திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் இரு நாட்களில் மட்டும் தொழுகைக்கு அனுமதி

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா.

துதில்லி: திருப்பரங்குன்றம் தர்காவில் பக்ரீத், ரமலான் ஆகிய இரு தினங்களில் மட்டுமே தொழுகைக்கு அனுமதி உள்ளது என்று, உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்த அனுமதி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் (மதுரை அமர்வு) தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம்  பிப். 9 அன்று  தள்ளுபடி செய்தது.

மேலும், பக்ரீத், ரமலான் போன்ற சிறப்பு நாள்களில் மட்டும் தொழுகை நடத்த வரையறுக்கப்பட்ட உரிமைகள் உள்ளதாக உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. தவிர, விலங்குகளை பலியிட உத்தரவிட முடியாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் உறுதிப்படுத்தி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

வழக்கு முன்விவரம்:

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் தொழுகை நடத்துவது மற்றும் பலியிடுவது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், நீதிபதி நிஷா பானு, முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார்.

மற்றொரு நீதிபதியான எஸ். ஸ்ரீமதி, மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். ரம்ஜான், பக்ரீத் மற்றும் பிற இஸ்லாமிய பண்டிகைகளின்போது கந்தூரி பலியிடுவது மற்றும் தொழுகை நடத்துவது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தினார்.

மேலும், தர்காவில் தொழுகை நடத்துவது சமீபத்தில் தோன்றியது என்று கூறிய அவர், தொழுகைக்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவது காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் பாதையைத் தடுக்கும் என்றும், அது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் மற்ற பகுதிகளை ஆக்கிரமிக்கும் என்றும் கூறினார்.

இரு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை அளித்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இறுதித் தீர்ப்புக்காக இந்த வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பினார்.

வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி, கடந்த ஆண்டு அக்டோபர் 10 அன்று அளித்த தீர்ப்பில்,  “ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின்போது மட்டுமே தொழுகை நடத்த வரையறுக்கப்பட்ட உரிமைகள் உள்ளன” என்று தீர்ப்பளித்தார். மேலும்,  குன்றில் பலியிடும் வழக்கம் குறித்து ஒரு தகுதிவாய்ந்த உரிமையியல் நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, எந்த ஒரு பலியிடுதல், சமைத்தல், அசைவ உணவைக் கொண்டு செல்வது, பரிமாறுவது ஆகியவற்றுக்கு தடை விதித்தார்.

இந்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து,   எம்.இமாம் உசேன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீது நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தர்காவில் பக்ரீத், ரலமான் பண்டிகைகள் மட்டுமின்றி அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதி  அரவிந்த் குமார், நீதிபதி பி.பி வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘‘தர்கா உள்ள நெல்லித்தோப்பு பகுதி நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று கூறிய பிறகு, தொழுகை நடத்த கட்டுப்பாடு விதிப்பதா? தொழுகை நடத்துவதால் அந்தப் பகுதியில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை வந்தது கிடையாது’’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி அரவிந்த் குமார்,  “சட்டம் – ஒழுங்கு பிரச்சினை இருந்திருக்கவில்லை என்றால் அமைதிக் குழு கூட்டம் நடந்திருக்காது என்றும், உயர் நீதிமன்ற உத்தரவு சமநிலையான உத்தரவாகத் தெரிகிறது என்றும்” கூறினார். மற்றொரு நீதிபதியான பி.பி.வரலே அதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து,   “இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சமநிலையாக உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இதில் தலையிட விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டு, மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதன்மூலம், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகை நாள்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்திக்கொள்ள முடியும். இதன்மூலம், திருப்பரங்குன்றம் மலையை சிறுகச் சிறுக ஆக்கிரமிக்கும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீதான இந்துக்களின் உரிமை மீண்டும் நீதித்துறையால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

$$$

Leave a comment