புதுவையில் பூத்த யோகமலர் – 1

-திருநின்றவூர் ரவிகுமார்

ஸ்ரீ அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் அவரது தவயோகச்சாலையான  பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை  ‘பொருள் புதிது’ இணையதளத்தில் தொடராக வெளியிட்டிருந்தோம். பின்னர் அது  விஜயபாரதம் பிரசுரத்தின் மூலம் நூலாக வெளிவந்தது. பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கையை எழுத வேண்டும் என்ற வாசகர்களின் கோரிக்கையும் நினைவூட்டலும் இப்போது தொடராக உருப்பெற்றிருக்கிறது. பாண்டிச்சேரி வந்தது முதல், உடல் ரீதியாக பூவுலக வாழ்க்கையை நீத்தது வரை 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ளார். இத்தொடர், மூன்று துணைத் தலைப்புகளுடன் 18 அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ளது.  

அ. வேதபுரியில் வேதரிஷி

அ-1. புதுவையும் வேதபுரியும்

ரவிந்தர் 1910 ஏப்ரல் 4 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு பாண்டிச்சேரி வந்தடைந்தார். பாண்டிச்சேரி இன்று புதுச்சேரி என்று அழைக்கப்படுகிறது.

புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சான்றுகள், தடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. முதல் நூற்றாண்டில் இருந்து எட்டாம் நூற்றாண்டு வரை இப்பகுதி கடல் வணிகத்தில் ஈடுபட்ட முக்கிய இடமாக அறியப்படுகிறது. ரோமானிய வரலாற்றில் பொடூகே என்று இந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அம்மாநில அரசின் வலைதளம் பதிந்துள்ளது. பொடூகே என்ற வார்த்தையிலிருந்து புதுவை, புதுச்சேரி என்ற வார்த்தை பெறப்பட்டதாக நாம் கருதலாம். அல்லது பலரும் சொல்வது போல புதிய குடியிருப்பு என்ற பொருளில்  ‘புதுச்சேரி’ என்று ஏற்பட்டிருக்கலாம்.

ஆரம்பத்தில் வந்த ஐரோப்பிய நாட்டினர் இங்கு சில குடியிருப்புகளை ஏற்படுத்தி தங்கினர். அவர்கள் பொதுவாக வெள்ளை நிறத்தினர். பாண்டுவம், பாண்டு என்றால் வெண்மை நிறம் என்று பொருள் கூறுகிறது தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள தமிழ் – தமிழ் அகராதி. வெள்ளை நிறத்தவர் குடியிருந்த பகுதி (சேரி என்றால் குடியிருப்பு) பாண்டிச்சேரி என்று அறியப்படலாயிற்று என்றும் கருதலாம்.

பிரெஞ்சு  கிழக்கிந்திய கம்பெனி 1666இல் தொடங்கப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் 1668 இல் சூரத்திலும் பிறகு 1674 இல் பாண்டிச்சேரியிலும் தங்கள் குடியிருப்பை ஏற்படுத்தினார்கள். வங்காளத்தில் சந்திரநாகூர், ஆந்திராவை ஒட்டி உள்ள ஏனாம் , தமிழ் பேசும் பகுதியான பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளத்தை ஒட்டியுள்ள மாஹி என்று ஐந்து இடங்களில் பிரெஞ்சு குடியேற்றம் நிலை கொண்டது. பின்னர் பாண்டிச்சேரி, இந்தியாவில் பிரஞ்சு இந்திய அரசின் தலைநகரமாக மாறியது.

இந்தியா 1947 இல் சுதந்திரம் பெற்றாலும் பிரெஞ்சுப் பகுதியான சந்திரநாகூர் 1951 இல் தான் இந்தியாவுடன் இணைந்தது. மற்ற நான்கு பகுதிகளும் 1954 இல் இணைந்தன. அதிகாரம் கை மாறியது 1956 மே மாதம். இந்திய அரசமைப்பு சட்டப்படி இவை அனைத்தும் இந்திய பகுதிகளாக ஆவணப்படுத்தப்பட்டது 1962 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி. அது பாண்டிச்சேரி என்ற யூனியன் பிரதேசம் தோன்றிய நாள். புதுச்சேரி என்று பெயர் மாற்றம் பெற்றது 2006 அக்டோபர் 10 ஆம் நாள்.

பாண்டிச்சேரியின் பண்டைய பெயர்  ‘வேதபுரி’ என்று தெரிகிறது. இதற்கு சான்று அங்கிருந்து வேதபுரீஸ்வரர் கோயில். இந்தக் கோயில் 1748 செப்டம்பர் 9 ஆம்தேதி பிரஞ்சு படையினரால் தகர்க்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில் (ஜென்மராக்கினி – கன்னி மேரி) சர்ச் கட்டப்பட்டது. இதை பிரஞ்சு ஆளுநரின் துபாஷியான ஆனந்தரங்கம் பிள்ளை தன் சுயசரிதைக் குறிப்பேடுகளில் பதிந்துள்ளார்.

இக்கோயிலின் சிவன் பெயர் வேதபுரீஸ்வரர் என்பதாலேயே இந்தப் பகுதியை வேதபுரி என்று கருத முடியுமா என்று கேள்வி எழலாம். பாண்டிச்சேரிக்கு தெற்கே 17 கி.மீ. தூரத்தில் உள்ள பஹுர் கிராமத்தில் 5 செப்பேடுகள் 1849 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட அந்த செப்பேடு சாசனத்தில், அந்தப் பகுதியை ஆண்ட பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் மூன்று கிராமங்களை வித்யா  தானத்திற்காக வரி விதிப்பின்றி மானியமாக அளித்துள்ளான் என்று கூறுகிறது. வேதம் கற்க (கல்வி) மானியமாக இதைக் கருத வேண்டும். எனவே  ‘வேதபுரி’ என்ற பெயர்  சிவபெருமானால் மட்டுமல்ல, வேதக் கல்வி நிலையம் இருந்ததாலும் ஏற்பட்டிருக்கலாம். சுப்ரமணிய பாரதியாரும் வேதபுரம் என்ற பெயரையே (புதிய கோணங்கி) பயன்படுத்தி இருக்கிறார்.

விடுதலைப் போராட்டத்தில் அரவிந்தருடன் இணைந்து ஈடுபட்டவர் நொளினி காந்த் குப்தா (நளினிகாந்த் குப்தா). அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்த பிறகு குப்தாவும் பாண்டிச்சேரி வந்து விட்டார். அரவிந்தர் ஆசிரமத்தின் முதல் செயலாளர் அவர் தான். அவர் கூறுகிறார்:

குறுமுனி அகஸ்தியர்

“அகஸ்தியர் விந்திய மலையின்  கர்வத்தை அடக்கி தென்னகப் பகுதிக்கு வந்தார். பாண்டிச்சேரியில் ஆசிரமம் அமைத்து சீடர்களுக்கு வேதம் கற்பித்தார். எனவே இந்தப் பகுதி அகஸ்திய வேதபுரி என்று வழங்கப்படலாயிற்று.  சிவனை அகஸ்தியர் வழிபட்ட இடம் அகஸ்தீஸ்வரர் கோயிலாகும்” என்கிறார்.

அகத்தீஸ்வரர் கோயில் பல இடங்களில் (சுமார் 167 அகத்தீஸ்வரர் கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன) இருக்கின்றன. அகத்திய முனிவரின் ஆசிரமம் இருந்த இடத்தில் தான் இப்போது அரவிந்தர் ஆசிரமம் அமைந்துள்ளது என்கிறார் நளினிகாந்த் குப்தா.

இதில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. குறுமுனி வடக்கில் இருந்து தெற்கிற்கு வந்தார். ஸ்ரீ அரவிந்தரும் அது போலவே தெற்கிற்கு வந்தவர். அகத்திய முனிவர் வேதங்களை இங்கு கற்பித்தார். ஸ்ரீ அரவிந்தரும் வேதங்களை புதிய கண்ணோட்டத்தில் விளக்கினார். தமிழுக்கு இலக்கணம் வகுத்து (பேரகத்தியம் என்ற இலக்கண நூல் இன்று வழக்கில் இல்லை) தமிழ் முனி என்றே அறியப்படும் அகத்தியர் இங்கு ஆசிரமம் அமைத்து, சீடர்களைக் கொண்டு ஞானம் வளர்த்தார். அவ்வாறே ஸ்ரீ அரவிந்தரும் சீடர்களைக் கொண்டு யோக ஞானத்தை  வளர்த்தார்.

வேதங்களுக்கு புதிய கண்ணோட்டத்தில் விளக்கம் கொடுத்தவர் ஸ்ரீ அரவிந்தர். வேத ரிஷிகளின் மரபில் வந்தவர் என்பதால் பின்னர் ஸ்ரீ அரவிந்த மகரிஷி என்று அறியப்பட்டார். கொஞ்சம் காலத்திற்கு யோகமும் தவமும் செய்ய , அரசியலில் இருந்து விலகி,  பாண்டிச்சேரி எனும் வேதபுரிக்கு வந்தவர் பின்னர் இதையே தன் நிரந்தர தவச்சாலையாக மாற்றிக் கொண்டது இறைச்சித்தம் என்பதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?

தொடர்கிறது…

$$$

Leave a comment