புதுவையில் பூத்த யோக மலர்- 15

-திருநின்றவூர் ரவிகுமார்

இ.  ஆசிரமம்: ஆரம்பமும் வளர்ச்சியும்

 இ-3.   தெய்வீக வாழ்க்கை

கடலூரில் இருந்து வாராவாரம் டாக்டர் ராவ் வந்து சோதித்தார். மணிலாலுக்கு நிர்பந்தம் காரணமாக பரோடா திரும்ப வேண்டி இருந்தது. டாக்டர் ராவ் ஆறு வாரம் மாவுக்கட்டைப் பிரிக்கக் கூடாது என்று கூற, சென்னை டாக்டர் ஐயர், பத்து வாரங்கள் என்றார். ஒரு சமரசமாக எட்டு வாரங்கள் கட்டுடன் இருப்பது என்று ஸ்ரீ அரவிந்தர் கூறிவிட்டார்.

கட்டைப் பிரிக்கும் போது சென்னையில் இருந்து டாக்டர் நரசிம்ம ஐயரும் வந்தார். பரோடாவில் இருந்து டாக்டர் மணிலாலும் வந்தார். கட்டு பிரிக்கப்பட்டது. இரண்டு மாதங்களாக இறுகி இருந்தது விலகியதும் கால் பெரியதாக வீங்கத் தொடங்கியது. பரிசோதித்த டாக்டர்கள், எலும்பு கூடிவிட்டது என்றும் வீக்கத்தைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. அது தானாகவே சரியாகிவிடும் என்றும் கூறினார்கள். அன்னை திருப்தி அடையவில்லை. மருத்துவ ரீதியான சிக்கல்கள், ஆபத்துகள் வருவதற்கு உள்ள வாய்ப்புகளைப் பற்றி ஆழமாக கேட்டுத் தெரிந்து கொண்டார். ஸ்ரீ அரவிந்தரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் அன்னை பார்த்துக் கொள்வார் என்று வாளாவிருந்தார்.

வீக்கம் குறையவில்லை. டாக்டர் மணிலால் மீண்டும் காலை கட்டித் தொங்க விட்டார். வெந்நீர் மற்றும் பனிக்கட்டி ஒத்தடம் மாறி மாறிக் கொடுக்கப்பட்டது. சில நாட்களில் வீக்கம் முற்றிலும் வற்றிவிட்டது. பிறகு மெதுவாக நடக்க முயற்சிக்கலாம் என சொல்லப்பட்டது. இரண்டு பக்கமும் கட்டைகளைக் கொடுத்து நடக்க வைத்தார்கள். அது அரவிந்தருக்கு ஒத்து வரவில்லை. எனவே,  இரண்டு பேர்கள் இரண்டு பக்கம் நிற்க அவர்கள் தோள் மீது கை வைத்து ஊன்றி நடக்க அன்னை ஏற்பாடு செய்தார். சில நாட்களில் முன்னேற்றம் ஏற்பட, அவரே வலது கையில் ஒரு கழியை ஊன்றி நடக்கத் தொடங்கினார். ஆசிரம பக்தர்கள் ஆளாளுக்கு ஒரு கைத்தடியை சமர்ப்பித்தார்கள்.

மதியம் மற்றும் இரவு உணவுக்குப் பிறகு அன்னை வருவார். ஒரு கைத்தடியைக் கொடுப்பார். அதைக் கொண்டு அவர் முன்னிலையில் ஸ்ரீ அரவிந்தர் அரைமணி நேரம் நடையிடுவார். இதனிடையே மாதங்கள் உருண்டோடி விட்டன. இரண்டு தரிசன தினங்கள் இல்லாமல் போயின. ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளுக்கு நீண்ட நாட்கள் இருந்தன. எனவே அவரது ஆலோசனைப்படி ஸ்ரீ அன்னை இந்தியாவுக்கு வந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நான்காவது தரிசன தினமாக சேர்க்கப்பட்டது. ஆனால் தரிசன நேரம் காலை என்பதற்குப் பதிலாக மதியம் என்று மாற்றப்பட்டது; தரிசன நேரமும் ஸ்ரீ அரவிந்தருக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் குறைக்கப்பட்டது. சீடர்கள் ஒவ்வொருவராக இருவர் முன்பு வந்து நின்று வணங்கி ஆசி பெற்றுச் சென்றார்கள். அது அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது.

ஸ்ரீ அரவிந்தர் விழித்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு செய்தித்தாள்களைப் படிப்பார். பிறகு அன்னை வந்து அவரிடம் முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிப்பார். அவர் சென்றதும் ஸ்ரீ அரவிந்தர் அமைதியாக தியானத்தில் அமர்ந்து விடுவார். அவர் ஆன்ம விழிப்புணர்வுத் தளத்தில் என்ன செய்கிறார் என்பது அவருக்கும் அன்னைக்கும் மட்டுமே தெரியும். மூன்று மணிக்குப் பிறகு அன்னை உணவு கொண்டு வருவார். அது அந்த நாளின் பிரதான உணவு. இரவு உணவை மிகக் குறைவாகவே எடுத்துக் கொள்வார். தூங்கப் போகும்போது நள்ளிரவு கடந்து விடும்.

இவை புறச் செயல்பாடுகள். அகச் செயல்பாடுகள் பற்றி ஓரிரு குறிப்புகளை டாக்டர் பாரன் பதிந்துள்ளார்.  “இந்த அறையில் உள்ள சுவர்கள், மேஜை, நாற்காலி, புத்தகங்கள், நீங்கள், டாக்டர் மணிலால் எல்லாவற்றையும் இறைவனாகவே நான் பார்க்கிறேன். கற்பனை அல்லது மாயத் தோற்றங்களாக அல்ல. நிச்சயமாக நான் உணர்கிறேன்” என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்லியதாக அவர் குறித்துள்ளார். உலகில் இறை சக்தி வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை அவ்வப்போது சான்றுகளோடு சுட்டிக்காட்டி விளக்குவார் என்றும், டாக்டர் பாரன் எழுதியுள்ளார்.

உடல்நலம் போதுமான அளவு தேறியவுடன் அவர்  ‘தெய்வீக வாழ்க்கை’ என்ற நூலை வெளியிட கல்கத்தாவில் உள்ள ஆர்யா வெளியிட்டகத்தின் வேண்டுகோளை ஏற்றார். அது முதலில்  ‘ஆர்யா’ பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அப்போது முதல் உலகப்போர் நடந்தது. ஸ்ரீ அரவிந்தரின் கருத்துக்கள் நூல் வடிவம் பெறுவதை அன்னை விரும்பினார். தெய்வீக வாழ்க்கையின் முதல் பாகம் 1939 லும், அடுத்த பாகம் 1940 லும் நூல் வடிவில் வெளியாயின. அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டது.

‘டைம்ஸ்’ பத்திரிகையின் இலக்கியப் பகுதியில் அந்த நூலைப் பற்றிய சிறந்த மதிப்புரை வெளிவந்தது. தத்துவத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்ட சர் பிரான்சிஸ்  யங் ஹஸ்பெண்ட் என்ற ஆங்கிலேயர் அது பற்றி எழுதிய கடிதத்தில்,  “இது மகத்தான நூல்’ என்று குறிப்பிட்டுள்ளார். போர் பேரழிவைக் கொண்டு வந்துள்ளது. லண்டனில் இருக்கும் நாங்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம். இந்தச் சீரழிவில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. அது மனித மனத்தை இறைவன்பால் திருப்பி உள்ளது. இந்த நேரத்தில் தெய்வீக வாழ்க்கை என்ற இந்த நூல் மிகச் சரியாக வெளிவந்துள்ளது” என்று அவர் தம் கடிதத்தில் எழுதியுள்ளார்.

தொடர்கிறது…

$$$

Leave a comment