புதுவையில் பூத்த யோக மலர்- 6

-திருநின்றவூர் ரவிகுமார்

ஆ. வேத ரிஷியின் வேத விளக்கம்  

 ஆ. 1. அன்னையும் ஆரியனும்

தனித்தனியாக ஓடிக் கொண்டிருந்த அலக்நந்தாவும் மந்தாகினியும் ருத்ரப் பிரயாகையில் ஒன்றாக இணைந்து கங்கையாக அகன்று பிரவகிப்பது போல, அரவிந்தரும் மிர்ரா அல்பாசாவும் இணைந்து யோக சாதனை கங்கையாக உருவெடுத்தார்கள். அரவிந்தரின் வாழ்க்கையைப் போலவே அன்னையின் வாழ்க்கையும் யாவருக்கும் தெரியும்படி மேம்போக்கான வாழ்க்கையாக இல்லை. அரவிந்தரைப் போலவே அவரது வாழ்க்கையும் ஆழமும் அகவுலகம் சார்ந்ததாகவும் இருந்தது. அதுபற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

மௌரீஸ் அல்பாசா என்ற துருக்கி நாட்டைச் சேர்ந்த வங்கியாளருக்கும் எகிப்தில் உள்ள கெய்ரோவைச் சேர்ந்த மைத்தில் டி  இஸ்மாலோன் என்ற பெண்மணிக்கும் இரண்டாவது குழந்தையாக மிர்ரா அல்பாசா 1878 பிப்ரவரி 21 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டுத் தலைநகரான பாரிஸ் மாநகரில் பிறந்தார். பெற்றோர் இருவரும் பிரபு குலத்தைச் சேர்ந்தவர்கள். மூத்தவரான அண்ணன் மாத்தீயோ 1876 இல் பிறந்தவர். அவரது பிறப்புக்குப் பிறகு பெற்றோர்கள் பாரீஸ் மாநகருக்கு வந்து பிரெஞ்சுக் குடியுரிமை  பெற்றார்கள். அதன் பிறகு மிர்ரா அல்பாசா பிறந்தார்.

மிர்ராவுக்கு ஐந்து வயது இருக்கும் போதே வழக்கத்திற்கு மாறான ஆழமான ஆன்மிக அனுபவங்கள் ஏற்பட்டன. தான் ஒரு சாதாரண வாழ்க்கையில் உழலப் பிறந்தவள் அல்ல என்றும், தன் வாழ்க்கைக்கு உயரிய நோக்கம் இருக்கிறது என்றும் அவர் புரிந்து கொண்டார். மற்ற பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் அந்த சிறிய வயதிலேயே தன் வாழ்க்கையின் லட்சியத்தை நிறைவேற்ற விழிப்புணர்வுடன் தன்னை தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்.

அகவுலகில் சதா சஞ்சரித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ, படிக்க, எழுத, கற்றுக்கொள்ள அவருக்கு தாமதமானது. ஆனால் அதைப் பூர்த்தி செய்யும் விதமாக அவர் அவரது கற்றல் வேகமாக இருந்தது. கற்க வேண்டுமென்ற ஆவல் அளவற்றிருந்தது. எதையும், எல்லாவற்றையும், கூர்ந்து, ஆழ்ந்து நோக்கி புரிந்து கொள்ளும் திறனும் அதிகமாக இருந்தது. புற உலக விஷயங்களை மட்டுமன்றி அகவுலகில் நிகழ்பவற்றையும் அவர் கவனமாகப் புரிந்து கொண்டார்.

சிறுவயதிலேயே தியானமும் யோகமும் பயின்றார். அதற்கு அந்தப் பெயர் இருப்பது அவருக்கு தெரியாது. சொல்லிக் கொடுக்க ஆசிரியர் என்று யாரும் இல்லாமலேயே தானாகவே அதை பயிற்சி செய்து வந்தார் . அதே வேளையில் புற உலக விஷயங்களையும் அவர் விட்டு விடவில்லை. டென்னிஸ் ஆட கற்றுக்கொண்டார். தனது முதிய வயது வரை டென்னிஸ் ஆடிக்கொண்டு தான் இருந்தார்.

அமானுஷ்ய உலக அனுபவங்கள் மீது அவருக்கு ஈர்ப்பு இயல்பாகவே இருந்தது. தனது பன்னிரண்டாவது வயதிலேயே அதை கலையாக பயிலத் தொடங்கினார். தன் உடலை விட்டுப் பிரிந்து பல்வேறு உலகங்களுக்கு பயணிக்க கற்றுக் கொண்டார். எல்லா அனுபவங்களும் இனிமையாக இருந்ததென கூற முடியாது. ஆனால் துணிச்சலாக அவர் அவற்றை எதிர்கொண்டார்.  “எனக்கு பயம் என்பதே இல்லை. எதைப் பற்றியும் பயமில்லை. ஒருவர் தன் உடலை விட்டு வெளியே போகும் போது புரிந்துகொள்ள முடியாத நுண்ணிழையால் கட்டப்பட்டிருப்பார் . அந்த இழை இற்றுவிட்டால் அவ்வளவுதான். எல்லாம் போய்விடும்” என்று அதைப் பற்றி அவர் கூறியுள்ளார்.

மிர்ரா அல்பாசா

தான் ஒரு லட்சியத்தை நிறைவேற்றவே பிறந்ததை  எப்போது தெரிந்து கொண்டார் என்று பின்னாளில் அவரிடம் கேட்கப்பட்டது. அவர் சொன்னார்,  “அதை உறுதியாகச் சொல்வது கடினம். அது என்னுடன் பிறந்திருக்கும். அறிவும் மனமும் வளர வளர அந்த விழிப்புணர்வும் தெளிவும் ஏற்பட்டிருக்கும். என்னுடைய  பதினொன்று அல்லது பன்னிரண்டு வயதில் எனக்கு ஏற்பட்ட அகவுலக ஆன்மிக அனுபவங்கள், இறைவன் இருக்கிறான் என்பதை மட்டுமல்ல, அவனை உணரவும் அவனோடு இணையவும் மனிதனால் முடியும் என்பதையும் வெளிப்படுத்தின. அவரை இந்தப் பூவுலகில் தெளிவாக வெளிப்படுத்தக் கூடிய தெய்வீக வாழ்க்கையை மனிதனால் வாழ முடியும் என்பது எனக்கு தெளிவானது”….

“அதை நிறைவேற்றத் தேவையான நியமங்கள், வழிமுறைகள் எனக்குத் தெரிவிக்கப்பட்டதுடன் என் அக உலகில் பல குருமார்கள் தோன்றினர். பின்னாளில் அவர்களில் சிலரை நான் இந்த நிஜ உலகில் நேரில் சந்தித்தேன். என்னுடைய புறவுலக வளர்ச்சியுடன் எனது அகவுலகம் , அமானுஷ்ய உலகம் மற்றும் ஆன்மிக உலகத் தொடர்புகள் அதிகரித்தன. அப்போது ஒரு உருவம் தெளிவாக தோன்றத் தொடங்கியது”…

“எனக்கு அப்போது இந்திய தத்துவங்கள், மதங்களைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும் என்று சொல்லலாம். எனவே நான் அந்த உருவை கிருஷ்ணர் என்று அழைக்கலானேன் . அவரை ஒருநாள் இவ்வுலகில் சந்திப்பேன். அவருடன் சேர்ந்துதான் இந்த தெய்வீகப் பணியை மேற்கொள்வேன் என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டது”.

பாண்டிச்சேரியில் முதன்முதலாக அரவிந்தரை பார்த்தவுடன் இவர்தான் கிருஷ்ணர் என்று தாம் அழைத்தவர் என்பதை புரிந்து கொண்டார் மிர்ரா.

தனது பதினாறாவது வயதில் ஓவியம் கற்க ஒரு ஓவியப் பள்ளியில் சேர்ந்தார். விரைவில் நல்ல ஓவியரானார். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஓவியர்களின் கண்காட்சியில் இவரது ஓவியமும் இடம் பெற்றிருந்தன. அப்போது பிரபலமாய் இருந்த குஸ்டாவ் மோரியாவ் என்ற ஓவியரின் சீடராக இருந்த ஹென்றி மோரிசெட் என்பவரை 1897 அக்டோபரில் மணந்து கொண்டார். அடுத்த ஆண்டு அவருக்கு ஆண்டீரி என்ற மகன் பிறந்தான். ஓவியர்கள், இசைக்கலைஞர்கள் என்று ஆக்கபூர்வமானவர்களுடன் அவர் வாழ்ந்தார். அதே வேளையில் அவரது ஆன்மிக அனுபவங்களும் தொடர்ந்தன. அவர் ஆன்மிகத்தையும் லௌதீகத்தையும் தனித்தனியாகப் பிரித்து வைக்கவில்லை. மாறாக எல்லாம் ஆன்மிகமே என்றிருந்தார்.

இந்த நிலையில்தான் ஒரு இந்தியப் பயணியின் மூலமாக ஹிந்து புனித நூல்கள் – குறிப்பாக பகவத் கீதை – அறிமுகமாகின. அவற்றை எந்த ஆசிரியரின் துணையும் இன்றி தானே முயன்று தன் அனுபவங்களோடு ஒப்பிட்டுக் கற்றுக் கொண்டார். இந்த நிலையில் அவரைச் சுற்றிலும் ஒரு குழு உருவானது. அதற்கு ஐடியா (கருத்து /சித்தனை) என்று பெயரிடப்பட்டது.

அந்தக் குழுவினருக்கு மனித இனத்தின் எதிர்காலம் குறித்தும் இப்போதுள்ள பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வு காண்பதிலும் நிறைய ஆர்வம் இருந்தது . அது பற்றிய கருத்தேடுகள் அந்தக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டன. நிறுவனமயமான மதங்கள் முன்வைத்த தீர்வுகளை அவர்கள் ஏற்க மறுத்தனர் . சரியாக சொல்லப்போனால், எங்கோ பரலோகத்தில் இருக்கின்ற இறைவன் என்பதை மிர்ரா ஏற்க மறுத்தார்;  நமக்குள்ளேயே அவன் இருக்கிறான் என்றார்.

1906 வாக்கில் மேக்ஸ் தியான் என்பவரின் அறிமுகம் கிடைத்தது மிர்ராவுக்கு. அவர் போலந்து நாட்டிலிருந்து வெளியேறியவர். அமானுஷ்ய உலகில் நிறைய அனுபவம் உள்ளவர். அவரது மனைவி அல்மாவும் உயர்ந்த ஆன்மிக அனுபவங்களைப் பெற்றவர். அவர்கள் அல்ஜீரியாவில் (அது ஒரு பிரெஞ்சு குடியேற்றப் பகுதி) சகாரா பாலைவனத்தை ஒட்டி இருந்த திம்சென் என்ற சிறிய நகரத்தில் இருந்தனர் . அவர்களது தொடர்பு கிடைத்த பிறகு, மிர்ரா அங்கே சென்று அவர்களுடன் வசிக்கலானார். அவருக்கு அங்கு பல உயர்ந்த அனுபவங்கள் ஏற்பட்டன. அது பற்றி அவர் தனது டைரியில் குறித்துள்ளார்.

“நாம் சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாத வலிமை வாய்ந்த சக்திகள் அமானுஷ்ய உலகில் இருக்கின்றன. அவற்றை நாம் கட்டுப்படுத்தி, பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். தனக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் அதைப் பயன்படுத்த முடியும். ஆனால் அவை மிகவும் ஆபத்தானவை. உறுதியான ஆன்மிக அடித்தளம் இல்லாவிட்டால் அவை உங்களைச் சிதைத்து விடும்”  என்று அவர் தன் டைரியில் எழுதியுள்ளார். அவருக்கு அந்த ஆன்மிக பலம் இருந்து. எனவே அவர் அதை தெய்வீக சேவையில் பயன்படுத்திக் கொண்டார். வெறும் அதிசயங்களையும் மாயங்களையும் நிகழ்த்த அவற்றைப் பயன்படுத்தவில்லை.

1908 இல் மிர்ரா மீண்டும் பாரீஸ் மாநகருக்கு வந்தார். ஹென்றியுடனான திருமணம் முறிந்தது. அவரைத் தேடி ஆன்மிகத் தேடல் கொண்டவர்களும் மாணவர்களும் வந்தனர். அவர்களது தொழில் மற்றும் தனி வாழ்க்கை பிரச்சினைகளுக்கு மிர்ரா தெளிவான வழியைக் காட்டி தீர்த்து வைத்தார். 1910 இல் அவர் பவுல் ரிச்சர்டை மணந்தார். ரிச்சர்டுக்கு மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய ஆன்மிகத்தில் ஆர்வம் இருந்தது. அவர் இந்தியாவுக்குச் சென்று திரும்பிய பிறகு அவர் மூலமாகத்தான் அரவிந்தரைப் பற்றி தெரிந்து கொண்டார் மிர்ரா.

மிர்ரா 1912 இல் தேடல் கொண்டவர்களை இணைத்து  ‘காஸ்மிக்யூ’ என்ற குழுவை ஏற்படுத்தினார். அதில் பன்னிரெண்டு பேர் இருந்தனர். முதல் கூட்டத்தில் மிர்ரா ஆய்வேட்டை சமர்ப்பித்தார். அதில் அடைய வேண்டிய லட்சியம் எது?  செய்ய வேண்டியது என்ன? செயல் திட்டம் என்ன? என்பது விஷயமாக எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தது. அதன் சாரம் இது:

  • முற்போக்கான பிரபஞ்ச நல்லிணக்கம் என்பது நமது லட்சியம்.
  • இப்பூலகில் அந்த லட்சியத்தை அடைவதற்கான வழி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத்தை விழிப்புறச் செய்வது. அந்த தெய்வீகம் தனித்தனியானதல்ல, ஒட்டுமொத்தமாக ஒன்றே.
  • வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அனைவரையும் ஒன்றிணைத்து இறைவனின் ஆட்சியை இங்கு ஏற்படுத்துவதாகும்.
  • அதற்கு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ளே உள்ள தெய்வீகத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதுமாகும். விழிப்புணர்வு கொண்ட மனிதர்களை பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வைப்பது.
  • அதன்மூலம் உலகத்தில் ஏற்புடைய முறையில், அந்த என்றுமுள்ள, நிரந்தரமான (சநாதன) விஷயத்தைச் சொல்வது.
  • அவர்களைக் கொண்டு  ‘இறைவனின் பிள்ளைகள்’ என்ற புதிய இனத்தை, லட்சிய சமுதாயத்தை உருவாக்குவது.

இஇவை அனைத்தும் மிர்ரா மகரிஷி அரவிந்தரைச் சந்திப்பதற்கு முன், அரவிந்தரின் எழுத்துக்கள் அறிமுகம் ஆவதற்கு முன் என்பதை நினைவில் கொண்டு பார்க்கும்போது, இருவரின் சிந்தனைகளும் ஒரே திசையில் இருப்பதைக் கண்டு கொள்ளலாம்.

தொடர்கிறது…

$$$

Leave a comment