சீர்திருத்தங்களின் ஆண்டான 2025!

-வ.மு.முரளி

கடந்த 2025ஆம் ஆண்டு இந்தியாவைப் பொருத்த மட்டிலும்  சீர்திருத்தங்களின் ஆண்டு என்றே சொல்லலாம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சென்ற ஆண்டில் பல துறைகளில் சத்தமின்றி முக்கியமான சீர்திருத்தங்களை நிகழ்த்தி இருக்கிறது. அதன்மூலமாக, இந்தியப் பொருளாதாரம், சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு, ஆட்சிமுறை ஆகியவற்றில் வலுவான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

வருமான வரி சீர்திருத்தம்:

சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்ட 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, இதுவரை இல்லாத அளவுக்கு வருமான வரிக்கான உச்ச வரம்பை ரூ. 12 லட்சமாக உயர்த்தியது. அதன்மூலமாக, நடுத்தர மக்களுக்கு பெரும் வரிச்சுமை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக, வீட்டு உபயோகப் பொருட்களின் நுகர்வும், மக்களின் ஆக்கப்பூர்வமான செலவினமும் அதிகரித்துள்ளன.

அதுமட்டுமல்ல, வருமான வரி தாக்கல் முறையும் எளிமையானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றப்பட்டது. அதற்காக 1961ஆம் வருடத்திய வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக, வருமான வரி சட்டம்-2025 கொண்டுவரப்பட்டது. இது வருமான வரி நிர்வாகத்தை மிகவும்  இலகுவாக்கியுள்ளது.

ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்:

சரக்கு சேவை வரி விதிப்பிலும் (ஜிஎஸ்டி) மிகப் பெரிய சீர்திருத்தங்கள் அமலாகின. 4 விகிதங்களில் (5%, 12% 18%, 28%) இருந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மூன்று விகிதங்களாக (5%, 18%, 40%) மாற்றப்பட்டதுடன், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டதால், அவற்றின் விலை குறைந்தது. குடும்பங்கள், விவசாயிகள், தொழிலாளர்  மிகுந்த துறைகள் போன்றவையும் இந்த வரிவிகித மாற்றத்தால் பயன்பெற்றன. அதேசமயம், 2025-26 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வசூல் அரசு மதிப்பீட்டை விட அதிகமாகவே இருக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது.

எம்.எஸ்.எம்.இ. சீர்திருத்தம்:

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான (எம்.எஸ்.எம்.இ.) ஆண்டு விற்றுமுதலின் வரையறையும் அதிகப்படுத்தப்பட்டது. இதன்மூலமாக, அதிகப்படியான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அரசு வழங்கும் சலுகைகளையும், கொள்முதல் வாய்ப்புகளையும் பெற முடிந்தது.

மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை தங்கள் ஆண்டு கொள்முதலில் குறைந்தபட்சம் 25% சிறு, குறு தொழில் நிறுவனங்களிலிருந்து பெறுவது கட்டாயம் என்ற விதியை அரசு நடைமுறைப்படுத்தியதால், நாட்டின் பொருளாதாரத்தில் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் பங்களிப்பு உயர்ந்து வருகிறது.

வர்த்தகத்தை எளிமையாக்கிட, தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளில் 22 ஆணைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன; 55 ஆணைகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், உற்பத்தித் துறையினரும் எம்.எஸ்.எம்.இ. துறையினரும் தரக்கட்டுப்பாட்டுச் செலவினச் சுமையைக் குறைக்க முடியும்.

புதிய தொழிலாளர் சட்டங்கள்:

தொழிலாளர் சட்டங்களில் மிகப் பெரிய சீர்திருத்தம் சத்தமின்றிச் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தொழிலாளர் நலம் தொடர்பாக இருந்த 29 சட்டங்களுக்குப் பதிலாக, 4 விரிவான தொழிலாளர் நலச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்களின் நலன் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், தொழில் நடத்துவதில் இருந்த சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளன. தற்காலிகத் தொழிலாளர்கள் (ஜிஐஜி), முறைசாராத் தொழிலாளர்களும் தொழிலாளர் நலச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஊரகத் தொழிலாளர்கள் பயன்பெற்றுவந்த 100 நாள் வேலையுறுதித் திட்டமான எம்.ஜி.என்.ஆர்.இ.ஏ. நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக 125 நாட்கள் வேலை வழங்கும் வி.பி-ராம்-ஜி சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில், தொழிலாளர்களைச் சுரண்டும் தரகர்களைத் தடுக்க பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு, செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணிப்பு, நேரடி பணப்பயன் பரிமாற்றம், வேலை அளிப்பதன் மூலமாக புதிய சொத்துக்களை உருவாக்குதல் ஆகிய அம்சங்களில் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, புதிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் மத்திய- மாநில அரசுகளின் பங்களிப்பு 60:40 என்ற விகிதத்திலும், சிறப்பு நிலை மாநிலங்களில் 90:10 என்ற விகிதத்திலும் இருக்குமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, நிதி மேலாண்மையில் பொறுப்புடைமையும், மாநில அரசுகளின் ஈடுபாடும் மேம்பட உள்ளன.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு:

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவு 74% லிருந்து 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கென  ‘சப்கா பீமா சப்கி ரக்‌ஷா சட்டம்’ கொண்டுவரப்பட்டது. இதன்மூலமாக, காப்பீட்டுத் துறையில் முதலீடு அதிகரிக்கும். காப்பீட்டு நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டி உருவாவதால், காப்பீட்டுச் சேவையின் தரம் உயரும். மேலும், இதுவரை எட்டாத பல கோடிப் பேரை காப்பீட்டு சேவைகள் சென்று சேரும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

கடல்வழிப் போக்குவரத்தில் மாற்றம்:

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து கடல்வழிப் போக்குவரத்தில் காலனி அரசின் சட்டங்களே பயன்பாட்டில் இருந்து வந்தன. அவற்றுக்கு மாற்றாக, 5 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்வாயிலாக, கப்பல் போக்குவரத்து நவீனமயம், துறைமுகங்கள் தரமுயர்வு, கடலோர வர்த்தகம், கடலோடிகளின் நலம் ஆகியவை வலுப்பட்டு, இந்தியாவின் நீலப் பொருளாதாரம் மேம்படும்.

கடலோர கப்பல் போக்குவரத்து சட்டம், கடலோர வர்த்தகத்தின் பங்களிப்பை 6% இலக்காகக் கொண்டுள்ளது. இதன்மூலம், கப்பல் போக்குவரத்துத் தளவாடங்களுக்கான செலவினம் குறைவதால் ஆண்டுக்கு ரூ. 10,000 கோடி மிச்சமாகும். தவிர, கடலில் போக்குவரத்து நெருக்கடியும் கார்பன் உமிழ்வும் குறையும்.

பங்குச்சந்தை சட்டம்:

பங்குச் சந்தையை மேம்படுத்தும் வகையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 3 நிதி சட்டங்களை ஒருங்கிணைத்து பங்குச்சந்தை சட்டம்-2025 கொண்டுவரப்பட்டது. இது இந்திய பங்குச்சந்தை வாரியத்தின் (செபி) நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன், பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் காக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், பங்குச்சந்தையில் நிகழும் சிறு நடைமுறைப் பிழைகளை பெரும் குற்றமாக்காமல், புதிய முதலீட்டாளர்களையும் காக்கும்.

வெளிநாட்டு வர்த்தகம்:

ஓமன், பிரிட்டன், நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா இந்த ஆண்டு செய்துகொண்டுள்ளது. ஐரோப்பிய சுதந்திர வர்த்தக அமைப்புடன் (இ.எஃப்.டி.ஏ.) இந்தியா செய்துகொண்டுள்ள இந்திய- ஐரோப்பிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தமும் (டி.இ.பி.ஏ) செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. இதன்மூலமாக, ஏற்றுமதி வரிவிதிப்பற்ற வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், வெளிநாட்டு முதலீடும் அதிகரிக்கும்.

அணுசக்தித் துறையில் தனியார்:

நீண்டநாட்களாக காத்திருந்த அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் முடிவும், ஆண்டின் இறுதியில் கொண்டுவரப்பட்ட சாந்தி சட்டம் மூலமாக அமலாகிவிட்டது. அதுபோலவே, உயர்கல்வித் துறையில் செயல்பாட்டில் உள்ள பல்வேறு கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு (யு.ஜி.சி., ஏ.ஐ.சிடி.இ., என்.சி.டி.இ.,) பதிலாக, ஒரே ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதற்கான ’விக்‌ஷித் பாரத் சிக்‌ஷா அதிசந்தான்’ மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

2047இல் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக்க வேண்டும் என்ற (விக்‌ஷித் பாரத் 2047) இலக்குடன் மத்திய அரசு இந்தச் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுதான் உலக நியதி. அந்த மாற்றங்கள் நல்ல நோக்கத்துடன் நிகழும்போது, எண்ணிய இலக்கை எட்டுவது எளிதாகும்.

$$$

Leave a comment