-வ.மு.முரளி
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற தலங்களை இது வரை கண்டோம்...

- காண்க: பகுதி- 9
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
சமயம் என்பது மக்களைப் பண்படுத்தவும் சமுதாயத்தை ஒருங்கிணைக்கவும் நமது முன்னோரால் ஏற்படுத்தப்பட்ட அழகிய அமைப்பு. இந்த உலகில் பல மதங்கள் இருக்கின்றன. அவற்றில் பலவும் யாராவது ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. நமது ஹிந்து சமயம் மட்டுமே, யாராலும் தோற்றுவிக்கப்படாத பழமை உடையது; சிவனைப் போலவே சுயம்பாய்த் தோன்றியது என்பதால், ஆதி அந்தம் அற்றது.
நாம் இன்று ஹிந்து சமயம் என்ற சட்டகத்திற்குள் அடக்கும் வழிபாட்டு முறைகள், ஆன்மிகச் சிந்தனைகள், தர்ம நெறிகள், சடங்குகள், பண்பாட்டு முறைமைகள், பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்தும் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோரால் பழகிப் பழகி உருவேற்றப்பட்டவை. இவற்றில் உருவ வழிபாடும் உண்டு; அருவ வழிபாடும் உண்டு. உருவ வழிபாட்டில் சிவன், மாலவன், கொற்றவை, குமரன், கணபதி, சூரியன், இந்திரன் ஆகியோரை மட்டுமல்ல, பஞ்சபூதங்கள், நதிகள், விருட்சங்கள், விலங்குகள் போன்றவற்றையும் நாம் வணங்குகிறோம். நம்மில் சாத்விக வழிபாடும் உண்டு; பலி கொடுக்கும் சடங்குகளும் உண்டு. இயற்கையை வழிபடுவோரும் உண்டு; இறைவனே இல்லை என்னும் உலகாயதவாதத்திற்கும் இடமுண்டு.
ஹிந்து சமயத்தின் மும்மூர்த்திகளாக சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் குறிக்கப்படுகின்றனர். இவர்களில் படைத்தலின் கடவுள் பிரம்மா எனவும், காத்தலின் கடவுள் விஷ்ணு எனவும், அழித்தலின் கடவுள் சிவன் எனவும் வழிபடுவது நமது மரபு. ஹிந்து சமயத்தின் இரு பெரும் பிரிவுகளான சைவம், வைணவத்தில் சைவ மதத்தின் முதற்பெரும் கடவுள் சிவன். வைணவத்தின் முதற்பெரும் கடவுள் மாலவன். மாலவனின் தங்கை பார்வதியை மணந்ததால் சிவனும் மாலவனும் உறவினர்கள் என்ற அற்புதமான ஒருங்கிணைப்பை நமது முன்னோர் ஏற்படுத்தி இருக்கின்றனர். சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மாவும் உருவானார்கள் என்று வேதவியாசர் கூறுகிறார்.
சிவனின் வலக்கரத்தில் இருக்கும் உடுக்கையில் இருந்து எழும் ஓங்கார நாதமே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் ஆதாரம் என்பதும் நம் நம்பிக்கை. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாக உலகைப் புரப்பவனும் சிவனே.
சிவனை நடராஜராகவும், பசுபதிநாதராகவும், மாதொருபாகனாகவும், யோகீஸ்வரனாகவும் மகாதேவராகவும்… இன்னும் பலப்பல வடிவங்களில் மட்டுமல்ல, லிங்க ரூபமாகவும் நாம் வழிபடுகிறோம். அடி முடி காண இயலாத சிவன், திருக்கோயில் கருவறையில் சிறு லிங்கமாக வீற்றிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்கள் தான் நாம் அனைவரும்.
உருவ வழிபாட்டுக்கும் அருவ வழிபாட்டுக்கும் இடைப்பட்ட லிங்க வழிபாடு உலகின் மிகத் தொன்மையான வழிபாடு. பாரத தேசத்தில் வழிபடப்படும் லிங்கத் திருமேனிகள் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் கிடைக்கும் லிங்கத் திருமேனிகள் சொல்வது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சிவலிங்க வழிபாடு உலகு முழுவதிலும் பரவி இருந்தது என்பதையே. நமது அரசியலமைப்புச் சட்டம் எழுதப்படுவதற்கு முன்னமே, இந்த நாட்டை ஒருங்கிணைத்தவை பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் தான்.
வேதங்களும் இதிகாசங்களும் புராணங்களும் சிவனைப் போற்றுகின்றன. எல்லா மொழிகளிலும் இலக்கியங்கள் முதன்மைக் கடவுளாக ஈசனையே சாற்றுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும், பிறப்பறுக்கும் பிஞ்ஞகனைப் பற்றிய குறிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.
தென்மொழியாம் தமிழும் வடமொழியாம் சமஸ்கிருதமும் பரமசிவனின் உடுக்கையில் இருபுறமும் எழும் நாதத்தில் தோன்றியவை என்பது புராணக் கதை. சோமேஸ்வரக் கடவுளே முதல் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக வீற்றிருந்து புலவர்களை வழிநடத்தினார் என்பதும் நமது பாரம்பரிய நம்பிக்கை. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் காப்பியங்களும் தமிழரின் வழிபாட்டு முறையில் சிவநெறிக்கு சான்று பகர்கின்றன.
திருவள்ளுவர் கூறும் ‘எண்குணத்தான்’ என்பது சிவனின் எண்குணங்களையே குறிக்கிறது என்பார் பரிமேலழகர். சைவ ஆகமம் கூறும் ‘தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை’ ஆகியவையே எண்குணங்கள் என்பார் அவர்.
தமிழின் சிறப்பான ஐந்திணை நிலங்களுக்கும் தனிக் கடவுளரை (முல்லை – மாயோன், குறிஞ்சி – சேயோன், மருதம் – இந்திரன், நெய்தல் – வருணன், பாலை – கொற்றவை) குறிப்பிட்ட தொல்காப்பியர், தனியொரு நிலத்திற்கு சிவனை தெய்வமாகக் குறிப்பிடவில்லை. ஏனெனில், அனைவருக்கும் பொதுவான இறைவனாக, காமனை எரித்த தேவன் வணங்கப்பட்டார். ஐம்பெரும் காப்பியங்களுள் முதலாவதான சிலப்பதிகாரம் ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ கோயில் புகார் நகரின் மையத்தில் இருந்ததைக் கூறுகிறது. மதுரையம்பதியை தலைமையிடமாகக் கொண்டு சிவன் நடத்திய 64 திருவிளையாடல்கள் தனி புராணமாகவே நம்மிடம் உள்ளது.
இவ்வாறு சிவனை நினைந்து உருகவும், பாடிப் பருகவும், நம்மிடையே அற்புதமான சைவ இலக்கியக் கருவூலங்கள் உள்ளன. அவற்றில் ‘தேவாரம்’ மிகவும் பீடு மிக்கது. அந்தப் பாடல்கள் தமிழகமெங்கும் பல தலங்களில் பாடப்பட்டு, இயல்பான சமுதாய ஒற்றுமையை நிலைநாட்டி இருக்கின்றன.
அவ்வாறு கொங்குநாட்டில் உள்ள திருத்தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களையே முந்தைய பகுதிகளில் பார்த்தோம். மீனாட்சி அம்மையுடன் அமர்ந்து பாண்டிய மன்னனாக வீற்றிருந்தவன், சோழ மண்ணில் நதிக்கரைதோறும் பொலிவுறு ஆலயங்களில் வீற்றிருப்பவன், கொங்குநாட்டில் எவ்வாறு குடிகொண்டு குடிகளைக் காத்து நிற்கிறான் என்பதைத் தான் இதுவரையிலும் கண்டோம்; கூடவே தண்டமிழ்ப் பதிகங்களையும் அவியுணவாய் உண்டோம்.
அவனருளாலே அவன் தாள் வணங்கி நாம் மேற்கொண்ட இந்தப் புனிதப் பயணம் இத்துடன் நிறைவுறுகிறது. தேவார அருளாளர்கள் மூவரும் யாத்திரை மேற்கொண்ட இத்திருத்தலங்களை நாமும் தரிசிப்போம்! ஈசனருள் பெறுவோம்!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
(நிறைவு)
$$$