பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரின் கடிதங்கள்: நூல் மதிப்புரை 

-திருநின்றவூர் ரவிகுமார்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் ஹெட்கேவாரின்  72 கடிதங்கள்  இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய சுமார் 1000 கடிதங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் தேர்ந்தெடுத்த கடிதங்களின் தொகுப்பானது 1964 இல் தமிழில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்  நூற்றாண்டுக் காலத்தில் மறுபதிப்பு கண்டுள்ளது.

ஒரே ஒரு வருடம் தான் மகாத்மா காந்திஜி காங்கிரஸின் தலைவராக இருந்தார். அவர் போராட்டம் அறிவிப்பார், நாடு முழுக்க எல்லோரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். சுப்பிரமணிய சிவாவும் தென்னாட்டுத் திலகர் என போற்றப்படும் வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களும் சிறைப்பட்டது மட்டுமன்றி  செக்கு இழுத்தனர். வெறும் கையால் தென்னை நாரை உறித்து அதில் கயிறு திரிந்தனர். காந்திஜி சிறையில் செக்கிழுக்கவில்லை; ராட்டை சுற்றினார். நேருஜி புத்தகம் எழுதினார்.

காந்திஜியும் நேருஜியும் சர்தார் படேலும் சிறைப்பட்டவுடன் காங்கிரஸ் முடங்கிவிடவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பை ஆரம்பித்த டாக்டர் ஹெட்கேவாரும் அவரது சகாக்களும் காங்கிரஸ் அறிவித்த போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். ஆனால் ஆர்எஸ்எஸ் முடங்கி விடாமல் தொடர்ந்து செயல்படும்படி பார்த்துக் கொண்டனர். இது அவர் எழுதிய கடிதத்தில் தெளிவாக வெளிப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிலாஸ்பூர்  பகுதித் தலைவராக இருந்த நூல்கர் என்ற வழக்கறிஞருக்கு டாக்டர் ஹெட்கேவார் எழுதிய  18 செப்டம்பர் 1930 தேதியிட்ட கடிதத்தில் இரண்டு மூன்று விஷயங்கள் தெளிவாகத் தெரிய வருகின்றன. ஒன்று,  ‘இந்தப் போராட்டத்தால் விடுதலை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுமே அன்றி, விடுதலை கிடைக்காது. அதனால் சங்கம் காங்கிரஸ் மற்றும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானது என்று பொருள் கற்பிக்க வேண்டாம் என்றும், சங்கம் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கிறது, எதிர்க்கவில்லை’ என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

இரண்டாவதாக,  “சங்கத்தின் மீது பயந்தாங்கொள்ளி குற்றம் சுமத்துவது வீண் செயல். ஒவ்வொரு ஸ்வயம்சேவகனும் தன்மானம் உள்ளவன். எத்தகைய அவமானத்தையும் அவனால் சகிக்க முடியாது. யாரெல்லாம் போராட்டத்தில் பங்கேற்க விரும்புகிறார்களோ அவர்களை சந்தோஷமாக பங்கேற்க அனுமதியுங்கள் . அதேவேளையில் போராட்டத்தில் முற்றிலும் கலந்து கரைந்து விடுவது நல்லதல்ல. போராட்டத்துக்கு நாம் பூரண உதவியை அளிக்க வேண்டும். போராட்டத்துக்கு ஏற்படுகின்ற முட்டுக்கட்டைகளை அகற்ற உதவ வேண்டும்” என்று எழுதியுள்ளார்.

மூன்றாவதாக, விடுதலைக்காக ஆரம்பித்த அமைப்பு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும், ஆனால் ஈடுபடாது என்ற நழுவலான நிலைப்பாடு ஏன் என்று கேள்வி எழுவது இயற்கையே. விடுதலைக்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றாலும், அதை அடையும் வழியை பற்றி ஆர் எஸ் எஸ் க்கு வேறு ஒரு பார்வை இருந்தது. மொழியாலும் ஜாதியாலும் மாநில உணர்வினாலும் பிரிந்து கிடக்கும் இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவது விடுதலைக்கான வழியென டாக்டர் ஹெட்கேவார் கருதினார். அந்த ஒற்றுமைப் பணிக்காகத்தான், அதன் மூலமாகத்தான் விடுதலை அடைய  வேண்டுமென்று  அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஆரம்பித்தார்.

இந்த ஒற்றுமைப் பணியைப் பற்றித் தான் டாக்டர் அம்பேத்கரும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அவரது புகழ்பெற்ற மூன்று உரைகள் ஒன்றில் இதைக் குறிப்பிடுகிறார். 

“நாடு விடுதலை அடைந்து விட்டது. ஆனால் இந்த விடுதலை நீடிக்குமா என்ற சந்தேகம் என் மனதில் உள்ளது. நாடு அடிமைப்பட்டதற்கு   நம்மிடம் ஒற்றுமை இல்லாததுதான் காரணம். இப்பொழுது நாம் ஒற்றுமை அடைந்து விட்டோமா? எனவேதான் நம்முடைய சுதந்திரம் மீண்டும் பறிபோகாது என்று நிச்சயமாகக் கூற முடியவில்லை. நாம் விடுதலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஜாதி, மொழி, மாநில உணர்வுகளைக் கடந்து ஒன்றுபட்டாக வேண்டும்”

-என்றார் அம்பேத்கர். இதே ஒற்றுமைப் பணியைத் தான் டாக்டர் ஹெட்கேவாரும்  சொல்லி உள்ளார்; செயல்படுத்தி உள்ளார்.

ஹிந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்துவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அதற்காக பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருக்கும் என்ற கருத்தில் ஒற்றுமைக்காகப் போராட வேண்டுமென டாக்டர் அம்பேத்கார் சொன்னதாகத் தெரிகிறது. ஆனால் இன்றுள்ள  அம்பேத்காரிஸ்டுகள்  ‘போராட ஒன்றுபடு’ என்று சமூகப் பிரிவினை நோக்கோடு விளக்கம் கொடுப்பது காலத்தின் கொடுமைதான்.

***

சொன்னதை செயலில் காட்டும் விதமாக சங்கப் பணிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர் ஹெட்கேவார் தனது தலைவர் பதவியைத் துறந்தார் .  வேறொருவரை அந்தப் பொறுப்பில் அமர்த்திவிட்டு, போராட்டத்தில் (காட்டு சத்தியாகிரஹம்) ஈடுபட்டு சிறை சென்றார். ஓராண்டுக் காலம் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார். அதே வழக்கறிஞர் நூல்கருக்கு   26 ஏப்ரல் 1931 இல் எழுதிய கடிதத்தில்,  ‘சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு உங்கள் கடிதம் கண்டேன்’ என்று தொடங்கி எழுதுகிறார்.

21 ஜனவரி 1930 ல் அவர் அனுப்பிய சுற்றறிக்கை இது… 

அனேக நமஸ்காரம்,

இம்முறை கூடிய காங்கிரஸ்  ‘சுதந்திரம்’ தமது குறிக்கோளாகும்  என முடிவு செய்து, 26 - 1 - 1930 ஞாயிற்றுக்கிழமை நாளில் நாடு முழுவதும் சுதந்திர தினம் அனுஷ்டிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு விளம்பரப்படுத்தி இருக்கிறது.

அகில பாரத தேசீய சபையானது சுதந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு செல்லத் தொடங்குகின்ற நிலைக்கு வந்துள்ளது கண்டு நமக்கு பெருமகிழ்வு ஏற்படுவது இயல்பேயாகும் .  இந்தக் குறிக்கோளை கண்முன் கொண்டு வேலை செய்து வரும் எந்த இயக்கத்திற்கும் உதவுவது நமது கடமையேயாகும்.

ஆகவே ராஷ்ட்ரிரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் எல்லா கிளைகளும் 26-1-30 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 6 மணிக்கு தத்தம் சங்க ஸ்தானத்தில் எல்லா ஸ்வயம்சேவகர்களையும் கூட்டிச் சேர்த்து ராஷ்ட்ரீய த்வஜத்தை, அதாவது பகவாக் கொடியை வணங்க வேண்டும். சொற்பொழிவின் மூலம் எல்லோருக்கும் சுதந்திரம் என்றால் என்ன என்றும், அந்தக் குறிக்கோளை ஒவ்வொருவரும் தம்முன் எவ்வாறு கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கிக் கூற வேண்டும். அத்துடன் காங்கிரஸ் இயக்கமானது  ‘சுதந்திரம்’ என்ற லட்சியத்தை முன்வைத்து ஆதரித்ததற்காக அதற்கு பாராட்டுக் கூறி கூட்டத்தை முடிக்க வேண்டும். கூட்டத்தின் அறிக்கையை நமக்கு அனுப்பவும். பதில் எழுதுக. அன்பு வளர்கவென வேண்டுகிறேன்.

இருந்தாலும் , ஆர்எஸ்எஸ் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று அவதூறு பரப்பப்படுகிறது.

***

ஆர்எஸ்எஸ் மீது இன்றும் கூட சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று அது வகுப்புவாத இயக்கம் என்பதாகும். இது வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருவது மட்டுமல்ல, வெள்ளையர் மேட்டிமையைப் பின்பற்றும் காங்கிரஸால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இது பற்றி 1934 பிப்ரவரி 12 ஆம் தேதி டாக்டர் ஹெட்கேவார் எழுதிய கடிதத்தில் நல்ல பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண அரசு  ‘இந்த இயக்கம் வகுப்புவாதமானது. காலப்போக்கில் அரசியல் கிளர்ச்சியில் பங்கெடுக்க  போகின்றது’ என்று குற்றம் சாட்டி சுற்றறிக்கை அனுப்பி எல்லா அரசு ஊழியர்களும் சங்கத்தில் பங்கெடுப்பதில் இருந்து தடுக்கப் பட்டார்கள். அரசியல் கிளர்ச்சி பற்றிய அரசின் குற்றச்சாட்டு நிற்காது என்று தெரிந்தவுடன் வகுப்புவாதம் என்ற சொத்தை ஆட்சேபத்தை மட்டும் வலியுறுத்தினார்கள்.

டாக்டர் ஹெட்கேவார், ”Communal , Communalism என்ற சொற்களை தவறான அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிளர்ச்சி அல்லது இயக்கம் மற்ற ஜாதிகளுக்கு எதிராக வேலை செய்தால் மேற்குறிப்பிட்ட சொற்களை அதற்கு அடைமொழியாக ஆக்கலாம். ஆனால் இந்த சங்கமானது அந்நியர்களையோ பிற மதத்தவர்களையோ ஒருபோதும் வெறுத்து கண்டித்து வராமல் இந்து ஒற்றுமைப் பணியை மட்டுமே செய்து வருவதால் இதன் மீது வகுப்புவாதம் என்ற சொல்லை ஒட்ட முடியாது என்பதை சர்க்காருக்கு தெளிவாகக் காண்பிப்பது அவசியம். எனவே தங்களது ஜில்லாவில் உள்ள சபைகளில் இருந்து இந்த புதிய சுற்றறிக்கை ஆட்சேபிக்கின்ற தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய மாகாண சர்க்காருக்கு அனுப்பவும்” என்று தெளிவாக பதில் மட்டும் அல்ல, பதிலடி செயலையும் குறிப்பிட்டு எழுதி உள்ளார்.

***

கடுமையான உடல்நலக் குறைவிலும் டாக்டர் ஹெட்கேவார் சங்கப் பணியில் ஈடுபட்டிருந்தார். அது அவர் உடல்நிலையை மேலும் பாதித்தது. ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அது போன்றதொரு கடினமான சூழ்நிலையை அவர் அழகாக சமாளித்தது மட்டுமின்றி அதுபற்றி சுவைப்பட எழுதியுள்ளார்.

பாபா சாஹேப் சிதளே என்பவருக்கு 30 ஏப்ரல் 1935 இல் சாங்கிலிலிருந்து எழுதிய கடிதம், அவரது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

 “...25 ஆம் தேதி இரவு நாங்கள் சாங்கிலிக்கு  வருவதற்காகப் புறப்பட்டோம் . எனது இடுப்பில் திடீரென குத்துவலி எடுத்து விட்டது. காலையில் சாங்கிலி ஸ்டேஷனில் சங்கத்தின் சார்பில் வரவேற்பு விழா ஏற்பாடாகி இருந்தது. எனக்கோ எழுந்து உட்காரவோ நிற்கவோ முடியவே இல்லை. இத்தகைய நிலையில் காலை 6 மணிக்கு ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றது. ஸ்டேஷனில் கிட்டத்தட்ட 100 ஸ்வயம்சேவகர்கள்   நல்ல கணவேஷத்துடன் பிளாட்பாரத்தில் ஒழுங்காக வரிசை அமைப்புப்படி நின்று கொண்டிருந்ததுடன், ஊரிலிருந்து கனவான்களிலும் நிறைய பேர்கள் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள்.

இடுப்பு வலியை கஷ்டப்பட்டு சமாளித்துக் கொண்டு எவரும் கண்டுபிடிக்க முடியாத ரீதியில், மாலை மரியாதைகளை ஏற்க வேண்டி இருந்தது. ஸ்டேஷனில் இருந்து உடனே சங்கஸ்தானுக்குச் சென்றோம். அங்கே ' பரேட் ' (அணிவகுப்பு) நிகழ்ச்சி தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியையும் எப்படியோ ஒரு மாதிரி மேற்குறிப்பிட்டபடி நடத்தி முடிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்படி அலட்டிக் கொண்டதன் காரணமாக இடுப்பு வலி கடுமையாகி நடுப்பகல்முதல்  எழுவதும் உட்காருவதும் முற்றிலும் முடியாமல் போய் விட்டது. மாலையில் சங்க ஸ்தானத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த முக்கியமான சொற்பொழிவு நிகழ்ச்சியைக் கைவிட வேண்டியதாயிற்று. இந்தச் சொற்பொழிவுக்காக ஊரில் உள்ள எல்லா பெரிய மனிதர்களும் அழைக்கப்பட்டிருந்தபடியால் எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டு ஏதோ அரசியல் காரணங்களுக்காக சொற்பொழிவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எல்லா மக்களும் கருதி விட்டார்கள்.

இடுப்பு வலி காரணமாக நான் படுத்தபடி இருந்தாலும் உடம்பில் ஜுரம் முதலியன ஒரு சிறிதும் இல்லாததால் சங்கசாலக் ஸ்ரீ காசிநாத ராவ் லிமயே அவர்களது வீட்டில் ஸ்வயம்சேவகர்களும் ஊரில் உள்ள பெரிய மனிதர்களும் வந்து உரையாடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி  தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த எனது நோய் சாங்கிலி காரர்களுக்கு சௌகரியமாக ஆகிவிட்டது. இதன் காரணமாக நான் சாங்கிலியில் 5,6 நாட்கள் தங்க முடிந்ததற்காக சாங்கிலிவாசிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு இந்த நோய்க்கு  ‘அரட்டை வியாதி’ என்ற பெயர் கிடைத்துள்ளது . எனது உடல்நிலை மெல்ல மெல்ல சீர்பெற்று வருகிறது. கவலைப்பட வேண்டாம்”

-என்று தனது கஷ்டத்தையே சுவைபட உற்சாகமாக எழுதியுள்ளார்.

***

சங்கப் பணி அவர் எதிர்பார்த்தபடி வேகமாக வளரவில்லை என்ற மனவருத்தம் அவருக்கு இருந்தது. வளராததற்கு காரணம் என்ன என்பது பற்றி அவருக்கு ஒரு கருத்திருந்தது. அதை போகிற போக்கில் அப்பாசாஹிப் ஹதே என்பவருக்கு எழுதிய கடிதத்தில் கூறுகிறார்.

“வேலை நடப்பதில்லை என்று துயரக் கதை பாடுவதால் பயனில்லை. ஒவ்வொருவனுக்கும் தனது வீடு அல்லது சொத்து பற்றி எவ்வளவு பொறுப்புணர்ச்சி தோன்றுகிறதோ அந்த அளவுக்கு ராஷ்ரத்தைப் பற்றி தோன்றுவதில்லை என்பதே உண்மையான காரணமாகும்”என்று அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

***

முஸ்லிம்களின் மனநிலையைப் பற்றி ஒரு சிறு குறிப்பு அவரது கடிதத்தில் காணக் கிடைக்கிறது. சுமேர்சிங் நாஹாடே என்பவருக்கு 22 அக்டோபர் 1935 இல் எழுதிய கடிதத்தில் அந்த குறிப்பு உள்ளது.

“முஸ்லிம்களின் மனோநிலையைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியும் என்பது,  உங்கள் கடிதத்தில் இருந்து தெரிகிறது. அவர்கள் நமது உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு நமது ஊரில் சங்கப் பணி நடவாதிருக்கத்தக்க செயல்களை நம்மைக் கொண்டு (இந்து மக்களைக் கொண்டு) செய்ய வைப்பார்கள். நாம் அப்படி நடக்க விடக் கூடாது என்பதை நீங்கள் எப்பொழுதும் நினைவில் கொள்வது அவசியம்.   ‘எவரையும் பயமுறுத்துவதில்லை. தாமும் பயப்படுவதில்லை. அத்தகைய மனிதனைக் கண்டு உலகம் தானே பயப்படும்’ என்ற முதுமொழிப்படி நமது சங்கப் பணியை அச்சமின்றியும் அமைதியாகவும் செய்து வர வேண்டும். பிறரது கோபத்தாபங்கள் நம்மை பாதிக்க விடுவதால் பயனில்லை”

-என்று அந்தக் கடிதத்தில் டாக்டர் ஹெட்கேவார் எழுதி உள்ளார்.

***

டாக்டர் அம்பேத்கர் , சுதந்திர வீரர் சாவர்க்கர் , மகாத்மா காந்தி போன்ற பெரும் தலைவர்களின்  சரிதம் அவர்களது வாழ்நாளிலேயே தொகுக்கப்பட்டு , அவர்களால் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு வெளிவந்தன. எஞ்சிய வாழ்நாள் சம்பவங்கள் அவர்கள் காலமான பிறகு தொகுக்கப்பட்டன. அதுபோலவே டாக்டர் ஹெட்கேவாரின் சரிதத்தை எழுத தாமோதர பட் என்பவர் விரும்பினார். அதற்கு பதில் அளித்து 12 ஜூலை 1936 இல் ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.  அதிலிருந்து…

“தங்கள் விருப்பப்படி எனது வரலாற்றை வெளியிட உங்களுக்கு அனுமதி அளிக்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் எனது வரலாறு பிரசுரிக்கத்தக்க அளவுக்கு நான் பெரியவனோ, எனது வரலாற்றில் பிரசுரிப்பதற்கு தகுந்த சில முக்கியமான விஷயங்களோ இருப்பதாக எனக்கு சற்றும் தோன்றவில்லை. உங்களுக்கு வேண்டிய ரீதியில் எனது புகைப்படமோ எனது பணியின் புகைப்படமோ எதுவுமே இல்லை. நீங்கள் எழுத விரும்புகின்ற வரலாற்று வரிசையில் எனது வரலாறு சற்றும் பொருந்த முடியாது என்று தோன்றுகிறது.

இனி, எந்த ஒரு பணியை நான் எனது ஆயுளில் ஒரே பணியாகக் கருதுகின்றேனோ அந்த ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தைப் பற்றிய விவரம் உங்களுக்கும் மகாராஷ்டிரத்தில் உள்ள எல்லா கற்றறிவாளர்களுக்கும் முழுவதும் தெரிந்ததுதான்”

– என்று எழுதியுள்ளார்.

பம்பாயிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த  ‘பிளிட்ஸ்’  பத்திரிக்கை பிரபலங்களைச் சந்தித்து அவர்கள் வாழ்நாளின் முன்னிருத்தும், ஊக்கமளிக்கும் வாசகத்தைக் கேட்டு வெளியிட்டது .  அந்த வகையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவரான குருஜி கோல்வல்கரைக் கேட்டது. அவர் சொன்னார்:  “மை நஹி துஹி” (நான் அல்ல நீ ) . தன்னலம் மறுத்து பிறர் நலனை முன்னிறுத்தும் மனோபாவம் என்பதை குருஜி வெளிப்படுத்தினார்.

தன்னை முன்னிறுத்துவது தான் தலைமைத்துவம் என்று கருதிய தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் தன்னை மறைத்து சங்கத்தை முன்னிறுத்தும் டாக்டர் ஹெட்கேவாரின் உளப்பாங்கு வியக்கத்தக்கது.

***

அரசாங்கம் சுமத்திய பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலடி கொடுத்ததைப் பார்த்தோம். ஆனால் தனி அமைப்புகள் செய்யும் அவதூறுகளை அவர் கையாண்ட விதம் சுவாரஸ்யமானது . பனாரஸ் பகுதியில் அவர் சுற்றுப்பயணம் செய்தது பற்றி காசிநாத் ராவ் லிமயேவுக்கு  அவர் 30 அக்டோபர் 1937 இல் எழுதிய கடிதமும் 10 நவம்பர் 1937 இல் வினாயராவ்  ஆப்தேவுக்கு எழுதிய கடிதமும் சான்று பகர்கின்றன.

லிமயேவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“நான் அங்கு போவதற்கு ஒரு நாள் முன்னதாக அங்குள்ள ஹிந்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு சுற்றறிக்கையை அச்சிட்டு விநியோகித்திருந்தார்கள். அந்த சுற்றறிக்கையைக் கண்டு நாங்கள் கோபமடைவோம் என்றும், நமது வேலையில் நிரம்ப கஷ்டங்கள் உண்டாக்கும் என்றும் அவர்கள் கருதி இருந்தார்கள். நான் அங்கு சென்றதும் சோஷலிஸ்டுகள் வெளியிட்டிருந்த அச்சுற்றறிக்கையை  எனக்குக் காண்பித்தார்கள். சாதாரணமான நமது முறைப்படி இந்த சுற்றறிக்கை பற்றி அக்கறைப் படாமல் இருக்கும்படி நம்மவர்கள் அனைவரிடமும் கூறினேன். அது அனைவருக்கும் மிகவும்  பிடித்தது.

நான் அங்கே முக்கால் மாத காலம் தங்கியிருந்தேன். வெவ்வேறு விதமான சொற்பொழிவுகள், பைடக்குகள் (உரையாடல்), சர்ச்சை எல்லாம் நடத்தினேன். ஆனால் அவற்றில் இந்தச் சுற்றறிக்கையை பற்றி சிறிதும் கூட குறிப்பிடாததால் அதற்கு முக்கியத்துவம் எதுவுமே இல்லாமல் போய்விட்டது. சங்கத்தின் தத்துவ ஞானத்தையும் சிந்தனைப் போக்கையும் முழுவதும் கேட்ட பிறகு மக்கள் இந்த சுற்றறிக்கைக்காரர்களை முட்டாள்களாக மதித்தனர். இந்த சுற்றறிக்கைக்கு முன்னர் சங்கத்தை கவனிக்காமல் இருந்தவர்கள் தாமாகவே சங்கத்தை அணுகி வர ஆரம்பித்தனர். 

மற்றும் பேராசிரியர் வர்மா போன்ற உயர்தர சீனியர் பேராசிரியர்கள் சங்கசாலக் பொறுப்பை ஏற்க முன்வந்துள்ளனர். அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர் என்பதைப் பார்த்தால் இந்த சுற்றறிக்கை மூலம் நமக்கு நஷ்டம் ஏற்படுவதற்குப் பதிலாக மிகுந்த பலன் தான் ஏற்பட்டுள்ளது. 

(பணக்காரர்கள், சமஸ்தானாதிபதிகள் ஆகியோரைக் காப்பதற்காக இந்த சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் அவர்களது பணத்தினால் தான் இவையெல்லாம் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரீதியில் அமைந்த குற்றச்சாட்டுக்கள் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன).

ஆப்தேவுக்கு எழுதிய கடிதத்தில் பத்திரிகை தொடங்கி நடத்துவது பற்றிய வழிகாட்டுதல் இருந்தது. அதில்  கூறியிருப்பது: 

“தாங்கள்  ‘ராஷ்ட்ர தர்ம’  என்ற பெயரில் வாரப் பத்திரிகையைத் தொடங்க விரும்புவது சரிதான். ஆனால் பத்திரிகையின் பொருளாதார அம்சம் பற்றியும் வருங்கால வெற்றி பற்றியும் உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அவ்வேலையைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை கையில் எடுத்துக் கொண்ட வேலையை இறுதிவரை உறுதியாக நடத்தி வரும் பொறுப்பு அந்த வேலையைத் தொடங்கி வைக்கின்றவர்களுக்கு வந்து சேருகிறது என்பது உங்கள் அனைவருக்கும் சாதாரணமாக ஏற்படுகின்ற அனுபவமாகும் என்பதை நிச்சயம் நினைவில் கொள்க.

இந்தப் பத்திரிகையில் நமது சிந்தனைப் போக்குதான் எப்போதும் நிலைநாட்டப்பட்டு வரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் சங்கத்தின் மீது பலரும் வீசுகின்ற தாக்குதல், எழுப்புகின்ற ஆட்சேபனைகள் இவற்றுக்கு பதிலும் மறு பதிலும் அளிக்கின்ற குழப்பத்தில் மட்டும் ஒருபோதும் சிக்கிக் கொள்ள வேண்டாம். இப்பொழுதெல்லாம் உங்கள் பகுதியிலிருந்து வெளியாகும் செய்தித்தாள்களில் சங்கத்தின் மீது கணக்கற்ற பொய் புனை சுருட்டான குற்றச்சாட்டுகளை செய்தித்தாள்களில் வெளியிட்டாலும், பொது மேடைப் பேச்சுகளில் வெளியிட்டாலும் நம்மவர்கள்  அவற்றுக்கு ஒரு சிறிதும் பதில் அளிக்காமல் அவற்றை முற்றிலும் உதாசீனப்படுத்தி விட வேண்டும்”.

-என்று குறிப்பிட்டுள்ளார்.

***

அதே வேளையில், உள்நோக்கத்துடன் எழுதப்படும் கடிதங்களுக்கு பணிவுடன் ஆனால் கறாராகக் கத்தரித்து விடுவதாக அவர் கடிதம் இருந்தது. எடுத்துக்காட்டாக, நாகபுரியில் வாழ்ந்து டாக்டர் ஹெட்கேவாருடன் நல்ல அறிமுகம் உள்ள ஒரு கனவான், சங்கமானது காங்கிரஸ் முதலிய இயக்கங்களுக்கு எதிர்ப்பாக உள்ளதாக எண்ணம் கொண்டு அவ்வண்ணத்தைப் பரப்புவதற்காக சில ஆட்சேபங்களை கடித வாயிலாக எழுப்பினார். உண்மையில் நேரடியாகச் சந்தித்து எல்லா விஷயங்களையும் தெளிவுபடுத்திக் கொண்டு நல்லுறவு நிறைந்த நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள சாதாரணமாக அந்த மனிதரால் முடியும். அப்படி இருக்க இத்தகைய கடிதத்தை அனுப்புவது என்றால் அவரது மனதில் ஏதோ விபரீதமான உத்தேசம் இருப்பதையே அது காட்டியது. அதை கவனத்தில் கொண்டு டாக்டர் ஜி உடனடியாக ஒரு கடுமையான பதில் அனுப்பினார். அதில் அவர் எழுதுகிறார்…

“எங்களைப் பற்றி நீங்கள் எழுதுகையில் இப்பொழுதை விட சிறிது உயர்ந்த வார்த்தைகளை உபயோகித்து இருந்தால் நலமாய் இருக்கும். உங்களைப் போன்ற முறையில் சொற்களைப் பிரயோகிக்க எங்களால் முடியாது. எங்களுக்கு வேறு வழி இல்லை. பரீட்சைக்கு உட்காரும் மாணவன் என எங்களை எண்ணி நீங்கள் அனுப்பிய வினாத்தாள் கிடைத்தது. ஆனால் இப்போது எங்கள் வயது பரீட்சைக்கு உட்காரத்தக்கதாக இல்லையாதலால் உங்களது விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை என்பதில் வருத்தம் அடைகிறோம்”

-என்று குறிப்பிட்டிருக்கிறார்.

***

சங்கம் ஆரம்பத்தில் நாகபுரி பகுதியில் பரவியது. பிறகு மாணவர்களை கல்லூரிப் படிப்பிற்காக வேறு மாநிலத்துக்கு அனுப்பி படித்துக்கொண்டே சங்க வேலை செய்யும்படி ஆனது. அப்படி கராச்சியில் படிக்கச் சென்று சங்க வேலை செய்த காரியகர்த்தருக்கு டாக்டர் ஹெட்கேவார் எழுதிய கடிதம், எவ்வளவு நுட்பமாக அவர் விஷயத்தைப் புரிந்து கொண்டு ஆலோசனை கூறுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது:

“நீ அங்கே கல்லூரியில் படித்து வருவதால் இயல்பாகவே வாலிபர்களுடன் உனக்கு தொடர்பு ஏற்படுகிறது. கல்லூரியில் படிக்கின்ற வெளியூர் மாணவர்கள் நமக்கு இந்தப் பணியில் எளிதில் கிடைப்பார்கள். ஆனால் உள்ளூர் வாலிபர்கள் கிடைப்பதற்காக நாம் முக்கியமாக கவனம் செலுத்தி முயல வேண்டும். ஏனெனில் உள்ளூர்வாசிகளின் ஆதரவைப் பொருத்துதான் கிளையின் வேலையானது நிரந்தரமாக நிலை பெற்றது ஆகின்றது. உனது கருத்துபடி கிளைக்கு ஸ்திரத்தன்மை வாய்ந்த வடிவம் ஏற்பட்டு விட்டது என்றால், பிறகு கொடி போடுவதில் ஆட்சேபனை இல்லை. அதுவரையில் கொடியின்றியே சங்கத்தின் எல்லா தினசரி நிகழ்ச்சிகளையும் நடத்தி வரவும். ஆனால் சங்க ஸ்வபாவத்தை உண்டாக்குவதற்கான முயற்சியை மட்டும் தொடக்கம் முதலே அக்கறையுடன் நடத்தி வர வேண்டும்”

-என்று தெளிவாக வழிகாட்டி உள்ளார்.

***

தமிழகத்தில் சங்க வேலை செய்து கொண்டிருந்த தாதா ராவ் பரமார்த்துக்கு எழுதிய கடிதத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. அது டாக்டர் ஹெட்கேவாரின் தொடர்பு வட்டம் எவ்வளவு விரிவானது என்பதைக் காட்டுகிறது. அந்தக் கடிதத்தில் பரமார்த்துக்கு பணியில் தெம்பூட்டும் வரிகளுடன் “டாக்டர் வரதராஜுலு நாயுடு என்ற காங்கிரஸ் தலைவரைச் சந்தித்து  ‘நாகபுரியில் தசரா விழாவுக்குப் போக வேண்டி இருக்கும்’ என்று பேசி வைக்கவும்” என்று எழுதியுள்ளார்.

டாக்டர் வரதராஜுலு நாயுடு சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக இருந்தவர். தேசப் பணிக்காக தனது மருத்துவத் தொழிலை விட்டு விலகியவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை 1925இல் ஆரம்பித்தவர். பிறகு பணப் பற்றாக்குறையால் அது ராம்நாத் கோயங்காவிடம் போய் சேர்ந்தது. நாயுடுவை நாகபுரி சங்க விழாவுக்கு அழைக்க டாக்டர் ஹெட்கேவார் முயற்சி செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

***

கடிதத் தொகுப்பை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது ஓரிரு விஷயங்கள் தெளிவாக வெளிப்படுகின்றன.

  • ஒன்று, எல்லா கடிதங்களிலும் சகஜமான மனநிலை  வெளிப்படுகிறது.
  • இரண்டு , எல்லா கடிதங்களிலும், சிறியவராக இருப்பவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூட, மரியாதையும் பணிவும் வெளிப்படுகிறது. சங்கத்தை எதிர்த்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூட இது இருக்கிறது. அதே வேளையில் கறாராக எதிரிக்கு பதில் கூறுகிறார்.
  • மூன்று, எந்தக் கடிதமும் நீண்டதாக இல்லை. அரைப்பக்கம், ஒரு பக்கம் தான். இந்தத் தொகுப்பில் உள்ள நீண்ட கடிதம் இரண்டரை பக்கம் கொண்டது.

டாக்டர் ஹெட்கேவாரின் நகைச்சுவை உணர்வு, எல்லோரிடமும் அன்பு பாராட்டி அரவணைத்துச் செல்வது, பெரியோர்கள் மீது, குறிப்பாக சுதந்திர வீர சாவர்க்கர் மீது, அவருக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் பல கடிதங்கள் காட்டுகின்றன.

சங்கத்தை வளர்ப்பது தொடர்பான சில நுட்பமான விஷயங்கள், சங்க வளர்ச்சியைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது, அதேவேளையில் போதிய வேகத்தில் வளரவில்லையே என்ற மனக்கிலேசம், சங்கத்தின் தேவை, அதன் மீது செய்யப்படும் அவதூறுகள் பற்றி என்று, சங்கத்தைப் பற்றி மட்டுமின்றி அதை ஆரம்பித்தவரின் ஆளுமையையும் அருமையாக வெளிப்படுத்துகிறது இந்த நூல்.

***

நூல் விவரம்:

பரம பூஜனீய டாக்டர் ஹெட்கேவாரின் கடிதங்கள் 
தொகுத்தவர்: நா.ஹ.பால்கர் 
விலை: ரூ. 125/-
வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம், சென்னை 
தொடர்புக்கு: 89391 49466.
இணையவழியிலும் வாங்கலாம்

$$$

Leave a comment