-வ.மு.முரளி
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் வெஞ்சமாகூடல் பற்றி இன்று காண்போம்...

- காண்க: பகுதி- 7
இந்திரன் வழிபட்ட வெஞ்சமாகூடல்
கொங்கேழ் தலங்களில் இத்தலம் மட்டுமே போக்குவரத்து வசதிகள் குறைந்த ஊரகப் பகுதியில் உள்ளது. குடகனாற்றின் கரையில் உள்ள இத்தலம் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. குடகனாற்றுடன் ஒரு சிற்றாறு கலக்கும் இடம் என்பதாலும், வெஞ்சமன் என்ற வேடன் ஆண்டு வழிபட்ட தலம் என்பதாலும் ‘வெஞ்சமாகூடல்’ என்று பெயர் பெற்றது.
தேவர்களின் தலைவனான இந்திரன் சாபவிமோசனம் பெற இங்கு வந்து வழிபட்டதாக ஐதீகம். பாண்டியர்காலக் கல்வெட்டுகள் இங்கு கிடைத்துள்ளன. இங்குள்ள இறைவனின் பெயர் விகிர்தநாதேஸ்வரர். இறைவி பெயர், விகிர்தேஸ்வரி அல்லது பண்ணேர்மொழியம்மை.
சுந்தரரின் பாடலுக்கு மயங்கி, இத்தலத்தில் ஈசனே கிழரூபம் எடுத்து வந்து தனது இரு புதல்வர்களை மூதாட்டியிடம் ஈடுவைத்து பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்கிறது தலபுராணம். இத்தலத்தின் இறைவன் மீது சுந்தரர் பாடிய பதிகம், ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
கொங்கு மண்டல சதகத்திலும் இத்தலம் குறித்துப் பாடப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவர் கருவறைக் கதவுகளில் கொங்கேழ் தல மூர்த்திகளின் சிலாரூபங்கள் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு. இங்குள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழால் பாடிப் பரவியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. கரூரிலிருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 14 கி.மீ. தூரம் பயணித்தால் ஆறுரோடு பிரிவு என்ற இடம் வரும். அங்கிருந்து 8 கி.மீ. தூரம் பயணம் செய்தால் வெஞ்சமாகூடல் தலத்தை அடையலாம்.
வெஞ்சமாகூடல் திருக்கோயிலின் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. பிரிந்திருக்கும் தம்பதியர் இந்தச் சந்நிதியில் ஆறுமுகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் செய்து வேண்டிக்கொண்டால், பிரிந்த தம்பதியர் விரைவில் சேர்வர் என்பது நம்பிக்கை.
ஒருசமயம், வேடசந்தூர் அருகிலுள்ள அணைக்கட்டு உடைந்து குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்தபோது, இத்திருக்கோயில் பெருத்த சேதமடைந்தது. பல்லாண்டுகளுக்குப் பிறகு, பெரும் பொருட்செலவில் ஆன்மிக அன்பர்கள் இணைந்து இத்திருக்கோயிலைப் புதுப்பித்து 1986-இல் மகாகும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.


சுந்தரர் அருளிய
திருவெஞ்சமாகூடல் பதிகம்
எறிக்குங் கதிர்வேய் உதிர்முத் தம்மோடே
லம் இலவங்கந் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல்
முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல்
குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 1
குளங்கள் பலவுங் குழியுந் நிறையக்
குடமாமணி சந்தனமும் அகிலுந்
துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல்
வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும்
மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்
விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 2
வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார்
வடிவேற் கண்நல்லார் பலர்வந் திறைஞ்சத்
திரையார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல்
நிரையார் கமுகும் நெடுந்தாள் தெங்கும்
குறுந்தாட்பலவும் விரவிக் குளிரும்
விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 3
பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய்
படுகாட் டகத்தென் றும்ஓர்பற் றொழியாய்
தண்ணார் அகிலும் நலசா மரையும்
அலைத்தெற்று சிற்றா றதன்கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவுங் குழலும் இயம்ப
மடவார் நடமாடு மணியரங்கில்
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 4
துளைவெண் குழையுஞ் சுருள்வெண் தோடுந்
தூங்குங் காதிற் துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க்கொன் றையினாய்
கலந்தார்க் கருள்செய் திடுங்கற் பகமே
பிளைவெண் பிறையாய் பிறங்குஞ் சடையாய்
பிறவா தவனே பெறுதற் கரியாய்
வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 5
தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய்
சுரும்பார் மலர்க்கொன் றைதுன்றுஞ் சடையாய்
உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார்
புரந்தீ எழஓ டுவித்தாய் அழகார்
முழவார் ஒலிபாட லொடா டல்அறா
முதுகா டரங்கா நடமாட வல்லாய்
விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 6
கடமா களியா னைஉரித் தவனே
கரிகா டிடமா அனல்வீசி நின்று
நடமா டவல்லாய் நரையே றுகந்தாய்
நல்லாய் நறுங்கொன் றைநயந் தவனே
படம்ஆ யிரமாம் பருத்துத் திப்பைங்கண்
பகுவாய் எயிற்றோ டழலே உமிழும்
விடவார் அரவா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 7
காடும் மலையும் நாடு மிடறிக்
கதிர்மா மணிசந் தனமும் அகிலுஞ்
சேட னுறையும் மிடந்தான் விரும்பி
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற்
பாடல் முழவுங் குழலு மியம்பப்
பணைத்தோ ளியர்பா டலொடா டல்அறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 8
கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே
கொடுகொட்டி யொர்வீ ணைஉடை யவனே
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற்
பொதியும் புனிதா புனஞ்சூழ்ந் தழகார்
துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல்
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 9
வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார்
வடிவேற் கண்நல்லார் பலர்வந் திறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியே
னையும்வேண் டுதியே என்றுதான் விரும்பி
வஞ்சியா தளிக்கும் வயல்நா வலர்கோன்
வனப்பகை யப்பன் வன்றொண்டன் சொன்ன
செஞ்சொல் தமிழ்மா லைகள்பத் தும்வல்லார்
சிவலோ கத்திருப் பதுதிண் ணமன்றே. 10.
(தொடர்கிறது)
$$$