தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 6

-வ.மு.முரளி

கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் முதலையுண்ட பாலகனை தமிழ்ப் பதிகம் பாடி மீட்ட அவிநாசி திருத்தலம் குறித்து  இன்று காண்போம்...

  • காண்க: பகுதி- 5

தமிழின் இறைமை காட்டிய அவிநாசி

தொல்மொழியான தமிழுக்கு இறையாற்றல் உண்டு என்பதை மெய்ப்பித்த தலம்  ‘திருப்புக்கொளியூர்’ என்று பழங்காலத்தில் வழங்கப்பட்ட அவிநாசி திருத்தலம்.  ‘காசிக்குச் சென்றால் தான் முக்தி; அவிநாசியை நினைத்தாலே முக்தி’ என்ற சொல்வழக்கு உண்டு.

தமிழகத்தின் பழங்கால வணிகப்பாதையான ராஜகேசரி பாதையில் அமைந்த அவிநாசி, சுந்தரரின் பாதம் பட்டுப் புனிதமடைந்த தலமாகும். இக்கோயிலின் இறைவர் அவிநாசியப்பர்; இறைவி கருணாம்பிகை. காசி கங்கை, நாககன்னிகை தீர்த்தம், ஐராவத தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. தலவிருட்சம்: மாமரம்.

சுந்தரர் இத்தலத்துக்கு வந்தபோது எதிரெதிர் வீடுகளில் ஒரு வீட்டில் மங்கல ஒலியும் மறுவீட்டில் அமங்கல ஒலியும் கேட்டன. அதுகுறித்து சுந்தரர் விசாரித்தபோது, இரு வீடுகளிலும் இருந்த ஐந்து வயதுச் சிறுவர்கள் இருவர் அருகிலுள்ள தாமரைப் பொய்கையில் நீராடச் சென்றபோது ஒருவனை முதலை விழுங்கியது தெரியவந்தது. அதில் தப்பிய பாலகனுக்கு அன்று உபநயனம் செய்விக்கப்படுவதும், தமது குழந்தை இத்தருணத்தில் இல்லையே என்ற ஆற்றாமையால் எதிர்வீட்டுப் பெற்றோர் அழுவதும் உணர்ந்த சுந்தரர், பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று திருப்புக்கொளியூர்ப் பதிகம் பாடினார்.

முதலை பாலகனை உண்ட குளக்கரையில் ‘எற்றான் மறக்கேன்’ என்று தொடங்கும் பதிகம் பாடினார் சுந்தரர். பதிகத்தின் 4வது பாடலில் ‘முதலையை பிள்ளை தரச் சொல்லு’ என்று ஈசனுக்கே கட்டளையிட்டார் சுந்தரர். அதையேற்று, வற்றிய குளம் நிறைந்து முதலை அங்கு தோன்றியது; தான் ஐந்தாண்டுகளுக்கு முன் விழுங்கிய பாலகனை 10 வயது சிறுவனாக உயிருடன் உமிழ்ந்து மறைந்தது முதலை. இத்தகைய தெய்வீகத் தமிழின் அற்புதம் நிகழ்ந்த தலம் அவிநாசி.

இந்த மகிமைமிகு நிகழ்வு நடந்த குளம், அவிநாசியில் கோயிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு சுந்தரருக்கு தனிக்கோயிலும் உண்டு. பங்குனி உத்திர நாளில் இக்குளக்கரைக்கு வரும் அவிநாசியப்பர் முதலையுண்ட பாலகனை மீட்ட திருவிளையாடலில் பங்கேற்கிறார். சுந்தரர் பாடிய  ‘திருப்புக்கொளியூர்ப் பதிகம்’ ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. திருப்பூரிலிலிருந்து 11 கி.மீ. தூரத்திலும், கோவை, ஈரோட்டிலிருந்து தலா 40 கி.மீ. தூரத்திலும், பவானியிலிருந்து 53 கி.மீ. தூரத்திலும் அவிநாசி உள்ளது. அவிநாசித் தேர் தமிழகத்திலுள்ள தேர்களில் இரண்டாவது பெரியதாகும்.

அவிநாசி திருக்கோயிலில் கருணாம்பிகை அம்மன் சந்நிதியின்  பின்புற மாடத்தில் தேள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டால், விஷ ஜந்துக்களின் தொல்லை வராது என்பது நம்பிக்கை. அவிநாசி திருக்கோயில் தலவிருட்சமான பாதிரி மரம், பிரம்மோற்சவக் காலத்தில் மட்டுமே பூக்கிறது. மற்ற காலங்களில பூக்காது. இது ஓர் அதிசயமாகும்.

சுந்தரரால் பாடல் பெற்ற இன்னொரு தலமான திருமுருகன் பூண்டி, அவிநாசிக்கு மிகவும் அருகில் உள்ளது. தேவார வைப்புத்தலங்களான சேவூர் வாலீஸ்வரர் திருக்கோயில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் திருக்கோயில் ஆகியவையும் அருகில் உள்ள திருத்தலங்கள்.

சுந்தரர் அருளிய
திருப்புக்கொளியூர் பதிகம்

எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே   
உற்றாய் என்றுன்னையே உள்குகின் றேன்உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே 
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.  1 

வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே    
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை    
இழியாக் குளித்த மாணிஎன் னைக்கிறி செய்ததே.  2 

எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்கால் 
கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பார்இலை   
பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே    
எங்கோ னேஉனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.  3 

உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்  
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்    
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே    
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.  4 

அரங்காவ தெல்லா மாயிடு காடது அன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப்   
புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியே 
குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே.  5 

நாத்தா னும்உனைப் பாடல்அன் றிநவி லாதெனாச் 
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே 
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே.  6 

மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
சந்திகள் தோறுஞ்சலபுட்பம் இட்டு வழிபடப்  
புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே   
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.  7 

பேணா தொழிந்தேன் உன்னைஅல் லாற்பிற தேவரைக்  
காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியே    
காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே.  8 

நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை  
உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.  9 

நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்   
போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக்   
காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய 
சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே. 10

(தொடர்கிறது)

$$$

Leave a comment