-வ.மு.முரளி
பொருள் புதிது- தீபாவளி மலரின் ஆறாம் இதழ், நமது இணையதள ஆசிரியர் திரு. வ.மு.முரளி அவர்களின் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு சிறப்புக் கவிதை…

.
எண்ணிய நன்மைக் காக
தன்னையே ஈந்த மன்னன்
புண்ணியன் பாகீ ரதனின்
புனிதமா தவத்தி னால்தான்
விண்ணிலே வீற்றி ருந்த
கங்கையாம் தேவ நங்கை
மண்ணிலே பொங்கி வந்து
மாபெரும் நதியாய் ஆனாள்!
தவமுனி கபிலர் இட்ட
சாபத்தால் மடிந்த முன்னோர்
அவநிலை மாற்ற வேண்டி
சாதகம் புரிந்த மைந்தன்,
ரவிகுல திலக னான
இளையவன் பெயரைச் சொன்னால்
சிவனது அருளி னாலே
சீரிய தன்மை ஓங்கும்! 1
விருத்திர அசுரன் பெற்ற
விந்தை யாம்வரத் தினாலே
வருத்திய அரக்கர் கூட்ட
வலிவினால் அகிலம் மாய,
அருந்திறல் தேவர் கூட்டம்
அலைந்திட்ட காலம் தன்னில்
பெருந்தவ முனிவ ரான
ததீசி தன்னை ஈந்தார்!
அவரது உடலில் பெற்ற
முதுகெலும் பதனால் செய்த
நவமிகு வஜ்ரம் போன்ற
நற்றுணை பெற்ற தாலே
புவனத்தைக் காத்தான் இந்திரன்,
புன்மைகள் அழியச் செய்தான்!
அவலத்தை நீக்கத் தன்னை
அளித்தவன் என்றும் காப்பான்! 2
பாரதப் பெரும்போர் தன்னில்
பாண்டவர் பக்கம் நின்ற
மாரத வீரன் கண்ணன்
மாண்புறு திட்டம் தந்தான்!
சூரர்கள் சூழ்ந்த போதும்
சுயத்தினை இழந்திடாமல்
தீரனாய் சங்கற் பித்து
திடமுடன் தர்மம் காத்தான்!
அனைவர்க் கும்உரி யவன்தான்
ஆயினும் நெறியில் நின்றான்!
வினைவலி தன்னை நீக்கும்
விந்தையைத் தானே செய்தான்!
நினைந்தவர் உள்ளம் தன்னில்
நிலவிடும் ஒளியாய் வந்தான்!
முனைமுகம் எதிர்த்து நின்றான்,
முழுமுதற் கடவுள் ஆனான்! 3
அதர்மமே வடிவாய்க் கொண்ட
அன்னியர் ஆட்சியின் கீழ்
சுதர்மமே சுணங்கிப் போக,
சுதந்திரம் சுண்ணாம் பாக,
மதவெறி கொண்ட தீயோர்
மாதரைக் கொடுமை செய்ய
விதிவசக் கெடுதி எல்லாம்
விளைந்திட்ட காலம் தன்னில்,
ஒருபெரும் வீரன் வந்தான்
ஒற்றுமை தன்னைத் தந்தான்!
அரும்படை அமைத்து மாற்றான்
சதிகளைச் சதிரில் வென்றான்!
இரும்பென சீலம் கொண்டான்,
இடியென பகைவர்க் கானான்!
செருக்கினை சிவனாய் வென்றான்
ஜெயமது தந்தோன் வாழ்க! 4
மூத்தவர் பாவம் நீங்க
முனைந்த தோர்தவத் தினாலே
காத்திடும் கங்கை தோன்றி
களிப்பினை நல்குகின்றாள்!
சாத்திரம் கூறும் தியாக
சமர்ப்பணம் செய்த என்பால்
ஆத்திர அசுரர் தம்மை
அழித்தனர் தேவர் அன்று!
ஆர்த்திடும் பகை நடுங்க,
அரியநல் தர்மம் பேண,
போர்த்திறம் அமைத்தான் கண்ணன்-
பாரதம் பிழைத்த தம்மா!
சீர்ப்பெரும் நன்மை நல்கும்
சிறப்புறு தேசம் காக்க,
கூர்ப்பெரும் வாளெ டுத்தான்
குவலயம் நிலைத்த தம்மா! 5
உலகம் நலமுடன் திகழ
உயர்ந்தவை ஓங்கிடல் வேண்டும்!
உலகம் அறத்துடன் நிற்க
உயர்ந்தவர் ஈந்திடல் வேண்டும்!
உலகம் பயனுற நல்லோர்
உறுதவம் உதவிடும் என்றும்!
உலகம் காத்திட நல்லோர்
உயிரையும் அளிப்பர் என்றும்!
உலகம் அறமுடன் திகழ
உரியவர் முனைவார் என்றும்!
உலகம் காத்திட வீரர்
உறுதியாய்த் துணிவார் என்றும்!
உலகம் காத்திட நல்லோர்
உதவிட நிற்பார் என்றும்!
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு!
உடனே உணர்வது நன்று! 6
உலகைப் புரக்கும் குணங்கள னைத்தும்
உறுப்பெனக் கொண்டது சங்கம்!
உலகைக் காக்கும் விரதம் பூண்டு
உழைப்பது சேவகர் சங்கம்!
கன்னல் போலும் தேசியம் இனித்திட
கேசவர் அமைத்தது சங்கம்!
தன்னலமின்றித் தாமாய் உழைக்கும்
சேவகர் சேர்ந்தது சங்கம்!
இன்னல் நீக்கிட, இளமை மிளிர்ந்திட
இணைந்தவர் பயில்வது சங்கம்!
நன்னயம் மிக்க தொண்டரைக் கொண்டு
தாயகம் காப்பது சங்கம்!
உலகம், தேசம், தர்மம் வாழ,
உரத்துடன் நிற்பது சங்கம்!
உலகின் குருவாய் பாரதம் காண
உறுதியை ஏற்றது சங்கம்! 7
- நன்றி: விஜயபாரதம்- தீபாவளி மலர் 2025
$$$
One thought on “தானாய் உழைக்கும் சேவகர் சங்கம்”