தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 5

-வ.மு.முரளி

கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் மமூம்முர்த்திகள் அருளும் கொடுமுடியைக் காண்போம்...

மும்மூர்த்திகள் அருளும் கொடுமுடி

வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையிலான பலப்பரீட்சையில் மேருமலையின் ஒருபகுதியான வைரமுடி சிதறி விழுந்த இடமே கொடுமுடி என்று தலபுராணம் கூறுகிறது. கோயிலின் சுயம்பு வடிவான இறைவனுக்கு கொடுமுடிநாதர் அல்லது மகுடேஸ்வரர் என்று பெயர். இறைவியின் நாமம் வடிவுடைநாயகி.

காவிரி நதிக்கரையில் உள்ள இத்தலம், மும்மூர்த்திகளுக்கும் தனி சந்நிதி கொண்டிருப்பதால் தனிச்சிறப்பு பெற்றது. இங்குள்ள பிரம்மாவும், வீரநாராயணப் பெருமாளும் மகுடேஸ்வரரை வணங்குவதாக ஐதீகம். இங்குள்ள ஈசனை அகத்தியர் வழிபட்டதாகவும், அவரது விரல் தடங்கள் மூலவர் திருமேனியில் பதிந்திருப்பதாகவும் ஐதீகம் உண்டு.

காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவதீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்கள். காவிரியிலும் தேவதீர்த்தத்திலும் நீராடி, சிவனையும் பெருமாளையும் வழிபட, தீராப் பிணிகளும், பில்லி, சூனியம்,மனநோய் போன்றவையும் அகலும் என்பது நம்பிக்கை.

ஈசனின் ஆருயிர்த்தோழர் சுந்தரர் விஜயம் செய்து பாடி மகிழ்ந்த தலம் இது. பாண்டிக் கொடுமுடிநாதர் மீது சுந்தரர் பாடிய  ‘நமச்சிவாய பதிகம்’ ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மலையத்துவஜ பாண்டியனால் திருப்பணி செய்யப்பட்டதால் “திருப்பாண்டிக் கொடுமுடி’ என்று பெயர்பெற்ற இந்தப் பரிகாரத் தலம், தற்போது கொடுமுடி என்று வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி உள்ளது. ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தூரத்திலும், திருப்பூரிலிருந்து 89 கி.மீ. தூரத்திலும் இத்தலம் உள்ளது. ஈரோடு – திருச்சி ரயில் மார்க்கத்தில் பயணித்தும் இங்கு செல்லலாம். திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் கூட இத்தலத்து இறைவனை பதிகங்களில் பாடி வணங்கியுள்ளனர்.

கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில் வளாகத்துக்குள், மகுடேஸ்வரர் சந்நிதிக்கும் வடிவுடையநாயகி சந்நிதிக்கும் நடுவில், வீரநாராயணப் பெருமாள் – மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. மேலும் வன்னி மரத்தடியில் பிரம்மாவின் சந்நிதியும் அமைந்துள்ளது. தமிழகத்தில் மும்மூர்த்திகளும் ஒருங்கே உள்ள இரண்டாவது தலம்: கொடுமுடி. முதல் தலம்: சுசீந்திரம் ஸ்தாணுமாலயப் பெருமாள் திருக்கோயில் ஆகும்.

திருஞானசம்பந்தர் அருளிய
திருப்பாண்டிக்கொடுமுடி பதிகம்

பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்
கண்ணமர் நெற்றியி னாருங்  காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரும்  இமையவ ரேத்த நின்றாரும்
பண்ணமர் பாடலி னாரும்  பாண்டிக் கொடுமுடி யாரே.  1 

தனைக்கணி மாமலர் கொண்டு  தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும்  விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார்  நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார்  பாண்டிக் கொடுமுடி யாரே.  2 

சடையமர் கொன்றையி னாருஞ்  சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும்  பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும்  வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும்  பாண்டிக் கொடுமுடி யாரே.  3 

நறைவளர் கொன்றையி னாரும்  ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
கறைவளர் மாமிடற் றாருங்  காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு  மண்முழ வங்குழல் மொந்தை
பறைவளர் பாடலி னாரும்  பாண்டிக் கொடுமுடி யாரே.  4 

போகமு மின்பமு மாகிப்  போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக  அமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமுந் திங்களுஞ் சூடி  நன்னுதல் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும்  பாண்டிக் கொடுமுடி யாரே.  5 

கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரஞ் செற்ற  பொருசிலை யொன்றுடை யாரும்
வடிவுடை மங்கைதன் னோடு  மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும்  பாண்டிக் கொடுமுடி யாரே.  6 

ஊனமர் வெண்டலை யேந்தி  உண்பலிக் கென்றுழல் வாருந்
தேனம ரும்மொழி மாது  சேர்திரு மேனியி னாரும்
கானமர் மஞ்ஞைக ளாலுங்  காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணி வாரும்  பாண்டிக் கொடுமுடி யாரே.  7 

புரந்தரன் தன்னொடு வானோர்  போற்றியென் றேத்தநின் றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப்  பேரிடர் செய்துகந் தாருங்
கருந்திரை மாமிடற் றாருங்  காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப்  பாண்டிக் கொடுமுடி யாரே.  8 

திருமகள் காதலி னானுந்  திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமக னும்மவர் காணாப்  பேரழ லாகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து  வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும்  பாண்டிக் கொடுமுடி யாரே.  9 

புத்தரும் புந்தியி லாத  சமணரும் பொய்ம்மொழி யல்லால்
மெய்த்தவம் பேசிட மாட்டார்  வேடம் பலபல வற்றால்
சித்தருந் தேவருங் கூடிச்  செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும்  பாண்டிக் கொடுமுடி யாரே.  10 

கலமல்கு தண்கடல் சூழ்ந்த  காழியுள் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்திப்  பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்துஞ்  சொல்ல வல்லார் துயர்தீர்ந்து
நலமல்கு சிந்தைய ராகி  நன்னெறி யெய்துவர் தாமே. 11

***

திருநாவுக்கரசர் அருளிய
கொடுமுடி பதிகம்

சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.  1 

பிரமன் மாலறி யாத பெருமையன்
தரும மாகிய தத்துவன் எம்பிரான்
பரம னாருறை பாண்டிக் கொடுமுடி
கரும மாகத் தொழுமட நெஞ்சமே.  2 

ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனும் இத்தனை யல்லது
பேசு மாறறி யாளொரு பேதையே.  3 

தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
காண்ட லுமெளி யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.  4 

நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன்
திருக்கொ டுமுடி யென்றலுந் தீவினைக்
கருக்கெ டுமிது கைகண்ட யோகமே.  5

  • (இப்பதிகத்தில் இதர பாடல்கள் கிடைக்கவில்லை).

***

சுந்தரர் அருளிய
நமசிவாய பதிகம்

மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.  1 

இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.  2 

ஓவு நாளுணர் வழியும் நாளுயிர் போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.  3 

எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை தம்பி ரானென்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.  4 

அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள் நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.  5 

ஏடு வானிளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்த அழக னேயந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
சேட னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.  6 

விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.  7 

செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகம மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயி லாடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.  8 

சார ணன்தந்தை எம்பி ரானெந்தை தம்பிரா னென்பொன்மா மணியென்று
பேரெ ணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்றொ ழுங்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.  9 

கோணி யபிறை சூடியைக் கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்  பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத் தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லு வார்க்கில்லை துன்பமே. 10

(தொடர்கிறது)

$$$

Leave a comment