-கருவாபுரிச் சிறுவன்
திரு. கருவாபுரிச் சிறுவன், கருவலம்வந்த நல்லூரின் சிறப்புகளை எழுதுவதில் மகிழ்பவர். அவரது திருக்கருவை தல புராணம் குறித்த இன்னொரு கட்டுரை இது...

நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.
-திருஞானசம்பந்த நாயனார்
இவ்வுலகில் உள்ள உயிர்த்தொகுதிகளாகிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களை படைத்துக் காக்கும் தொழில்களைச் செய்யும் அதிபர்கள் பிரம்ம விஷ்ணுக்கள். இவர்களுக்கு தந்தை மகமை என்ற உறவு உண்டு.
இவர்களின் தலைக்கணத்தில் உண்டான அறியாமையை அகற்றும் பொருட்டு பரம்பொருள் விண்ணும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்தார். அவ்வடிவத்தின் அடி முடி தேட முயன்று, முதலையும் முடிவையும் காணாமல் கலங்கிய அவர்களின் அகந்தையை நீக்கியருளனார்.
அந்நிகழ்வு நிகழ்ந்த தலமே திருவண்ணாமலை என்பது யாவரும் அறிந்ததே.
கருவையம்பதியும் கஞ்சனுாரும்:
இத்திருவண்ணாமலைக்கு நிகரான அக்னித் தலமாக தென்தமிழகத்தில் திகழ்வது திருக்கருவையம்பதி என்னும் கரிவலம் வந்த நல்லுார்.
நவக்கிரகங்களில் ஒருவராகிய சுக்கிர பகவான் இத்தல இறைவனாகிய களாவன நாதரை பூஜித்து நன்னிலை அடைந்தார். ஆதலால் இத்தலம் சுக்கிர பகவான் அனுக்கிரஹத் தலம் என்றொரு சிறப்பினைப் பெற்றது.
மேலும், சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு வரதுங்க ராம பாண்டியன் என்னும் மன்னன் தலைநகராகக் கொண்டு இந்நகரை நல்லாட்சி செய்து சைவத்தை மேன்மையுறச் செய்தான். அதன் பயனாக, ஆஸ்திக அன்பர்களுக்கு கிடைத்த ஞானப் பொக்கிஷம், திருக்கருவையந்தாதிகள், பிரமோத்திர காண்டம் என்னும் நூற்களாகும்.
கிரகங்கள் வழிபட்ட சோழ நாட்டுத் தலங்களில் சுக்கிர பகவான் பூஜித்த தலம் கஞ்சனுார். திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தர மூர்த்தி சுவாமிகளாலும் பாடப் பெற்ற திருப்பதி இது. இத்தல சிவபெருமானை வழிபாடு செய்த மானக்கஞ்சாறநாயனார், கலிக்காம்பரின் சிலா ரூபங்கள் இங்கு அமையப் பெற்றுள்ளன.
ஹரதத்த சிவாசாரிய சுவாமிகள் இங்கு தான் சைவ சமயத்தை நிருபணம் செய்தார். இன்னும் பல சிறப்புகளைக் கொண்ட இத்தலத்தில் சுக்கிர பகவான் பூஜித்த சிவலிங்கத்திருமேனியை அக்னி பகவானும் வழிபட்டதால் அவருடைய பெயராலே சுவாமியின் திருநாமமும் அமைந்துள்ளது.
இச்சிறப்புகள் கரிவலம் வந்த நல்லுார் பால்வண்ண நாதர் கோயிலுக்கும் இசைந்துள்ளது.
அதனை மெய்ப்பிக்கும் விதமாக, தன் பதிகத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பே, நம்மெல்லாம் உய்யும் பொருட்டு பால்வண்ணரின் திருநாமத்தை நினைவூட்டி சிந்திக்கச் செய்யும் திருநாவுக்கரசரின் தெய்வீக மொழிப்பாங்கு ஈண்டு கண்டு மகிழத்தக்கது. அத்தேவாரப்பாடலை நாவால் பாடி நலம் பெறலாமே…
நாரணனும் நான்முகனும் அறியாதானை நால்வேதத்துருவானை நம்பி தன்னைப் பாரிடங்கள் பணிசெய்யப் பலி கொண்டுண்ணும் பால்வணனைத் தீவணனைப் பகலானானை வார் பொதியும் முலையாளோர் கூறன் தன்னை மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங் கார் பொதியும் கஞ்சனுார் ஆண்ட கோவைக் கற்பகத்தை கண்ணாரக் கண்டு உய்ந்தேனே!
இப்பெருமானை கண்ணாரக் கண்டு வழிபட்டால் பிறவா நிலையை அடைவர். அது திண்ணம் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். இவ்வரத்தை பலரும் கேட்டு பல காலம் தவமிருக்கிறார்கள்.
திருக்கருவை தல புராணம்:
தென்தமிழகத்தில் அக்னித்தலமாக மிளிரும் கரிவலம் வந்த நல்லூர் தலத்திற்கு தமிழில் தல புராணம் வேண்டும் என இவ்வூர் முன்னோர்கள் நினைத்தார்கள்.
அதன்பயனாக, சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தனர் வ. மருதப்பன் செட்டியார், ஆ. மருதப்பன் செட்டியார் என்னும் தனவான்கள். சிவகிரி சேத்துார் ஜமினில் அரசவைக்கவிராயராகவும், எட்டிச்சேரி மலைசாயப்பாடிய சங்குப்புலவர் மரபிலும் உதித்தவர் திருமலை வேற்கவிராயர்.
இவர் தேனி- கம்பத்தில் வசிப்பதை அறிந்து அவருக்கு தக்க உதவிகள் செய்வதாக தனவான்கள் உறுதியளித்து கரிவலம் வந்த நல்லுார் வரவழைத்தார்கள். அதன் பயனாக 1919 ம் ஆண்டு திருக்கருவை தல புராணம் அச்சிடப்பட்டு திருவருள் துணையோடு வெளியானது. இது பற்றிய கூடுதல் செய்தியைக் கொடுப்பது காலத்தின் நியதியாகும்.
மதுரை நான்காம் தமிழ்ச்சங்க அச்சகத்தில் ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்த அறை தீப்பற்றியது. ஆனால் அச்சடிக்க வைக்கப்பட்டிருந்த கருவைத்தல புராண சுவடி மட்டும் தீக்கு இரையாகவில்லை.
காரணம் இது அக்னித்தலத்திற்குரிய தல புராணச்சுவடி. இதனை சாதாரண அக்னி ஒன்றும் செய்யாது. அதுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை என அடியேனின் தாய்வழி தாத்தா சிவபூஜை செல்வர் ப. கிருஷ்ண ஆசாரி அவர்களுடைய தகப்பனார் கூறியதாக கூறினார்கள். விஷயம் தெரிந்த இவ்வூர் சைவப்பெரியவர்களிடமும் விரும்பிக் கேட்டால் இதைச் சொல்லுவார்கள். அத்தகைய சிறப்புகள் பொருந்தியது திருக்கருவை தலபுராணம். இதிலுள்ள பாடல்கள் யாவும் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்தவை. அதிலுள்ள பாயிரப்பாடல் ஒன்று எந்நாளும் நற்சிந்தனைக்குரியது.
பரத்துவம் பரப்பும் பாடல்கள்:
பரம்பொருளின் பரத்துவத்தையும் சைவத்தின் மகத்துவத்தையும் எளிமையான மொழியில் கேட்கும் போதே நெஞ்சமெல்லாம் அஞ்சாமல் திருநீறு அணிந்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
சடையை உடைய சிவபெருமானை அருணகிரிநாத சுவாமிகள் செஞ்சடா அடவி என்பார். அவன் அடியவர்களுக்கு வரம் கொடுப்பதில் சடைக்கவே மாட்டான். அவனுக்கென்று ஒரு தனிப்படை உள்ளது. அடியேனையும் இனி இப்பூவுலகில் படைக்க மாட்டான். ஊழிக்காலத்தில் இவ்வுலகினை விடையாக (ரிஷபம்) கொள்வான்.
அதுபோல மகாவிஷ்ணுவை தனக்கு விடையாக வடிவெடுக்கச் செய்தவன். யானைத்தோலை போர்த்தியவன் அவன் இங்குள்ள களாவனத்திற்கு சொந்தமானவன் என்று அடுக்கடுக்கான கருத்தமைந்த சிலேடை மொழிப்பாடல் பாடி ரசிக்கத்தக்கது. இதோ அப்பாடல்…
சடையானை வரமுதவச் சடையானை தனிச்சூலப் படையானை எம்மை யினிப் படையானை பவமரண விடையானைத் திருநெடுமால் விடையானை மதகயத்தோல் உடையானை திருக்களா வுடையானை பரவுது மால்.
உயிர்களுக்கு உடைமைப்பட்டவள், சிவந்த நிற பட்டாடையை அணிந்துள்ளாள். அவளின் சடையில் கீற்றுடைய நிலவு மிளிர்கிறது. அவள் எப்போதும் வஞ்சகரின் நெஞ்சத்தில் அடைபட மாட்டாள். நூல் போன்று இருக்கும் இடையினை உடையவள். எங்கள் பரம்பொருளின் இடைப்பாகத்தில் இருப்பவள். இனி அவள் அடியேனையும் படைக்க மாட்டாள். உங்களையும் படைக்காமல் இருக்க யாம் கண்ட உபாயத்தை தேடிக் கொள்ளுங்கள் என நமக்கு முன்னோடியாக அபிராமி பட்டர் பிராட்டியை போற்றிப் பாடிப் பரவுகிறார். அந்த தமிழ்ச் சுவையையும் பருகுங்கள்.
உடையாளை ஒல்குசெம் பட்டு உடையாளை ஒளிர்மதிச் செஞ் சடையாளை வஞ்சகர் நெஞ் சடையாளை தயங்கி நுண்ணூல் இடையாளை எங்கள் பெம்மானின் இடையாளை இங்கு என்னைப் படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.
நிறைவாக, நம் சற்குரு நாதர்களில் ஒருவராகிய தெய்வச்சேக்கிழார் சுவாமிகள் ‘ஆனாய நாயனாரின் குழலோசை பொய் அன்புக்கு எட்டாத பொற்பொதுவில் நடம் புரியும் ஐயன் திருச்செவியில் அருகு அணையப் பெருகியது’ என அவருடைய புராணத்திற்கு கட்டியம் கூறுவார். அக்கருத்தை நேர்மாறாக வஞ்சகர் நெஞ்சிற்கு உடன்பட மாட்டாள் உமையவள் என்பார் அபிராமி பட்டர்.
பிறவா நெறியை விரும்புபவர்கள் பொய் பேசாமல், வஞ்சகம் இல்லாமல் இவ்வையகத்தில் வாழ வேண்டும். வாழ்ந்து காட்ட வேண்டும். அப்படி வாழ்ந்தால் தனிச்சூலப்படையை உடையவன் உடையவளுடன் அருள் செய்து நமக்கு மட்டுமல்ல… நம்மை சார்ந்தவர்களுக்கும் தாமதமின்றி கேட்கும் வரத்தினை வழங்குவான் என்று உறுதியாகக் கூறி இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக.
திருச்சிற்றம்பலம்
வாழ்க பாரதம்! வளர்க மணித்திருநாடு!
$$$