சற்குருவை துதி மனமே – 2 

-கருவாபுரிச் சிறுவன் 

அதிவீரராம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பனையூர் சொக்கநாதர் கோயிலுக்கு நேர் எதிரே உள்ள சற்குரு நாதர்களின் ஒடுக்கம் ஆலயத்தில் அருள் பாலிக்கும் இரு மகான்களைப் பற்றி இக்கட்டுரையில் கூறுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்…. 

சங்கரநாராயண சுவாமிகள்

தெளிவு குருவின் திருமேனி காண்டல் 
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் 
தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 
தெளிவு குருவின் திருவுரு சிந்தித்தல் தாமே.

அன்னை ஒளவை பிராட்டியாரிடம் முருகப் பெருமான் எது பெரிது எனக் கேட்டார். 

எவையெல்லாம் பெரியது என சொல்லிக் கொண்டே வந்த ஒளவையார் நிறைவாக,   “தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே” என்று  சொன்னார்.

சிவபெருமானின் தோழராகிய சுந்தர மூர்த்தி சுவாமிகள் நால்வர் பெருமக்களில் ஒருவர்;  நாயன்மார்களில் கடையானவர்-  ஆனால் முதன்மையானவர்.

அடியார் பெருமக்களின் வரலாற்றை அனுபவித்து எழுதி இவ்வுலகிற்கு வெளிப்படுத்திய காரண கர்த்தா அவர்தான்.  அவரால்தான் திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் புராணம், திருத்தொண்டர் புராண சாரம் என்ற பெருநுால்கள் எல்லாம் உருவாயின. 

அடியார்களின் சிறப்பினை கூறிக் கொண்டே வந்த சுந்தரமூர்த்தி நாயனார் ,  “அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன்” என்றார். 

“இந்த மண்ணில் உதித்த மகான்கள் அத்துணை பேரையும் வணங்குகிறேன்” (எந்தரோ மகானுபாவலு அந்தரிகி வணக்கமுலு)  என்பார் நாதப்ரம்மம் தியாராஜர்.

“பாகவத பக்தனின் எண்ணமே எனது எண்ணம்” என்பார் ஸ்ரீ கிருஷ்ணபகவான். 

அதாவது, அடியார்கள் என்பவர்கள் உயர்ந்தவர்கள், மேலானவர்கள், நற்பண்பினை உடையவர்கள், இன்சொல் இயம்புபவர்கள் இப்படி அவர்களைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.  

அவர்களே கலியுகத்தில் கண்கண்ட குருநாதர்கள் ஆவார்கள். 

இந்த சொல்லாட்சிக்கு, தென்காசிமாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், கரிவலம் வந்த நல்லுார் இலக்கணமானது. இங்கு எழுந்தருளி அருள் பாலிக்கும் பால்வண்ணநாத சுவாமியின் பரம பக்தனான ஸ்ரீமான் வரதுங்க ராம பாண்டியர், அதிவீரராம பாண்டியர் ஆவார்கள். 

அதிவீரராம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பனையூர் சொக்கநாதர் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது சற்குரு நாதர்களின் ஒடுக்கம் ஆலயம். 

இத்தலத்தில் ஜீவசமாதி கொண்டு ஞானச்செங்கோல் செலுத்திவரும் சற்குருநாதர்கள், பனையூர் சங்கர நாராயணசுவாமிகள், தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் ஆவார்கள். 

இவர்களின் அடிச்சுவட்டினைப் பின்பற்றிய பலரும் மகா ஞானியாகத் திகழ்ந்துள்ளார்கள்; திகழ்கின்றார்கள். 

குருவே சிவம்
குருவே தவம்
குருவே பொருள்
குருவே அருள்
குருவினால் எல்லாம் முடியும்
குரு ஏற திருவேறும்
குருவருள் இன்றி திருவருளை பெற முடியாது.

அதனால் தான் நம் முன்னோர்களும் குருவின் சிறப்பினை பலவாறு போற்றித் துதித்துள்ளார்கள். அவர்களுள், ஒருவராகிய நம் திருமூலதேவ நாயனாரும்

கருடன் உருவம் கருதும் அளவில் 
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்,
குருவின் உருவம் குறித்த அப்போதே 
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே. 

-என்று,  குருவினுடைய பார்வைக்கு இப்படியொரு சிறப்பு உள்ளது என எடுத்துச் சொல்வார். 

அந்த வகையில் ஜீவிதமாய் வாழ்ந்த காலத்தில் இருந்து, இன்று வரை பல அற்புதங்களையும் அருள் திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் கொண்டு இருப்பவர்கள், தென்பனையூர் சற்குரு சங்கரநாராயண சுவாமிகள், தெட்சிணா மூர்த்தி சுவாமிகள். 

நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்ட அருள் திறமுடைய அருளாளர்கள்; எங்கும் அன்பு நெறி பரவ வேண்டும் என திண்ணமுடைய திருவாளர்கள்; முக்காலமும் உணர்ந்த கலியுக கர்த்தாக்கள்; ஒரு மாபெரும் ஞான மரபினைத் தோற்றுவித்த அருள் ஞானிகள் இந்த முனிபுங்கவர்கள். 

நிலையான தர்மங்களை நீடித்து நிலைக்கச் செய்த நிர்மலமானவர்கள்; ஏழைகளின் இதயத்தில் என்றும் நித்தம் வாசம் செய்யும் சத்திய சீலர்கள்; தன் சன்னிதி நோக்கி மன்றாடி வருபவர்களுக்கு மந்திரித்துக் கயிறு தந்து, மகிமை பலவற்றை செய்து காட்டுபவர்கள்; பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றுவதில் விரும்பிச் செய்வதில் பெரு விருப்பினைக் கொண்டவர்கள். 

இவர்கள் மீது மதுரை வரகவி மு. கணபதியா பிள்ளை மாபெரும் பாமாலைகளை இயற்றிப் பாடியுள்ளார். அவரது பாடல்கள் அனைத்தும் பனையூரானின் புகழ் பாடும்; திறன் பேசும். 

சித்தர்களின் தலைமை சித்தராகியவரும், முருகப் பெருமானின் முதன்மை பக்தர்களில் ஒருவராகியவரும், ஆதிபகவானையே அம்மையப்பனாகக் கொண்டவரும், எந்த நேரத்திலும் பார்வதி பரமேஸ்வரனின் திருமணக் கோலத்தை காணும் பேறு பெற்றவருமாகிய அருட்குரு அகத்தியரே ராமகிரி நாதர் என்னும் திருநாமத்தில் சங்கர நாராயண சுவாமிக்கு சிவஞான உபதேசத்தை சித்திரை 20 ஆம் நாள் செய்தார். 

ஆண்டுதோறும் அதன் நினைவாக, சித்திரை 20 ஆம் நாள் மாபெரும் குருவிஜய வைபவம் நடைபெறும். அப்போது சற்குரு சங்கரநாராயண சுவாமிகள் மேளதாள,  படை பரிவார, யானை அம்பாரியுடன் நிட்சேப நதிக்கு வருகை தந்து கும்பத்தில் தன் குருநாதனாகிய ராமகிரிநாதரை எழுந்தருளச் செய்தும், தன் இல்லத்திற்கு வரவேற்றும் சிறப்பு செய்வார்கள். அது சமயம் ஏராளமான பக்தர்கள் குருநாதனின் திருவருளை பெற்றுச் செல்வார்கள். 

கங்கையின் வடிவாக எழுந்தருளி இருக்கும் ராமகிரிநாதரை பக்தி சிரத்தையோடு அழைத்து சிறப்பு செய்தார்களோ, அதேபோல மீண்டும் மறுநாள் அதிகாலையில் நிட்சேப நதிக்கு சென்று வழி அனுப்பியும் வைப்பார்கள். 

இந்த இரு வெவ்வேறு நிகழ்வுகளில் கருட பகவான் பறந்து வந்து பக்த கோடிகளுக்கு தரிசனம் கொடுப்பார்.  இது ஆண்டுதோறும் நடந்து வரும் அற்புதம்.

இந்த நிகழ்வினைக் காண்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.  இதுவே, பனையூர் ஒடுக்கத்தில் நடைபெறும் மாபெரும் குருபூஜை வைபவமாகும். 

மாதந்தோறும் நடக்கும் பௌர்ணமி பூஜை மிகவும் சிறப்புடையது. இங்கு வந்து சற்குருநாதர்களின் சன்னிதிக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு எப்போதும் ஜெயம் தான்.  தடை பட்ட திருமணம், குழந்தை பாக்கியம், தீராத பிரச்சனை யாவும் சுமுகமாகியுள்ளது. 

முச்சுடராய் ஆனந்த மூர்த்திசிவ லிங்கமதாய்ச் 
தச்சிணா மூர்த்தி வளர் சந்நிதிபோய் - மெச்சு
விருப்பு வெறுப்பகலும் வெவ்வினை யென்னோயும் 
நெருப்பில் இட்ட பஞ்சாம் நெஞ்சே. 

மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் ஞான மூர்த்திகள் மாபெரும் அருட்தன்மை கொண்டவர்கள் என்பதை இச்சன்னிதிக்கு வந்த மாத்திரத்தில் உணர்வார்கள். 

“என்னைப் பற்றி யார் பேசுகிறார்களோ, நினைக்கிறார்களோ அது என் செவிகளில் ஒலிக்கும்” என்று சற்குரு சங்கரநாராயணர் ஒடுக்கமாகும் போது, அட்டியக்கல்லை அன்று பிறட்டி வைத்த ஆறு நபர்களிடம் சொன்னார்களாம். ஆமாம், அது முற்றிலும் உண்மை. 

ஒரு தரம் அவருடைய சன்னிதிக்கு வாருங்கள்… அவரை நினைத்து வழிபடுங்கள். உங்கள் வாழ்வு செழிக்கும். நல்லதே நடக்கும். 

ஆச்சரியம் என்றே அகிலமெலாம் கொண்டாடும்
பூச்சொரியும் சோலை பொலிபனையூர் - ஈச்சுரராம் 
எங்கள் குருநாதன் எண்ணம் வரும் போதெல்லாம்
பொங்கித் ததும்பும் அனுபூதி. 

வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு! 

$$$

Leave a comment