-கருவாபுரிச் சிறுவன்

இகபர சகல செளபாக்கியங்களாகிய வீடு, வாசல், ஆஸ்தி, மனை, குழந்தை, அந்தஸ்து, பெயர், புகழ் என இப்பூவுகில் இப்பிறப்பிலே உயிர்கள் பெற்று அனுபவிப்பது சிற்றின்பம்.
புண்ணியப் பயன்களை சிறுகச் சிறுகச் சேர்த்து பரம்பொருளின் திருவருளைப் பெற்று சொர்க்கம், பிரமலோகம், வைகுண்டம், கயிலாயம் வழியாக முக்திப் பேற்றைப் பெற்று அவ்வுலகத்திற்குச் செல்வது பேரின்பம். ஆக, உயிர்கள் இரண்டு வகைப்பட்ட உலகத்தில் சஞ்சாரம் செய்ய வேண்டும் என்பது நியதி.
இதைத் தான் திருவள்ளுவ தேவ நாயனார்,
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
என்று அருளுடைமை – 7 வது குறளில் அருளிச் செய்துள்ளார்.
அந்தாதி இலக்கணம்:
அந்தம், ஆதி என்னும் இரண்டு வடசொல்லில் இருந்து வந்தது ‛அந்தாதி’. அந்தம் – முடிவு, ஆதி – தொடக்கம். முடிவில் இருந்து மற்றொன்று தொடங்குவதை ‘அந்தாதி’ என்பர்.
ஒரு பாடலின் எழுத்தோ, சொல்லோ, சீரோ, அசையோ, அடியோ அடுத்து வரும் பாடலுக்கு முதல் சொல்லாகத் தொடுத்து வருவது அந்தாதி தொகைப் பாடலாகும். இது நூறு பாடல்களைக் கொண்டது. முதல் பாடலில் உள்ள முதல் சொல் நூறாவது பாடலின் கடைசிச் சொல்லாக அமைந்து மண்டலித்து முடியும். இது மாலை போன்ற அமைப்பினை உடையது.
இவரே மக்களுக்கான தலைவர்:
* தன்னுடைய குடிமக்களின் நலனை எந்த நேரமும் கருத்தில் கொண்டு அதற்கான செயல்பாட்டினைச் செயல் படுத்துபவனே உண்மையான மன்னன்.
* பிரஜைகளின் பிரச்சினைகளை தாமே விரும்பிச் சென்று தீர்த்து வைக்கும் திறனை உடையவனே சிறந்த செயல்வீரன்.
* சிறந்த திட்டங்களை எல்லாம் வழிகாட்டியாகச் செய்து அதனை நடைமுறைப்படுத்தி, அதில் தன் பெயரை சிறிதளவு கூட பதிப்பிக்க விரும்பாத மன்னனே மக்களுக்கான தலைவன்.
இந்தக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மூலாதாரமாக வைத்துத் தான் தமிழ்நாட்டினை மூவேந்தர்களின் வழி வந்த பேரரசுகளும் சிற்றரசுகளும் ஆட்சி செய்தார்கள். இம்மன்னர்களுக்கு எல்லாம் பூஷணமாக விளங்கியவர் தான் வரதுங்க ராம பாண்டியர். இவரே இன்றைய தமிழகத்திற்கு முன்னுதாரணம் ஆவார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், கரிவலம் வந்த நல்லுாரில் நித்திய மங்கலமாய் எழுந்தருளி ஆட்சி செய்யும் நிரந்தரத் தலைவர் பால்வண்ணநாதர்.
‘பரசமயக் கோளரி’ என்னும் பட்டத்தினைப் பெற்று சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த மன்னன்பிரான் வரதுங்க ராம பாண்டியர். ஆதியந்தம் இல்லாத எந்தை பால்வண்ண நாதர் திருவடியில் இவர் சாற்றிய ‘திருக்கருவை அந்தாதிகள்’ இப்பகுதியில் மட்டுமல்ல… கல்வியாளர்கள் மத்தியிலும் பிரபலம்.
காப்புச் செய்யுள் நீங்கலாக, ‘திருக்கருவைக் கலித்துறை அந்தாதி’யில் முதல் பாடல் முதல் சொல் ‘சீரணி’ எனத்தொடங்கி, நூறாவது பாடலில் ஈற்றடியில் இறுதி சொல் சீர் பெற்றதே என முடிகிறது.
‘திருக்கருவை வெண்பா அந்தாதி’யில் முதல் பாடல் முதல் சொல் ‘சீரணிந்த’ எனத் தொடங்கி , நூறாவது பாடலின் ஈற்றடியில் இறுதி சொல் ‘சீர்’ என முடிகிறது.
‘திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதி’யில் முதல் பாடல் முதல் சொல் ‘சீரார்’ எனத் தொடங்கி . நூறாவது பாடலின் ஈற்றடியில் இறுதிச் சொல் ‘நின் சீர்கள் போற்றியே’ என முடிகிறது.
பொதுவாக ஒரு செய்யுளைத் தொடங்குவதற்கு நூலாசிரியர் எடுத்தாளும் மங்கலச் சொற்கள் திருவில் தொடங்கி இருபத்தி இரண்டு சொற்கள் என சான்றோர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.
அந்த வகையில் மன்னர் பிரான் வரதுங்க ராம பாண்டியர் அருளிச் செய்த மூன்று வகையான ‘திருக்கருவை அந்தாதி’ பாடல்களில் அவர் எடுத்தாண்டும், முற்றுப் பெற வைக்கும் மங்கலச் சொல் ‛சீர்’ என்பதாகும் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
‘நறுமணம் பொருந்திய வாசனையுடைய பூக்களால் முகலிங்கநாதருக்கு மூன்று நிறமுடைய மாலைகளைத் தொடுத்து அவரது திருவடியில் சாற்றினால் அது வாடி விடும் எனக் கருதிய மன்னர் பிரான், எழுத்தும் சொல்லும் பொருளும் மணமுடைய பாடல்களை யார் எடுத்து எப்போது உச்சரித்தாலும் வாடாத அப்பாக்கள் பால்வண்ணநாதரின் திருவடியை அலங்கரிக்க வேண்டும் என்பதால் மாலையாக சாற்றி மகிழ்ந்துள்ளார்’ என பனையூர் தியாகி கி.சுப்பிரமணிய பிள்ளை ஆண்டுதோறும் பிப்ரவரி 12இ ல் நடந்த சர்வோதய மேளாவில் சொற்பொழிவு செய்வதைக் கேட்டு இருக்கிறோம்.
இத்தலத்தில் வாழும் மக்களுக்கான கற்பக விருட்ஷம், காமதேனு என்னும் சிறப்பினைக் கொண்டது இந்நூல்; மேலும், ஒரு சைவ நூல், சமய நூல், தோத்திர சாத்திர நூல் என பன்முக தனித்தன்மை கொண்டது.
வேதாகமத்தின் சாராம்சங்கள், உபநிடதங்களின் கருத்தாழங்கள், சிவபரத்துவம், சைவ மகத்துவம், சிவபெருமானின் திருவிளையாடல்கள், அவர் அடியார்களின் மீது கொண்டுள்ள கருணை, உலக வாழ்வின் உயிர்கள் காணும் இன்ப துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், நிலையான முக்திப் பேற்றை அடைவதற்கு உண்டான வழி முறைகள், தலவரலாற்று நிகழ்வுகள், இன்னும் பல சிறப்புறு செய்திகளை திருக்கருவை அந்தாதிகளில் எடுத்துரைக்கின்றார்.
தன்னுணர்வு, சிவனுணர்வு, அருளுணர்வு இம்மூன்றும் கைவரப்பெற்ற வரதுங்க ராம பாண்டியர். தன் பிரஜைகள் மீது அளவில்லாத கருணை கொண்டார். அதனை யாவரும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் வெளிப்பாடு தான் திருக்கருவை அந்தாதிகள் எனச் சொன்னால் அது மிகையல்ல.
சீர் என்றால்…
சீர் என்ற சொல்லுக்கு பல பொருள் இருக்குமாயின், இவ்விடத்தில் ‘சீர்’ என்றால் ஒழுங்கு. எந்த ஒரு செயலையும் நேர்மையாவும், நேர்த்தியாகவும், வழக்கமாகவும், அனைவருக்கும் புரியும் படியாகவும், அதையே மற்றவர்கள் அதன் சிறப்புக் கருதி தன்னிச்சையாக பின்பற்றும்படியாவும் செய்வதற்கு சீர் என்று பெயர்.
திருக்கோயில்களில் சுவாமி எழுந்தருளி இருக்கும் சப்பரத்தை சுமப்பவருக்கு ‘சீர்பாத தாங்கிகள்’ என்று பெயர்.
பருவமடைந்த கன்னியருக்கு தாய்மாமன் கொண்டு வரும் சீதனப் பொருட்களை ‘சீர் கொண்டு வருகிறார்’ என்பர்.
மலையில் இருந்து வரும் வெள்ளம் அணையை வந்தடைந்ததில் இருந்து தண்ணீர் ‘சீராக வருகிறது’ என அறிக்கை கொடுப்பர்.
ஆன்மிக சங்கத்தின் செயலாளர் சபையை ‘சீரமைப்பு செய்து’ மீண்டும் தர்ம காரியங்களில் அனைவரையும் ஈடுபடச் செய்தார் என பக்தர்கள் பேசிக் கொள்வர்.
தமிழக அரசு கூட ‘சீர்திருத்தம், சீரமைப்பு, சீரிய முறையில், சீர்மரபினருக்கான சலுகை’ என பல்வேறு செயல்பாடுகளுக்கு சீர் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறது. ஆனால், அதை உணர்ந்து நடைமுறைப்படுத்துவது கிடையாது. அது ஒருபுறம் இருக்கட்டும். சீர் என்ற சொல்லிற்கு இன்னும் பல சிறப்புகள் உள்ளன.
ஆக, சீர் என்கிற சொல் மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படுவதால் எம் மக்கள் நியாயமாக இருக்க வேண்டும், ஒழுக்கமாக வாழ வேண்டும், தர்மப்படி நடக்க வேண்டும் என்பதையும், தனக்கு முன்னால் நடக்க இருப்பதையும் ஞானதிருஷ்டியால் உணர்ந்தார்.
அதனால் தன்குடிமக்களின் மீது கொண்டுள்ள அளப்பெருங்கருணையின் காரணமாக, சீர் என்ற மங்கலச் சொல்லை தொடக்கமாக வைத்து, மரபுப்படி திருக்கருவை அந்தாதி நூலைத் தொடங்கி இருக்கிறார்.
அபிராமி அந்தாதி:
திருக்கருவைக்கலித்துறை அந்தாதியைப் போன்றே திருக்கடையூர் அம்பிகையின் மீது அபிராமி பட்டர் அருளிச் செய்த அபிராமி அந்தாதியும் ஒரு தோத்திர நூலாகும். மேலும் இது சாத்திரக் கருத்துக்களையும் உள்ளடக்கியது.
வடமொழியில் உள்ள அம்பிகையின் மகத்துவத்தை தமிழில் அப்படியே மொழிபெயர்த்துத் தந்துள்ளார். மேலும், மந்திரம், எந்திரம், தந்திரம், தியானம், ஸ்ரீ சக்கரம், திருவடி , லலிதா சகஸ்ர நாம நுட்பங்கள், தேவீ உபாஸனம், போன்றவற்றை எல்லாம் அபிராமி அந்தாதியில் நமக்காக பொருத்தி இருப்பார் பட்டர் பிரான்.
எங்கெல்லாம் அம்பிகையின் சன்னிதி இருக்கிறதோ அங்கெல்லாம் திருக்கடையூர் அபிராமி அம்பிகைக்குரிய அந்தாதி பாடல்களை பந்து மித்திரர்களோடு பாடி பாராயணம் செய்து இன்புற்று மகிழலாம்.
கலித்துறை இலக்கணம்:
* காப்புச் செய்யுள், பயன்நிலையான இரண்டு செய்யுள் நீங்கலாக, நூறு பாடல்களைக் கொண்டது இவ்வந்தாதிகள்.
* திருக்கருவையந்தாதியிலும், அபிராமி அந்தாதியிலும் உள்ள பாடல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பினால் ஆனவை.
* திருக்கருவை கலித்துறை அந்தாதி முதல் பாடலில் சீர் எனத்தொடங்கி நூறாவது பாடலில் ஈற்றடியில் இறுதிச் சொல்லானது சீர் என்றே முடிகிறது.
* அபிராமி அந்தாதி பாடலில் முதல் சொல் ‘உதிக்கின்ற’ என்ற சொல்லில் தொடங்கி நுாறாவது பாடலில் ஈற்றடியில் இறுதிச்சொல்லானது ‘உதிக்கின்றவே’ என முடிகிறது.
* கட்டளை கலித்துறை என்பது எழுத்தெண்ணி பாடப்படும் ஒரு யாப்பு வகை.
* இது நான்கு அடிகளைக் கொண்ட செய்யுளாக அமையும்.
* முதல் நான்குசீர்களில் வெண்டளையாகவும், கடைசி சீர் விளங்காய் வாய்பாடாகவும் அமையும்.
* ஒற்று நீக்கி எண்ணி வர அது 16 எழுத்துக்களைக் கொண்டால் அது நேரசை 64 எழுத்துக்களைக் கொண்ட ஒரு பாடல் அதாவது ஒரு செய்யுள்.
* ஒற்று நீக்கி எண்ணி வர அது 17 எழுத்துக்களைக் கொண்டால் அது நிரையசை 68 எழுத்துக்களைக் கொண்ட ஒரு பாடல் அதாவது ஒரு செய்யுள்.
* ஏ காரத்தில் முடியும்
* செப்போலோசை பெற்று வரும்.
* சிவபெருமானின் புகழ் பாடும் திருநூல்களில் ஒன்றான பதினோராம் திருமுறையில் காரைக்கால் அம்மையாரும், சேரமான் பெருமானும் பாடிய பாடல்கள் கட்டளை கலித்துறை யாப்பமைப்பில் அமைந்தது. மன்னர் பிரானுக்கும், பட்டர்பிரானுக்கும் வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் இவர்கள் திகழ்ந்துள்ளார்கள் என்பது இங்கு ஈண்டு சிந்திக்கதக்கது.
இன்பமாக வாழ…
வேண்டிய வேண்டிய எல்லாம் எதிரும் வினையகலும்
ஈண்டிய முக்தி பெருவாழ்வு சேரும் இடரொழியும்
பாண்டியர் ஏத்தக் கருவாபுரி நின்ற பால்வண்ணனைப்
பூண்டிகழ் மென்முலை ஒப்பனை பாகனை போற்றினார்க்கே.
(திருக்கருவைக்கலித்துறை அந்தாதி - 59)
(பாடல்கள் படிப்பதற்காக சந்தி பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க).
எம் முன்னோர்களாகிய பாண்டிய மன்னர் விரும்பி வழிபட்ட பால்வண்ண நாதருடன் அபர பர ஞானங்களை தனங்களாகக் கொண்டுள்ள அன்னை ஒப்பனையாளைப் போற்றினால் வினை அகலும், இடர் ஒழிந்து விடும். இப்பூவுலக வாழ்விற்குத் தேவையான சகலவசதிகளும் வந்து எதிர்கொள்ளும். நிறைவில் மேலான முக்திப்பதமும் கிடைக்கும் என்கிறார் மன்னர் பிரான்.
நம்ம அபிராமி பட்டர் பிரானும் இதே செய்தியை தனக்கே உரிய பாணியில் சொல்லி மகிழ்கிறார். பொருள் கிடைக்கும், நல்ல படிப்பு அமையும், திடமான மனம் அமையும், தேஜஸ்மயமான வடிவம் பெறும், நல்லோருடைய உறவு கிடைக்கும். இவையெல்லாம் கிடைத்தும் திருப்தி இல்லாத நாம் மீண்டும் மீண்டும் வரங்களை கேட்டுக் கொண்டே இருப்போம் என நினைத்து மொத்தமாக நல்லன எல்லாம் தரும் என வேண்டிப் பணிக்கிறார். மேலும், அன்பர்கள் யாவருக்கும் கச்சிதமாகவும் திருப்தியாகவும் வேண்டியது கிடைக்க அவளுடைய கடைக்கண் பார்வை ஒன்று போதுமே என்கிறார்.
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெ ஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவருக்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!
(அபிராமி அந்தாதி - 70 )
உழைத்து நியாயமாக சம்பாதிக்கும் பணம், தக்கோர் போற்றும் படியான வாழ்வு, முன் வினைநுகர்ச்சியால் வரும் புண்ணியம், பாவத்தை அனுபவிக்கும் தகுதி, சூழ்ச்சி நிறைந்த இவ்வுலகில் எதிர் நீச்சல் போட்டு வாழும் அறிவு, மென்மேலும் மேம்படுத்திக் கொள்ளும் கல்வி யாவற்றையும் தருபவன் மேரு மலையை வில்லாக வளைத்து கயிலாய மலையில் இருப்பவன். அவனே இத்தலத்தில் களவீசன் என்னும் பெயரில் அருள் செய்கிறான் . அவனை திரிகரண சுத்தியுடன் வாழ்த்தி வணங்கினால் இவை யாவும் கிடைக்கும் என்கிறார் மன்னர் பிரான்.
செல்வம் ஈயும் சிறப்பும் அளித்துளத்து
அல்லல் தீர்க்கும் அறிவை உதவிடும்
கல்வி நல்கும் கதி தரும் பொற்கிரி
வல்விலான் கள வீசனை வாழ்த்தவே!
(திருக்கருவைப்பதிற்றுப்பத்து அந்தாதி – 39)
சைவ சித்தாந்தவாதிகளின் குல தெய்வம் என்று போற்றப்படும் ஸ்ரீமத் சிவஞானயோகிகள். சென்னை, குளத்துாரில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை கையெடுத்து, கை கூப்பி வணங்கினால் அவர், ஒழுக்கத்தைக் கொடுப்பார், மேலான கல்வியை அருளுவார், குறைவில்லாத செல்வமும், நிறைவான ஞானத்தையும், பூவுலகத்தையும் விண்ணுலகத்தையும் ஆட்சி செய்கின்ற தனித்தன்மையை இந்த சோமநாதப் பெருமான் அருளுவார் என உறுதியோடு சொல்கிறார். பாடலை படித்து விடுவோமா?
சீரும் கல்வியும் செல்வமும் ஞானமும்
பாரும்விண்ணும் பரிக்கும் இறைமையும்
சாரும் தென்குளந் தாபுரி மேவிய
காருண் கண்டனைக் கை தொழுவார்கட்கே.
(குளத்துார் பதிற்றுப்பத்தந்தாதி - 1)
நிறைவாக,
ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ண நாதரை வாய்மையால் போற்றணும்…
அபிராமியம்பிகையின் கடைக்கண்பார்வை கிடைக்கணும்…
களா மர நிழலில் எழுந்தருளி இருக்கும் ஈசனை வாழ்த்தணும்…
குளத்துார் சோமநாதப் பெருமானை கை கூப்பி வழிபாடு செய்யணும்…
நேரம் கிடைக்கும் பேதெல்லாம் பரம் பொருளை வாழ்த்தி வந்தித்து வணங்கினால் மறுமையில் மட்டும் அல்ல, இம்மையிலும் சகல சம்பத்துகளையும் சீரான வாழ்விற்கு குறைவின்றிப் பெறலாம் என்று சொன்ன சற்குருநாதர்களின் திருவடிகளை நாம் எந்நிலையில் இருந்தாலும் எக்கோலம் கொண்டாலும் சிக்கென பிடித்துக் கொள்வோமாக.
ஸ்ரீ வரதுங்கரராமபாண்டியர் திருவடி போற்றி.
ஸ்ரீ அபிராமிபட்டர் பிரான் திருத்தாள் போற்றி.
ஸ்ரீ மத் சிவஞானயோகிகள் திருப்பாதம் போற்றி.
விரவும் புதுமலர் இட்டுநின்பாத விரைக் கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பக்காவும் உடையவரே.
(அபிராமி அந்தாதி - 3)
-என்று துதி செய்தவாறு இச்சிந்தனையை நிறைவு செய்வோம்.
வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு!
$$$