தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 3

-வ.மு.முரளி

கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் திருச்செங்கோடு பற்றிக் காண்போம்...

காண்க: பகுதி-2

சமத்துவம் கூறும் திருச்செங்கோடு

ஆணும் பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்த, ஈசனே மாதொரு பாகனாக தரிசனம் அளிக்கும் தலம் திருச்செங்கோடு. இங்குள்ள சுயம்பு வடிவான மூலவரில் இடதுபாகம் அம்பிகையாகவும், வலதுபாகம் சிவனாகவும் காட்சி தருகிறது.

செந்நிறமான மலையாதலால் திருச்செங்கோடு என்று பெயர்பெற்ற 1,900 அடி உயரமுள்ள மலை மீது மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார். தலத்தின் இறைவி பாகம்பிரியாள். கணவனும் மனைவியும் மனமொத்து வாழ்வதற்கு, இணைபிரியாத இச்சிலாரூபமே வழிகாட்டும் தத்துவமாகும்.

1,250 படிக்கட்டுகளில் ஏறியோ, கார் மூலமாக தார்ச்சாலையில் பயணித்தோ கோயிலை அடையலாம். மூலவரின் காலடியில் சுரக்கும் வற்றாத தேவதீர்த்தம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மூலவருக்கு வலப்புறம் வேட்டியும் இடப்புறம் சேலையும் அணிவிக்கின்றனர். இங்கு அம்பிகைக்கு தனி சந்நிதி இல்லை. ஆதிகேசவப் பெருமாளுக்கு இங்கு தனிக்கோயில் உண்டு. செங்கோட்டுவேலனுக்கும் தனி சந்நிதி உண்டு.

“கொடிமாடச் செங்குன்றூர்’ என்று திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் திருச்செங்கோடு. இப்பதிகம் முதல் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்களும் இங்குள்ள செங்கோட்டுவேலன் மீது பாடப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. ஈரோட்டிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், சேலத்திலிருந்து 27 கிமீ. தூரத்திலும், நாமக்கல்லிலிருந்து 35 கி.மீ. தூரத்திலும் திருச்செங்கோடு உள்ளது. சிலப்பதிகார நாயகி கண்ணகி இம்மலைக்கு வந்ததாகவும் புராணக்கதை உண்டு.

திருஞானசம்பந்தர் அருளிய
கொடிமாடச் செங்குன்றூர்ப் பதிகம்

வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.  1 

அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.  2 

பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல
ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே.  3 

வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.  4 

பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல
பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.  5 

ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.  6 

நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.  7 

மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே.  8 

செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே.  9 

போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழநும் வினையான வீடுமே.  10 

அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந்
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே. 11

(தொடர்கிறது)

$$$

Leave a comment