கம்ப ராமாயணம்: தமிழின் மகோன்னத காவியம்

-ஜடாயு

ராமாவதாரக் கதையை தமிழில் வழங்கி இறவாப்புகழ் பெற்ற கம்ப நாட்டாழ்வார் குறித்த எழுத்தாளர் திரு. ஜடாயுவின் கட்டுரை இது. ஸ்ரீராம நவமியை ஒட்டி இங்கு வெளியாகிறது...

ஸ்ரீரங்கம் திருக்கோயில் கற்றூணில் உள்ள
கம்பர் சிற்பம்.

பழங்காலம் முதலே தமிழ்நாட்டில் இராமகாதை நன்கு அறியப் பட்டிருந்தது என்பதற்கான சான்று சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான நூல்களிலும் கிடைக்கிறது. ஆனால், தமிழில் ஒரு மகோன்னதமான இராமாயண காவியம் உருவாவதற்கு நாம் பொதுயுகம் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை காத்தியிருக்க வேண்டியிருந்தது. அதை சிருஷ்டிப்பதற்கான திருவருளும் பெருமையும் கம்பர் என்ற மகாகவிக்கே வாய்த்தது.

கல்வியிற் பெரியவன் கம்பன் என்ற வழக்கிற்கு ஏற்ப, ஆதிகவியான வால்மீகி முனிவர் சம்ஸ்கிருத மொழியில் 24.000 சுலோகங்களில் அருளிய இராமாயணத்தை முழுமையாகக் கற்று உள்வாங்கி, தனது விசாலமான மேதமையையும் கவிதாசக்தியையும் கலந்து 10,000க்கும் மேற்பட்ட தமிழ்க் கவிகளால் கம்பர் தனது காவியத்தை சமைத்தார்.

கம்பரது வரலாற்றைக் குறித்த ஆதாரபூர்வமான செய்திகள் மிகச்சிலவே கிடைத்துள்ளன. அவர் சோழநாட்டில் தேரெழுந்தூரில் உவச்சர் குலத்தில் பிறந்தவர் (உவச்சர் – காளி கோயில் பூசகர் என்பர்; தச்சர் என்பதும் உண்டு). சோழமன்னரின் அரசவைக் கவிஞர் என்ற சிறிய புகழையும் அந்தஸ்தையும் துறந்து செல்வதற்கான துணிவும் உறுதியும் வாய்த்திருந்தவர்.

அவரது இராமகாதை திருவரங்கம் கோயிலில் அன்றைய தமிழ்நாட்டின் மாபெரும் புலவர்கள் அறிஞர்கள் முன்னிலையில் அரங்கேற்றப் பட்டது (திருவரங்கத்தில் தாயார் சன்னிதி முன்பாக உள்ள மண்டபம் இதன் நினைவாகவே கம்பர் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது).

கம்பரைப் பெரிதும் ஆதரித்த புலவர் சடையப்ப வள்ளல். தனது பெயரைக் காவியத்தில் எங்கும் கூறாத கம்பர், இவ்வள்ளலின் பெயரை பத்து இடங்களில் குறிப்பிட்டு தமிழ் இலக்கிய வானில் என்றும் சுடர்விட்டு விளங்கும்படிச் செய்திருக்கிறார்.

இராமாவதாரம் என்பதே தனது காவியத்திற்குக் கம்பர் இட்ட பெயர்.

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே.  

    (கம்ப ராமாயணப் பாயிரம்)

நல்வழியில் நின்று உயர்ந்த நாயகனின் தோற்றமாக நிகழ்ந்தது புகழ்மிக்க இராமாவதாரம். அந்த மகத்தான கதையைக் கூறும் செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற சிறந்த இந்தக் காவியம், வள்ளல் சடையனின் திருவெண்ணெய் நல்லூரில் இயற்றப்பட்டது.

கம்பர் இராமாயணத்தின் கதைப்போக்கில் வால்மீகியையே முழுவதுமாகப் பின்பற்றுகிறார். எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் பல இடங்களில் நுட்பமான முறையில் மெருகூட்டி சம்பவங்களையும் விவரணங்களையும் அழகிய சித்திரங்களாக்கி தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். பரம்பொருளே தர்மத்தை நிலைநிறுத்த இராமனாக அவதரித்து வந்தது என்பதைத் தனது நூலில் கம்பர் பலமுறை அழுத்தமாகக் கூறுகிறார்:

மறைகளும், முனிவர் யாரும், மலர் மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும், சொல்லும் துணிபொருள், தனி வில் தாங்கி,
அறை கழல் இராமன் ஆகி, அற நெறி நிறுத்த வந்தது;
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய்!

     (வாலி சுக்கிரீவனுக்குக் கூறுவது, வாலிவதைப் படலம், கிட்கிந்தா காண்டம்)

வேதங்களும், எல்லா முனிவர்களும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும், மற்ற சாத்திரங்களின் முடிபுகளும் தேர்ந்து சொல்லுகின்ற பரம்பொருள், (பகைவரைத்) தண்டிக்கும் வில்லை ஏந்திக் கொண்டு, ஒலிக்கின்ற கழலணிந்த இராமனாக, உலகில் அறநெறியை நிலை நிறுத்துவதற்காக அவதரித்துள்ளது. ஆலோசனையில் சிறந்தவனே! இந்த உண்மையை ஒரு சிறிதும் சந்தேகம் இல்லாமல் மனத்தில் கொள்வாய்.

ஸ்ரீராமர் குகனையும், சுக்ரீவனையும், விபீஷணனையும் தனது தம்பிகளாக ஏற்று அருள்புரிகிறார் என்பதைக் கம்பர் அழகுறப் பாடுகிறார். கங்கை முதல் இலங்கை வரை, அனைத்து மக்களும் சகோதரரே என்ற தேசிய உணர்வைப் பறைசாற்றும் வகையில் இது அமைந்துள்ளது.

‘குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.’

     (வீடணன் அடைக்கலப் படலம், யுத்தகாண்டம்)  

குகனுடன் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் சகோதரர்கள் ஆனோம். இது முன்பு நிகழ்ந்தது. அதன் பின்னர், மேருமலையைச் சுற்றிவரும் சூரியனது மகனான சுக்கிரீவனுடன் சகோதரர் ஆறுபேர் ஆனோம். உள்ளத்திலே நிறைந்த அன்பு கொண்டு எங்களிடம் வந்த விபீஷணா, உன்னுடன் சேர்த்து சகோதரர்கள் ஏழுபேர் ஆயினோம். எவரும் புகுதற்கரிய கானக வாழ்க்கையை எனக்குத் தந்து, உனது தந்தை தசரதன் புதல்வர்களால் நிறைவு பெற்றுவிட்டான்!

இராமனின் சக்தி என்பது தர்மத்தின், சத்தியத்தின், கருணையின் சக்தி என்பதைக் கம்பர் பல இடங்களில் அற்புதமாக எடுத்துரைக்கிறார்.

தையல்தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மை அறு கருணையும், உணர்வும், வாய்மையும்,
செய்ய தன் வில்லுமே சேமம் ஆகக் கொண்டு,
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே.

    (வனம்புகு படலம், அயோத்தியா காண்டம்)

சீதையின் கற்பும், தனது மேன்மைப் பண்பும், தம்பியாகிய இலக்குவனும், குற்றமற்ற கருணையும், ஞானமும், சத்தியமும், நிமிர்ந்த தனது வில்லும் ஆகிய இவற்றையே பாதுகாவலாகக் கொண்டு நள்ளிரவில் அந்தக் காட்டு வழியிலே ஐயன் இராமன் சென்றான்.

***

தமிழின் மூன்று மகத்தான கவிஞர்களாக கம்பர், வள்ளுவர், இளங்கோ ஆகியோரைத் தான் தனது பாடல்களில் பாரதியார் பட்டியலிட்டுள்ளார். அதில் ஒரு பாடலில்,

“எல்லையொன்றின்மை எனும் பொருளதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும்..”

என்று வருகிறது. இதில் கம்பனுக்குத் தரப்பட்டுள்ள புகழுரை சிந்தனைக்குரிய ஒன்று.

எல்லையொன்றின்மை என்று இங்கு பாரதி எதைக் கூறுகிறார்? வாழ்க்கையை, மனித விழுமியங்களைக் கூறுகிறார் என்று கொள்ளலாமா? அன்பிற்கு, தியாகத்திற்கு, சகோதர பாசத்திற்கு, பக்திக்கு அல்லது ஆசைக்கும் தான் எல்லை உண்டா? அதன் அடிப்படையில் இராமனும், சீதையும், இலட்சுமணனும், பரதனும், கைகேயியும், குகனும், அனுமனும், ஜடாயுவும், லங்கா தகனமும், அக்கினிப் பிரவேசமும், மாயமானும் வாழ்க்கையின் சில பரிமாணங்களின் ஆழ்ந்த குறியீடுகளாகவே நம் கலாசார வெளியில் பதிந்து விடச் செய்தவன் கம்பன் என்று ஆகிறது. அடுத்ததாக, எல்லையொன்றின்மை என்பது ஆதியந்தமற்ற பரம்பொருளையும் குறிக்கிறது. அத்தகைய பரம்பொருளின் இயல்பை கம்பன் காட்டுகிறான் எனில், கம்பரை கவிச்சக்கரவர்த்தி என்பதோடு கூட, தத்துவ ஞானியாகவும், வேதாந்தியாகவும் பாரதி கருதுகிறார் என்று கொள்ளலாம்.

கம்பர் புகழ் வாழ்க.

$$$

Leave a comment