உருவகங்களின் ஊர்வலம் – 82

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன…. இது கவிதை #82..

82. எழுதிச் செல்லும் இறகு

குட்டிப் பறவையின் சிறகிலிருந்து பிரியும் இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
புதிய பறத்தலின் காவியத்தை எழுதும்.

காதல் பறவைகளின் சிறகுகளிலிருந்து பிரியும் இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
களிப்பின் காவியத்தை எழுதும்.

அந்திமப் பறவையின் சிறகிலிருந்து பிரியும் இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
விடைபெறலின் காவியத்தை எழுதும்.

கழுகிடமிருந்து தப்பும் பறவையின் சிறகிலிருந்து பிரியும் இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
பதற்றம் நிறை வாழ்க்கையின் பக்கங்களை எழுதும்.

அந்தி சாய்வதற்குள் கூடு திரும்பத் தவறிய தாய்ப்பறவையின்
சிறகிலிருந்து பிரியும் இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
தாய்மையின் தவிப்புகளை எழுதும்.

செல்ஃபோன் அலைக்கற்றைக் குறுக்கீடுகளால்
வழித்தடம் பிறழ்ந்த வலசைப் பறவையின் சிறகிலிருந்து பிரியும் இறகு எழுதுவது
பறவையின் காவியமாக மட்டுமே இருக்காது.

சிறகிலிருந்து உதிரும் எல்லா இறகுகளும் எழுதும் காவியம்
எப்போதுமே ஒன்றாக இருக்காது.

ஏனென்றால்
உதிரும் இறகில் இல்லை காவியம்.

$$$

Leave a comment