-ஸ்வயம்சேவகன்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டை ஒட்டி, இன்று (நவ. 2) முதல் நவ. 23 வரை வீடுதோறும் சென்று மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தப்படுகிறது. அதையொட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம் இது...

ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ தோன்றி நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. 1925ஆம் ஆண்டு விஜயதசமி அன்று நாகபுரியில் சிறிய அளவில் நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தற்போது உலகின் மாபெரும் தன்னார்வ, சமுதாய அமைப்பாக வளர்ந்துள்ளது.
நிறுவியவர்:
சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்.) அறிய விரும்பும் நீங்கள் இதை நிறுவிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரை அறிவது அவசியம். மஹாராஷ்டிராவிலுள்ள நாகபுரியைச் சார்ந்த ஹெட்கேவார் அன்றைய காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்தவர்; சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்; அதற்காக, இரண்டு முறை (1921, 1930) சிறைவாசமும் அனுபவித்தவர்.
ஆனாலும், சமுதாயத்தை வலுவுள்ளதாக ஒருங்கிணைக்காமல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவது விழலுக்கு இறைத்த நீராகி விடும் என்பதை உணர்ந்தார். அதையடுத்து, சமுதாயத்தை வலுப்படுத்தும் வகையில், ஓர் இயக்கத்தை 1925இல் ஆரம்பித்தார். அதுதான் இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். ஆரம்பம்:
சுதந்திரம் அடையப் பாடுபடுவது, சுதந்திரத்திற்குப் பின் தேசம் உயர்ந்த நிலையை அடைவது, சமுதாயத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது ஆகியவை ஒன்றுபட்ட ஹிந்து சமுதாயத்தினால் மட்டுமே சாத்தியமாகும் என்பது டாக்டர் ஹெட்கேவாரின் தெளிவான சிந்தனை.
ஜாதி, மொழி, சமயம், மாநிலம், பொருளாதார நிலை ஆகியவை நமது பன்முகத் தன்மைகள். அவற்றால் வேறுபட்டுப் பிரிந்து கிடந்த பாரத சமுதாயத்தை மீண்டும் ஹிந்து தர்மத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கும் நோக்குடன் சங்கத்தைத் தொடங்கினார் டாக்டர் ஹெட்கேவார்.
ஹிந்துத்துவம் என்பது ஒரு வழிபாட்டு முறையோ, மதமோ அல்ல, அது பாரதிய வாழ்க்கைமுறை பற்றிய கண்ணோட்டம்; இந்தச் சிந்தனையின் அடிப்படையில் தான் சங்கம் இயங்குகிறது. இந்த மகத்தான பணிக்கு, மிகவும் திறமையான செயல்வீரர்கள் அவசியம். அத்தகைய செயல்வீரர்களை உருவாக்கிட, டாக்டர் ஹெட்கேவார் சங்கத்தில் உருவாக்கிய எளிய முறையே, தினசரி சந்திக்கும் ‘ஷாகா’ ஆகும்.
சிறந்த மனிதர்களை உருவாக்கும் வழிமுறை:
இந்த உயர்ந்த நோக்கத்திற்காக, நல்ல மனிதர்களை, திறமை மிகுந்த இளைஞர்களை உருவாக்க வேண்டி இருந்தது. அதை உருவாக்கும் கருவியாக ‘ஷாகா’ செயல்முறை அமைந்தது. கிராமம் அல்லது நகரின் ஒரு பகுதியில் தினசரி கூடும் கூடுதலே ஷாகா. இந்த ஷாகாவில் பங்கேற்பவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து சேவை செய்பவர்கள் – அதாவது ஸ்வயம்சேவகர்கள்.
ஷாகாவில் விளையாட்டு, உடற்பயிற்சி, யோகாசனம், சிலம்பம், தேசபக்திப் பாடல்கள், பண்புக்கதைகள், பிரார்த்தனை போன்ற நிகழ்வுகள் அரங்கேறும். இவை ஷாகா வரும் ஸ்வயம்சேவகர்களை நெறிப்படுத்தும்; அவர்களை வலிமையுள்ளவர்களாகவும் திறமையுள்ளவர்களாகவும் உயர்த்தும்.
சங்கம் என்றாலே தேசபக்தி:
ஸ்வயம்சேவகர்களிடம் தைரியம், பொறுமை, வலிமை, ஒழுக்கம், தேசபக்தி, சேவை மனப்பான்மை போன்றவற்றை ஷாகா வளர்க்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் பயிற்சி பெற்றவர்கள் ஷாகாவின் கிளைகளை புதிய இடங்களில் தொடங்குகிறார்கள்.
சங்க ஸ்வயம்சேவகர்கள் தங்கள் வாழ்க்கையில் தேசப்பணிக்கு முன்னுரிமை கொடுப்பவர்களாக மாறிக் கொள்கிறார்கள். பலரும் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியை தேசப் பணிக்காக தாமாக முன்வந்து அர்ப்பணிப்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் சிறப்பான ஒரு செயல்முறையாகும். இத்தகைய தொடர் முயற்சிகளால் சங்கம், சாதாரண மக்களின் அசாதாரண அமைப்பாக மாறியுள்ளது.
சங்க செயல்முறையில் உருவான இவர்களின் நல்ல நடத்தையாலும் தலைமைப் பண்பாலும், சமுதாயத்தில் சங்கத்தின் மீது ஒரு ஆக்கப்பூர்வமான மதிப்பு உருவாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். என்றாலே, தேசபக்தி, தன்னலமற்ற சேவை, ஆன்மிக உணர்வு, தனிமனித ஒழுக்கம் என்ற எண்ணம், சமுதாயத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.
வளர்ந்துவரும் சங்கப் பணி:
எந்தவொரு நற்பணியும், ஆரம்பத்தில் ஏளனம், புறக்கணிப்பு, எதிர்ப்பு, பின்னர் ஏற்றுக்கொள்ளப்படுதல் ஆகிய கட்டங்களைக் கடந்து செல்ல வேண்டும். அதேபோல, சங்கமும் இந்த அனைத்துக் கட்டங்களையும் கடந்து வந்திருக்கிறது. நிறைவாக, சங்கத்தின் உயர்ந்த நோக்கம், சிறந்த செயல்முறை, ஸ்வயம்சேவகர்களின் இணக்கமான நடத்தை, தன்னலமற்ற தேசபக்தி ஆகியவற்றால், சங்கம் சமுதாயத்தின் அங்கமாக ஆகியிருக்கிறது.
இன்று சங்கத்தின் பணி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் அருணாசலப் பிரதேசம் வரை, பாரதத்தின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்துள்ளது. இளைஞர்கள் முதல் முதியோர் வரை, மாணவர்கள் முதல் தொழிலாளர்கள் வரை பலரும் சங்கத்தில் சங்கமிக்கிறார்கள்.
நாட்டிலுள்ள 924 மாவட்டங்களில், 98.3 சதவீத மாவட்டங்களில் சங்கக் கிளைகள் இயங்குகின்றன; மொத்தமுள்ள 6,618 ஒன்றியங்களில் 92.3 சதவீதப் பகுதிகளிலும், 58,939 மண்டலங்களில் (மண்டலம் என்றால் 10-12 கிராமங்களின் குழு) 52.2 சதவீத மண்டலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். கிளைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, நாடு முழுவதும் 51,740 இடங்களில் 83,129 தினசரி ஷாகாக்களும் (கிளைகள்), 26,460 இடங்களில் 32,147 வாராந்தரக் கூடுதல்களும் செயல்பட்டு வருகின்றன.
சேவைப் பணிகள்:
சமுதாயத்தில் ஏதேனும் துயரம் நிகழும்போது ஸ்வயம்சேவகர்கள் இயல்பாக சேவை செய்கின்றனர். இயற்கைச் சீற்றங்கள், விபத்துகள், நோய்ப்பரவல்கள், போர்ப்பதற்றம் போன்ற அவசரச் சூழல்களில் உடனடியாக அந்த இடத்திற்கு ஸ்வயம்சேவகர்கள் விரைகிறார்கள். பேரிடர்க் காலங்களில் சேவை செய்வது மட்டுமல்ல, சமுதாயத்தில் காணப்படும் வறுமை, துன்பம், தீண்டாமை, புறக்கணிப்பு போன்ற அவலங்களை நீக்கவும், தங்கள் திறனுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அரும்பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.
இன்று, சங்க ஸ்வயம்சேவகர்களால் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், சுயசார்பு, மலைவாழ் மக்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல துறைகளில் 1,29,000 சேவைப் பணிகள் நடந்து வருகின்றன.
பாரத சமுதாயம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களை நீக்குவதற்கான போர்க்குரலாகவும் ஸ்வயம்சேவகர்கள் ஒலிக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் செயல்வீரர்களாகவும், நாட்டைக் காக்கும் பாதுகாவலர்களாகவும் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் திகழ்கிறார்கள்.
சங்க குடும்ப அமைப்புகள்:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற ஸ்வயம்சேவகர்கள் பல்வேறு துறைகளில் தனித்துவமான அமைப்புகளை நிறுவி, அங்கும் தேசப்பணியைத் தொடர்கின்றனர். கல்விப்பணியில் வித்யாபாரதி, சேவைப் பணிகளுக்காக சேவாபாரதி, மகளிர் நலனுக்காக ராஷ்ட்ர சேவிகா சமிதி, மாணவர் நலனுக்காக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், தொழிலாளர் நலனுக்காக பாரதிய மஸ்தூர் சங்கம், விவசாயிகளின் நலனுக்காக பாரதிய கிசான் சங்கம், கிராமங்களை முன்னேற்றுவதற்காக கிராம விகாஸ் பரிஷத், சமயப் பணிக்காக விஸ்வ ஹிந்து பரிஷத், இந்துக்களுக்காகப் போராட இந்து முன்னணி, தொழில் துறை உயர்வுக்காக லகு உத்யோக் பாரதி, மாற்றுத் திறனாளிகளுக்காக சக்ஷம், அரசியலில் தேசியத்தை வலுப்படுத்த பாரதிய ஜனதா கட்சி – போன்றவை சங்க ஸ்வயம்சேவகர்கள் செயல்படும் அமைப்புகளில் சில.
இதுபோல சுமார் 40 அமைப்புகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. இவை அனைத்தும் சங்க குடும்பம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அமைப்புகள் அனைத்தின் நோக்கமும், பாரதம் உலக அளவில் சிறந்த நாடாக வேண்டும் என்பதே. அதற்காக, ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்கே உரித்தான திட்டங்களுடன் இயங்குகின்றன. கூட்டுறவு, நுகர்வோர் நலன், கலைத்துறை, வரலாறு, சிந்தனையாளர்கள், சுதேசிப் பொருளாதாரம், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஊடகம் என பல பிரிவுகளிலும் சங்க குடும்ப அமைப்புகளின் சேவைப் பணிகள் தொடர்கின்றன.
உலகம் முழுவதும் சுமார் 60 நாடுகளில் வாழும் பாரத மக்கள் அனைவரையும் பண்பாட்டுரீதியாக ஒருங்கிணைக்கும் பணியும் ‘விஸ்வ விபாக்’ என்ற பெயரில் நடைபெற்ரு வருகிறது.
ஆறு தலைமுறைகள்:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனி மனிதரை முன்னிறுத்தி இயங்குவதில்லை. இங்கு கூட்டு முயற்சியே ஆதாரமாக இருக்கிறது. எனினும் ஸ்வயம்சேவகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட சிறப்பியல்புகளால் சமுதாயத்தில் புகழ் பெறுகிறார்கள்.
சங்கம் இதுவரை ஆறு தலைவர்களைக் கண்டுள்ளது. சங்கத்தின் நிறுவனரான டாக்டர்ஜி என்று அழைக்கப்படும் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார், அமைப்பின் முதல் தலைவராக 1940 வரை வழிநடத்தினார். அவரையடுத்து, குருஜி என்று அழைக்கப்படும் திரு. மாதவ சதாசிவ கோல்வல்கர் இரண்டாவது தலைவராக 1973 வரை சங்கத்தை வழிண்டத்தினார். மூன்றாவது தலைவராக திரு. மதுகர் தத்தாத்ரேய தேவரஸ் (1973 – 1994), நான்காவது தலைவராக பேராசிரியர் ராஜேந்திர சிங் (1994 – 2000), ஐந்தாவது தலைவராக திரு. கு.சி.சுதர்சன் (2000 – 2009) ஆகியோர் வழிநடத்தினர். தற்போது ஆறாவது தலைவராக (2009 முதல்) டாக்டர் மோகன் பாகவத் சங்கத்தை வழிநடத்தி வருகின்றார்.
சுருக்கமாகச் சொன்னால் ஆறு தலைமுறைகளைத் தாண்டி, சங்கம் விஸ்வரூபமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. காலத்திற்கேற்ற மாற்றங்களுடன், நாட்டின் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு, புத்தம்புதிய முயற்சிகளுடன் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்துகொண்டே வருகிறது.
தேசமே தெய்வம்:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பொருத்த வரை, நாட்டுநலனே அடிப்படை; தேசமே தெய்வம். நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் காப்பதே ஒவ்வொரு ஸ்வயம்சேவகரின் கடமை. அது மட்டுமல்ல, உலகின் குருவாக பாரதம் உயர்ந்தோங்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் அனைவரின் கனவு. நாட்டு நலனைக் காக்கும் உறுதிமொழி ஏற்றவர்களாக அவர்கள் தங்கள் துறைகளில் பணியாற்றுகிறார்கள்.
நாட்டிற்காக தாமாக முன்வந்து சேவை செய்பவரே ஸ்வயம்சேவகர். நாடு முழுவதிலும் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் லட்சக் கணக்கான ஸ்வயம்சேவகர்கள் ‘பாரத அன்னை வெல்க’ என்ற முழக்கத்துடன் வீறுநடை போடுகிறார்கள். தேசியத்தை வலுப்படுத்துவதுடன், மக்களைப் பிணைக்கும் சக்தியாகவும் அவர்கள் விளங்குகிறார்கள்.
சமுதாயத்தை முழுமையாக ஒருங்கிணைத்து, நாடு எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இணக்கமான தீர்வு கண்டு, புதிய அமைப்புகளை காலத்திற்கு ஏற்ற விதத்தில் உருவாக்கி, நாட்டில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துவது, சங்கத்தின் அடுத்தகட்டப் பணியாகும்.
1925இல் நாகபுரியில் விதைக்கப்பட்ட சிறு விதை, இன்று உலகம் தழுவிய மாபெரும் அமைப்பாக வளர்ந்துள்ளது. 2025 விஜயதசமி நாளில் தொடங்கி, 2026 விஜயதசமி வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
எத்தனையோ இடையூறுகளையும் தடைகளையும் தாண்டி, ஆயிரக் கணக்கான தொண்டர்களின் பலிதானத்தாலும், உயரிய தியாக வாழ்க்கையாலும் ஆர்.எஸ்.எஸ். இன்று நாட்டின் மனசாட்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த அற்புதமான காலகட்டத்தில், தேசியத்தை வலுப்படுத்தும் பணியில் இணைந்து பணியாற்ற அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, நாம் அனைவரும் இணைந்தால், சாதிக்க இயலாத சாதனைகளோ, எட்ட முடியாத சிகரங்களோ இவ்வுலகில் இல்லை. வாருங்கள்! இந்தப் பொற்காலத்தில், நாம் அனைவரும் கரம் கோர்ப்போம்! நமது அயராத முயற்சிகளால் பாரத அன்னையை உலகின் அரியணையில் அமரச் செய்வோம்!
பாரத அன்னை வெல்க!
$$$
மாற்றம் நிகழ்த்தும் ஐந்தமுதம்:
நூற்றாண்டுத் திட்டம்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஐந்து அடிப்படை விஷயங்களில் பொதுநல விழிப்புணர்வுக்கு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
1. சமூக நல்லிணக்கம்
நமது சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு, கல்வி, வசதிகள், கௌரவம் அனைத்தையும் இழந்தனர். இது முற்றிலும் அநீதியானது, மனிதாபிமானம் அற்றது. இந்த அநீதியை நீக்கி அனைவரையும் ஒருங்கிணைத்து முன்னேறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. சமுதாயத்திலிருந்து தீண்டாமையை, பாகுபாட்டை ஒழிக்க, சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
இயற்கை நமது தாய், அனைத்து உயிரினங்களின் தாய். ஆனால் உலகாயதப் போக்கு அதிகரிப்பதால், இயற்கை தொடர்ந்து சுரண்டப்படுகிறது. மேற்கத்திய வளர்ச்சியை அளவுகோலாகக் கொண்டு வளர்ச்சி காணும் போக்கால் உலகின் சுற்றுச்சூழல் சமநிலை சீர்குலைந்துள்ளது. அந்த சமநிலையை மீட்டெடுக்கும் முயற்சியில், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் ‘சுற்றுச்சூழல்’ குறித்த விழிப்புணர்வையும் செயல்பாட்டையும் உருவாக்க வேண்டியது அவசியம்.
3. குடும்பத்தில் விழிப்புணர்வு
பாரத பாரம்பரியத்தில் குடும்ப அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பாரதீய ஆன்மிகக் கண்ணோட்டத்தில், குடும்பம் என்பது ‘நான் என்பது நாம்’ என்ற பயணத்தின் முதல் படியாகும். இப்போது, நகரமயமாக்கல் அதிகரித்து வரும் சூழலில், அவசரகதியான வாழ்க்கை காரணமாக குடும்பங்கள் சிதைகின்றன. இந்நிலையை மாற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றாக அமர்ந்து, தங்கள் நம்பிக்கைப்படி பஜனை பாடல்களை பாட வேண்டும்; வீட்டில் சமைத்த உணவை சேர்ந்து உண்ண வேண்டும்; கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில், வீட்டில் உள்ள அனைவரிடையேயும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும்.
4. சுயசார்புடைய வாழ்க்கை
பொருளாதார, கலாச்சார பரிமாணங்கள் அனைத்திலும் நாம் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே ‘சுயசார்புடைய வாழ்க்கை’. ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு குடும்பமும் சுதேசி வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும், அப்போதுதான் பாரதம் தன்னிறைவு பெறும். நமது தாய்மொழி, பாரம்பரிய உடை, கலாச்சாரம், நம் சமய மரபுகள் மீது நாம் பெருமிதம் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
5. குடிமக்கள் கடமை:
எந்தச் சூழ்நிலையிலும் அரசியல் சாசன விதிகள், சட்டங்களை மதித்து கடைப்பிடிப்பது குடிமகனின் கடமை. எந்தக் காலத்திலும் சட்டத்தை நமது கையில் எடுக்கக் கூடாது. சிறிய விஷயங்களில்கூட சமூகம், நாடு, என அனைவரையும் கவனத்தில் கொள்வது அவசியம். இந்த எண்ணம் நம்மிடமிருந்து தொடங்கும்போது, அது சமுதாயம் முழுவதும் பரவும்போது, பாரதம் வலுவான நாடாக மாறும்.
இத்தகைய புனிதமான பணியில் இணைவோம்…! இணைந்து சாதனை படைப்போம்…!
தொடர்பு முகவரி:
தென் தமிழகம்:
சாதனா, 73, C/A, சோழபுரம் சாலை,
உறையூர், திருச்சி – 620 003
தொடர்பு எண்: 70107 73623.
வட தமிழகம்:
சக்தி, 1, எம்.வி. நாயுடு தெரு, பஞ்சவடி,
சேத்துப்பட்டு, சென்னை -600 031
தொடர்பு எண்: 90925 05605.
$$$