-ஆசிரியர் குழு
மகாகவி பாரதியை அவதூறு செய்யும் முட்டாள்களுக்கு ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை இங்கே…

சென்னை
19.12.2025
அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மகாகவி பாரதியாரை தமிழகத்தில் சிறுமதியாளர்கள் சிலர் இரு தினங்களாக அவமதித்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
எனவே, படைப்பாளர்கள் சங்கமம் சார்பில் ஓர் கண்டன அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கீழே தனியாக உள்ளது. அந்த அறிக்கையை நாம் ஒவ்வொருவரும் நமது சமூக ஊடகப் பக்கங்களில் தங்கள் பெயரில் பதிவிடுமாறு கோருகிறோம்.
மகாகவி பாரதி நமது பெருமிதம். அவரைச் சிறுமைப்படுத்துவதை நாம் வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த தேசியப் பணியில் நமது நண்பர்களையும் இணைப்போம்.
வாழிய செந்தமிழ்!
வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!
என
‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில்,
‘திராவிட மாயை’ சுப்பு
பத்மன்
நம்பி நாராயணன்
வ.மு.முரளி
ஜவஹர் வெங்கடசாமி
பாஸ்கர் சுப்பிரமணியம்.
***
மகாகவி பாரதியை இழிவுபடுத்தும் திராவிடக் கயவர்கள்
படைப்பாளர்கள் சங்கமம் கண்டனம்
இரு தினங்களுக்கு (டிச. 17) முன் திராவிட இயக்கச் சார்பு நபர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில், தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதியை இழிவுபடுத்திப் பேசி இருக்கிறார்கள். இதனை படைப்பாளர்கள் சங்கமத்தில் அங்கம் வகிக்கும் எழுத்தாளர்கள் அனைவரும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கடந்த டிச. 11இல் சென்னையில் ‘விஜில்’ அமைப்பு நடத்திய பாரதி பிறந்த தினவிழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசிய பேச்சு திராவிட இயக்கத்தினரை நிலைகுலையச் செய்துவிட்டது என்பது புரிகிறது. மகாகவி பாரதியையும் ஈ.வெ.ரா, அண்ணாதுரை உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களையும் ஒப்பிட்டு திரு. சீமான் பேசிய பேச்சு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதனால் விரக்தியுற்ற திராவிட இயக்க ஆதரவாளர்கள், சீமானையும், அவரால் பாராட்டப்பட்ட ஒரே காரணத்தால் மகாகவி பாரதியையும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன் உச்சமாக, சென்னையில் நடந்த திராவிட இயக்கத்தினரின் போராட்ட நிகழ்வு ஒன்றில் ‘யூ டூ புரூட்டஸ்’ என்ற சமூகதள நிர்வாகியால் மகாகவி பாரதி கீழ்த்தரமாக வசை பாடப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி; தமிழ் மொழியையும் பாரத நாட்டையும் இரு கண்களாக நேசித்த அந்த மாபெரும் மனிதரை தகுதியற்ற தற்குறிகள் அவமதிப்பதை மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். நியாயமான அரசாக இருந்திருந்தால், இந்நேரம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால், திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது.
மகாகவி பாரதி பெயரில் விருதுகளை வழங்கும் தமிழக அரசு, பாரதியார் பெயரில் பல்கலைக்கழகம் நடத்தும் தமிழக அரசு, பாரதியாரை சில அறிவிலிகள் கேவலப்படுத்துவதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
பெண் விடுதலை, சமூக சீர்திருத்தம், தாய்மொழிக் கல்வி, தீண்டாமை ஒழிப்பு, பகுத்தறிவு எண்ணம், ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்பட, திமுகவினர் ஆரவாரமாக முழங்கும் பல கருத்துக்களை, திராவிட இயக்கம் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்னரே தமிழகத்தில் உரக்க ஒலித்தவர் மகாகவி பாரதி. அவரை ஆங்கிலேயனுக்கு அஞ்சி நடுங்கியதாக முட்டாள் ஒருவன் ஏளனம் செய்கிறான் என்றால், அவனை அந்த மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை கரவொலி எழுப்பி வரவேற்கும் கூட்டம் தமிழகத்தில் இருப்பது வெட்கக்கேடு அல்லவா?
தமிழ் இலக்கியத்தில் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக வந்துதித்த மாபெரும் பாவலன்; தமிழ் இதழியல் உலகிற்கு புதுவழி காட்டிய பத்திரிகையாளன்; நாட்டு விடுதலைக்காக தனது வாழ்வையே ஆகுதியாக்கிய அரசியல் தலைவன் மகாகவி பாரதி. அவரை அவமதிப்பது தாய்மொழியாம் தமிழை அவமதிப்பதாகும்.
தமிழக அரசு, மகாகவி பாரதியை அவமதித்த அந்தக் கயவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படைப்பாளர்கள் சங்கமம் வேண்டுகோள் விடுக்கிறது. இதுபோன்ற தரமற்ற நிகழ்வுகள் நடவாமல் தவிர்ப்பது, தமிழகத்தின் மாண்பைக் காக்கும்.
“தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா” என்று பாடிய மகாகவி பாரதிக்கு பெருமை சேர்க்காவிட்டாலும், திராவிட இயக்கக் கருத்தியலாளர்கள் அவரை சிறுமைப்படுத்துவதையேனும் தமிழக அரசு தடுக்க வேண்டும். இதுவே பாரதி அன்பர்கள் அனைவரின் உள்ளக் கிடக்கை.
தாய்மொழி நேசத்தோடு தேசபக்தி தீக்கனலையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும், தாய்த் திருநாட்டின் மேன்மையையும் அன்றே போதித்த மகாகவி பாரதியைப் போற்றும் மத்திய அரசு, அந்த யுகபுருஷனைத் தூற்றும் தீயசக்திகளை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
$$$