-ராம் மாதவ்

கடந்த வாரம் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்- 31.01.2026) நான் எழுதிய கட்டுரைக்கு (In his last days, a dilemma the Mahatma couldn’t resolve) காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் (பவன் கேரா) இந்தியன் எக்ஸ்பிரஸில் எதிர்வினை ஆற்றியுள்ளார். என் வாதங்களை திசை திருப்பி திருகலாக்கும் வீண் முயற்சி அது.
நாதுராம் கோட்சே காந்தியைக் கொன்றது தவறு. அது மட்டுமல்ல, அதற்கு அவன் முன்வைத்த காரணங்களும் தவறு என்று நான் எழுதியிருந்தேன்.
1947 இல் இந்தியப் பிரிவினைக்கு காந்தி தான் காரணமென கோட்சே நினைத்தான். காந்தியை விட மிக அதிக காரணம் காங்கிரஸ் உயர்த்திப் பிடிக்கும் ஜவஹர்லால் நேரு போன்றவர்களே என்று என் கட்டுரையில் வாதிட்டிருந்தேன்.
செய்தித் தொடர்பாளரின் கட்டுரை காங்கிரஸ் கட்சியின் விரக்தியைக் காட்டுகிறது. ஆத்திரத்தில் அவர் சுழற்றிய சாட்டை அவரையே அடித்திருக்கிறது.
பிரிவினையைத் தடுக்க காந்தி இறுதிவரை முயன்றார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்த சோதனையான காலகட்டத்தில் எப்பாடுபட்டாவது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடித்தார் நேரு.
நேருவின் கபட வேடத்தை முதலில் அம்பலப்படுத்தியவர் சுபாஷ் சந்திர போஸ். 1939 மார்ச்சில் அவர் எழுதிய வெளிப்படையான கடிதத்தில், நேருவின் தவறான அரசியல் நடவடிக்கைகளையும் கொள்கைத் தெளிவின்மையையும் கபடத் தன்மையையும் விமர்சித்திருந்தார். அதற்கு கடிதம் மூலம் பதிலளித்த நேரு, போஸ் சுட்டிக்காட்டிய தன்னுடைய குறைபாடுகளை ஒப்புக்கொண்டார். ஆனால் காந்தியுடன் தனக்குள்ள உறவு கெடக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்ததாக வலியுறுத்தி இருந்தார்.
காந்தியிடம் இருந்த விசுவாசம் கொள்கை சார்ந்தது அல்ல. மாறாக காங்கிரஸ் கட்சியில் தான் உயர்வதற்கு காந்தியின் ஆதரவு அவசியம் என்று நேரு நம்பியதை அந்தக் கடிதம் காட்டுகிறது.
1942இல் வார்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், “ஜவஹர்லாலை என்னுடைய வாரிசாகக் கருத வேண்டும். நான் இப்போது செய்வதை நான் போன பிறகு அவர் தொடர்ந்து செய்வார். அப்போது என்னுடைய மொழியிலேயே அவர் பேசுவார்” என்று காந்தி அறிவித்தார்.
ஆனால் வெகு விரைவிலேயே நேரு தன்னுடைய ஆதரவை விரும்புகிறாரே தவிர, தன்னுடைய சிந்தனையை முன்னெடுக்க விரும்பவில்லை என்பதை காந்தி புரிந்து கொண்டார். இந்தப் பரிதாபத்தை 1945இல் அவர்கள் இருவரிடையே நடந்த கருத்து, கடிதப் பரிமாற்றத்தில் தெரிந்து கொள்ளலாம்.
காந்தி எழுதிய கடிதத்தில், “இருவருக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு ‘அடிப்படையானது’ என்றால் ‘பொதுமக்களுக்கு அது பற்றித் தெரிய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த நேரு, “காந்தியின் ஹிந்து ஸ்வராஜ்யா கருத்துக்கள் ‘நடைமுறைக்குப் பொருந்தாது’; அதை காங்கிரஸ் ‘என்றும் பரிசீலனை செய்யவில்லை’ என்பது மட்டுமல்ல, ‘ஏற்றுக்கொள்ளவும் இல்லை” என்று எழுதினார். “இந்த விஷயத்தை விடுதலை பெற்ற பிறகு நாடே தீர்மானிக்க விட்டுவிடலாம்” என்று அந்தக் கடிதத்தில் சொல்லி, விவாதத்தைத் தவிர்த்து விட்டார்.
நேருவின் நோக்கம் தெளிவாக இருந்தது. மக்கள் தன்னை காந்தியின் அரசியல் வாரிசாக நம்ப வேண்டும். அதேவேளையில் தான் அவரது கொள்கை வாரிசு அல்ல என்ற உண்மையை தெளிவு படுத்தாமல் மூடி மறைத்து விட்டார்.
பிறகு பிரிவினைச் சவால் வந்தது. அதைத் தவிர்க்க காந்தி உறுதி பூண்டார். ஆனால் நேருவும் மற்றவர்களும் அப்படியில்லை. 1946 கேபினட் மிஷன் திட்டம் போன்ற வாய்ப்புகள் வந்தன. அந்தத் திட்டத்தின்படி ‘வடமேற்கில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகள், இந்து பெரும்பான்மை உள்ள பகுதிகள், வங்காளம்- அஸ்ஸாம் பகுதிகள் என மூன்று பிரிவுகளாக மாகாணங்களைப் பிரிக்கலாம். மத்திய அரசிடம் ராணுவம், அயலுறவு, தொலைதொடர்பு என்ற துறைகள் மட்டும் இருக்கும்’ என்று சொல்லப்பட்டது.
இது மத ரீதியான பிரிவினை என்று காந்தி எதிர்த்தார். ஆனால் காங்கிரஸ் செயற்குழு இதை ஏற்றுக் கொண்டது; தேசப் பிரிவினையை இது தவிர்க்கும் என்றது.
ஆனால் நேரு தன்னிச்சையாக செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதில், ‘பலவீனமான மத்திய அரசை காங்கிரஸ் விரும்பவில்லை. அது மட்டும் அல்ல இது அணி பிரிப்பதாக உள்ளது’ என்றார். ஆரம்பத்தில் இருந்தே இந்தத் திட்டம் ஜின்னாவுக்கு பிடிக்கவில்லை. செய்தியாளர் கூட்டத்தில் நேரு சொன்னதையே சாக்கிட்டு ஜின்னா இந்தத் திட்டத்திலிருந்து விலகினார்.
அதன் பிறகு ஜூன் 3 ஆம் தேதி திட்டம் என்ற பிரிவினைத் திட்டம் வந்தது. நேருவும் அவரது சகாக்களும் அவசர அவசரமாக அதை ஆதரித்தனர். அதனால் காந்தி தலையிட்டு அதிருப்தியாளர்களை சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.
காந்தி நாட்டைப் பிரிக்காமல் ஒன்றாக வைத்திருக்கும் நோக்கில் செயல்பட்டார். ஆனால் பிரிவினை ஏற்பட்டாலும் பரவாயில்லை, பதவி, அதிகாரம் வந்தால் போதும் என்ற நோக்கத்தில் நேரு செயல்பட்டார். இதைத்தான் நான் போன வாரம் எழுதிய கட்டுரையில் விளக்கியிருந்தேன்.
- நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (07.02.2026) – Gandhi was driven by a desire to keep India united, Nehru wanted power, no matter the price
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
- கட்டுரையாளர், இந்தியா பவுண்டேஷனின் தலைவர். பாஜகவில் இருக்கிறார்.
$$$