-திருப்பூர் கிருஷ்ணன்
பொருள் புதிது- தீபாவளி மலரின் மூன்றாம் இதழ், அமுத சுரபி மாத இதழின் ஆசிரியரின் தீபாவளி மலர் பற்றிய இனிய கட்டுரையின் மீள்பதிவு…

ஆண்டுதோறும் என் தீபாவளி இலக்கிய தீபாவளிதான். தீபாவளி மலர் தயாரிப்பது, தயாரிக்கும் மலருக்காக படைப்பாளிகளிடம் படைப்புக் கேட்பது, என்னிடம் படைப்புக் கேட்ட மற்ற இதழ்களுக்கு கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை எழுதுவது என, தீபாவளி என்றாலே கண்டிப்பாய் வேலைப்பளு கூடும் காலம்தான்.
ஆனால் அவ்விதம் வேலைப்பளு கூடுவதில் தான் எத்தனை சந்தோஷம்!
கூடுதல் வேலைப்பளுவைச் சமாளிக்கக் கையாளும் உத்திகளும் பல. தொலைபேசிப் பேச்சில் நேரம் வீணாவதைத் தவிர்த்தாக வேண்டும். பல முக்கியமான பிரமுகர்கள் பேசும்போது கெளரவமான உபாயத்தின் மூலம் அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும்.
எனவே வேலை மிக அதிகமாக இருக்கும் காலத்தில், முந்தின நாள் இரவே என் மனைவியிடம் நாளை நான் மெளனம் என்று சொல்லி விடுவேன்.
மறுநாள் எனக்கு வரும் தொலைபேசி அழைப்பாளர்களிடம் என் மனைவி ‘நான் மெளனம்’ என்பதைச் சொல்லிக் கொண்டிருப்பாள். அமைதியாக வீட்டிலேயே இருந்து ஏராளமான எழுத்து வேலைகளை முடித்துவிடுவேன்.
(மெளனவிரதம் இருக்கும்போது வேலை செய்வதற்கு நமக்குக் கூடுதல் நேரம் கிடைக்கிறது என்பதோடு, நம் ஆற்றலே கூடுகிறது என்பதும் நான் அனுபவத்தில் கற்ற பாடம்.)
ஆனாலும் ஒரே ஒரு பெண்மணியிடமிருந்து தொலைபேசி வந்தால் மட்டும் என் மெளன விரதம் கைவிடப்பட்டுவிடும். அந்தப் பெண்மணி திருப்பூரில் வசித்த என் தாயார்.
என் தாயாருக்கு நான் மெளன விரதம் இருப்பதை அறிந்தால் ஏதோ என்னை நானே வருத்திக் கொள்வதுபோன்ற எண்ணத்தில் ஒரு பதற்றம் ஏற்படும். அந்தப் பதற்றத்தை அவரிடம் தோற்றுவிப்பதை நான் விரும்புவதில்லை.
(தொண்ணூறு வயது நிறைவாழ்வு வாழ்ந்த என் தாயார் காலமாகிச் சில வருடங்கள் ஆகின்றன.)
‘தீபம்’ மாத இதழில் சில ஆண்டுகள், பின்னர் ‘தினமணி கதிரி’ல் சுமார் 25 ஆண்டுகள், அதன்பின்னர் சுஜாதாவின் ‘அம்பலம்’, பிறகு ‘சென்னை ஆன்லைன்’ ஆகிய இணைய இதழ்களில் ஆசிரியராகச் சிலச்சில வருடங்கள், தற்போது இருபது ஆண்டுகளாக ‘அமுதசுரபி’யில் ஆசிரியர் பணி… என என் பணிவாழ்வின் எல்லா தீபாவளிகளிலும் மலர்களை வெளியிட்ட அனுபவம்தான் எத்தனை சுவாரஸ்யமானது!
நா.பா. ‘தீபாவளி மலருக்கு எழுத்தாளர்களிடம் படைப்புக் கேட்டு எழுதும்போது, கதை, கவிதை, கட்டுரை எனக் குறிப்பிட்டுக் கேட்கக் கூடாது’ என்பார்.
`தங்கள் எழுத்தோவியம் ஒன்றை அனுப்புங்கள்` என்றே கேட்க வேண்டும் என்பார். `அவர்கள் விரும்புகிற வடிவத்தில் தங்கள் படைப்பை அனுப்பட்டும், அப்போதுதான் அது சிறப்பாக அமையும்` என்பது அவரின் கோட்பாடு.
ராஜம் கிருஷ்ணன், ஆர்.சூடாமணி, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், வண்ணதாசன், வண்ணநிலவன், தேவகோட்டை வா.மூர்த்தி, ஜெயந்தன் போன்றோரெல்லாம் நா.பா.வின் அபிமான படைப்பாளிகள். இவர்களுக்கெல்லாம் படைப்புக் கேட்டு கடிதங்கள் போகும்.
தீபத்தில் என்னுடன் பணியாற்றியவர்களில் ஒருவர் தீபம் எஸ். திருமலை. இன்னொருவர் அச்சுக் கோப்பாளர் ராஜதுரை. தம் இலக்கிய இலக்கண நுண்ணறிவின் காரணமாக நா.பா.வின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் ராஜதுரை.
அவரது இலக்கிய அறிவு என்பது பெரிதும் தீபம் படைப்புகளை அச்சுக்கோக்கும் அனுபவத்தில் அவரே விரும்பி உருவாக்கிக் கொண்ட அறிவு.
எந்த எழுத்தாளரோடும் சமமாகப் பேசி அவரது எழுத்தைப் பற்றி விவாதிக்கும் அளவு அவருக்கு இலக்கியத் தேர்ச்சி இருந்தது.
நா.பா. எழுத்தின்மேல் அவருக்கிருந்த மரியாதை அபரிமிதமானது. திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்து சில ஆண்டுகள் முன்னால் மறைந்தார் அவர்.
தீபம் தீபாவளி மலருக்குப் படைப்புகள் வந்தவுடன் கையெழுத்துப் பிரதியிலேயே படித்து அவற்றைப் பற்றி நானும் திருமலையும் பேசி மகிழ்வோம். எங்கள் பேச்சில் ராஜதுரையும் கலந்துகொள்வார்.
எங்கள் கருத்தை ஒரு மெல்லிய முறுவலுடன் கூர்மையாக நா.பா. கவனித்துக் கொண்டிருப்பார். பிறகு நானும் நா.பா.வுமாக மாலை காரில் ஏதேனும் கூட்டங்களுக்குப் போகும்போது அந்தப் பயண நேரத்தில், தீபாவளி மலர்ப் படைப்புகள் பற்றிய எங்களின் தனிப்பேச்சு தொடரும்.
கே.ஆர். வாசுதேவன், ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் முயற்சியில் ராம்நாத் கோயங்கா அழைப்பின் பேரில் தினமணி கதிருக்கு நா.பா. ஆசிரியரானார். அப்போதும் நா.பா.வின் மேற்பார்வையில் தினமணி கதிர் தீபாவளி மலர்களைத் தயாரித்திருக்கிறேன்.
கி.கஸ்தூரிரங்கன் தினமணி கதிர் ஆசிரியராகப் பொறுப்பேற்ற போது அவரின் மேற்பார்வையிலும் என் தயாரிப்பில் மலர்கள் வந்ததுண்டு. மலர்த் தயாரிப்பு என்பது கடுமையான பணிதான். ஆனால் உல்லாசமான பணி.
சி.ஆர்.கண்ணன் என்கிற அபர்ணா நாயுடு, நவீனன், பி.ஏ.தாஸ், `நடைபாதை` நாவல் புகழ் இதயன், வாண்டுமாமா என்கிற கெளசிகன், ஓவியர் தாமரை, லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் ஜெயன் (பிரளயன் நாடகங்களில் நடிக்கும் சகோதரி பிரேமாவின் தந்தை), அமுதன்மைந்தன் என்ற புனைபெயரில் எழுதும் செல்லப்பா, ராமநாதன் என எல்லோரும் கதிர் தீபாவளி மலருக்காக இரவும் பகலும் பணிபுரிவோம். தளர்ச்சி என்பது யாருக்கும் ஒருசிறிதும் தெரியாது.
திடீரென டிரேசிங் பேப்பர் குழலை எடுத்துக் கொண்டு சிலம்பாட்டம் ஆடி உற்சாகம் ஊட்டுவார் ஜெயன். அலுப்பே இல்லாமல் பணிபுரிய ஆசைப்படுபவர்கள் தாமரையுடன் பணிபுரிய வேண்டும். சிறந்த நடிகர். இயக்குநர் அருண்மொழியின் `ஏழாவது மனிதன்` உள்ளிட்ட சில படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். அவர் கிடைக்கும் இடைவேளை நேரங்களில் பல நகைச்சுவை வசனங்களை நடித்துக் காட்டி தீபாவளிமலர் சபையைக் கலகலப்பாக்குவார்.
நவீனன், பி.ஏ.தாஸ், கெளசிகன் எல்லோரும் வயதை மறந்து இளைஞர்களாகி விடுவார்கள். அன்று அந்தக் குழுவில் உண்மையில் நான்தான் இளைஞன். ஆனால் எல்லோரும் எனக்குத் தம்பிகள் போல் தோன்றும்படி இளமைத் துடிப்புடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நிஜத்தில் நாங்கள் ஒரு குடும்பம் போல பழகிவந்தோம்.
ஒருநாளைக்கு பன்னிரண்டு மணிநேரம் கூட உழைப்போம். ஆனால் உழைத்தது தெரியாமல் ஆனந்தமாக உழைத்திருப்போம். தீபாவளி வருவதற்குள் தீபாவளி மலர்ப் பணியை முடித்து மலரை விற்பனைக்குக் கொண்டுவந்தாக வேண்டும் என்ற காலக் கட்டாயத்தால் விளைந்த கடின உழைப்பு.
ஆனால் நாட்டுப்பாடல் பாடிக்கொண்டே நாற்று நடுவது மாதிரி, தாமரை, ஜெயன் போன்றோரின் நகைச்சுவைப் பின்னணியில் நடைபெறும் அலுப்பில்லாத வேலை இன்னும் கூடத் தொடராதா என்று தான் இருக்கும்.
நான் எந்த மலர் தயாரித்தாலும் கட்டாயம் சுஜாதாவிடம் ஒரு கதை கேட்பேன். சுஜாதா ஒரு தடவை கூட தர மறுத்ததில்லை. தராமல் இருந்ததில்லை. தாமதமாகத் தந்ததும் இல்லை.
தொலைபேசியில் மிகச் சுருக்கமாகப் பேசுபவர் அவர். அவரது வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம். தன் நேரத்தை வெட்டிப் பேச்சில் அவர் வீண் செய்ததில்லை.
நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டதும் `ரெண்டு நாள்ல தரேன்பா!` என்பார். இரண்டே நாட்களில் அவரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, `ஆள் அனுப்பி வாங்கிக்கப்பா!` என்பார். நேர நிர்வாகம், பணி ஒழுங்கு போன்றவை குறித்து இன்றைய இளைஞர்கள் சுஜாதாவிடம் பாடம் கற்க வேண்டும்.
இப்போது பல ஆண்டுகளாய் அமுதசுரபியின் ஆசிரியராக அமுதசுரபி தீபாவளி மலர்களைத் தயாரித்து வருகிறேன். சுஜாதா இருந்த வரை நான் பொறுப்பேற்ற பின் உள்ள அமுதசுரபி தீபாவளி மலர்களில் ஒவ்வோர் ஆண்டும் அவர் கதை எழுதியிருக்கிறார்.
என்மேல் அவர் மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்பதைத் தவிர கேட்டவுடன் அவர் கதை கொடுக்க வேறு காரணம் எதுவும் இல்லை. வேலைப் பரபரப்பு, உடல்நலக் குறைவு போன்ற எதுவும் அவரை எழுதாமல் இருக்கச் செய்ததில்லை. இறப்புக்கு மட்டும்தான் அவரிடமிருந்து வற்றாத ஊற்றாய்ப் பெருகிய இறவாத எழுத்தை நிறுத்தும் வலிமை இருந்தது.
ஏ.என். சிவராமன், கே.ஆர். வாசுதேவன், நா.பா., கி.கஸ்தூரிரங்கன், ஐராவதம் மகாதேவன், சுஜாதா ஆகியோரிடம் பணிபுரிந்த அனுபவம் இப்போது அமுதசுரபி மலரைச் சிறப்பாகத் தயாரிக்கக் கைகொடுக்கிறது.
முன்னர் அமரர் திரு ஏ.வி.எஸ்.ராஜா அவர்களையும் தற்போது அவர் புதல்வர் திரு கிரிதர் ராஜா அவர்களையும் பதிப்பாளராகக் கொண்ட அமுதசுரபியில், அமுதசுரபி குழுவினர் தொடர்ந்து ஓயாது பணிபுரிகிறார்கள்.
யார் யாரிடம் படைப்பைக் கேட்டு வாங்குவது, ஓவியர்களுக்கு எப்படி படத்திற்கான கருத்தைத் தொலைபேசியில் தெரிவிப்பது, பார்ம் எப்படித் தயாரிப்பது, எப்படி டம்மி போடுவது, எந்தப் பக்கங்களை வண்ணத்திலும் எந்தப் பக்கங்களை கறுப்பு-வெள்ளையிலும் வெளியிடுவது, புகைப்படங்கள் மாறாமல் எவ்விதம் எச்சரிக்கையாகக் கையாள்வது, ஓவியங்களை எப்படி உரிய படைப்பில் இணைப்பது, …
படைப்புலகச் சாதனையாளர்களின் நாலேகால் பக்கப் படைப்பை எடிட் செய்யாமல் ஓவியத்தைச் சற்றுச் சிறியதாக்கி எப்படி நான்கே பக்கங்களுக்குள் அடக்குவது, துணுக்குகளைப் படங்களுடன் எவ்விதம் தயார்செய்து வைத்துக்கொள்வது, …
`மலருக்கு என் படைப்பை அனுப்பவா?` என்று இங்கிதமே இல்லாமல் ஓயாது தொலைபேசியில் நச்சரிப்பவர்களை எவ்விதம் நாசூக்காகக் கத்திரிப்பது, …
விளம்பரங்களை எப்படிக் கேட்டு வாங்குவது, அவற்றை விளம்பரதாரர்கள் கேட்டுக்கொண்ட பக்கங்களில் எவ்விதம் பளிச்சென வெளியிடுவது … என எத்தனையோ இன்னும் சொல்ல இயலாத பல நுணுக்கங்களில் எல்லோருமே பாடம் கற்கத் தொடங்கிவிட்டார்கள்.
மலர்ப் பணி முடிந்து மலர் வெளிவந்தபின், மலரைப் பார்ப்பது ஒரு தனி ஆனந்தம். அந்த ஆனந்தத்தை எண்ணிப் பார்த்தால் எந்த வேலைப்பளுவும் ஒரு பொருட்டே அல்ல.
மலர் விற்பனைக்கு வந்தபின் வரும் தொலைபேசி விமர்சனங்கள், மலரைப் பற்றி நாளிதழ்களில் வெளிவரும் திறனாய்வுகள் இவற்றை அறிவதில் ஒரு தனிப் பரவசம்.
இதெல்லாமும் முடிந்து ஓய்ந்த பிறகு கல்யாணம் முடிந்த வீடு மாதிரி, திருவிழா முடிந்த கோயில் மாதிரி மனத்தில் ஒரு வெறுமை. நெஞ்சில் அடுத்த தீபாவளிக்கான ஏக்கம்.
நான் பணிபுரியும் மலரைப் பார்ப்பதில் மட்டும் தானா ஆனந்தம்? மற்ற இதழ்கள் தயாரித்துள்ள மலர்களைப் பார்ப்பதிலும் கூட ஆனந்தம் தான். என் இவ்வாண்டுத் தீபாவளி, பற்பல தீபாவளி மலர்களோடு இதயத்தில் தித்திக்கத் தொடங்குகிறது.
- நன்றி: இக்கட்டுரை, திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவு.
$$$
One thought on “இலக்கிய தீபாவளி!”