மத்திய அரசின் நலத்திட்டங்களால் தரம் உயரும் நடுத்தர வர்க்கம்!

-வ.மு.முரளி

மத்தியில் 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பொருளாதாரத்தில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்து வந்துள்ளது. குறிப்பாக இதுவரை இருந்த அரசுகள் போல கவர்ச்சிகரமான மானியங்களில் கவனம் செலுத்தாமல், மக்கள் பயன் பெறும் வகையிலான அடிப்படைச் சீர்திருத்தங்களில் தான் அதிகமான கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஆண்டு செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் உச்சமானவை. வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பை உயர்த்தியதன் மூலமாக, வரிவிதிப்பு வலைக்குள் இருந்த பலகோடி நடுத்தர மக்கள் வெளிவந்தார்கள். அதன்மூலமாக, அவர்களின் சுகாதார, வீட்டுவசதி உள்ளிட்ட இதரச் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 11 ஆண்டுகால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்கள் வாயிலாக, வறுமைக்கோட்டிற்குக் கீழிருந்த சுமார் 25 கோடி பேர் அதிலிருந்து விடுபட்டு, புதிய நடுத்தரவர்க்கமாக உருவெடுத்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்து வருகிறது.

நாட்டின் உள்கட்டமைப்பிலும் டிஜிட்டல் கட்டமைப்பிலும் மத்திய அரசு செய்த மாபெரும் முதலீடுகள் பொருளாதாரச் சீர்த்திருத்தத்தில் முக்கியமானவை. 2014இல் 5 பெரு நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்தது. அது தற்போது 23 பெருநகரங்களாக விரிவடைந்திருக்கிறது. இதனால் நகர்ப்புற போக்குவரத்தின் முகம் அடியோடு மாறி இருக்கிறது. தற்போது உலகிலுள்ள மெட்ரோ ரயில் சேவைகளில் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டதாக இந்தியா உருவெடுத்துள்ளது.

நடுத்தர வர்க்கத்தின் நிம்மதிப் பெருமூச்சு:

வரிவிதிப்பு ராஜ்ஜியத்தில் நடுத்தர வர்க்கம் மகிழும் வகையில் பல சலுகைகள் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தாலும், சென்ற நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சலுகையே உச்சம் தொட்டது. வருமான வரி விதிப்புக்கான உச்சபட்ச ஆண்டு வருமான வரம்பை ரூ. 7 கோடியிலிருந்து ரூ. 12 கோடியாக சென்ற ஆண்டு உயர்த்தியது மத்திய அரசு. இதன்மூலமாக, மாதாந்திர சம்பளம் பெற்றுவந்த கோடிக் கணக்கான நடுத்தர வர்க்க மக்கள் வரிச்சுமை குறைந்து, கூடுதலான சேமிப்பைச் செய்ய முடிந்தது.

ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை ஈட்டி வந்த அதிக சம்பளக்காரர்களும் பணவீக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, அதன் மீதான வரிவிதிப்பு விகிதங்கள் 5 % முதல் 10 % வரை மாற்றப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி. வரி மாற்றத்தின் பயன்கள்:

சென்ற ஆண்டு இறுதியில் அமலாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மாற்றங்கள் (ஜி.எஸ்.டி. 20.) உடனடிப் பலன் தரத் தொடங்கிவிட்டன. இதற்கு முன் 12 % முதல் 25 % வரை இருந்த ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 5 % முதல் 18 % வரையிலானதாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலை குறைந்து, மக்களின் செலவினம் குறைந்திருக்கிறது. நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்பு இதனாலும் அதிகரிக்கிறது.

ஆயுள் காப்பீடு, சுகாதாரக் காப்பீடு ஆகிய சேவைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், மருத்துகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டதால் விலை குறைந்துள்ளது. டி.வி., ஃபிரிட்ஜ், சிறு கார்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிலும் பெரும் சலுகைகள் கிடைத்து வருவதால், நடுத்தர மக்களின் கைகளில் கூடுதலாக பணம் புழங்கத் தொடங்கியுள்ளது.

விலைவாசி உயர்வு தடுத்து நிறுத்தம்:

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வதைத் தடுக்கவும், விலை நிலவரங்களில் நிச்சயமற்ற நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவும், மத்திய அரசு விலைவாசியை நிலைநிறுத்தும் நிதியை பயன்படுத்தி வருகிறது.

அதன்மூலமாக, வெங்காயம், தானியங்கள், பருப்பு வகைகள், ஆகியவற்றை விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, நியாயமான விலையில் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய வழிவகை செய்கிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்கள் செயற்கையான முறையில் விலை ஏறுவதும், பற்றாக்குறையும் தடுக்கப்படுகின்றன. இதனாலும் பணவீக்கத்தின் அதிர்ச்சியிலிருந்து தற்காக்கப்பட்டு, நடுத்தர மக்கள் பயன் பெறுகின்றனர்.

சேமிப்புத் திட்டங்களின் பயன்பாடு:

சேமநல நிதி (பி.பி.எஃப்.), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்.சி.எஸ்.எஸ்.), செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) போன்ற சிறுசேமிப்புத் திட்டங்கள், நடுத்தர மக்களின் கனவுத் திட்டங்களாக விளங்கி வருகின்றன. இத்திட்டங்களில் உத்தரவாதமான இறுதிப்பலன், வரிச் சலுகை, நீண்டகால பணப் பாதுகாப்பு ஆகியவை கிடைக்கின்றன.

சேமநல நிதி (பி.பி.எஃப்), தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி.) ஆகியவை, நீண்டகால சேமிப்புக்கு உத்தரவாதமான பலன்களையும், வரிவிதிப்பு இல்லை என்ற சலுகையையும் (பிரிவு 80 சி) அளிப்பதால், நடுத்தர மக்களின் சேமிப்பு மீதான வட்டி அதிகம் கிடைப்பதாலும், வரி இல்லாததாலும், சங்கடமின்றி புதிய மூலதனங்களை உருவாக்க முடிகிறது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்.சி.எஸ்.எஸ்.) திட்டம் ஓய்வு பெற்ற முதியவர்களுக்கும், செல்வமகள் சேமிப்புத் திட்டம் (எஸ்.எஸ்.ஒய்.) பெண் குழந்தைகளுக்கும் அதிகபட்ச இறுதிப் பலனையும் வரிச்சலுகையையும் அளித்து வருகின்றன. ஓய்வுக்குப் பிந்தைய எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற எஸ்.சி.எஸ்.எஸ். மிகவும் பயனுள்ள திட்டமாகும்.

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்:

சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான நடுத்தர மக்களின் கனவு. இதனை நிறைவேற்றும் வகையில், சென்ற ஆண்டு பிரதம மந்திரியின் இரண்டாவது கட்ட நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் (பி.எம்.ஏ.ஒய். – யு 2.0) அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த ஆண்டு ஒரு கோடி வீடுகளைக் கட்டிக் கொடுப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (இ.டபிள்யூ.எஸ்.), குறைந்த வருவாய்ப் பிரிவினர் (எல்.ஐ.ஜி.), ஆண்டு வருமான ரூ. 9 லட்சம் வரை ஈட்டும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் ஆகியோரை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுகிறது. சேரிப்பகுதிகளில் வாழும் ஏழைகள், அங்கீகாரமில்லாத குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் போன்றோருக்கு இத்திட்டத்தில் வீடு கட்டுவதற்கு வட்டிச் சலுகையுடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்காக, 2026 நிதியாண்டில் ரூ. 3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இது 2025 நிதியாண்டில் 1,500 கோடியாக இருந்தது. தற்காலிக வீடுகளில் குடியிருப்போரை நிரந்தர வீடு கொண்டவர்களாக மாற்ற மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு இந்த நிதி ஒதுக்கீடு பெரும் சான்றாகும்.

சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள்:

மத்திய அரசின் தேசிய சுகாதாரக் கொள்கை- 2017ன்படி, ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற ஒருங்கிணைந்த சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. நோய்த்தடுப்பு தொடங்கி, மருத்துவமனையில் சிகிச்சை வரை முழுமையான சுகாதார உதவித் திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் ஜன ஆரோக்கிய யோஜனா (பி.எம்- ஜே.ஏ.ஒய்.) ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 10.74 கோடி ஏழைகளும், சுமார் 50 கோடி அடித்தட்டு மக்களும் கொண்டுவரப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின்படி, பெரிய மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை ஏழை மக்கள் பெற முடியும். இதற்கான செலவினத் தொகையை மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குகிறது.

நிலையான வருவாய் இல்லாத, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்கள், நிலம் சொந்தமில்லாத வீட்டு உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள், வீட்டு வேலைக்காரர்கள், ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், விதவைகள், அநாதைகள், உடல் ஊனமுற்றவர்கள் உள்ளிட்ட, எந்தப் பாதுகாப்பும் அற்ற அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளது.

2024 செப்டம்பரில் மத்திய அரசு அறிவித்தபடி, பி.எம்.- ஜே.ஏ.ஒய். திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அவர்களின் வருமானம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், மூத்த குடிமக்கள் பலரும் சுகாதாரக் காப்பீட்டுப் பலனைப் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மலிவான விலையில் மக்கள் மருந்தகங்கள்:   

தற்போதைய காலகட்டத்தில் மருத்துவச் சிகிச்சைக்கான மருந்துகளின் அபரிமித விலை, சாமானிய மக்களை நடுங்க வைப்பதாக இருக்கிறது. இதற்குத் தீர்வாக, மத்திய அரசு மக்கள் மருந்தகங்களை நடத்தி வருகிறது.  ‘ஜன் ஔஷதி’ திட்டத்தில் செயல்படுத்தப்படும், தரமான அடிப்படை மூலக்கூறு மருந்துகளை வழங்கும் இந்த மருந்தகங்களின் எண்ணிக்கை 2014இல் 80 ஆக மட்டுமே இருந்தது. அது 2025இல் 17,600 ஆக அதிகரித்திருக்கிறது. 2027இல் இவற்றின் எண்ணிக்கையை 25,000 ஆக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் மருந்தகங்கள், இதய நோய், நீரிழிவு, புற்றுநோய், கிருமித் தாக்குதல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் தேவையான 2,100 மருந்துகளை மலிவான விலையில் வழங்குகின்றன. இதனால் மருந்து வாங்க ஆகும் செலவில் பெருமளவில் சேமிக்க முடிகிறது.

இதுபோன்ற மக்கள்நலத் திட்டங்கள், கவர்ச்சிகரமான மானியத் திட்டங்கள் அல்ல. ஆனால், மக்கள் எளிதில் பயன் பெற்று வரும் திட்டங்களாகும். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்தத் திட்டங்கள், இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வருகின்றன. இதனால் உருவாகிவரும் புதிய நடுத்தர வர்க்கம், நவீன இந்தியாவின் அடையாளமாகி வருகிறது.

$$$

Leave a comment