-திருநின்றவூர் ரவிகுமார்
ஆதி சங்கரர் எனப்படுகின்ற பகவத்பாதர் தக்ஷிண பாரதத்தில் திராவிட தேசத்தில் உள்ள காலடியில் (அன்றைய தமிழகம், இன்றைய கேரள மாநிலத்தில்) பிறந்தவர். அத்வைத வேதாந்தத்தை முன்னிறுத்திய சங்கர பகவத்பாதர் எழுதிய ‘ஷட்பதீ ஸ்தோத்திரம்’ என்கின்ற பக்தி நூலைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஷட் = ஆறு (எண்ணிக்கை)
பதீம் = கால் (இங்கு வார்த்தை)
ஷட்பதீ = ஆறு கால்களைக் கொண்ட வண்டு.
பலச்ருதி = 7 வது சுலோகம்
ஆறு கால்களைக் கொண்டது வண்டு. இந்த நூல் ஆறு சமஸ்கிருத சுலோகங்களால் ஆனது. பலச்ருதி – இதைப் பயில்வதால் கிடைக்கும் பலன் – ஏழாவது ஸ்லோகம், என்று மிகச்சிறிய ஆனால் சீரிய கருத்துக்களையும் பிரார்த்தனையும் கொண்டது இந்த நூல்.
ஒவ்வொரு சுலோகத்தையும் பதம் பிரித்தும், பிறகு பொருளையும் இங்கே பார்க்கலாம்.
1
அவிநயம் அபநய விஷ்ணோ தமய மந: சமய விஷ்ய ம்ருக - த்ருஷ்ணாம் | பூத தயாம் விஸ்தாரய தாயாய ஸம்ஸார ஸாகரத: ||
பதவுரை
விநயம் = பணிவு
அவிநயம் = பணிவின்மை
உபநயனம் = பையனை குருவிடம் சேர்ப்பது. அதற்கு எதிர்ப்பதம் அபநய = பிரித்துத் தள்ளுவது
விஷயம் = அடக்கம். அடக்கத்தில் இரண்டு வகை. 1. சமம் 2. தமம்
சமம் = புலன் அடக்கம்
தமம் = மன அடக்கம்
தமய மந: = மனதிற்கு தமம் வேண்டும்
ம்ருக த்ருஷ்ணா = கானல் நீர்
ம்ருகம் = விலங்கு = (வடமொழியில்) மான்
சமய விஷ்ய = விஷயங்களில் சமம் (புலனடக்கம்)
பூதம் = உயிர் குலம்
அனைவர் மீதும் அன்பு காட்டுவது
தாரகம் = கடத்துவிப்பது = படகில் வைத்து அக்கரை சேர்ப்பது; தாரக மந்திரம்.
பொழிப்புரை
ஹே விஷ்ணோ! எனது பணிவின்மையைப் போக்கு ! மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச் செய். என்னை சம்சார கடலிலிருந்து அக்கரை சேர்த்து விடு.
2
திவ்ய துநீ - மகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதாநந்தே | ஸ்ரீ பதி பதாரவிந்தே பவ பய கேத ச்சிதே - வந்தே ||
பதவுரை
ஸ்ரீ பதி = லக்ஷ்மி நாராயணன் = பத்மினி = தாமரைக் கொடி
லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்கள் ஐந்து. தாமரைப் பூவின் மையம், யானையின் மத்தகம் (தலை) , பசுவின் பின்புறம் , வில்வ இலையின் பின்பக்கம், சுமங்கலியின் ஸீமந்தம் (வகிடு)
திவ்ய துநீ மகரந்தே – மகரந்தம்= தேன் , துநீ = ஆறு / நதி
திவ்ய துநீ = தேவலோகத்து நதி = கங்கை. கங்கை மூன்று உலகத்திலும் பாயும் நதி. ஆகாயத்தில் மந்தாகினி, பூமியில் பாகீரதி, பாதாளத்தில் போகவதீ
பரிமளம்= சுகந்தம் (நறுமணம்)
பரிபோகம் = திகட்டாத ஆனந்தம்
ஸத் = அழியாத உண்மை பொருள்
சித் = அறிவு = அறிபவனாகவும் அறியப்படுவதாகவும் உள்ளது
ஆனந்தம் = சாஸ்வத ஆனந்தம்
பவம் = ஸம்ஸாரம் (பவ ஸாகரம்)
பவன் = சிவனுக்குரிய பெயர்கள் எட்டு. பவன், சர்வன், ருத்ரன், பசுபதி, உக்ரன் , மகாதேவன், பீமன், ஈசானன்
பவனின் மனைவி – பவானி
சர்வனின் மனைவி – சர்வானி
ருத்ரனின் மனைவி – ருத்ராணி
ஈசானன் – ஈசானி
அனைத்தையும் உண்டாக்குவதால் பவன், அழிப்பதால் சர்வன்
கேதம் = வேதனை, துக்கம், ஆயாசம்.
பொழிப்புரை
லக்ஷ்மியின் பதியான விஷ்ணுவின் தாமரைப் பாதங்களை நான் வணங்குகிறேன். அந்தத் தாமரையில் தேனாக தெய்வீக கங்கை உள்ளது. (திரிவிக்ரம அவதாரத்தில் விண்ணுலகத்தை அளக்க உயர்ந்த போது தேவர்கள் அனைவரும் அந்த பாதத்தை புனித கங்கையைக் கொண்டு கழுவி வணங்கியதை நினைவில் கொள்ளவும்). அது (திருவடி) ஸத் – சித் – ஆனந்தம் ஆகியவற்றை வாசனையாகக் கொண்டது. இந்த உலகப் பிறப்பின் பயத்தையும் வலியையும் துண்டிக்க கூடியது.
3
ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் ந மாமகீநஸ் - த்வம் | ஸாமுத்ரோ ஹி தரங்க: க்வசந ஸமுத்ரோ ந தாரங்க: ||
பதவுரை
பேத அபகமே சேர்ந்து பேதாபகமே என்றுள்ளது.
அபகமம் என்றால் போய் விடுவது , நீங்குவது என்று பொருள்.
கமம் , கமனம் என்றால் சேர்வது, வருவது. எதிர்ச் சொல் அபகமம்.
பேத அபகமே என்றால் பேதம் நீங்கிவிட்ட நிலையிலே என்று அர்த்தம்.
ஸத்யபி – அபி என்றால் என்றாலும் கூட.
பகவானே ! நீயும் நானும் வேறாக இருக்கிற பேதம் போய்விட்டாலும்கூட….
தவாஹம் – தவ, அஹம்; அஹம் = நான்; தவ = உன்னுடையவன்.
நான் உடைமை. நாத – எங்களை ஆளுகிற பிரபுவே!
ந மாமகீந: த்வம் என்றால் நீ ; மாமகீந: = என்னுடையவன் அல்ல.
தாரங்கங் என்றால் அலை. (ஜல தரங்கம்)
க்வசந = ஒருகாலும் , தப்பித் தவறியும் கூட.
பொழிப்புரை
ஓ! ஸ்வாமி! உனக்கும் எனக்கும் இடையிலான வேறுபாடு மறைந்தாலும், நான் உன்னுடையவனாகி விடுகிறேன். ஆனால் நீ என்னுடையவனாகி விடுவதில்லை. உண்மையில், அலைகளுக்கும் கடலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றாலும் அலை கடலுக்குச் சொந்தமானது. ஆனால் கடல் ஒருபோதும் அலைக்குச் சொந்தமானது அல்ல.
4
உத்த்ருத - நக நகபிதநுஜ தநுஜகுலாமித்ர மித்ர - சசி – த்ருஷ்டே | த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவ - திரஸ்கார: ||
பதவுரை
நகபிதநுஜ = நகபித் அநுஜ என்பதாகும்.
பவதிரஸ்கார: என்றால் பவ – திரஸ்கார: என்று பிரியும்.
நகம் என்றால் மலை. கம் என்றால் நடப்பது, அசைவது, சலிப்பது.
அசையாமல் இருப்பதால் அசலம், அகம், நகம் என்றெல்லாம் பெயர்.
உத் – த்ருத – நக என்றால் மலையைத் தூக்கியவன். கிரிதர கோபாலன்.
பகவான் இரண்டு சந்தர்ப்பங்களில் மலையைத் தூக்கியுள்ளான். 1. மந்தார மலையை ஆமையாக. 2. கோவர்த்தன கிரியைத் தூக்கியவன்.
நகபிதநுஜ என்றால் நகபித் , அநுஜ என்ற இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து நகபிதநுஜ என்றாகிறது.
நகபித் என்றால் மலையைப் பிளந்தவன்.
ஆரம்பத்தில் மலைகளுக்கு இருந்த இறக்கைகளை இந்திரன் வஜ்ஜிராயுதத்தால் வெட்டினான்.
பூர்வஜன் என்றால் மூத்தவன் – அண்ணன். அநுஜன் என்றால் தம்பி.
தேவர்கள் அனைவரும் கச்யப மகரிஷிக்கும் அதிதிக்கும் பிறந்தவர்கள். வாமன அவதாரத்தின் போது பகவான் அதிதி – கச்யப தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். எனவே இந்திரனுக்கு தம்பி. உபேந்திரன் என்றும் பெயர் உண்டு.
இந்திரனின் கர்வத்தை அடக்க கோவர்த்தன கிரியைத் தூக்கி உத் – த்ருத நக – ராக ஆனார்.
வாமனாவதாரத்தில் இந்திரனின் தம்பியாக – நகபிதநுஜ – னாக இருந்திருக்கிறார்.
தநுஜ குலாமித்ர: தநுஜர் என்றால் அசூரர்கள். தநு என்பவளின் பிள்ளைகள் அதனால் தநுஜர்கள்.
கச்யபரின் மனைவி தநு. கச்யபர் தேவர்களுக்கும் அசூரர்களுக்கும் பிதா. மாதாக்கள் வேறு.
அதிதியின் பிள்ளைகள் தேவர்களை ஆதித்யர் என்கிறார்கள்.
திதி என்ற கச்யபரின் மனைவிக்கு பிறந்த பிள்ளைகள் தைத்யர்கள். இவர்களும் அசூரர்கள்.
தநுவின் பிள்ளைகள் தநுஜர் அல்லது தானவர் என்பார்கள்.
தநுஜ குலாமித்ர என்றால் தநுஜ குலமான அசூரர்களுக்கு பகைவர் (அமித்ர) என்று அர்த்தம்.
மித்ர சசி த்ருஷ்டே என்றால்
மித்ர = நண்பர். சூரியன்.
சசி – சந்திரன் – சந்திரனில் கறுப்பாக முயல் மாதிரி தெரியும். வடமொழியில் முயலுக்கு ‘சசம் ‘ என்பார்கள். சந்திரனுக்கு சசாங்கன் என்று பெயர். சசி என்றும் பெயர்.
சூரிய, சந்திரர்களை கண்களாகக் கொண்டவர்.
த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந – பவதி கிம் பவதிரஸ்கார:
த்ருஷ்டே பவதி – பவதி என்றால் தங்களிடம். த்ருஷ்டே பவதி என்றால் தங்களிடத்தில் (எங்கள்) த்ருஷ்டி ஏற்பட்டால், அதாவது எங்களுக்கு உன் தரிசனம் கிடைத்தால் என்று அர்த்தம்.
ப்ரபவதி பவதி த்ருஷ்டே என்றால் பிரபுவான உன்னிடம் (எங்கள்) பார்வை உண்டானால் – உன் தரிசனம் கிடைத்தால்…..
ந பவதி கிம் பவ திரஸ்கார: = பவ + திரஸ்கார. பவம் என்றால் சம்சாரம். திரஸ்கார என்றால் விலக்கம் , தள்ளி வைத்தல், மறுப்பு.
ந பவதி கிம் என்றால் உண்டாகிறதில்லையா?
அந்தாதி பாணியில் இந்த சுலோகம் உள்ளது. இதை வடமொழியில் முக்த பத க்ரஸ்தம் என்பார்கள்.
முக்த = விட்ட ; க்ரஸ்த = பிடித்துக் கொண்ட
பொழிப்புரை
கோவர்த்தன மலையைத் தூக்கியவரே! இந்திரனின் இளையவரே! அசுரக் கூட்டத்தை அழித்தவரே! சூரிய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே! உங்களுடைய கருணை கடைக்கண் பார்வை ஒருவனுக்கு கிடைக்குமானால் எவருக்குத்தான் உலகியலின் மீது இழிவு ஏற்படாது?
5
மத்ஸ்யாதிபி - ரவ தாரை - ரவதாரவதா - வதா ஸதா வஸூதாம் | பரமேச்வர பரிபால்யோ பவதா பவ - தாப - பீதோஹம் ||
பதவுரை
இங்கு பவதா இரண்டு முறை வந்துள்ளது. பவதா = தங்களால் என்று அர்த்தம்.
பவ தாப பீதோஹம் – பீத + அஹம் என்று பிரியும். சம்சார தாபத்தினால் பீதி அடைந்துள்ள நான் என்று பொருள்.
மத்ஸ்யாதி பிரதுதாரை என்பது மத்ஸ்யாதிபி + அவதாரை என்று பிரியும்.
மத்ஸ்யம் (மீன்) முதலான அவதாரங்களால் என்று அர்த்தம்.
தார என்றால் உச்சி. அவ – தாரம் என்றால் reverse order. உச்சியிலிருந்து கீழே வருவது. அவதாரவதா = இறங்கி வந்தவன் ஆனதால்.
அவதா என்பதில் அவ என்பது ரக்ஷிப்பதைக் குறிக்கும். ஸதா = எப்போதும்.
லோகத்தை (வஸூதாம்) அவனம் = ரக்ஷனை செய்து கொண்டிருப்பது.
லோகத்தை மத்ஸ்யம் முதலான அவதாரங்களால் எப்போதும் ரக்ஷிக்கிற பிரபோ சம்சார தாபத்தால் பயந்து கிடக்கிற நானும் உன்னால் ரக்ஷிக்கப்பட வேண்டியவன் என்பது பொருள்.
பொழிப்புரை
ஓ பரம புருஷரே ! பிறப்பினால் ஏற்படும் துன்பத்தால் நான் பயப்படுகிறேன். மத்ஸ்ய – கூர்மாதி அவதாரங்களாக இறங்கி வந்து உலகை எப்போதும் காக்கும் தங்களால் காப்பாற்றப்படுவதற்கு நான் தகுதியானவன்.
6
தாமோதர குணமந்திர ஸூந்தர - வதநாரவிந்த கோவிந்த | பவ - ஜலதி - மதந மந்தர பரமம் - தர - மபநய த்வம் மே ||
பதவுரை
பன்னிரண்டு நாமங்கள் மகாவிஷ்ணுவுக்கு முக்கியம். கேசவ – நாராயண – மாதவ – கோவிந்த – விஷ்ணு – மதுசூதன – திரிவிக்கிரம – வாமன – ஸ்ரீதர – ரிஷிகேச – பத்மநாப – தாமோதர என்பவையே அவை.
குண மந்திர = குணங்கள் யாவும் குடிகொண்டவனே.
மந்திரம் என்றால் குடியிருக்கும் இடம். அதுவே மந்தீர் – கோயில்.
தாமம் என்றால் கயிறு. குணம் என்றாலும் கயிறு.
ஸூந்தர = அழகான , வதந = முகம், அரவிந்த = தாமரை.
தாமரை போன்ற அழகான முகம் படைத்தவன்.
பவம் என்றால் சம்சாரம் , ஜலதி என்றால் கடல்.
பவ ஜலதி என்றால் சம்சார சமுத்திரம்.
மதன என்றால் கடைவது.
பவ ஜலதி மதன மந்தர என்றால் சம்சார சாகரத்தை கடைகிற மத்தர மலையாக இருக்கிறவனே!
தரம் என்றால் பயம் என்று அர்த்தம்.
மே = எனக்கு.
பரமம் = மிகுந்த.
த்வம் = நீ
அபநய = போக்குவாயாக.
பொழிப்புரை
தாமோதரனே! அனைத்து மங்களகரமான குணங்களின் இருப்பிடமே! அழகிய தாமரையொத்த முகம் கொண்டவனே! கோவிந்த! சம்சாரக் கடலைக் கடையும் மந்தார மலையானவனே! தயவு செய்து எனது பெரும் பயத்தை நீக்குங்கள்.
7
பலச்ருதி
நாராயண, கருணாமய, சரணம் கரவாணி தாவகௌ சரணௌ | இதி ஷட்பதீ மதீயே வதந ஸரோஜே ஸதா வஸது ||
பதவுரை
நாராயண – நாராயணனே!
கருணாமய – கருணைமயமானவனே!
தாவகௌ சரணௌ = உன்னுடைய இரண்டு பாதங்களையும்.
சரணம் கரவாணி = சரணமாக, அடைக்கலம் கொள்கிறேன்.
இதீ = இப்படிப்பட்ட
ஷட்பதீ = ஷட்பதீயானது
மதீயே = என்னுடைய
வதந ஸரோஜே = வாய் என்கின்ற தாமரையில்
ஸதா = எப்போதும்
வஸது = வசிக்கட்டும்.
பொழிப்புரை
ஹே நாராயணா ! கருணை வடிவானவனே ! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்களின் (தேனீ) சேர்க்கை என் வாயில் தாமரை மலர் போல எப்போதும் வாசம் வீசுவதாக மணக்கட்டும்.
***
கம்ப ராமாயணத்தில் ஹிரண்யன் வதைபடலத்தில், இந்தத் தூணில் உன்னுடைய நாராயணன் இருக்கிறானா, என்று அஸூரன் கேட்பான்.
அதற்கு பக்த ராஜாவான பிரகலாதன்
"சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந் நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத்தன்மை காணுதி விரைவின்" என்றான்;
சொல்லில் – இறை நாமத்தில் நம்பெருமாள் வசிக்கிறார்.
இந்த சுலோகங்களைச் சொல்லும் போது நம் வாய் மணக்கும். இதயகமலம் மலரும். சம்சாரக் கடலை (துன்பங்களை) சுலபமாக கடக்கலாம் என்று பகவத்பாதர் மட்டுமல்ல பக்த ராஜாவான பிரகலாதனும் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
$$$