-கருவாபுரிச் சிறுவன்

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி,கன்னியாகுமரி யாவும் தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமைந்த மாவட்டங்களாகும்.
இம்மாவட்டங்கள் தொழிலிலும் அனைத்துத் துறைகளிலும் மென்மேலும் வளர்ச்சியுற வேண்டும் என்பதை விரும்பிய அரசியலாளர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கோவில்பட்டி கே. எஸ்.ராதாகிருஷ்ணன்.
இம்மாவட்டங்கள் இன்னும் வளர்ச்சி பெறவும், மென்மேலும் முன்னேற்றம் அடையவும் பொதிகை, பொருநை, கரிசல் பகுதிகள் யாவும் நீர்ப்பிடிப்போடு இயங்க வேண்டும். அதற்குத் தேவை நிலையான நீர் ஆதாரம் என்பதை உணர்ந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு கருக்கொண்டு, பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் எழுதி தினமணி நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே, ‘ தென்மாவட்டங்கள் வளம் பெற’ என்ற சிறு நுாலாகும்.
50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவத்தைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் 60 ஆண்டுகளுக்கு மேலாக தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் முதுகெலும்புப் பிரச்சினையான செண்பகவல்லி அணையை சரி செய்வதற்கு தாமதப்படுத்தும் தமிழக அரசின் அலட்சியப்போக்கினை தனது கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.
மேலும், கிடப்பில் போடப்பட்ட விருதுநகர் மாவட்டத்திற்குரிய அழகர் அணைத்திட்டத்தையும், நம் சகோதர மாநிலமான கேரளம் அடம்பிடித்து மறுக்கும் அச்சன்கோவில் – பம்பை – வைப்பாறு இணைப்புத்திட்டம் கானல் நீராகி கொண்டு இருப்பதையும் அலசி இருக்கிறார்.
இந்த மூன்று கட்டுரைகளில், நூலின் 30 பக்கத்திற்குள் அலசி ஆராய்ந்து தனது எழுத்துப்பாணியில் ஒரு தீர்வினைச் சொல்கிறார் கே.எஸ்.ஆர்.
செண்பகவல்லி அணையின் உடைப்பு பிரச்சினை நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு அதன் கோப்புகள் யாவும் அரசு அலுவலங்களில் தூசி படிந்து துங்குகின்றன. இத்திட்டங்களுக்கு எப்போது விமோசனம் ஏற்படுமோ என்பது தெரியவில்லை… என்றும்,
ஒவ்வொரு தேர்தலிலும் பிரதானக் கோரிக்கையாக உள்ள அழகர் அணை திட்டம் நிலையான கோரிக்கையாகவே இருக்கின்றது. இதற்கு எப்போது விடிவு காலம் வருமோ… என்றும்,
அமைதியும் அருட்கொடையும் தவழ்கிற கேரள மண்ணுக்கு, தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற மனித நேயப் பண்பை இயற்கை தான் வழங்க வேண்டும்… என்றும்,
ஒவ்வொரு விவசாயியின் மனதில் எழும் ஆதங்கங்களை கட்டுரையின் நிறைவில் பதிவு செய்கிறார்.
நிறைவாக, கேரள மக்களுக்கு அன்றாடம் பயன்படும் அரிசி, காய்கறிகள்,பால், மீன், இறைச்சி, மணல், மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களை தமிழகம் வழங்குகிறது என்பதை தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
அதற்காகவாவது தண்ணீர் கொடுத்தால் தானே விளைச்சல் செய்து அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருள்களை வழங்க முடியும் என்பதை கேரள மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா? என கேரள மக்களுக்கு கேள்வியை எழுப்புத்வதுடன், தென்மாவட்ட மக்களைச் சிந்திக்கவும் வைக்கிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள நூலாசிரியர்.
இந்நூலினை இலவசமாகப் பெற அன்னாரைத் தொடர்பு கொள்ளலாம்.
கற்றறிந்து பண்படக்கூடிய அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு!
- குறிப்பு: இந்த நூல் இலவசப் பிரதி.
- வேண்டுவோர் தொடர்பு கொள்ளலாம்: 98404 74606
$$$