புராணங்கள்

நமது வேதங்களிலும் புராணங்களிலும் கூறியிருப்பனவற்றை விட எல்லாம் அறிந்தவர்களாக, அதீத ஞானம் வாய்ந்தவர்களாக, இப்போது மட்டுமல்ல, எப்போதும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்காகவே மகாகவி பாரதி எழுதிய அற்புதமான கட்டுரை இது. “ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்!” என்று எச்சரிக்கிறார் மகாகவி...

உழைப்பு

உழைப்பே உயர்வு தரும் என்று சொல்ல வந்த மகாகவி பாரதி, இந்தக் கட்டுரையின் இறுதியில் 4 வெண்பாக்களையும் இயற்றி வழங்கி இருக்கிறார். இவை பாரதியின் புதிய பாடல்களில் இடம் பெறுபவை.

உலக வாழ்க்கையின் பயன்

நாயைக் குளிப்பாட்டி நல்ல உணவளித்து நடு வீட்டில் வைத்தால் அது மறுபடியும் அசுத்த உணவு விரும்பி வாலைக் குழைத்துக்கொண்டு ஓடத்தான் செய்கிறது. எத்தனை புதிய இன்பங்களைக் காட்டிய போதிலும், மனம் அவற்றில் நிலைபெறாமல், மீண்டும் ஏதேனும் ஒரு துன்பக் குழியிலே கண்ணைத் திறந்து கொண்டுபோய் விழுந்து தத்தளிக்கத் தொடங்குகிறது.

புனர்ஜன்மம் (2)

மிருகங்களைப் போன்ற மனிதர்களை நாம் பார்த்ததில்லையா? நம்மை நாம் கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருகங்களாயிருந்திருக்கிறோம் என்பது தெரியும்.

லோக குரு

ரவீந்திர கவியின் உபந்யாஸத்தை ஜப்பான் தேசத்தார் மிகவும் பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகள் உயர்ந்த புகழ்ச்சி பேசுகின்றன. நல்ல காரியம் செய்தார். இப்படியே இங்கிலாந்து முதலிய எல்லாத் தேசங்களிலும் போய், பாரத தேசத்தின் அறிவு மஹிமையை மற்றொரு முறை விளக்கி வரும்படி புறப்பட்டிருக்கிறார் போலும்.

இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை

20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல் புதூரிலே தெற்குப் புது மனைத் தெருவில், எல்லா வகைகளிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸபையின் முன்னே, ‘இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை’ என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி செய்த பிரசங்கத்தின் ஸாரம் இது...

யேசு கிருஸ்துவின் வார்த்தை

தெய்வமில்லை என்று எந்தத் தவறு செய்தாவது பணந் தேடுவோர் பணத்தையே தெய்வமென்று கொண்டோர். இவ்வினத்தார் எல்லாத் தேசங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் மனத்திலே தம்மை மேதாவிகளாக நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய மேதாவித் தனம் மடத்தனம். 'தெய்வத்தை நம்பி, எப்போதும் உண்மை சொல்ல வேண்டும்; பயப்படக் கூடாது. எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை அச்சமில்லாமல் செய்து முடிக்க வேண்டும்' என்று காந்தி சொல்வதை நான் வேதவாக்காக ஒப்புக் கொள்ளுகிறேன்.

ஓம் சக்தி

எங்கிருந்தோ வந்து இவ்வுலகத்தில் சில நாள் வாழ்கிறோம். செத்த பிறகு நம்முடைய கதி என்ன ஆகுமோ? கடவுளுக்குத் தான் தெரியும். மூன்றே முக்கால் நாழிகை உயிர் வாழ்வது, சந்தோஷத்துடன் இருந்துவிட்டுப் போகக் கூடாதா? அடடா! இந்தப் பூமியில் மனித உயிருக்கு எத்தனை கஷ்டம், எத்தனை பயம், எத்தனை இடையூறு, எத்தனை கொலை, எத்தனை துரோகம், எத்தனை பொய், எத்தனை கொடுமை, எத்தனை அநியாயம், ஐயோ பாவம்!

தர்மம்

'அட போ. பழமொழிகளை நம்பி ஒழுக்கத்தை நடத்துவோமென்று நினைப்பதும் பயனில்லை' என்று மேற்படி வாடியா சொல்லுகிறார். 'பதறின காரியம் சிதறும் என்பதாக ஒரு பழமொழி சொல்லுகிறது. 'சோற்றுக்கு முந்திக்கொள்' என்று மற்றொரு பழமொழி சொல்லுகிறது. எந்தப் பழமொழியை நம்பலாம்?

அமிர்தம் தேடுதல்

‘அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை’ என்று தீர்ந்துவிட்டால் எதைக் கொண்டாடுவது? இது கட்டிவராது. எப்படியேனும், தேகத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த பிறகுதான் சாவோம்; அதுவரை நாம் சாக மாட்டோம். நம் இச்சைகள், நம்முடைய தர்மங்கள் நிறைவேறும்வரை நமக்கு மரணமில்லை.

வாசக ஞானம்

‘மரணம் பாவத்தின் கூலி’ என்று கிருஸ்தவ வேதம் சொல்வது எல்லாக் கிருஸ்தவர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும், பாவத்தை அறவே ஒழித்த கிருஸ்தவர்கள் எவரையும் காணவில்லை. ‘நாமெல்லோரும் பாவிகள்’ என்பதை பல்லவி போல சொல்லிக்கொண்டு காலங் கடத்துகிறார்கள்.

காமதேனு

நம்முடைய முயற்சியின் ஆரம்பத்தில் நம்மைப் பிறர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பலர் துணை செய்ய மாட்டார்கள். ஆனால் நம்பிக்கையைக் கைவிடாமல் இருந்தால் காலக்கிரமத்தில் வெளியுதவிகள் தாமே வரும். ஆரம்பத்தில் நமக்கு நாமே துணை. எத்தனை இடையூறுகள் எவ்வளவு பெரிதாகி வந்தபோதிலும் எடுத்த காரியத்தை ஒரே உறுதியாக நடத்திக் கொண்டு போவதே ஆரிய லக்ஷணம். அவ்வாறு செய்யக்கூடியவனே மனிதரில் சிறந்தவன்.

சிதம்பரம்

...வீதியிலிருந்து குழந்தைகளின் சப்தம் கேட்கிறது. வண்டிச் சப்தம், பக்கத்து வீட்டுவாசலில் விறகு பிளக்கிற சப்தம். நான்கு புறத்திலும் காக்கைகளின் குரல், இடையிடையே குயில், கிளி, புறாக்களின் ஓசை, வாசலிலே காவடிகொண்டு போகும் மணியோசை, தொலையிலிருந்து வரும் கோயிற் சங்கின் நாதம், தெருவிலே சேவலின் கொக்கரிப்பு, இடையிடையே தெருவில் போகும் ஸ்திரீகளின் பேச்சொலி, அண்டை வீடுகளில் குழந்தை அழும் சப்தம், ''நாராயணா, கோபாலா” என்று ஒரு பிச்சைக்காரனின் சப்தம், நாய் குரைக்கும் சப்தம், கதவுகள் அடைத்துத் திறக்கும் ஒலி...

சக்தி தர்மம்

பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வலோகங்களையும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று சலிக்கச் செய்வதால், சாக்தமதஸ்தர் நிர்குணமான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல் பெண்பாலாகக் கருதி "லோக மாதா" என்று போற்றினர். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் "என் தாய் காளி” என்று தான் பெரும்பாலும் பேசுவது வழக்கம்.

மூடபக்தி

சென்ற நூறு வருஷங்களாக இந்நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பாடசாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லக்ஷக்கணக்கான - கோடிக்கணக்கான ஜனங்கள் படித்துத் தேறியிருக்கிறார்கள். இவர்கள் மூடபக்திகளை எல்லாம் விட்டு விலகி நிற்கிறார்களா? இல்லை.