நீதிமன்றத் தீர்ப்பும் நியாயத்தின் குரல்களும்

-துக்ளக் சத்யா, பி.ஏ.கிருஷ்ணன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முரளி சீதாராமன், கே.அண்ணாமலை

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், ஹிந்துக்களின் உரிமையை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு. அதுதொடர்பான எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் சிலரின் முகநூல் பதிவுகள்…

1. உன்னதமான தீர்ப்பு

-துக்ளக் சத்யா.

உன்னதமான தீர்ப்பை அளித்துள்ளது மதுரை நீதிமன்றக் கிளை.

‘இவ்வழக்கில் இனி அப்பீல் செய்ய மாட்டோம். கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய உள்ளன. வீண் செலவைத் தவிர்த்து, தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம்’ என்று அரசு அறிவித்திருந்தால் பிரச்சினை சுமுகமாக முடிந்திருக்கும். அரசை யாரும் குறை கூறியிருக்கவும் முடியாது.

ஆனால், தீர்ப்பை ஏற்கும் மன நிலையில் அரசு இல்லை என்பதை சட்ட அமைச்சரின் பேச்சு உணர்த்துகிறது.

உடனடியாக தீர்ப்பை எதிர்ப்பதுதான் சிறுபான்மையினருக்கு மகிழ்ச்சி தரும் என்று முடிவு செய்து கொண்டு, அரசு சட்ட அமைச்சரைப் பேச வைத்துள்ளது. கொஞ்சம் விவரம் தெரிந்த நபரைப் பேச வைத்திருக்கலாம்.

‘பிணத்தை சுடுகாட்டில்தான் எரிக்க வேண்டும். அது போல, தீபத்தை அதற்கான இடத்தில்தான் ஏற்ற வேண்டும்’ என்ற அமைச்சரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. பின், சமாதிக்கு ஏன் கடற்கரையில் இடம் கேட்டீர்கள் என்று பலரைக் கேட்க வைத்துள்ளது, அவரது தேவையற்ற இந்தப் பேச்சு.

இது வழக்கமாக அமைச்சர்கள் பேசுவது போன்ற உளறலா, அல்லது திமிர்ப் பேச்சா என்று தெரியவில்லை. தடுமாற்றத்தில் உளறியதாகவே இருந்தாலும், மிக மிக கண்டனத்திற்குரியது. அமைச்சர் பதவிக்குரிய தகுதியற்ற அநாகரிகப் பேச்சு.

இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை சட்டத்துக்கு முரணானது என்று விமர்சிக்கிறார் அமைச்சர். அவ்வளவு சட்ட அறிவு கொண்டவரா அமைச்சர்?

‘ஆன்மிக விவகாரங்களில் வழக்கத்தை மாற்றி புதிய வழக்கத்தைக் கொண்டு வரக் கூடாது’ என்ற அவரது வாதம் சரிதான். ஆனால், அது இந்த விஷயத்தில் பொருந்தாது.

தீபத்தூணில் தீபம் ஏற்றுவது புதிய வழக்கப்படியானது அல்ல. முன்பு இருந்து வந்த அந்த முறை முகலாயர் ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை சரிபார்த்த பிறகே, கள ஆய்வும் செய்த பின், முதலில் வழக்கை விசாரித்த தனி நீதிபதி தீர்ப்பு அளித்திருந்தார். பழைய முறையை மீண்டும் பின்பற்றும் வகையிலேயே அவர் தீர்ப்பை அளித்திருந்தார்.

‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்பதுதான் புதிய வழக்கம். ஏன் அது கொண்டு வரப்பட்டது?

பாரம்பரிய முறையில் கற்பிக்கப்பட்டு வந்த ஆகம விதிகளை, பயிற்சி நிலையங்கள் மூலம் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுத்தது எப்படி?

காலம் காலமாக இருந்து வரும் சநாதன நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்று ஆளும் கட்சியினர் பேசுவது பழைய வழக்கத்தை மாற்றும் முயற்சி இல்லையா?

இத்தகைய மாற்றங்கள்தான் செய்யக் கூடாதவை என்று அரசு உணர்வது நல்லது.

ஹிந்துக்களுக்கு ஆதரவாக நடக்காவிட்டால் கூட பரவாயில்லை. எதிராக நடக்காமல் இருந்தாலே போதும், ஹிந்து மத உணர்வுகளை சிறுமைப்படுத்தும் கட்சியினரைக் கண்டித்தாலே கூட போதும் – ஹிந்துக்களின் நம்பிக்கையைப் பெற்று விட முடியும்.

ஆனால், ஹிந்துக்களுக்கு எதிராக நடப்பதுதான் மதச்சார்பின்மை என்ற நினைப்பு இன்று மனோ வியாதி போல் ஆகி விட்டது. மாற்றுவது கஷ்டம்.

அதிலிருந்து அரசு விடுபட்டால் மட்டுமே விளைவுகள் நல்லதாக இருக்கும்.

$$$

2. திராவிட அகந்தையை சுட்டுப் பொசுக்கலாம்!

-பி.ஏ.கிருஷ்ணன்

திருப்பரங்குன்றம் சிவனுடைய மலை. பரம்பொருளான ஈசுவரனின் குன்றம் அது என்று பக்தர்கள் கருதுகிறார்கள். அவன் இருக்கும் இடம் சுடுகாடு. அங்கு எதையையும் எரிக்கலாம். திராவிட அகந்தையையும் சுட்டுப் பொசுக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். அவனே பிழம்பு.

ஜோதிப் பிழம்பிற்கு திசைகள் உண்டா? பக்கங்கள் உண்டா? அது உலகெங்கும் தெரியும். ஆனால் பக்தர்கள் கண்ணைக் கூச வைக்கும், சுட்டெரிக்கும் நெருப்பு வேண்டாம் என நினைக்கிறார்கள். அவனிடமிருந்தே ஒளியை எடுத்து, அவனிருக்கும் மலையில் ஓரிரு இடங்களில் அவனை உக்கிரம் இல்லாத, அருள் புரியும் சுடராகக் காட்ட நினைக்கிறார்கள்.

இதைக் கொச்சைப்படுத்துவதை பெரியாரின் வாரிசுகளாலேயே செய்ய முடியும்.

$$$

3. ரகுபதிக்கு கண்டனம்

-கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

இப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விட்ருவோம்! அந்த 2 நீதிபதிகளும் என்ன சாதின்னு பார்ப்போம்! அதானேடா?

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில், “சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

அந்த அமைச்சரிடம் சுடுகாட்டில் தானே உங்கள் தலைவனின் தகனம்/ உடலைப் புதைத்திருக்க வேண்டும் அதுதானே வழக்கம். ஏன் மெரினாவில் புதைக்க வேண்டும் என்று நீதி மன்றத்திற்கு ஓடினீர்கள்?

அதிமுகவில் அமைச்சராக இருந்தவர் என்ற meritஇல் திமுகவுக்கு வந்து நாவடக்கம் இன்றித் திரியும் இன்றைய திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.

$$$

4. ராஜிநாமா செய்யுங்கள் சேகர்பாபு அவர்களே!

-முரளி சீதாராமன்

என்னங்க ஐயா சேகர் பாபு அவர்களே…

நீதிமன்றம் திருப்பரங்குன்றம் வழக்கில் அரசாங்கத்தை இந்த  ‘வாங்கு’ வாங்கி இருக்கிறது.

உங்க கூட்டாளி காங்கிரஸ் – அதில் A.K.அந்தோணி மத்திய மந்திரி சபையில் நரசிம்ம ராவ் காலத்தில் இருந்தார்.

1994 ஆம் வருடம் நடந்த சம்பவம்!

அந்தோணி உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சர்.

சர்க்கரை இறக்குமதி பேர ஊழல் என்று நாடு அல்லோலகல்லோலப் பட்டது.

A.K.அந்தோணி மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.

அவரது துறை மீது மறைமுகமான குறிப்பாக – “கவனம் செலுத்தி இருந்தால் தவிர்த்து இருக்கலாம்”- என்று போகிற போக்கில் – PASSING REFERENCE ஆக மட்டும் குறிப்பிடப்பட்டது.

அப்படித் தனது துறை மீது – போகிற போக்கில் கூறப்பட்ட குறைக்கே – தார்மீகப் பொறுப்பு ஏற்று அந்தோணி ராஜினாமா செய்தார்!

அதற்கும் முன்பாக நேரு மந்திரிசபையில் முந்த்ரா வழக்கில் – நிதி மந்திரியாக இருந்த கிருஷ்ணமாசாரி ராஜிநாமா செய்தார்.

அவர் மீதும் நேரடி குற்றச் சாட்டு ஏதுமில்லை – PASSING REFERENCE – எனப்படும் குறிப்புக்கே தார்மிகப் பொறுப்பு ஏற்று ராஜிநாமா செய்தார்.

(ஆதாரம்  ‘தினமணி’ நாளேட்டில் ப.நெடுமாறன் 2G வழக்கு சமயத்தில் எழுதிய நடுப்பக்க கட்டுரை)

காமராஜரே டி.டி.கிருஷ்ணமாசாரியை செல்லமாகக் கடிந்து கொண்டார் – “இதற்கு ஏன் ராஜிநாமா பண்ணிட்டு வந்து நிக்கறேண்ணேன்!”

ஒரு வழக்கில் – அத்வானி மீது புகார் எழுந்த போது அவரும் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

அத்வானி அப்பீலுக்கு போனார்.

“நான் நிரபராதி என்று நிரூபித்த பிறகே மீண்டும் பதவி ஏற்பேன் – அதுவரை விலகி நிற்பேன்”- என்று சபதம் ஏற்றார் அத்வானி.

அதுபோலவே தனக்குத் தொடர்பில்லை என்று தீர்ப்பு வந்த பிறகே மீண்டும் பதவி ஏற்றார்…

ஆனால் இன்றோ மதுரை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு…

PASSING REFERENCE ஆக அல்ல! நேரடி குறிப்பாகவே உங்கள் அரசின் தலையில் வலிக்க வலிக்க குட்டி இருக்கிறது!

ராஜிநாமா செய்வீர்களா மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் அவர்களே?

மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் எல்லாம் மானமும் ரோஷமும் உள்ளவர்கள்.

நீங்கள் அவர்களைவிடக் கூடுதலாக இன்னும் சற்று ஈவேரா வழியில் சுயமரியாதையும் கொண்டவர்கள்!

“மானமும் பகுத்தறிவும் மனிதனுக்கு அழகு!”- எங்கே உங்கள் ஈ.வே.ராமசாமி கூறிய பொன்மொழியை நிரூபியுங்கள் பார்ப்போம்!

சேகர் பாபு அவர்களே GO BACK.

$$$

5. உயர்நீதிமன்றத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது

-கே.அண்ணாமலை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

ஆண்டில் ஒரே ஒரு நாள், கோயில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படி ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அது தமிழக திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கினால் மட்டுமே நடக்கும் எனவும், நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத் தூண், கோயிலுக்கே சொந்தமானது என்பதை, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் திமுக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு, மிக ஆபத்தானது என்றும், அரசியல் லாபத்திற்காக திமுக அரசு, இத்தனை தூரம் தரம் தாழ்ந்து செல்லக் கூடாது என்றும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசை எச்சரித்துள்ளது.

திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொண்டு, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மதித்து, முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

***

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில், “சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழக மக்களின் ஆன்மிக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதலமைச்சர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினரின் செயல்பாடுகளை, மாண்புமிகு நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர்.

நாவடக்கம் இன்றித் திரியும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.

$$$

Leave a comment