-கருவாபுரிச் சிறுவன்
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது...

ஒரு காவல் நிலையம். பரபரப்பான ஒரு நாள். ஒடுக்கிய கண்கள் அழுக்கு வேஷ்டி ஜிப்பா என ஒரு முதியவர் உள்ளே நுழைகிறார். அவரை ஒரு மணிநேரம். யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
வெளியே செல்வதற்கு வந்த காவலர் என்ன வேண்டும் என அவரிடம் கேட்க, “அய்யா! நான் ஒரு ஏழை விவசாயி.. என்னிடம் இருந்த பசு மாடு காணாமல் போய் விட்டது.. அது வாழ்வாதாரம். 5,6 நாட்கள் ஆகியும் தேடினேன் கிடைக்கவில்லை. அதை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று பிராது கொடுக்க வந்தேன்” என்றார்.
ஏட்டையாவைக் காட்டி அவரிடம் சொல்லும் படி காவலர் கூறிச் சென்று விட, ஏட்டையா டேபிள் அருகில் செல்ல, அவரும் என்ன என்று கேட்டார். அவரிடம் மறுபடியும் முதலில் இருந்து…
“இருய்யா. எஸ். ஐ வரட்டும். அப்படி ஓரமா நில்லு.”
மேலும் இரண்டு மணி நேரம்.
எஸ். ஐ. வர மற்றவர்கள் பார்த்து விட்டு எஸ்.ஐ. கிளம்பும் நேரம் அவர் முன் முதியவர் சென்று நிற்கிறார். அவர் “யாருய்யா நீ” எனக் கேட்க,
“அய்யா நான் ஒரு விவசாயி…..” மறுபடியும் முழுக்கதை.
அவரோ, “மனுஷன் காணாமல் போறதையே கண்டுபிடிக்க முடியவில்லை. நீ மாட்டைக் கண்டுபிடித்து தர சொல்றே” என்கிறார்.
“ அய்யா அதுதான் என் ஒரே வாழ்வாதாரம்” என்று வாயில் துண்டை பொத்திக் கொண்ட முதியவர் சொல்ல…
ஏட்டுவிடம் “இந்த ஆளுகிட்ட எழுதி வாங்கிட்டு அனுப்பிடு” என்று சொல்லிச் சென்றார் எஸ். ஐ.
டேபிள் அருகே வந்த முதியவர் டேபிளில் இருந்த பேனாவை எடுத்து கையெழுத்திட்டு தன் ஜிப்பா பையில் இருந்து வட்ட சீல் எடுத்து பிராதின் பின் பக்கம் குத்தி விட்டு அங்கு கிடந்த சேரில் போய் அமர்ந்தார்.
ஏட்டுக்கு ஒன்றும் புரியாமல் விழித்தார். பிராதின் பின்புறம் பார்த்தவுடன், கைகால் தந்தி அடிக்க தடுமாற்றத்துடன் எழுந்து நின்றார். அதைப் பார்த்த காவலர்களிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அடுத்த பத்தாவது நிமிடம், அனைத்து காவல் அதிகாரிகளும் அங்கு ஆஜர்..
வந்தவர் யார் தெரியுமா? அன்றைய பிரதமர்.
அவரின் அலுவலகத்தில் கிடைக்கப் பெற்ற அஞ்சல் அட்டையில், “ஐயா! எனது வாழ்வாதரமான மாடு காணவில்லை. தேடித் தர காவல் நிலையத்தில் பிராதை வாங்காமல் கேவலமாக நடத்துகிறார்கள்” என்று எழுதி இருந்தது.
அதைக் கண்டு வருந்தி அந்த காவல் நிலையத்திற்கே நேரில் சென்று கலங்க அடித்தவர் வேறு யாரும் அல்ல, சுதந்திரப் போராட்ட தியாகி, விவசாயிகளின் தோழர் என்று அழைக்கப்படுபவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உத்திர பிரதேச முதல்வராகவும், முன்னாள் பாரதப் பிரதமராகவும் பதவி வகித்து அதற்கு பெருமை சேர்த்த சரண்சிங் தான் அவர்.
இப்படி பசுமை நிறைந்த நிகழ்வுகள் நடந்த இந்த பாரத தேசத்தில், நாட்டின் கடைசிப்பகுதியில் இருக்கும் தென்தமிழக விவசாயிகள் தனக்கு அத்தியாவசிய தேவையான உரிமையுடைய தண்ணீருக்காக சுமார் 60 ஆண்டுகாலமாக நீதி கேட்டு அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறார்கள். செவி கொடுத்து கேட்பார்கள் தான் இல்லை.
வழிகாட்டும் முதலமைச்சர்:
முன்னெல்லாம் எந்த ஒரு விஷயமும் அம்பலத்திற்கு வந்தால் உரிமையை நிலைநாட்ட, உடமையை தனதாக்கிக் கொள்ள இருதரப்பினரும் தன்னிடம் இருக்கும் ஆவணங்களை, நியாவாதங்களை எடுத்து வைப்பார்கள்.
அவற்றை ஆராய்ந்து உண்மைத்தன்மை அறிந்து அம்பலக்காரர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். இது காலந்தோறும் ஏழை, எளிய மக்களுக்கு நடைமுறையில் உள்ள மரபு.
இந்த நிகழ்வினை மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என சைவ சமயத்திலுள்ள நிரந்தர முதலமைச்சர்களில் ஒருவரான தெய்வச்சேக்கிழார் சுவாமிகளும் விரும்பினார்.
ஆளுடைய நம்பிகளாகிய நம்பியாரூரரை தடுத்தாட்கொள்ள விரும்பிய எம்பெருமான் கிழ வேதியர் வடிவம் தாங்கி திருவெண்ணெய்நல்லுார் மன்றத்தில் வாதிடுகிறார்.
அங்குள்ள நியாயபதிகள், “ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்ற(று) அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்” என வேதியர் வடிவில் வந்திருக்கும் சிவபெருமானிடம் சுந்தரர் அடிமைதான் எனச்சொல்வதற்கு உண்டான சான்றினை காட்டுவாயாக எனக் கேட்கிறார்கள். அக்கருத்தினை தெய்வச்சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத்தில் காட்டுகிறார். இப்படி சுந்தர மூர்த்தி சுவாமிகளின் தடுத்தாட்கொண்ட வழக்கு செல்கிறது. இதில் நம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்வென்றால்….
- ஏற்கனவே நடைமுறையில் இருந்திருக்க வேண்டும். – ஆட்சிச் சான்று
- அதற்கான எழுத்து முறை வேண்டும் – ஆவணச் சான்று
- மற்றவர்கள் யாராவது ஒருவர் சாட்சி சொல்ல வேண்டும் – காட்சிச் சான்று
(இம்மூன்று சான்றுகளும் செண்பகவல்லி அணைக்கான விஷயத்தில் தென்தமிழக விவசாய மக்களிடம் வலுவாக இயற்கை வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது).


* உடைந்து போன செண்பகவல்லி அணைக்கு உரிமை கொண்டாடும் கேரள அரசு, எந்த அடிப்படையில் உடைந்து போன அணையை சீர் செய்வதற்கு தடை விதிக்கிறது?
* செண்பகவல்லி அணை அமைந்திருக்கும் பகுதி யாருடைய ஆட்சிக் காலத்தில் இருந்து கேரள அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது?
* இப்பகுதியில் வசிக்கும் அரசியல்வாதிகள் இதனை சிந்துபாத் கதையாக இவ்வளவு காலம் எந்த காரணத்தினால் இழுத்துக் கொண்டே வருகிறார்கள்?
* உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல்வாதிகள் யார்?
-போன்ற கேள்விகள் வாக்களிக்கும் போது மக்கள் மனங்களில் இயல்பாகவே, எழ வேண்டும்.
- செண்பகவல்லி அணையில் விரிசல் ஏற்பட்டு உடைந்த போது அதனை முதன்முதலில் சீர் செய்தது அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் தான் என்பது வெளிப்படை. இது ஆட்சிச் சான்று.
- செண்பகவல்லி அணை கட்டப்பட்ட போது, அது உட்பட இங்குள்ள காடுகள் அனைத்தையும் சிவகிரி ஜமின்தார்கள் தான் பராமரித்தார்கள் என்பதற்கு ஆங்கிலேயே அரசு புதுப்பித்த மாவட்ட விபரம் – ஆவணச் சான்று.
- இந்த செண்பகவல்லி தொடர்பான செய்திகள் யாவும் தொடர்ந்து நாளிதழ்களில் காலந்தோறும் பிரசுரமாகி வருகின்றன.- காட்சிச் சான்று.
நிறைவாக, செண்பகவல்லி அணை தொடர்பான வலுவான ஆவணங்கள் தென் தமிழக விவசாயப் பெருமக்களிடம் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு கவனம் கொடுத்து, சிக்கலைத் தீர்க்க வேண்டும்.
வாழ்க பாரதம்! வளர்க மணித்திருநாடு!
$$$