நீலகண்ட சிவம் போற்றிய கோமதியம்பிகை 

-கருவாபுரிச் சிறுவன்

அருணகிரிநாதரும், தமிழிசை மூவரும், சங்கீத மும்மூர்த்திகளும் இசை வழிபாடு செய்தனர். இந்தத் திருநெறியை 19ஆம் நூற்றாண்டில் மக்களிடம்  பரப்பியவர்களில் முக்கியமான பிரம்மஸ்ரீ  நீலகண்ட சிவம் என்னும் மகானைப்பற்றி  கோடிட்டுக் கட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.

பிறப்பு: நாகர்கோவிலை அருகிலுள்ள  வடிவீஸ்வரத்தில் தெய்வீக மார்க்கத்திலும் இசைக்கலையிலும் சிறந்து விளங்கிய சுப்பிரமணிய அய்யருக்கு திருமகனாக 1839 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இவர் சிவநெறியிலும், முருக வழிபாட்டிலும் அதீத ஈடுபாடு கொண்டததால்  தன் மகனுக்கு  ‘சுப்பிரமணியன்’ என்று பெயர் சூட்டினார்.

இவர் இளமை முதலே ஆன்மிகத்திலும், கோயில்களில் நடைபெறும் பஜனையிலும் ஆர்வமுடன் கலந்து  கொண்டார். தனது ஐந்தாம் வயதிலே பஜனைப் பாடல்களுக்கு புதிய மெட்டமைத்துப் பாடி பலரையும் வியக்க வைத்தார். முத்துத்தாண்டவருக்கு சீகாழி தோணியப்பர் ஆலய அம்மை அருள் புரிந்ததைப்போல, சுப்பிரமணியன் பத்மநாபபுர கோயில் வாகன அறையில் கடுந்தவம் இயற்றி,  பாடும் திறமையைப் பெற்றார். 

இல்லற வாழ்வு: நீலகண்ட சிவன் செல்வச் சிறப்பு மிக்க தாணுஐயரின் மகளான லட்சுமியைத் தனது 14 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய பெயரைப் போற்றும் படியாக நான்கு மகன்களையும் ஒரு பெண்பிள்ளையையும் பெற்றார்.  பூர்வாசிரமமாகவே சிவநெறியில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக  தன் குழந்தைகளுக்கும் சிவ நாமங்களையே  சூட்டி மகிழ்ந்தார். 

உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவராகவும், சட்டத்துறையிலும் பல வருடங்கள் பணியாற்றினார். இருப்பினும் இவரது மனம் ஆதி பரம்பொருளையே நாடியது. அவரின் பிரபாவத்தை எங்கும் பரப்புவதையே  நோக்கமாகக் கொண்டிருந்தது. இவரது இல்லத்திற்கு சுவாமி விவேகானந்தர் வந்து இவருடன் அளவளாவி மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர்க்காரணம்: இல்லற வாழ்வினைத் துறந்து  தெய்வத் தொண்டில்  தம்மை முழுமையாக ஆட்படுத்திய பிறகு ‛நீலகண்ட சிவம்’ என்ற சிறப்புப்பெயர் பெற்றார்.  ஆனால், இவர் தன்னை  ‘நீலகண்ட தாசன்’ என்று அழைப்பதையே விருப்பினார். 

தனது பாடல்களில் “நீலகண்ட, நீலகந்தன், நீலமணி சுந்தரன், நீலமை மணிகண்டன், நீலநாம மணிசுந்தரன் என பல முத்திரைகளை தமது பாடல்களில் பயன்படுத்தியுள்ளார்.

ஆதரவு: நீலகண்ட சிவனை திருவாங்கூர், கொச்சி, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை ஆண்ட மன்னர்கள் தங்கள் அரசவைக்கு அழைத்துக் கௌரவப்படுத்தினர். திருவாங்கூர் மகாராஜா இவருக்கு  ‘அரியும் கொப்பும்’ என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்தார். பல மகாராஜாக்கள் இவர் மீது அன்பும், அபிமானமும் கொண்டிருந்தாலும், இவர் இறைவனைத் தவிர வேறு யாரையும் துதித்துப்பாடவில்லை. மேலும், குடும்பத்தின் வாழ் நாள் முழுமைக்கும் தினமும் இலவசமாக அரிசி மற்றும் உணவுப் பண்டங்களை அளித்தனர். 

தமிழிசைக்குத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த நீலகண்ட சிவன் தன்னைத் தேடி வந்த பொன், பொருளை அறவே வெறுத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றிய இவர் எந்தக் குருவிடம் குருகுலவாசத்தில் இசைப்பயிலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பஜனை முறையைப் பின்பற்றி பாடல்களை இயற்றிப் புகழ் பெற்றார்.

தெய்வீக  ஈடுபாடு: இவர் தியாகராசரைப் போல பலநூறு பாடல்களை இயற்றினாலும், 164 பாடல்களே கிடைத்துள்ளன. சிவபெருமான், விநாயகர், முருகன், சரஸ்வதி , அம்பிகை, திருமால் போன்றோரின் மீது பல பாடல்கள் பாடியுள்ளார்.   மேலும் தென்னிந்தியாவிலுள்ள பல தலங்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களின் மீது பல பாடல்களையும் இயற்றியுள்ளார். இவை தமிழ், சமஸ்கிருத மொழியிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விநாயகர் மீது 15 கீர்த்தனைகளையும், முருகன் மீது 14 கீர்த்தனைகளையும், சிவன் மீது 9 கீர்த்தனைகளையும், ஒரு தோடயப் பாடலையும், ஒரு பதத்தினையும், நாட்டுப்புற இசைமெட்டில் பல பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரின் சிறப்பு வாய்ந்த பாடல்கள் சில:

1. ஆனந்த நடமாடுவார் – பூர்விகல்யாணி – ரூபகம்

2. சண்முகனே – காபி –ரூபகம்

3. மங்கலம் மால்மருகர்க்கு – மத்தியமாவதி – ஆதி

இவருடைய  முருகன் மீது இயற்றப்பட்ட  கீர்த்தனைகளில் திருப்புகழின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது.

இயற்றிய நூல்கள்: தமிழிசை நால்வரின் புகழைப் பரப்ப  ‘நால்வரின் சரித்திரம்’ என்ற நூலையும், அறுபத்து மூன்று நாயன்மார்களின் மீது அரிகதை வடிவில் பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும்  ‘தீரநிசாதர் சரித்திரம்’ முதலான இருபத்து ஆறு இசைத் தொகுதிகளை இயற்றியுள்ளார்.

மேலும், இவரது மகன்களும், சீடர்களும் இவரின் பாடல்களைப் பல்வேறு நூற்களாக வெளியிட்டனர். திருநீலகண்டபோதம், ஞானஸ்கந்தய்யர், கீர்த்தனைமாலை, மகாத்மா ஸ்ரீ நீலகண்ட சிவன் கீர்த்தனைகள் இரண்டு பாகங்கள் போன்ற பல்வேறு நூற்களாக இவரின் பாடல்கள் வெளியிடப் பெற்றுள்ளன.

நிறைவு: 1900 ஆம் ஆண்டு நீலகண்ட சிவன் தனது இறுதி நாட்களை முன்கூட்டியே அறிந்து சொன்னார். தவத்தில் சிறந்த முனிவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய  ‘கபாலமோட்சம்’ இவருக்குக் கிட்டியது.

அற்புத நிகழ்வுகள்: வடலூர் ராமலிங்க வள்ளல் சுவாமிகள்  திருவருட்பா எழுதுகையில் தண்ணீரால் விளக்கு எரியச் செய்தது போல, இவர் பத்மநாபபுரம் கோயிலில் இறைவனைத் துதிக்க தண்ணீர் விட்டு திருவிளக்கினை எரியச் செய்தார்.

2. திருநெல்வேலி அருகேயுள்ள குமரக்குளம் என்ற ஊரில் மக்கள் வறட்சியால் வாடியபோது, “வளர்த்த தரு உருவகம் மார்த்தாண்டேசுவரனே” என்ற பாடலைப் பாடி  மழை பெய்ய வைத்து  வறட்சியை  நீங்கினார்.

3. சிறுவன் ஒருவன் காய்ச்சலால் துன்பமுற்ற போது  போது, நீலகண்ட சிவன், பஞ்சாட்சர மந்திரத்தைப் பாடி அந்நோயினைக் குணப்படுத்தினார்.

4. இவர் தமது வாழ்வின் இறுதிக்குள் 108 தலங்களுக்கும் சென்று பாடல் புனைந்துள்ளார். அவற்றில் நமது  சங்கரன்கோவில் கோமதியம்பிகை மீதும் இயற்றப்பட்ட கீர்த்தனைப் பாடல் ஒன்று குறிப்பிடத்தக்கது.  இதோ அப் பாடல்: 

ராகம்: ஸாவேரி
தாளம் : மிஸ்ர சாபு 

பல்லவி 

சரணம் சரணம் கோமதி சங்கரி  நீயே 
சரணம் சரணம் கோமதி 

அனுபல்லவி 

கருணை புரியிது தருணம் நீயலது 
கதியறியேனிள மதிநுதல் சிவையே.... சரணம் 

சரணங்கள் 

உலகம் புகழ் விலாசனி - புன்னை வநேச
ருடனமர்ந்த வுலாசினி, மலையரசர்க்குச் சொந்த 
மகளாயருளி வந்த –

(மத்திம காலம்)  
மாயமில் நிசத்தியாய கில சித்தி 
மகாதேவர் வசத்திற்றிகழும் பராசக்தி .... சரணம் 

அவனி யோ ரேத்துஞ் சுந்தரி சங்கர நாரா யணனுமாயினோனந்தரி 
தவமுடையார்க்கெதுவுந் தாரகமாயுதவுந் 

(மத்திம காலம்)
தற்பரமே யும்பர் கற்பகமே யன்பர் 
தமக்கிரங்குந் தாயே யெமக் கருளுவாயே... சரணம் 

ஒன்றிலும் தீராப் பெருநோய் - மைந்தரில்லாமை 
ஒழியாப் பேய் தீர்த்தருளும் தாய்
எந்றெங்கும் புகழ் பெற்ற யெவருஞ் செய்யுமன்புற்றா

(மத்திம காலம்)
யிம்மை மறுமைக்கும் அம்மையாய்ப் புரக்கு
மீசர் மனோகரி கேசவ ஸோதரி .... சரணம் 

ஆதி மூலப்பிரகிருதியே அனாதி வேதாத், தரும் பொருட்சிவநிதியே 
நீதி சுகரூபிணி நித்யானந்த பூரணி

(மத்திம காலம்)
நின் பெருமை பெரு தன்பர் தொழும் திரு
நீலகண்டர் ஜாயே பாலனஞ் செய்வாயே.... சரணம்  

நிறைவாக, 

இப்பெருமான் இயற்றிய கீர்த்தனைப்  பாடல், நமது தளத்தில்  ‘கோமதியே குல தெய்வம்’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியீடு செய்யப்பட்ட தலப்பாடல்களையும் ஒன்றாக இணைத்து ஆர்வமுள்ள  அன்பர்கள் மனமுவந்து இசைதட்டுகளாக உருவாக்கி அன்னை கோமதியம்பிகையின் பாதத்தில் சமர்பித்து  அனைவரையும் அவளின் அருளுக்கு பாத்திரமாக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.

ஹர ஹர நமபார்வதி பதியே … ஹர ஹர மகாதேவ 

சித்சபேசா… சிவ சிதம்பரம்

தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 

வாழ்க பாரதம்… வளர்க மணித்திருநாடு 

$$$

Leave a comment