-கருவாபுரிச் சிறுவன்
மரண பயம் போக்கும் அமிழ்தான பாடல்கள் நிறைந்தது நம் தமிழ் மொழி. அவற்றை சுட்டிக் காட்டும் இனிய கட்டுரை இது...

கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய்
காலனையும் காலால் கடந்தான் கண்டாய்
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய்
புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர் பிறைமுடி மேல் சூடி கண்டாய்
வெண்நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய
வள்ளிமணாளற்கு தாதை கண்டாய்
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே
-திருநாவுக்கரசு சுவாமிகள்
ஆலமே அமுதமாக உண்டு வானவர்க்கு அளித்து
காலனை மார்க்கண்டர்க்கா காய்ந்தனை அடியேற்கு இன்று
ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான் மறைகள் ஏத்தும்
சீலமே ஆலவாயில் சிவபெருமானே என்றார்.
-தெய்வச்சேக்கிழார் சுவாமிகள்
பிறவிகள் பல:
இவ்வுலகிலுள்ள உயிர்கள் யாவும் முற்பிறவியில் செய்த பாவ புண்ணிய செயலுக்கு ஏற்ப பிறப்பிறப்பு எடுத்து நன்மை தீமைகளை அனுபவிக்கின்றனர். அதற்கேற்ப மீண்டும் மீண்டும் பிபீலிகள் முதல் பிரமன் வரையிலான பிறவிகளில் உழன்று கொண்டு இருக்கின்றனர்.
இந்தத் தன்மையை அறிந்த ஞானிகளும் ஏனையோரும் இப்பிறவித் தளையில் இருந்து விடுபட வேண்டும் என விரும்புவர். அதனால் தான் திருவள்ளுவதேவ நாயனாரும், எடுத்த எடுப்பிலேயே,
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தாதார் இறைவன் அடி சேரா தார்
என வழிபாட்டின் அவசியத்தை உணர்த்த, பிறவி என்பது பெருங்கடல் என்று அறுதியிட்டுச் சொல்லுவார்.
உயிர்களின் பிறப்பின் தன்மையை நம் பட்டினத்து சுவாமிகளும்
மாதாவும் உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன் வேதாவும் கை சலித்து விட்டானே - நாதா இருப்பையூர் வாழ்சிவனே இன்னும் ஓர் அன்னை கருப்பையூர் வாராமற் கா. மண்ணும் தணலாற வானும் புகையாற எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன் கையாறவும் காலன் காலாறவும் கண்பார் ஐயா திருவையாறா. காலன் வருமுன்னே கண்பஞ்சடைமுன்னே பாலுண் கடைவாய்ப்படுமுன்னே - மேல் விழுந்து உற்றார் அழுமுன்னே ஊரார் சுடு முன்னே குற்றாலத் தானையே கூறு.
(இப் பாடல்களுக்கு பொருள் வெளிப்படை)
என்று பாடி அருளினார். பட்டினத்து சுவாமிகளின் அடியொற்றிய நம் மன்னர் பிரான் வரதுங்க ராம பாண்டியரும்,
பேதாதி பேத பிறவிகள் தோறும் பிறந்திளைத்தேன் மாதாவும் பெற்று வளர்த்து இளைத்தாள் கொடும் மாமறலி துாதாளும் கொன்றிளைத்தான்…
-என்பார்.
பல முறை உயிர்கள் பிறந்து பிறந்து உழன்று கொண்டிருப்பதால் சலிப்பு ஏற்படும். அதில் இருந்து விடுபட வேண்டும் என விரும்பிய உயிர்கள் பூர்வ ஜென்ம முன்வினைப் பயனால் அருளாளர்களாகவும் ஞானியாகவும், ஆகிறார்கள்.
அப்படிப்பட்ட அருளாளர்களை, உயிர்களை வதைக்கும் நவக்கிரகங்களும், அஷ்ட திக்கு பாலகர்களில் ஒருவரான எமதர்மராஜானாலும் ஒன்றும் செய்ய இயலாது என்பது நியதி.
ஆக அருளாளர்கள் யாவரும் யாம் வணங்கும் தெய்வம் என்னுள் இருந்து எப்போதும், காத்து நிற்கும் என்று தத்தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அவற்றில், முடியாட்சியை எதிர்த்த முதல் மகானாகிய அப்பர் சுவாமிகளின் திருவாக்கில் “துன்பமும், துயரமும், தொல்லை வல்வினையும் ஒன்றும் செய்யாது. ஏன்என்றால் தில்லை மாநகரத்திலுள்ள நாயகனுக்கு அடியேனாக இருக்கும் போது யாரும் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது” என நம்பிக்கை ஊட்டுகிறார்கள்.
அல்லல் என் செயும் அருவினை என் செயும்
தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும்
தில்லை மாநகர் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.
-திருநாவுக்கரசு சுவாமிகள்
புத்தம் புதிய கொன்றை மலர்களை தன் தலையில் சூடி இருக்கிறார் சிவபெருமான். திருக்கருவையாகிய இத்தலத்தில் பால்வண்ண நாதர் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளி இருக்கிறார். அவரின் திருவடியை அடியேன் தலை மீது வைத்து அருள் புரிந்துள்ளார்.
அப்படி இருக்கையில் உயிரையும், உடலையும் இரு கூறுகளாகப் பிரிக்கும் ஆற்றுலுடைய எமதர்ம ராஜனின் பாசக்கயிறு என்ன செய்யும் என கேள்வி எழுப்பி, அதுவால் ஒன்றும் செய்ய இயலாது என நம்பிக்கையூட்டி நமக்கு உபதேசம் செய்கிறார் வரதுங்க ராம பாண்டியர்.
எய்தி என் செயும் கருவை யெம்பிரான்
கொய்யு நாண்மலர்க் கொன்றை வேணியான்
செய்ய பாதமென் சென்னி வைக்கவே
வெய்ய கூற்றுவன் வீசு பாசமே.
-வரதுங்க ராம பாண்டியர்
அந்தகனுக்கு எச்சரிக்கை:
இருபத்தி ஏழு நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்தே, சிவபெருமானின் ஆணைப்படி அவரவரின் வினைக்கு ஏற்ப, ஆன்மாக்களை நல்வழிப்படுத்தக் கூடிய பணியை செய்பவை, பன்னிரு ராசிகள், ஒன்பது நவக்கிரகங்கள், ஏழு நாட்களாகும்.
ஆனால் முருகப்பெருமானின் அடியவர்களை இவை யாவும் ஒன்றும் செய்ய இயலாது என்பதை அருணகிரிநாத சுவாமிகள் கந்தரலங்காரத்தில் மறைமுகமாகச் சொல்லும் எண்ணலங்காரம் வழி முத்தமிழால் அலங்கரித்துள்ளார் பாருங்களேன்.
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
முருகப் பெருமானின் திருவடி இரண்டு, அதில் அணிந்துள்ள சதங்கை இரண்டு, தண்டை இரண்டு, சிலம்பு இரண்டு அவரின் திருத்தோள்கள் பன்னிரெண்டு, அதில் அணிந்துள்ள கடம்ப மாலை ஒன்று, திருமுகங்கள் ஆறு ஆக, மொத்த எண்ணிகை இருபத்தி ஏழு. ஒவ்வொரு நல்வினை தீவினைக்கும் ஆதாரமாக விளங்குவது இருபத்தி ஏழு நட்சத்திரங்கள்.
முருகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு நாளும் கோளும், கொடும் கூற்றுவனும் நன்மையே செய்வார்கள் என்று கந்தர் அலங்காரத்தில் கட்டியம் கூறுகிறார்.
இக்கருத்தையே மற்றொரு பாடலில் “மரணப்பிரமாதம் நமக்கில்லை” என அழுத்தம் கொடுத்து இருப்பார்.
திருச்சீரலைவாய் முருகப்பெருமானை தரிசிக்க சென்றார் சற்குரு அருணகிரிநாத சுவாமிகள். அப்போது வழியில் முருகபக்தர் ஒருவரை எமகிங்கரர்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லுவதை ஞானதிருஷ்டியால் பார்க்கிறார். வந்தது கோபம். எமகிங்கர்களை ஒன்றும் சொல்லாமல் அவர்களுக்கு ஆணையிட்டானே, அவர்களின் தலைவனாகிய அந்தகனை “தன் கைக்குள் எட்டுமாறு வந்து பார்” என கந்தரலங்காரப்பாடல் மூலம் எச்சரிக்கை செய்கிறார்.
அதைக் கேட்ட உடனே எமதர்ம ராஜனும் வந்த மன்னிப்பு கோரி முருகபக்தருக்கு நீண்ட வாழ்நாளை சற்குரு அருளால் தந்து ஆசி வழங்கினார் என சான்றோர்கள் சுவையாக கட்டுரையில் எழுதி மகிழ்வதுண்டு.
இதோ அப்பாடல்…
தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத் திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் 'அவிரோத ஞானச்சுடர் வடிவாள்' கண்டாயடா அந்தகா? வந்துபார் சற்று என் கைக்கு எட்டவே!
அம்பிகையின் அருள்:
இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய்!
-என்பது அபிராமி பட்டர் பிரானின் திருவாக்கு.
திருநாவுக்கரசர், வரதுங்கராம பாண்டியர், அருணகிரிநாதர் ஆகியோர் கொடுத்த பெரும் தைரியத்தால் நமது பிற்கால புலவர்கள், துணிவாக ”நமனை வந்து பார்” என்று தோன்றும் அளவில் தம் பாக்களில் கையாண்டு இருப்பார்கள். அதை அவர்களின் வாக்கின் வழியே காணலாம்.
கான் தெண்டனிட்ட கருங்குழலாலை என் கண்மணியை தேன் தொண்டை வாய்ச்சியை தென்கூடலில் சிறு பெண்பிள்ளையை யான் தெண்டனிட்ட பொழுதே இயமன் எனக்கும் அடி யேன் தெண்டனிட்ட விண்ணப்பம் என்று ஓலை எழுதுவனே.
என்கிறார் மதுரையை சேர்ந்த பலபட்டடை சொக்கநாதப் புலவர்.
“தாயே! உன்னுடைய கருங்கூந்தலைக் காணும் போது அடர்ந்த கானகத்தின் இருள் ஒன்றும் பெரிதாக எனக்குத் தெரியவில்லை. உன்னுடைய திருவாக்கே இனிமை. அதுவே மதுரம். நான் உன்னை நமஸ்காரம் செய்யும் போது கொடிய கடும் கானத்தின் இருளின் வடிவமான எமன் என் உயிரை பறித்து விடுவானோ! அவனை என்னிடம் நமஸ்காரம் செய்யச் சொல்லி ஓலை அனுப்புவேன் உன்னருளால்” என்கிறார் சொக்கநாதப் புலவர்.
அவரின் துணிவு நமக்கும் வர வேண்டும் என இந்தத் தருணத்தில் அங்கயற்கண்ணி சமேத ஆலவாய் அண்ணலிடம் விண்ணப்பம் செய்து கொள்வோமாக.
திருநெல்வேலி தச்சநல்லுரைச் சார்ந்தவர் அழகிய சொக்கநாதபிள்ளை. பெரும் புலவர். அன்னை காந்திமதியம்பிகையின் மீது பாடிய அந்தாதியும், பிள்ளைத்தமிழும் வெகு பிரசித்தம். ஒரு சமயம் சங்கரன்கோவில் தலத்திற்கு வருகை புரிந்தார்.
அப்போது கோமதியம்பிகையின் அளவிலா அருட் கருணையில் லயித்து அவளின் திருவடி திறனில் தோய்ந்து இருந்தார். அப்போது பிரவாகமாக வந்த சொற்றமிழால் அன்னைக்கு வாடாத பாமாலையை சாற்றி வழிபட்டார்.
அதனை ‘கோமதியம்பிகை இன்னிசை மாலை’ என்னும் பெயரில் தச்சநல்லுாரைச் சார்ந்த அன்பர்கள் அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அதிலுள்ள ஒரு பாடல் மேற்கண்ட அருளாளர்களின் அடியை ஒற்றி இருக்கும். இப்பாடலை தாரக மந்திரமாக எண்ணிப் படிப்பவருக்கு தன்னம்பிகை ஊற்றெடுக்கும்; அசாத்திய திறமைகள் வெளிப்படும்; அல்லல்களைத் தகர்த்து எறிவார்கள்; வெற்றிப்பாதையை நோக்கி நகர்ந்து செல்வார்கள்; சமுதாயத்தில் முக்கிய நபராகத் திகழ்வார்கள். அப்பாடலை சங்கரன்கோவில் கோமதியம்பிகை சன்னிதி உள்பிரகாரத்தில் மின்விளக்குடன் பள்ளியறை சுவற்றின் அருகே உபயமாக செய்து வைத்திருந்தனர் நல்லுள்ளம் கொண்ட அன்பர்கள். இதோ அப்பாடல்…
கேடா வரு நமனை கிட்ட வராதே, துாரப் போடா என்று ஓட்டிவிட்டு வுன் பொற்கமலத்தாள் நிழற்கீழ் வாடா என்று என்னை வர அழைத்தால் அம்ம வுன்னைக் கூடாது என்று யார் தடுப்பார் கோமதித்தாய் ஈசுவரியே?
நிறைவாக, இக்கருத்தினை எல்லாவற்றையும் பிரபஞ்ச வெளியில் இருந்து தன்னுள் வாங்கிய தேசியகவியாகிய சுப்பிரமணிய பாரதியாரும் ஓரிடத்தில்…
காலா உனை நான் சிறு புல் என மதிக்கிறேன் என்றன் கால் அருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்!
என கர்ஜனை செய்வார்.
இவர்களைப் போன்ற துணிவும் அசாத்திய திறமையும் உயிர்களாகிய நமக்கு வர வேண்டும். நீதி நேர்மையுடன் வாழ்ந்து காட்ட வேண்டும் இதற்கு அருளாளர்களின் பாடல்கள் நமக்கு துணை செய்யும்.
அன்பர்கள் நாள்தோறும் திருஞானசம்பந்த நாயனார் அருளிச் செய்த கோளறு பதிகத்தைப் பாடி, நெற்றியில் திருநீறு அணிபவருக்கு அல்லல் வினை வாராது, மறலி தூது எதிரிடாது, அருங்கவலை சற்றும் அணுகிடாது, அடல் பில்லி ஏவல் வஞ்சனை சூனியங்கள் வந்து அடையாது, நவக்கிரகங்கள் வில்லங்கமான துஸ்தானத்தை நோக்காது, விட திட்டமாயும் விலங்கு மேலே ஏறிடாது, தேக முதலான கர்ம வியாதிகளும் அணுகிடாது, சல்லியம் செய் பிரம் ராக்ஷஸ பிசாசும் எதிரிடாது என்று கூறி இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக.
வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே -1 தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே -11
.
ஹர ஹர நம பார்வதீ பதியே… ஹர ஹர மகாதேவ!
சித்சபேசா… சிவசிதம்பரம்!
வாழ்க பாரதம்… வாழ்க மணித்திருநாடு!
$$$