசி ஆறி, பின் ஊண்பசியாறவேண்டிய சைவர்களின் கடமையைத் தகுந்த திருட்டாந்தம் மூலம் உணர்த்தியுள்ளார்.
புதிதாக எழுப்பப்பட்ட மஹா ராஜகோபுரத் திருக்கோயில்கள் வரிசையில் கரிவலம்வந்தநல்லூர் அன்னை ஒப்பனையம்பிகை சமேத எந்தை சுயம்புவாகத் தோன்றிய பால்வண்ணநாத சுவாமி ஆலயமும் அணி செய்து மிளிர்வது போல, இவர் தம் ஆய்வும் ராஜ கோபுரமாய், மூவிரண்டு ஆண்டுகளாக இந்நூல் தொடர்பாக அல்லும்பகலும் கருவிருந்து பெற்ற புண்ணியக் கொழுந்தாய் மிளிர்கிறது.
68. ஹடயோக பிரதீபிகை

ஹடயோக பிரதீபிகை: பதினைந்தாம் நூற்றாண்டில் யோகி சுவாத்மாராமரால் எழுதப்பட்ட இந்த முக்கியமான நூல் இன்றளவும் யோக பயிற்சிகளுக்கான முதன்மையான வழிகாட்டியாக திகழ்கிறது. இந்த நூலில் 15 ஆசனங்கள், 6 கிரியைகள் 8 விதமான பிராணாயாமங்கள், 10 முத்திரைகள், தியான வழிமுறையான நாதானுசந்தானம் ஆகிய பயிற்சிகள் ஆதாரபூர்வமாக விளக்கப்பட்டுள்ளன.
முனைவர் ம.ஜயராமன் அவர்களின் மொழியாக்கத்தில், தற்காலத் தமிழில், பிரம்மானந்தர் அவர்களின் ஜ்யோத்ஸனா உரையிலிருந்து அரிய பல குறிப்புகளுடன் ஹடயோக பிரதீபிகை (2022) என்ற இந்த நூல் அருமையாக வெளிவந்திருக்கிறது.
தற்போது பல கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் யோகத் துறைகள் நிறுவப்பட்டு வருகின்றன. பல தனியார் அமைப்புகளும் குருகுலங்களும் உயர்நிலை யோகக் கல்வி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இவற்றின் பாடத்திட்டத்தில் ‘ஹடயோக பிரதீபிகை’ கட்டாயம் இடம்பெறும் நூலாக உள்ளது. சரளமான தமிழாக்கம் இல்லாததால் இந்த வகுப்புகளில் இணைந்து பயிலும் தமிழ் மாணவர்கள் ஆங்கில மொழிபெயர்ப்புகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நூல் அக்குறையைத் தீர்க்கும்.

இந்திய வரலாற்றில் திருப்புமுனைகளை ஏற்படுத்திய இரு ஆளுமைகள் சுவாமி விவேகானந்தரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸும். இவ்விருவருமே தங்கள் அர்ப்பணமயமான வாழ்க்கையால் இந்திய இளைஞர்களின் ஆதர்ஷமாக இன்றும் விளங்கி வருபவர்கள். இருவருமே கடல் கடந்து இந்தியாவின் பெருமிதத்தை நிலைநாட்டியவர்கள்; இருவருமே வங்காளிகள்; இருவருமே சமய நம்பிக்கை மிகுந்தவர்கள்; இருவருமே கலாச்சார தேசியத்தின் அடிப்படையில் பாரதம் ஒரே நாடு என்பதை மிகத் திண்ணமாக உறுதிப்படுத்தியவர்கள். இருவருமே மிக இளம் வயதிலேயே நம்மிடம் இருந்து விடைபெற்றுப் போனவர்கள். அதன் காரணமாகவே, இருவரும் -நிரந்தர இளைஞர்களாக – இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்த வடிவமாக இன்றும் கருதப்பட்டு வருகிறார்கள்.
இவ்விருவரது ஆளுமைகளை ஒப்பிடும் இனிய நூல் இது. எழுதியிருப்பவர் மூத்த எழுத்தாளர் சாருகேசி. 130 பக்கங்கள் மட்டுமே கொண்ட, பாக்கட் அளவிலான சிறிய நூல் தான்- ஆனால், இதன் உள்ளடக்கம் மிகப் பெரிது. விவேகானந்தர் 150வது ஜெயந்திக் கொண்டாட்டங்களை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்நூலை ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவரும் படிக்க வேண்டும். அதன்மூலமாக மாணவர்களின் எதிர்காலத்திற்கான திசையும் நாட்டிற்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமை குறித்த விசையும் கிடைக்கும்.