ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கம் அதிகாரம் அல்ல, சேவை

-கைலாஷ் விஜய் வர்கியா

அண்மையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா  ‘ஆர்.எஸ்.எஸ்.ஸை நியாயப்படுத்த முடியாது’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை  ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் எழுதி இருந்தார். அதில் ஆர்.எஸ்.எஸ். மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அவை அவரது அறியாமையை வெளிப்படுத்துகின்றன அல்லது உள்நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பற்றிய தவறான கருத்தை முன்வைப்பதாக இருந்தன. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன், அரசியல் கண்ணாடி மூலம் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பார்த்தால் தேசத்திற்கு அது ஆற்றியுள்ள பங்களிப்பைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்கவில்லை என்று டி.ராஜா கூறுகிறார். விரிவான பார்வையில் பார்த்தால், விடுதலைப் போராட்டம் என்பதை அரசியல் களத்தில் நடந்த எதிர்ப்பு என்பதாக மட்டும் சுருக்கி விட முடியாது என்று வரலாறு கூறுகிறது. அது நான்கு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று, புரட்சிகரச் செயல்பாடுகள். இரண்டு, அரசியல் விழிப்புணர்வு. மூன்று , சமூக சீர்திருத்தம். நான்கு, கலாச்சார மறுமலர்ச்சி. ஆர்.எஸ்.எஸ்.ஸை ஆரம்பித்த டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் இந்த நான்கு தளங்களிலும் தீவிரமாகச் செயலாற்றி உள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவது மட்டுமே உண்மையான சுதந்திரம் என்பதை அவர் ஏற்கவில்லை. பல நூற்றாண்டுகளாக ஆதிக்கத்திற்கு உட்பட்டதாலும், ஆங்கிலேயக் கல்வி முறையாலும் உளவியல் ரீதியாக அடிமைப் பட்டிருந்த இந்தியர்களின் மனதை விடுவிப்பதே உண்மையான சுதந்திரம் என்று அவர் கருதினார்.

‘நம்முடைய சொந்த கலாச்சாரம், பாரம்பரியம், பண்புகள் ஆகியவற்றை மீட்டெடுக்காமல், அவற்றின் மீது பெருமிதம் கொள்ளாமல் அடையப்படும் அரசியல் சுதந்திரம் முழுமையற்றது’ என்று அவர் கருதினார். இந்த நோக்கத்துடன் தான் அவர் 1925இல் ஆர்.எஸ்.எஸ்.ஸை ஓர் அரசியல் அமைப்பாக இல்லாமல், ஒரு பண்பாட்டு இயக்கமாகத் தொடங்கினார்.

ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பிறகு மகாத்மா காந்திஜியும் கூட, வெறும் அரசியல் சுதந்திரம் மட்டும் போதுமானதல்ல என்பதையும் தார்மீக, கலாச்சார மறுமலர்ச்சி அதற்கு இணையாக தேவை என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளார். அப்போதிருந்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இங்கிலாந்தில் கல்வி கற்று மேற்கத்திய தாக்கத்திற்கு ஆட்பட்டிருந்தார்கள். அதே வேளையில் 1925 இல் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யாவின் கருத்தியலைப் பின்பற்றியது. இந்த இரண்டு துருவங்களுக்கிடையே, இந்தியாவின் ஆன்மாவை –  அதன் சநாதனப் பண்பாட்டை, மரபை, சமூக ஒற்றுமையை – மீட்டெடுக்கும் பாதையை டாக்டர் ஹெட்கேவார் தேர்ந்தெடுத்தார்.

ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் தன்னை அரசியல் கட்சியாகக் கருதியதில்லை. 1930 இல் காங்கிரஸ் அறிவித்த காட்டு சத்யாகிரகத்தில் ஹெட்கேவார் பங்கேற்ற போது சர்சங்கசாலக் (தலைவர்) பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகிய பிறகே, அதில் பங்கேற்றார். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு ஓராண்டு தீவிர சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது சுதந்திரப் போராட்டத்தில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. அதேவேளையில் ஆர்.எஸ்.எஸ். போட்டி அரசியலில் ஈடுபடாமல் சமூக மறுகட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அவரது நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.

கை.வி.வர்கியா

டி.ராஜா , அரசியல் கண்ணாடி மூலமாக மட்டுமே வரலாற்றைப் பார்ப்பதாக இருந்தால் சுவாமி விவேகானந்தர், மகரிஷி தயானந்தர், ஸ்ரீ அரவிந்தர் போன்றோர்களின் பங்களிப்பை மறுக்க வேண்டியிருக்கும். அவர்கள்தான் இந்த நாட்டில் பண்பாட்டு , ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் . அவர்கள் வழியில் ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் பண்பாடு மற்றும் அறம் சார்ந்த மறுமலர்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறது.

இந்த நாட்டில் உள்ள வேற்றுமைகளை ஆர்.எஸ்.எஸ். பலவீனமாகக் கருதுகிறது என்றும், ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்துகிறது என்றும், டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார் . இது முற்றிலும் அடிப்படை அற்றது. டாக்டர் ஹெட்கேவார் தொடங்கி இங்குள்ளவர் வரை எல்லா சர்சங்கசாலக்குகளும் (அகில இந்திய தலைவர்) படிநிலை சமுதாய முறைமையையும் தீண்டாமையையும் வெளிப்படையாக எதிர்த்துள்ளனர்.

‘ஹிந்து எவரும் தாழ்ந்தவர் இல்லை’ என்று குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர்  (ஆர்.எஸ்.எஸ்.ஸின் இரண்டாம் தலைவர்) பிரசாரம் செய்தார். எந்த இந்துவும் தாழ்ந்தவர் இல்லை; தீண்டத் தகாதவர் இல்லை. அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர் என்பதே அவரது நிலைப்பாடு. ‘தீண்டாமை பாவம் இல்லை என்றால் உலகில் வேறு எதுவும் பாவமில்லை’ என்று பாளாசாஹேப் தேவரஸ் (ஆர்.எஸ்.எஸ்.ஸின் மூன்றாம் தலைவர்) அறிவித்தார்.  ‘ஒரே கிணறு, ஒரே கோயில், ஒரே மயானம் அனைவருக்கும்’ என்று சமூக சமத்துவத்திற்கு புதிய அர்த்தத்தை கொடுத்துள்ளார் இப்போதுள்ள சர்சங்கசாலக் மோகன் பாகவத்.

ஆர்.எஸ்.எஸ்.ஸால் ஊக்கம் பெற்ற சேவா பாரதி, வித்யா பாரதி , ஏகல் வித்யாலயா, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற அமைப்புகள் சமுதாயத்தில் அடிநிலையில் இருக்கும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், தற்சார்பு மற்றும் பண்புப் பதிவுகளை ஏற்படுத்தி அவர்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தி உள்ளன. பல தசாப்தங்களாக அரசுத் திட்டங்களே சென்று சேராத உள்ஒதுங்கிய பகுதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சென்று சுயநலமற்று சேவை செய்து வருகின்றனர்.

பழங்குடியினரிடையே ஆர்.எஸ்.எஸ்.  இயக்கத்தின் சேவைப் பணிகள் குறிப்பிடத்தக்கவை. பழங்குடியினரது மொழி, மரபுகள், கலாச்சாரம் ஆகியவற்றை மதிப்பதோடு அது பற்றிய பெருமித உணர்வையும் நம்பிக்கையையும் அம்மக்களிடையே அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இன்று தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் அந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். கருத்தியலைப் பின்பற்றி அரசு தேசத்தின் சொத்துக்களையும் வளங்களையும் பெறு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருவதாக ராஜா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் தரவுகள் கூறும் உண்மையோ நேர் எதிராக இருக்கிறது. 2013-14 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயம், விவசாயிகள் நல திட்டங்களுக்காக ரூ. 27, 633 கோடி ஒதுக்கப்பட்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில் 2024-25 ஆம் ஆண்டு இது ஐந்து மடங்கு அதிகரித்து ரூ. 1,37,664 கோடியாக உயர்ந்துள்ளது. பிரதமர்- கிஷான் சம்மான் நிதி மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி உதவி போன்ற மோடி அரசின் திட்டங்களால் விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது.

எடுத்துக்காட்டாக , மத்திய பிரதேச மாநிலத்தில் 2003 இல் ஏழு லட்சம் ஹெக்டேராக இருந்த பாசன நிலம் இன்று 45 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. அதனால் அந்த மாநிலம் ஏழு முறை கிருஷி கர்மான் விருதைப் பெற்றுள்ளது. அதேபோல் சிறு, குறு தொழில் துறை கடந்த பத்தாண்டுகளில் 15 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் முத்ரா யோஜனா திட்டங்களால் லட்சக்கணக்கான இளைஞர்கள் சுய தொழில் முனைவோராக, தற்சார்பு கொண்டவர்களாக மாறி உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின்  ‘ஐந்தமுதம்’ என்ற நூற்றாண்டு செயல்திட்டத்தில் ஒன்று தன்னெறி, அதாவது சுதேசி வாழ்வியல்.  ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆத்ம நிர்பார் பாரத் – தற்சார்புள்ள பாரதம் – என்பது பெறு நிறுவனங்களைச் சார்ந்திருப்பது அல்ல. மாறாக உள்ளூர் தொழில், உள்ளூர் உற்பத்தி முறை, குடிமக்களின் பங்கேற்பு/ ஈடுபாடு ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் வெறுக்கிறது என்று டி.ராஜா கூறியிருப்பது, அவரது அறியாமையையே வெளிப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். ‘ஹிந்து’  என்பதை மதம் அல்லது குறிப்பிட்ட பிரிவு என்று வரையறுக்கவில்லை. மாறாக அதுவொரு வாழ்வியல் முறை என்கிறது. 1995இல் ரமேஷ் யஸ்வந்த் பிரபு கொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றமும்  “இந்துத்துவா  என்பது மதமல்ல , வாழ்வியல் முறை” என்பதை உறுதி செய்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பொருத்த வரையில் இந்திய பண்பாடு, பாரம்பரியம், தேசிய அடையாளம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இந்தியரும் – அவர் எந்த மத நம்பிக்கையைப் பின்பற்றுபவராக இருந்தாலும் கூட – ஹிந்துவே. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் வெளிநாட்டினர் இல்லை, இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களின் முன்னோர்கள் வேறொரு நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களாக மாறி இருக்கலாம். அதனால் அவர்களது தேச விஸ்வாசமோ பண்புகளோ மாற வேண்டியதில்லை என்கிறது ஆர்.எஸ்.எஸ். அப்படிப்பட்டவர்களை அது வரவேற்கிறது. அவர்களும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாடுகளில் , எந்த விதமான வேறுபாடும் இல்லாததைப் பார்த்து , உடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரத்தை அடையும் போராட்டம் அல்ல ஆர்.எஸ்.எஸ்.ஸின் வரலாறு. மாறாக சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. பிரிவினை அதன் நோக்கம் அல்ல,  மாறாக நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைப்பது.

சமுதாய நல்லிணக்கம், பண்பாட்டுப் பெருமித்துடன் கூடிய தற்சார்பு பொருளாதாரத்தையும் வாழ்வியலையும் நோக்கி நடைபோடும் இன்றைய இந்தியாவிற்கு ஆர்.எஸ்.எஸ்.ஸின் பங்களிப்பு மேலும் அதிகமாகத் தேவைப்படுகிறது. பாரத தேசம், பாரதியப் பண்பாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமை உள்ளது என்ற உணர்வை மக்களிடையே ஆர்.எஸ்.எஸ். ஆரவாரம் இல்லாமல் அமைதியாக ஏற்படுத்தி வருகிறது.

விமர்சனங்கள் ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த விஷயம். ஆனால் அவை உண்மையையும் சரியான புரிதலையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பற்றிய டி.ராஜாவின் அலசல் உளச்சாய்வு கொண்டதாக உள்ளது.  சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக பண்பாட்டு எழுச்சி, சுதேசி என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தியலால் உத்வேகம் பெற்றதொரு அரசு கடந்த பதினோரு ஆண்டுகளாக நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்துவது இந்தியாவிலுள்ள கம்யூனிச கட்சிகள் எதிர்பாராத ஒன்று.

ஒரு காலத்தில் , உலகின் பாதியை ஆதிக்கம் செய்து வந்தது கம்யூனிச தத்துவம். ஆனால் இன்று எத்தனை நாடுகள் அதை நம்புகின்றன ? அதற்கு மாறாக நூறு ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று ஏறத்தாழ , உலகிலுள்ள எல்லா நாடுகளிலும், இந்துக்கள் கணிசமாக வாழும் நாடுகளில், ஆர்.எஸ்.எஸ். உள்ளது. அண்மையில் நாகபுரியில் நடந்த சங்க சிக்ஷவர்காவிற்கு (ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் ) வெளிநாட்டில் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த நாட்டிலும் இது போன்றதொரு இயக்கத்தைத் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளனர். சங்கத்தின் கருத்தியல் குறுகியதாக இருந்தால் உலகம் முழுவதும் அது ஏற்கப்பட்டிருக்குமா?

எனவே, சிந்தனையாளர்களும் அறிஞர்களும் ஆர்.எஸ்.எஸ்.ஸை கருத்தியல் காழ்ப்புடன் பார்க்காமல் இந்திய கலாச்சார, நாகரீக பாரம்பரியத்தின் கண்கொண்டு பார்க்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். ஆர்.எஸ்.எஸ்.ஸின் குறிக்கோள் அதிகாரம் அல்ல, சேவை. அதுவே இந்தியாவின் எழுச்சிக்கு பின்புலமாக உள்ள மிக சக்தி வாய்ந்த வலிமையாகும்.

  • நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (27.11.2025) 
  • கட்டுரையாளர், மத்திய பிரதேச மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்.
  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்

$$$

Leave a comment