- பவன் கல்யாண் அறிக்கை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் இந்து விரோதப் போக்கை ஆந்திரப் பிரதேச மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திருப்பரங்குன்றம். தமிழ் மாதமான கார்த்திகையில் மலையின் மேல் தீபம் ஏற்றும் வழக்கம் ஹிந்துக்களின் பண்டைய நாகரிகம் ஆகும். இன்று பாரதத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றவும், தங்கள் சடங்குகளைச் செய்யவும் நீதிமன்றத்தின் தலையீட்டை நாட வேண்டியிருப்பது, வருத்தமாகவும் முரண்பாடாகவும் இருக்கிறது. ஒரு தீர்க்கமான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகும், பக்தர்கள் தங்கள் சொந்த சொத்தில் ஒரு எளிய அமைதியான சடங்கைச் செய்ய முடியாவிட்டால், சொந்த நாட்டில் உண்மையிலேய அரசியலமைப்பு நீதியை எங்கு பெறுவார்கள்?
சுருக்கமாகவும் எளிமையாகவும் சொன்னால், சென்னை உயர்நீதிமன்றம் தீபம் ஏற்றும் நமது உரிமையை உறுதிப்படுத்தியது. முதலில் ஒரு நீதிபதியாலும், பிறகு இரு நீதிபதிகள் அமர்வாலும் உறுதி செய்யப்பட்டது. சட்டப்பூர்வமாக போராட்டம் வெற்றி பெற்றது. இருப்பினும் நடைமுறையில் நம்மை சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டோம் என்ற கசப்பான உண்மையை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளட்டும்.
உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எந்த மத விழாவையும் ஒரு வாரம் தாமதமாக மாற்ற முடியுமா? ஒரு புனித நாள் கொண்டாட்டத்தை வேறு நேரத்துக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் மத நேரத்தின் புனிதத்தன்மை மற்றும் ஒவ்வொரு மத அட்டவணை ஆகியவை சமரசம் செய்ய முடியாதவை.
ஆனாலும் சநாதன தர்மத்தைப் பொருத்த வரை புனிமான கார்த்திகை தீபம் திருடப்பட்டு, மறைந்துவிட்டது. ஏன்? ஏனென்றால் ஹிந்துக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். சில நேரங்களில் அரசாங்கம், சில நேரங்களில் நிர்வாகம், சில நேரங்களில் அரசு சாரா நிறுவனங்கள், சீரற்ற அறிவுசார் குழுக்கள் மூலம் ஒவ்வொரு முறையும் ஏற்படும் இழப்பை ஏற்றுக்கொண்டு சமரசம் செய்துகொள்வது ஹிந்துக்கள் தான். நாம் உரிமையைப் பெற்றோம். ஆனால், சடங்கை இழந்தோம்.
பக்தர்கள் தங்கள் சொந்த கோயில்களையும் மத விவகாரங்களையும் தீவிரமாக நிர்வகிக்கும் ‘சநாதன தர்ம ரக்ஷா வாரியம்’ நமக்குத் தேவை. ஹிந்து மரபுகள் மற்றும் சடங்குகளை கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகிவிட்டது. மற்ற மத நிகழ்வுகளுக்கும் அவர்கள் அதையே செய்யத் துணிகிறார்களா?
அரசியல் சட்டப்பிரிவு 25 ஹிந்துக்களுக்கான அடிப்படை உரிமையாக இல்லாமல் விருப்ப உரிமையாக மாறுமா? ஒரு காவல் ஆணையர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஒருதலைப்பட்சமாக ஒரு குறிப்பிட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியுமா? சட்டப்பூர்வமான சொந்த நிலத்தில் தீபம் ஏற்றுவது தீங்கற்ற மதச்செயல் என்று உயர்நீதிமன்றம் உறுதி செய்தால், இந்த நடைமுறை வகுப்பு நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்று யார் முடிவு செய்கிறார்கள்? எந்த சட்ட வழிமுறையைப் பின்பற்றுகிறார்கள்? அறநிலையத் துறை எவ்வாறு மீண்டும் மீண்டும் ஹிந்து பக்தர்களின் நலன்களுக்கும், அவர்களின் கோயில் மரபுகளுக்கும் எதிராக செயல்படுகிறது?
மதப் பிரச்சினைகள் எழும்போது ஆபிரஹாமிய மதங்களைப் பின்பற்றுபவர்கள் காட்டும் கூட்டு மனப்பான்மை மற்றும் ஒற்றுமையை ஹிந்துக்கள் கடைபிடிக்க வேண்டும். அவர்கள் தங்கள் நம்பிக்கைக்காக தங்கள் இன , பிராந்திய மற்றும் மொழி வேறுபாடுகளை வென்று வருகிறார்கள்.
ஹிந்துக்கள் ஜாதி, பிராந்திய மற்றும் மொழியியல் தடைகளால் பிரிக்கப்பட்டிருக்கும் வரை ஹிந்து மதம் மற்றும் அதன் நடைமுறைகளுக்கு எதிரான கேலி, அவமானங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடரும்.
நமது நாட்டில் உள்ள ஹிந்துக்கள் ஒரு பொதுவான குறைந்தபட்ச திட்டத்தின் கீழ் ஹிந்து தர்மத்தின் கூட்டுமனப்பான்மையுடன் ஒன்றுபடவில்லை என்றால், இந்த மனப்பான்மை தொலைந்துவிடும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் காமாக்யா முதல் துவாரகா வரையிலும் உள்ள ஒவ்வொரு ஹிந்துவும் எதிர்கொள்ளும் அவமானத்தைப் பார்த்து விழித்தெழும் ஒரு நாளை நான் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
- நன்றி: தினமலர்.
$$$
One thought on “ஹிந்துக்கள் ஒன்றுபட்டால் மட்டுமே தீர்வு!”