என்கடன் பணிசெய்து கிடப்பதே – 3 

-கருவாபுரிச் சிறுவன்

அப்பர் சுவாமிகள் கூறியபடி,  ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: சங்கரன்கோவில் டி.மாரியப்பன்.
டி.மாரியப்பன், சங்கரன்கோவில்

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத 
     என்னை பிரபஞ்சம் என்னும் 
சேற்றைக் கழிய வழிவிட்டவா 
    செஞ்சடாவி மேல் 
ஆற்றை பணியை இதழியைத் 
   தும்பையை அம்புலியின் 
கீற்றை புனைந்த பெருமான் 
   குமாரன் க்ருபாகரனே!

-என்ற அருணகிரி நாதரின் திருவாக்கினை சிரமேற் கொண்டு ஓசை முனிவரின்  அடியொற்றி வாழ்ந்து மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்பவர்  தான் சங்கரன்கோவில் டி.மாரியப்பன் அவர்கள். 

இன்றைய சூழலில் பதவி, பட்டங்களுக்காக தமிழ் இலக்கியத்தினைப் படித்து மிகவும் சொற்பமான அளவிலே தமிழைத் தெரிந்து கொண்டு  வாழ்வோர் மத்தியில், பள்ளிக்கூடம் செல்லாமலே… பாடங்களைப் படிக்காமலே… பூர்வ ஜென்மத்தின் புண்ணியப் பயனாக, தன்னுடைய சுய ஆர்வத்தின் மூலம், இலக்கியத்தின் மீதுள்ள தீராத காதலுடன், ஆராத பக்தியின் வழியே தொடர்ந்து எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பணி செய்து இயங்கிக்  கொண்டிருக்கும் சங்கரன்கோவில் டி.மாரியப்பன் அவர்களை பற்றி கோடிட்டுக் காட்டுவதாக இக்கட்டுரை  அமைகிறது. 

ஞானமரபு: 

வாழையடிவாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானும் ஒருவனன்றோ! என்ற வள்ளல் பெருமானாரின்  வாக்கு மெய்யன்பர்கள் அனைவருக்கும் பொருந்தும். ஒவ்வொரு அன்பர்களும்  ஞான மரபு ஒன்றினைப் பின்பற்றியே இப்பூவுலகில் தொண்டு செய்பவர்கள் ஆவார்கள். 

அவர்களுள், சென்ற நூற்றாண்டில் திருமுறை, சித்தாந்த, புராண பாடம் நடத்துவதில் திறம்படச் செயல்பட்டவர்களில் தென் தமிழகத்தில் முக்கியமானவர் பேட்டை ஆ. ஈஸ்வர மூர்த்திப் பிள்ளையவர்கள்; இவர்  தவத்திரு யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர் ஞானமரபின் கொடி வழி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

இப்பெருமானார் சங்கரன்கோவில் கோமதியம்பிகை சமேத சங்கரலிங்க சுவாமியை தனது உள்ளத் தாமரையில் வைத்து ஆத்மார்த்தமாக வைத்து பூஜித்தார். அவர் வாழ்ந்த காலங்களில் சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்திலும், இவ்வூரிலும் பாடம் கேட்டவர்கள் பலர் தற்போதும் பண்டிதராகவும், திருக்கூட்டத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்கள். 

பிள்ளையவர்களிடமும், அவர்களின் பிரதானச் சீடரான ரத்தினவேலன் அவர்களிடமும் சமகாலத்தில் உள்ளன்போடு பழகி, பாடம் கேட்டு இன்று வரை  ஆன்மிகப்பணியை தொய்வில்லாமல் செய்து கொண்டு இருக்கிறார் டி.மாரியப்பன். 

மாரியெனும் சொன்மழை:  

‘படைக்கலமாக அஞ்செழுத்தை  என் நாவில் கொண்டேன், துடைக்கினும் போகேன், என்கடன் பணிசெய்து கிடப்பதே, பாடும் பணியே பணியாய் அருள்வாய்’ என்ற அருள் மொழிகளுக்கு ஏற்ப இந்த நூற்றாண்டில் தென்தமிழகத்தில் ஹிந்து மதத்தின் முதன்மைப் பக்தனாகவும், காவலனாகவும் திகழ்பவர் தான் டி.மாரியப்பன்.

 1982 ஆம் ஆண்டு முதல் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக  மேடையேறி  ஆன்மிகச் சொற்பொழிவு செய்து வரும் இவர், இரண்டாம் வகுப்பு கூட தாண்டாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 தொடர் சொற்பொழிவாளர், பேச்சாளர், பட்டிமன்ற வழக்கடுபவர், திருமுறைவாணர் என் பன்முகத்தோற்றம் கொண்ட அன்னார், வடலுார் ராமலிங்க வள்ளல் பெருமானைப் போலவே, ஓதாது உணர்ந்த உத்தமர் ஆவார். 

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் கிராம தேவதை கோயில் கொடை விழாக்களில் நடைபெறும்  சொற்பொழிவு, அறிவுப்பூர்வமான பட்டிமன்றம், ஆரோக்கியமான வழக்காடு மன்றங்களில் அன்னாரின் பங்களிப்பு  கட்டாயம் இடம் பெற்றிருக்கும். 

இவருடைய  நிகழ்ச்சி இல்லாமல் கிராம தேவதைகளின்  கொடை விழா நிறைவு பெறாது என்கிறார்கள் இவரை நன்கு அறிந்த  ஆன்மிக அன்பர்கள்.

புலமையும் தொண்டும்:

எளிமையாகவும் நேர்மையாகவும்  பேசும்  திரு. டி.மாரியப்பன்,  “பேட்டை ஆ. ஈஸ்வர மூர்த்திப்பிள்ளையவர்களின்  சாத்திர நுட்பங்களும், வாரியார் சுவாமிகளின்  திருப்புகழ் அமிர்தமும், கி.வா.ஜ.வின் தமிழ் இலக்கிய பரப்பும் தான் தறி நெய்து கொண்டு இருக்கும் காலங்களில் இருந்து , தணியாத தாகமாக என்னை இப்பணியில் ஈடுபட வைத்தது”  என்கிறார்.

“அதனால் தான் மூலதனமில்லாத முன்னோர்களின் முதலீடுகளான சங்க இலக்கியம், ராமாயணம், மகாபாரதம், திருமுறைகள், சாத்திரங்கள், திருவிளையாடல் புராணம், கந்த புராணம், பெரிய புராணம், காஞ்சி புராணம், திருக்குற்றாலத்தல புராணம், சங்கரன்கோயில் புராணம், திருக்கருவை தல புராணம், சைவப்புராணங்கள், தமிழ் இலக்கியங்கள், ஞானப்பனுவல்கள் யாவற்றையும் மனனம் செய்து வைத்து மணிக்கணக்கில் பேசக்கூடிய வல்லமையை கோமதியம்பிகை  சமேத சங்கரலிங்கப்பெருமான் அடியேனுக்கு அருளியிருக்கிறார் என்கிறார் தன்னடக்கமாக.

“திருமலைக்கோவில், சங்கரன்கோவில், கரிவலம் வந்த நல்லுார், திருநெல்வேலி, திருச்செந்துார் ஆகிய தலங்களில் நடை பெறும் பிரமோற்சவ திருவிழாக்களில் அடியேனின் சொற்பொழிவு கட்டாயம் இடம்பெறும். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மீது கொண்ட தீவிரப் பற்றின் காரணமாக, திருப்புகழ் சபை ஒன்றை உருவாக்கி அதன் வழியே  பதினைந்து ஆண்டுகள் விழா எடுத்து சிறப்பாக நடத்தி பல தலைப்புகளில்  பல சான்றோர்களை அழைத்து சிறப்பித்தும், அதன் நினைவாக,  சிறு சிறு நூல்களையும் வெளியீடு செய்தது அடியேன் செய்தது மாபெரும் பாக்கியம்” என புளங்காகிதம் அடைகிறார்.  

விருதுகளும் பொற்கிழியும்:

முதன்முதலில் இவரின் திறமையைக் கண்டு வியந்து ஆசி வழங்கிய  திருவண்ணாமலை ஆதீனம்  38 வது பீடாதிபதி விஸ்வகுரு சிவசண்முக ஞானாச்சாரிய சுவாமிகள்  ‘செந்தமிழ் நயச்செல்வன்’ என்ற விருதினை  வழங்கி கெளரவித்தார். 

மேலும், இப்பகுதியிலுள்ள சமூக அமைப்புகள், சமுதாய சங்கங்கள் யாவரும்   ‘இலக்கியசுடர், இலக்கியக்காவலர், செஞ்சொற் தமிழ்வேள், திருப்புகழ் செல்வர், சைவத்தமிழ் புலவர், சித்தாந்த சீலர், ஓதாது உணர்ந்த உத்தமர்’  என பல பட்டங்களை வழங்கியுள்ளார்கள். 

சமீபத்தில் கரிவலம் வந்த நல்லுார் குகபதி பதிப்பகத்தின் மூலம், சேலம் தமிழ்ச்சங்கத்தின் வயிலாக வாரியார் விருதினை  பெற்றது என் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத நிகழ்வு என்கிறா இவர்ர். மேலும்,  தமிழக அரசின் வழியே கிடைக்கும் தமிழறிஞர் உதவித்தொகையைப் பெற்று வருகிறார்.

நிறைவாக, 

அனைவருடைய கரங்களிலும் இணையதள சேவை ஆண்டிராயிடு போன் வந்து விட்டதால் பலர் பேசும்  சொற்பொழிவினை கைக்குள்ளே பார்த்துக் கொள்கிறார்கள். இதனால் நேரிடையாக சொற்பொழிவினைக் கேட்கும் அன்பர்கள் குறைந்து வருகிறார்கள் என்பது தவிர்க்க முடியாத உண்மை.  அதனால் எங்களூர் சிவாச்சாரிய பெருமக்களுடன் கும்பாபிேஷகத்திற்கு செல்கிறேன். அவர்களுடன் சேர்ந்து கும்பாபிஷேக கைங்கிரியங்களையும் செய்து கொண்டு, திருமுறை, திருப்புகழ், அபிராமி அந்தாதி பாடல்களையும் பாடி, ஆன்மிகச் சொற்பொழிவினையும் ஆற்றுகிறேன் என உற்சாகம் குறையாமல் சொல்லுகிறார் தர்மலிங்க முதலியாரின் திருமகனார் டி.மாரியப்பன். 

தந்தையின் பெயருக்கேற்ற தனயனாக வாழ்ந்து காட்டுவது தெய்வ அனுக்கிரகத்தினால் அன்றோ!  

நாத விந்து கலாதீ நமோ நம
வேத மந்த்ர சொரூபா நமோ நம 
ஞான பண்டித ஸாமீ நமோ நம - வெகுகோடி 
நாம சம்பு குமாரா நாமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம - பரசூரர்
சேத தண்ட விநோதா நமோ நம 
கீத கிண்கிணி பாதா நமோ நம 
தீர சம்ப்ரம வீரா நமோ நம - கிரிராஜ
தீபமங்கள ஜோதீ நமோ நம
துாய அம்பல லீலா நாமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள் தாராய்! 

என்ற திருப்புகழை நாமும் வழிபாட்டு நேரங்களில் பாடி, ஹிந்து மதக்காவலர்  டி.மாரியப்பன் அவர்களுக்கு நீண்ட ஆயுளும் நீடித்த ஆரோக்கியத்தையும் மென்மேலும் பரம்பொருள் கூடுதலாக அருள வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.  

வாழ்த்துக்கள் சொல்லி மகிழ: 

இலக்கியச் சுடர் டி.மாரியப்பன்
ஆன்மிக சொற்பொழிவாளர்,
விநாயகர் கோவில் தெரு,
ஸ்டேட் பேங்க் எதிரில்
ராஜபாளையம் மெயின் ரோடு,
சங்கரன்கோவில்.
கைபேசி எண்: 83446 84778.

$$$

Leave a comment