-கருவாபுரிச் சிறுவன்
தராதரமற்ற எவர் எவரையோ சமூகப் போராளிகள் என்று போற்றி பின்சென்று வர்ந்தும் உலகம் இது. அவர்களைத் திருத்த, உண்மையான சமூகப் போராளிகள் யார் என்று கட்டுடைக்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன்...

தாழ் சடையும் நீண்ட முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.
-பூதத்தாழ்வார்
சங்க இலக்கியத்தைத் தொகுத்த பெருமக்களும், தமிழ் இலக்கணத்தை வரையறை செய்த தொல்காப்பியரும், சைவ சமய குருநாதர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்களும் ஒன்பது தொகையடியார்களும், வைணவ சமயத்தின் ஆச்சாரியர்களான பன்னிரு ஆழ்வார்களும், மருத்துவம், மந்திரம், மணிமகுடத்தை தொன்றுதொட்டு விளக்கும் பதினெட்டு சித்தர்களும் இவர்களுடைய அடிச்சுவட்டில் வாழ்ந்த அருளாளர்களும், வாழ்கின்ற சான்றோர்கள் யாவரும் சமூகப் போராளி, சமதர்மப் போர்வாள், முத்தமிழ் வித்தகர், முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர், தன்மானச் சிங்கம் என்ற பெயர்களை ஒரு போதும் சூட்டிக் கொண்டதில்லை.
ஆனால், நாங்கள் தான் மக்களிடம் உள்ள சாதி மத பேதங்களை, ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்தோம், நாங்கள் தான் தமிழக மக்களின் மனங்களில் சமதர்மத்தைக் கொண்டு வந்தோம். நாங்கள் தான் பெண்ணுரிமைக்கு முதல் குரல் கொடுத்தோம். நாங்கள் தான் தமிழை வளர்த்தோம் என இணையதளம் முதல் துண்டுச்சீட்டு வரை போலிப் பிரசாரம் செய்து வரும் நவீன பகுத்தறிவுக் கூட்டங்களா, சமூக போராளிகள் இல்லவே, இல்லை.
சமூகத்தில் நடக்கும் அவலங்களை தன்னுடைய பேச்சு, எழுத்து மூலமாகவும் செய்து காட்டி தட்டிக் கேட்டு, அதற்கான தீர்வினை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படியாகச் செயல்படுத்தி, கொண்ட கொள்கையில் உறுதியை நிலைநாட்டுபவரே சமூகப்போராளி ஆவார். அந்தவகையில், நமது ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவர்களது வழி வந்த பலரும் உண்மையான சமூகப் போராளிகள் என்று உறுதியாகக் கூறலாம்.
நாயன்மார்களும் ஆழ்வார்களும் அவர்களது அடியொற்றிய அருளாளர்களும் செய்த அருட்செயல்களை அறிந்து தெரிந்துணர்ந்து கொள்ள… அவர்களது வரலாறுகளை நன்கு படிக்க வேண்டும். அதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றால், திருஞானசம்பந்த நாயனார், ஸ்ரீமத் ராமானுஜர் ஆகியோரின் வரலாறுகளையாவது அழுத்தம் திருத்தமாகப் படித்துணர வேண்டும் என பகுத்தறிவாதிகளிடம் கேட்டுக் கொண்டு, உண்மையான சமூகப் போராளிகளை கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நம்மாழ்வார்:
வடமொழியில் இருக்கும் ஆதி வேதங்களை பாமர மக்களும் படித்துணரும் பொருட்டு தமிழில் செய்த பெருமான் நம்மாழ்வார். அவரைப் புகழ்ந்த தனியன் பாடல் ‘வேதத்தை தமிழில் செய்தவர்’ என்று புகழாரம் சூட்டுகிறது. அவரே எங்களுக்கு பாதுகாப்பு என்று கூறுவது எங்கள் குருநாதரின் மகோன்ம மகிமையைக் காட்டுகிறது.
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு - எங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுர கவியார் எம்மை ஆழ்வார் அவரே அரண்.
நம்மாழ்வார் பாடிய பாடல்கள் அனைத்தும் நான்கு வேதங்களின் சாரம் என்கிறார்கள், அவருக்குப் பின்னர் தோன்றிய அருள்ஞானிகள். அவருடைய திருவாய்மொழியில் சாதிகளைக் கண்டித்தும், வர்ணங்களில் வறட்டுக் கோட்பாடுகளை எதிர்த்தும், ‘உண்மையானவர்கள் எக்குலத்தில் பிறந்திருந்து பெருமாளை வழிபட்டாலும் அவர்கள் தன்னை போன்ற வைணவ அடியார்கள்’ என மார்தட்டிச் சொல்கிறார்.
அந்த வாய்மொழியில் விளைந்த திருவாய்மொழி பாசுரத்தினை ஒரு தரம் சேவிப்போமா…
குலம்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந் தெத்தனை
நலந்தான் இல்லாத சண்டாள சண்டாளர் களாகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் களென்றுள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே.
-திருவாய்மொழி 3:7:9
அப்படியாயின் ஆழ்வார்களுக்கெல்லாம் சிங்கமெனத் திகழும் நம்மாழ்வார் திருவாய்மொழியை அப்படியே ஏற்று இப்பூவுலகில் பரவச் செய்கிறார் தொண்டர் அடிப்பொடியாழ்வார் தனது திருமாலையில்… இவர் பெயரே தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் தானே!
அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதிமாரில்
குடிமையில் கடைமைப் பட்ட குக்கரில் பிறப்ப ரேனும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்கமா நகருளானே.
-திருமாலை-39
பழுதிலா ஒழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்
இழிகுலத் தவர்களேலும் எம்மடியார்க ளாகில்
தொழுமிந்தர் கொடுமின் கொள்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே.
-திருமாலை-42
அமரவோர் அரங்கம் ஆறும் வேதமோர் நான்கும் ஒதி
தமர்களில் தலைவராய சாதியந் தணர்களேனும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்ப தோர் அளவிலாங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்கமா நகரருளானே.
-திருமாலை-43

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
‘அஷ்ட பிரபந்தம் படித்தவன் அரைப்பண்டிதன்’ என்றொரு வழக்கு கிராமங்களில் உண்டு. அஷ்ட பிரபந்தம் என்பது அழகிய மணவாள தாசர் என்னும் நாமத்தை கொண்ட பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய அருளிச் செய்த நுால். இந்நுாலில் உள்ள கருத்துக்கள் யாவும் ஆழ்வாராதிகளி்ன் வாக்கினை அடியொட்டியே வருகிறது. இரு மொழியிலும் புலமை பெற்றுத் திகழ்ந்த இவரின் பெருமை அறிந்த மன்னர் திருமலை நாயக்கர் தன் அவையில் பதவி கொடுத்து அமர்த்திக் கொண்டார். இருப்பினும் அரங்கன் மீது கொண்ட அன்பினால் பாகவதத் திருப்பணியிலே அவரது உள்ளம் நாடி இருந்தது. இவர் வாழ்ந்த காலம் பற்றி பல வேறுபாடு கருத்துக்கள் அறிஞர்களிடம் நிலவுகிறது.
சமூகப் புரட்சிகளுக்கு ஆழ்வார்களின் ஆணையிடும் பாடல்களுக்கு மேலும் அழகு சேர்ப்பது போலவும் கட்டியம் கூறுவது போலவும் அமைகிறது இவரது பாடல். பொறுமையாகப் படித்து சிந்திப்போமாக…
பாதியாய் அழுகிய கால் கையரேனும்
பழி தொழிலும் இழி குலமும் படைத்தாரேனும்
ஆதியாய் அரவணையாய் என்பராகில்
அவரன்றோ யாம் வணங்கும் அடிகளாவார்
சாதியால் ஒழுக்கத்தால் மிக்கரேனும்
சதுர் மறையால் வேள்வியால் தக்கோரேனும்
போதில் நான்முகன் பணியில் பள்ளி கொள்வான்
பொன்னரங்கம் போற்றாதார் புலையர் தாமே.
-திருவரங்க கலம்பகம் - 15
அப்பர் சுவாமிகள்:
முதன்முதலில் முடியாட்சியை எதிர்த்துப் போராடியவர் அப்பர் சுவாமிகள். சைவ சமயத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர். ஆரம்ப வாழ்வில் வேற்றுச்சமயத்தில் தன்னை விரும்பி இணைத்துக் கொண்டாலும் சிவபெருமானையே தன் நெஞ்சில் இருத்தியவர். தெய்வத் திக்குகள் தோறும் திருவருளை நினைந்து உருகி நைந்து தேவாரம் பாடி உழவாரம் செய்த உத்தமர். நவீனப் புரட்சிகளுக்கும் சமஉரிமைகளுக்கும் அன்றே அஸ்திவாரம் இட்ட அருட் பெருஞ் செல்வர். தன்னுடைய பாடல்கள் மூலம் பல புரட்சிகளைச் செய்த பெருந்தகையார்.
ஞானிகள் வீற்றிருந்து அருளும் ஞானவானில் தனித்துவமாக சுடர் விட்டுப் பிரகாசிக்கும் சித்திரை சதய நட்சத்திர நாயகன், ‘இந்திரப்பதவியை தந்தாலும் வேண்டாம். குபேரனிடம் இருக்கும் செல்வங்களை தந்தாலும் வேண்டாம். ஏன் ஏன்றால் அவர்கள் சிவபெருமானின் அன்பராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவர்களை மதியோம். அதைவிடுத்து சிவநேயர் ஒருவர் தொழுநோயுடையவராக இருந்தாலும், மாமிசம் தின்னும் புலையராக இருந்தாலும் அவர்கள் நாம் வணங்கும் கடவுள்’ என புரட்சி மொழி செய்த புண்ணியர் நம் திருநாவுக்கரசு சுவாமிகள் என்பதை போலிச் சமயவாதிகளும், தற்பெருமை பேசும் தற்குறியாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். இதோ அத்தேவாரப் பாடலை முதலில் நாம் படித்துவிடுவோமா?
சங்க நிதி பதும நிதி இரண்டும் தத்து தரணியொடு
வான் ஆளத் தருவரேனும்,
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்,
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய்
ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்,
கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்,
அவர் கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!
-திருநாவுக்கரசு சுவாமிகள்.
சிவஞான யோகிகள்:
சைவ உலகம் இன்று நிமிர்ந்து நன்னடை இட்டுச்செய்வதற்கும் காரண, காரிய கர்த்தாவாகத் திகழ்ந்தவர் நம் சிவஞான யோகிகள்.
இப்பிரபு சைவ சமயக்குரவர்களாம் நால்வர் பெருமக்களுக்கு காஞ்சிபுராணத்தில் அருளிச்செய்த துதிப்பாடல்களை ஒவ்வொரு சிவனடியார்களும் மனப்பாடமாக தல பாராயணம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யப்படும் பாடல்களை நால்வர் சன்னிதியில் சென்று பாடி ஓதிப் பயனுற வேண்டும்.
அப்பாடல்கள் இவ்வையகத்தின் தனித்தன்மையைக் காட்ட வல்ல அற்புத ஆற்றல் படைத்தவை.
முக்காலமும் உணர்ந்த பரமயோகியான நம் சிவஞானயோகிகள் திருநெல்வேலி தந்த தெய்வீக சிங்கம். தென்பாண்டி நாட்டுத்தங்கம். சைவர்களுக்குக் கிடைந்த சிவஞான பொக்கிஷம். அப்பிரபு வட மொழிகளை நன்கு ஆராய்ந்தவர். அதில் நீந்தி கரையும் கண்டவர்.
திருநாவுக்கரசரின் அடிச்சுவட்டில் பயணம் செய்த அப்பிரபுக்கு, தன்னுடைய உயரிய நோக்கம் எது வென்று தெரிந்துள்ளது.
“நான்கு வேதங்களையும் ஒருவர் கரைத்துக் குடித்திருந்தாலும், வளம் பல பொருந்தி இருந்தாலும் ஈசனிடத்தில் அன்பில்லாதவர்கள் புலையரை விட கீழானவர்கள் என்பதைச் சொன்ன யோகிகள், தீயவழிகளை கைக் கொண்டவர்களாக இருந்தாலும் சிவபெருமானிடத்தில் அன்பு கொண்டால் அவருக்கு அடியேன் அடிமை” என்கிறார் என்றால் அவரின் உயரிய தெய்வீக குணத்தை எப்படிக் காண்பது? திருவடி பற்றினால் தரிசித்து மகிழலாம்.
மறைநான்கும் பயின்றொழுகி இட்டிகளும் பலவியற்றி மல்லல் ஞாலத் திறவாத புகழ்படைத்தும் ஈசனிடத்தில் அன்பிலரை எண்ணாதுள்ளம் புறமோதிக் கொலைபயின்று மதுமாந்துக் கொடும்பாவப் புலையரேனும் அறவாணன் திருவடிக்கீழ் அன்பினரேல் அவர் எம்மை அடிமை கொள்வார்.
– என்று காஞ்சிபுராணம் பாயிரத்தில் சிவஞான யோகிகள் பாடிப் பரவுகிறார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டிக்கலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிதம்பரேஸ்வரர் மீது ‘திருக்கலசை பதிற்றுப்பத்தந்தாதி’ என்னும் ஒரு திருநூலை இயற்றியுள்ளார்.
அதில், ஆழ்வார்கள், நாயன்மார்களின் கருத்தமைந்த பாடல் ஒன்று 76 வது அந்தாதிப் பாடலாக அமைந்துள்ளது. அதன் பொருள் வெளிப்படை. படித்து மகிழுங்கள்.
சிவனெனும் மொழியைக் கொடிய சண்டாளன்
செப்பிடின் அவனுடன் உறைக,
அவனோடு கலந்து பேசுக, அவனோடு
அருகிருந்து ண்ணுக என்னும்
உவமையில் சுருதிப் பொருள் தனை நம்பா
ஊமரோடுடன் பயில் கொடியோன்
இவனெனக் கழித்தால் ஐயனே கதிவேறு
எனக்கிலை கலைசை ஆண்டகையே.
-திருக்கலசை பதிற்றுப்பத்து அந்தாதி -76
வரதுங்க ராம பாண்டியர்:
பாண்டிய மன்னர்களில் இரு மொழிகளி்ல் புலமை பெற்று விளங்கியவர்கள் இருவர். ஒருவர் தென்காசியை ஆண்ட அதிவீர ராம பாண்டியர். மற்றொருவர் கருவை நகரினை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த வரதுங்க ராம பாண்டியர்.
எங்கும் நிறைந்துள்ளவன் பரம்பொருள் அவனையே, ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வேறு வேறு வடிவங்களில் வழிபடுகிறோம். அத்தகைய வழிபாடு சீரிய வழிபாடு. அதிலுள்ள வலிமையான பக்தியே முக்திக்கு சாதனம். அன்பே சிவம். அவர்களிடம் உயர்வு, தாழ்வு என்பது கிடையாது.
பரம்பொருளை வழிபட்டவர் உயர்ந்தவர். வழிபடாதவர் தாழ்ந்தவர். இக்கருத்து எனது குடிமக்களாகிய கரிவலம் வந்த நல்லூர்ப் பிரஜைகளுக்கு மட்டும் பொருந்தக் கூடியது அல்ல… இந்த உலகத்திற்கே பொருந்தக் கூடியது என்று முன்னோர் மொழிந்த வழியில் சென்ற வரதுங்கரின் திருக்கருவைக்கலித்துறை அந்தாதி 78 வது பாடலைப் படித்துணர்வோமா?
உவர் ஆழி வைத்து இழிகுலத்தே வந்து உதித்தவரும் சிவ சாதனம் பெறின் தேவர் கண்டீர் தென்கருவைப்பிரான் துவர்வாய் மணி நகை பங்கன் பொற் றாளைத் தொழாதிருப்போர் எவராயினும் மற்றவரே குலத்தினில் இழிந்தவரே.
நகரம் முத்துவீரப்பக் கவிராயர் அருளிச் செய்த ‘சங்கரன்கோயில் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்’ நூல் இப்பகுதியில் மிகவும் பிரபலம். இந்நூலிற்கு வயலி அம்பிகை தாசன் அவர்கள் எளியுரையோடு வெளியிடும் வாய்ப்பினை அடியேனுக்கு திருவருள் வழங்கியது. பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் இந்நூலைப் பெற்று வாசித்தும் பூசித்தும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிற்க.
சங்கர நயினார் கோயில் தல புராணத்தை முன்பு எழுதியவர் புவியரசராகிய சீவலமாற பாண்டியன். அவருக்குப் பின்னர் எழுதியவர் கவியரசராகிய புளியங்குடி நகரம் முத்து வீரப்பக் கவிராயர். இருவருமே கோமதியம்பிகையின் திருவருளை நிரம்பப் பெற்றவர்கள். சங்கர நயினார் கோயில் தல புராணத்தில் இடம் பெறும் சருக்கங்களில் ஒன்று தல விசேடச் சருக்கம், 3 வது பாடலில் முன்னோர்கள் மொழிந்த கருத்துக்களை பொதித்து வைத்து தெள்ளு தமிழில் தந்து இருக்கிறார். பொருள் வெளிப்படை. இதோ அப்பாடல்…
புலையரோடு உறவாகிப் புன்னெறியான் நன்னெறியைப் போக்கினோரும் கொலைரே யானேரும் சீராசை யாமிதனில் கூடி னல்ல நிலையரே யாகியுயர் நெறியொழுக்கம் ஆசார நிலைத்துக் கல்வித் தலையரே யாவார்கள் இப்பிறப்பில் இனிப் பிறவாத் தன்மை யாவார்.
நிறைவாக,
நான்கு வேத கருத்துக்களின் சாரத்தைச் சொல்பவை உபநிடதங்கள். அவற்றில் ஒன்று, முண்டக உபநிடதம். அதிலுள்ள ஒரு சுலோகம்…
அபிவாய: சண்டாள: சிவ இதி வாசம் வதேத் தேந ஸஹ/ ஸம்வதேத் தேந ஸஹ ஸம்வதேத் தேந ஸஹ பூஞ்சீத/
-என்பதாகும்.
இவ்வேத வாக்கிய மையக்கருத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் திருஞானசம்பந்த நாயனாரும், ஸ்ரீமத் ராமனுஜரும் ஆவார்கள்.
மேலும் நம்மாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், திருநாவுக்கரசு சுவாமிகள், சிவஞான யோகிகள், வரதுங்க ராமபாண்டியர், நகரம் முத்துவீரப்பக்கவிராயர் ஆகியோர் யாவரும், தமது பாசுரங்களில் தெள்ளுதமிழில் தெளிவாக வார்பிடித்தும் தருகிறார்கள். பின்னாளில் இப்பாசுரப் பாடல்களை தமிழக அரசு தனது சிறப்பு அரசணையில் எடுத்தாண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தெய்வீகத்தில் திளைத்து தம் மக்களையும் அதன்படி வாழச் செய்தவர்களே ஈடுஇணையில்லாத அருள் ஞானிகள். அவர்களின் அடியொற்றிப் பயணிக்கும் யாவரும் நூறாண்டு காலம் நிறைவான வாழ்க்கை வாழ்வர் என்பதில் ஐயமேதுமில்லை.
எந்தக் குலம், கோத்திரத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் , அவர்கள் ஹிந்து சமயத்தைச் சார்ந்தவராக இருப்பின், தினந்தோறும் காலை, மாலையில் திருக்கோயில் சென்று வழிபடுவதை வழக்கத்தில் கொள்க.
குடும்பத்துடன் நல்ல நாளில் மட்டுமல்ல… எல்லா நாட்களிலும் வீட்டிலுள்ள பூஜையறையில் வழிபாட்டினை மேற்கொள்க.
அவ்வாறு செய்யும் போது அவரவர் உள்ளத்திலும், இல்லத்திலும் நல்லொளி பரவும்; சிந்தனை ஒரு முகப்படும். தெய்வீக சத்திகள் ஆகர்ஷிக்கும் மங்களத்துடன் நிறைந்து இருப்பதை உணருவீர்களாக.
ஆக, அப்பழுக்கற்று ஆண்டவன் உறையும் தலங்களை நினைக்க வேண்டும்.
மனம் மொழி மெய்களால் அவன் திருநாமத்தினைச் சொல்ல வேண்டும்.
அவனது குறியீடுகளான திருநீறு, திருமண் அணிந்தோரை அவனது வடிவமாகவே நினைத்து வழிபட வேண்டும். அதுவே தூய்மையான வழிபாடு என்று கூறி உண்மையான சமூகப் போராளி, புரட்சியாளர் யார் என்பது உங்களுக்கு தெள்ளத் தெளிவாக விளங்கி இருக்கக்கூடும் என்று கூறி இச்சிந்தனையை நிறைவு செய்கிறோம்.
திருச்சிற்றம்பலம்.
வந்தேமாதரம்.
$$$