-வ.மு.முரளி

நூறு நாள் வேலைத் திட்டம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுவந்த, கடந்த டிசம்பர் மாதம் வரை நடைமுறையில் இருந்த ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம்’ (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.) நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக, 125 நாட்கள் பயனளிக்கும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம்’ (விபி -ஜி- ராம்-ஜி) என்ற புதிய வேலையுறுதித் திட்டத்தை, 2025, டிச. 16ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதனை அரசியல் கண்ணோட்டத்துடன் எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. ஆனால், முன்பிருந்ததை விட தொழிலாளர்களுக்கு சாதகமான பல அம்சங்கள் புதிய திட்டத்தில் உள்ளன. அதுகுறித்து விரிவாக இங்கே காண்போம்…
வெளிப்படையான திட்டம்:
புதிய கிராமப்புற வேலையுறுதித் திட்டத்திற்கான ‘விக்ஷித் பாரத் – ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் – கிராமின்’ திட்டம் நீண்டகால வளர்ச்சிக் கட்டமைப்பை உருவாக்குகிறது. இது சுருக்கமாக ‘விபி -ஜி- ராம்-ஜி’ என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டம் கிராமப்புற வேலைவாய்ப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் பெயரளவிலானதாக இல்லாமல், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, தொழிலாளரின் கண்ணியம் மற்றும் உண்மையான கிராமப்புற அதிகாரமளிப்பை உறுதிப்படுத்துகிறது.
புதிய சட்டம், ஊரக வேலையுறுதிக் கட்டமைப்பின் பெயரில் மட்டுமே மாற்றம் செய்கிறது; அதேசமயம், வேலைவாய்ப்பு உத்தரவாதம், தொழிலாளர் உரிமைகள், குறை தீர்ப்பு, தொழிலாளர் நலன்களை மாற்றாது. “திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டிருப்பது, திட்டத்தின் தார்மிக அதிகாரத்தை பலவீனப்படுத்துகிறது” என்று சிலர் கூறுகின்றனர். அது அவர்களின் தனிப்பட்ட கருத்தே ஒழிய, அதில் உண்மையில்லை.
மத்திய- மாநில நிதிப் பகிர்வு:
புதிய திட்டத்தின்படி, மத்திய அரசும் மாநில அரசுகளும் (யூனியன் பிரதேசங்கள் உட்பட) 60:40 என்ற விகிதத்தில் நிதிச் சுமையை ஏற்க வேண்டும். அதேநேரம், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலையை ஒட்டிய மாநிலங்கள் (உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர்) 10 சதவீத நிதி வழங்கினால் போதும்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஊரக வேலையுறுதித் திட்டத்தின் செலவில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மாநிலங்களே ஏற்க வேண்டும் என்று கூறினார். அந்த நேரத்தில், மத்திய அரசு 75% பொருட்செலவையும், 25% பொருட்செலவை மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன என்பது குறிப்பிடத் தக்கது..
மத்திய அரசு வழங்கும் கிராமப்புற உத்தரவாதத் திட்டங்களைச் செயல்படுத்துவது மாநிலங்களின் முதன்மைப் பொறுப்பாகும். இதற்கான செலவினங்களை விகிதாசாரமாகப் பகிர்ந்துகொள்வது நிதியொழுங்கை உறுதி செய்கிறது. மாநிலங்களின் அதிக நிதிப் பங்கேற்பு, திட்டங்களில் மாநில அரசுகளின் மேலாண்மையை வலுப்படுத்துகிறது, மேலும் கட்டமைப்புகளை உருவாக்குவதில் பொறுப்புடன் திட்டமிட்டுச் செயல்படச் செய்கிறது.
விவசாய நலனுக்காக புதிய விதி:
வேளாண் பணிகள் அதிகமாக இருக்கும் பருவங்களில் தொழிலாளா்களின் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, அந்த நேரத்தில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பணிகள் வழங்கப்படக் கூடாது என்பது இத்திட்டத்தின் புதிய விதிமுறையாகும். ஊரக வேலையுறுதித் திட்டத்தில் பணியாற்ற கிராமப்புறத் தொழிலாளர்கள் சென்றுவிடுவதால் விவசாயத் துறையில் விதைப்பு, அறுவடைப் பருவங்களில் ஆட்கள் கிடைப்பதில்லை. இதற்குத் தீர்வு காணும் வகையில், விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெறும் காலங்களில் மட்டும் விவசாயத்திற்கு தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதை 60 நாட்கள் மாநில அரசுகள் நிறுத்தி வைக்கலாம் என்ற விதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 60 நாள் எவையென்பதை மாநில அரசுகளே, தங்கள் விதைப்பு/அறுவடைக் காலங்களின் அடிப்படையில் முடிவு செய்து கொள்ளலாம்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம் அமல் செய்யப்பட்டபோது (2005), ஒரு வருடத்தில் குறைந்தது மூன்று மாதங்களாவது வேளாண் பணிகளுக்காக எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ. திட்டத்தில் இடைவெளி விடப்பட வேண்டும் என்று, அன்றைய மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார், அப்போதைய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை வலியுறுத்தியிருந்தார். எனினும் அப்போது இதற்கான விதிகள் கொண்டுவரப்படவில்லை.
4 பணிகளுக்கு முன்னுரிமை:
இதுவரை தேவை அடிப்படையிலான வேலை ஒதுக்கீடு முறை நடைமுறையில் இருந்தது; தவிர, அதற்கான அரசு நிதி ஒதுக்கீட்டுக்கும் உச்சவரம்பு இருந்தது. தற்போது இது விநியோக அடிப்படையிலான வேலை ஒதுக்கீடாக மாற்றப்படுகிறது. புதிய சட்டத்தின்படி தண்ணீா்ப் பாதுகாப்பு (நீா் மேலாண்மை), ஊரகக் கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம் சார்ந்த உள்கட்டமைப்பு உருவாக்கம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் ஆகிய 4 முக்கியப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேற்படி கிராமப்புறப் பணிகள் இப்போது ‘விக்ஷித் கிராம பஞ்சாயத்து திட்டங்கள்’ மூலம் திட்டமிடப்படும்; அவை ஒன்றியம், மாவட்டம், மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, விக்ஷித் பாரத் தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டத்தில் இணைக்கப்படும்.
காக்கப்படும் தொழிலாளர் உரிமைகள்:
மாநிலங்கள் குறைந்தது 125 வேலை நாட்களை வழங்கக் கடமைப்பட்டுள்ளன. மாநிலங்கள் திறனின் அடிப்படையில், தங்கள் கொள்கை அடிப்படையில், 125 நாட்களுக்கு மேலும் வேலையை வழங்கலாம். ஏனெனில் புதிய சட்டம் இதனைக் கட்டுப்படுத்தவில்லை.
இத்திட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு வேலை வழங்கப்படாவிட்டால், அதற்கு ஈடான உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். அதாவது, ஊரக வேலைக்கு விண்ணப்பித்த ஒரு தொழிலாளிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வேலை வழங்கப்படாவிட்டால், அந்தத் தொழிலாளிக்கு மாநில அரசு நிர்ணயித்த வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படும். இதன்மூலமாக, ஊரக வேலையுறுதித் தொழிலாளர்கள் கூடுதல் அதிகாரம் பெற்றுள்ளனர்.
புதிய சட்டத்தின்படி, ஊரக வேலையுறுதித் தொழிலாளர்களின் ஊதியம் தற்போதுள்ள ஊதிய விகிதத்தை விடக் குறைவாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்கிறது. மேலும், ஊதியங்களைக் குறைக்க முடியாது; உயர்த்த மட்டுமே முடியும். எனவே வருமான இழப்பு குறித்து தொழிலாளர்கள் அஞ்சத் தேவையில்லை. ஊதிய விகிதங்களை நிர்ணயிக்க மத்திய அரசுக்கே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது, ஆகவே, அதிகரிக்கும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்த ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியமில்லை.
மோசடியும் ஊழலும் குறையும்:
தேசிய ஊரக உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் செய்யப்படும் திட்டப் பணிகளின் கட்டமைப்பு, முறைப்படியானதாகவும், தரவு அடிப்படையிலும், இலக்குடன் கூடியதாகவும் பணி ஒதுக்கீடுகள் இருப்பதை உறுதி செய்யும். இதன்மூலம் வேலை ஒதுக்கீட்டில் அதிகாரிகளின் தன்னிச்சையான செயல்பாட்டையும், திட்ட அமலாக்கத்தில் நிகழும் ஊழலையும் குறைக்கும், இது மோசடி மற்றும் ஊழலைத் தடுக்கும்; மேலும், வேலைவாய்ப்புத் திட்டத்தின் வெளிப்படையான, இலக்குடன் கூடிய, ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்பாட்டை உறுதி செய்யும்.
கடந்த 2011-12 ஆம் ஆண்டில் 25.7% ஆக இருந்த கிராமப்புற வறுமை 2023-24 ஆம் ஆண்டில் 4.86% ஆகக் குறைந்திருப்பதால், ஊரக வேலைவாய்ப்பு மறுசீரமைக்கப்பட வேண்டியுள்ளது. மேலும், பல பயனாளிகளின் பணி அட்டைகள், மரணம், இடப்பெயர்வு காரணமாக செயலிழந்தவையாக மாறியுள்ளன. எனவே, கடுமையான பயோமெட்ரிக் வருகைப் பதிவு விதிமுறைகள், போலிப் பயனாளிகளின் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
வேலையுறுதித் திட்ட தொழிலாளர் சரிபார்ப்பு இதுவரை மேம்போக்காக இருந்ததால் மோசடிகளும் ஊழலும் பல இடங்களில் நிலவி வந்தன. இதனால், உண்மையான பயனாளிகளுக்குச் செல்ல வேண்டிய அரசின் தொகை தரகர்களுக்கும் போலிப் பயனாளிகளுக்கும் கசிந்து வந்தது. முன்பு ஆதார் இணைப்பு மூலமான வருகை சரிபார்ப்பு 76 லட்சம் பேருக்கு மட்டுமே செய்யப்பட்டதால், ஊழல் மலிந்திருந்தது. எனவே, தொழிலாளர் சரிபார்ப்பு இப்போது நிறுவனமயமாக்கப்பட்டிருக்கிறது. தேசிய மின்னணு நிதி மேலாண்மை அமைப்பு மூலமாக மட்டுமே இனிமேல் ஊரக வேலையுறுதித் தொழிலாளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறும். இந்த நடைமுறை தற்போது 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது; இது அரசாங்கத்திடமிருந்து தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் சென்று சேர்வதை உறுதி செய்கிறது.
கட்டமைப்புகள் உருவாக்கம்:
விபி -ஜி- ராம்-ஜி சட்டத்தின் கீழுள்ள தற்போதைய கட்டமைப்பு, பொறுப்பான பயன்பாடு, நிதியொழுங்கு மற்றும் பயன்பாட்டு அடிப்படையிலான செலவினங்களை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் மாநில, மாவட்ட மற்றும் கிராம பஞ்சாயத்து மட்டங்களில் பணிகளை முறையாகத் திட்டமிடுவதால், அரசு நிதி ஆக்கப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும், நிலையான கட்டமைப்பு உருவாக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. மேலும் பிரதமரின் கதிசக்தி தேசிய பெருந்திட்டத்துடனான இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு, முழுமையான உள்ளூர் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.
புதிய வேலையுறுதிச் சட்டம், தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை ஆண்டுதோறும் கூடுதலாக 25 நாட்கள் உயர்த்தி, கிராமப்புற வாழ்வாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.
$$$