-ஆர்.என்.ரவி
ஆர்.எஸ்.எஸ். நூஏற்றாண்டை ஒட்டி தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் வெளியாகிறது.

இந்த விஜயதசமியில், ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ (ஆர்.எஸ்.எஸ்.), குடிமக்களின் குணநலன்களை மேம்படுத்துவதன் மூலம் தேசக் கட்டுமானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தனது பயணத்தின் நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
1925 ஆம் ஆண்டு இதே நாளில், நாடு அதன் தேசிய வாழ்க்கையின் இருண்ட கட்டத்தைக் கடந்து கொண்டிருந்தபோது,தொலைநோக்குப் பார்வை கொண்ட டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்டது.
அடிமைப்படுத்தப்பட்ட ஒரு நாட்டின் வரலாறு, அடையாளம், கலாச்சாரம் ஆகியவை காலனித்துவ ஆட்சியாளர்களாலும் அவர்களின் இறையியல் ஒத்துழைப்பாளர்களான வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷனரிகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. அவர்கள் நாட்டின் கடந்த காலத்தை கீழ்த்தரமாக இட்டுக்கட்டினர். அதன் வரலாறு, மொழி, நம்பிக்கை, கலாச்சார பாரம்பரியத்தை அவமானப்படுத்தினர். பொறாமையுடன் இட்டுக்கட்டப்பட்ட வரலாறு, பள்ளிகள், கல்லூரிகளிலும், பொது மற்றும் தனியார் சொற்பொழிவுகளிலும் தீவிரமாக பரப்பப்பட்டன. ஆங்கிலேயர்களின் மொழி, நம்பிக்கை, பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொள்வது ஒன்றே மக்களின் பிரகாசமான எதிர்காலம் மற்றும் ஆன்மிக ரட்சிப்புக்கான ஒரே வழி என்று மக்கள் தொடர்ந்து நம்ப வைக்கப்பட்டனர். அதன்மூலமாக நாட்டின் சுய உணர்வு அழிக்கப்பட்டது.
1931 அக்டோபர் 20 அன்று ஆங்கிலேயர்களுக்கு ஆற்றிய வட்டமேஜை உரையில், காலனித்துவ ஆட்சியின் பேரழிவுத் தாக்கத்தை மகாத்மா காந்தி சுருக்கமாகக் கூறினார். பாரதம் – ஆங்கிலேயர்கள் அதன் வேர்களைத் தோண்டி அழித்ததால் அழிந்த ஒரு அழகான மரம் – என்பதற்கு ஒரு பொருத்தமான உருவகத்தைப் பயன்படுத்தினார்.
இத்தகைய இருண்ட மற்றும் மோசமான பின்னணியில், சுதந்திரத்திற்கான அரசியல் இயக்கத்தின் மூலம் நாட்டின் வெறும் அரசியல் விடுதலை பெறப்பட்டாலும், பல நூற்றாண்டு காலனித்துவ காலத்தில் பாரதத்தின் உடலுக்கும் ஆன்மாவிற்கும் ஏற்பட்ட விரிவான சேதங்களை சரிசெய்யப் போதுமானதாக இருக்காது என்பதை டாக்டர் ஹெட்கேவார் உணர்ந்தார்.
அத்தகைய சுதந்திரம் தேசத்தை மீட்டெடுக்க தேவையான அறிவுசார் நம்பிக்கை மற்றும் ஆன்மிக ஆற்றலையும், அதன் சுய உணர்வு மற்றும் தன்னம்பிக்கையையும் கொண்டிருக்காது; இதனால் நாடுகளின் நட்புறவில் கண்ணியத்துடன் அணிவகுத்துச் சென்று இறுதியில் உலகை ஒரு நியாயமான, சமமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும். உண்மையான சுதந்திரத்திற்கான புரட்சி விரிவானதாக இருக்க வேண்டும்.
சுவாமி விவேகானந்தரின் தொலைநோக்கு மற்றும் போதனைகளால் ஈர்க்கப்பட்ட டாக்டர் ஹெட்கேவார் அந்த விரிவான புரட்சியைத் தொடங்கினார். தனிப்பட்ட குடிமக்களின் விரிவான மாற்றத்துடன் தொடங்கி, அவரது ஆன்மா வாழ்ந்த பாரதத்தின் கிராமங்களில் முளைக்கும் ஒரு நீடித்த சமூக-கலாச்சார வெகுஜன இயக்கத்தின் விதைகளை அவர் நட்டார். ஆர்.எஸ்.எஸ். பிறந்தது.
என்னுடைய ஆரம்ப நாட்கள்:
1981 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியபோது ஆர்.எஸ்.எஸ்.ஸுடனான எனது முதல் அறிமுகம் ஏற்பட்டது. கண்ணூர் மாவட்டத்தின் வடக்குப் பகுதியான தெல்லிச்சேரி துணைப் பிரிவில், மாநிலத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் உள்ளூர் ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு கொடூரமான அரசியல் வன்முறை சுழற்சி வெடித்தது. சிபிஎம் கோட்டையாக இருந்த கண்ணூர் மாவட்டம், அந்தப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் புதிய வளர்ச்சியைத் தாங்க முடியாமல், அதைத் தடுக்க எந்த அளவிற்கும் செல்ல தீர்மானித்ததாகத் தோன்றியது.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் வளர்ச்சி ஆளும் அரசியல் சித்தாந்தத்திற்கும் ஒரு சமூகப் பொறியியலுக்கும் இடையே ஒரு இருவேறுபாட்டை விதைத்தது. ஆர்.எஸ்.எஸ் தங்கள் இளம் குழந்தைகளுக்கு நல்லது செய்வதாக உணர்ந்ததால், அதிகமான மக்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் இணைந்த பிறகு, தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் ஒழுக்கமானவர்களாகவும், சமூக உறவுகளில் மிகவும் திறமையானவர்களாகவும் மாறிவிட்டனர். அவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவதைத் தவிர, தங்கள் பெற்றோர்கள், பெரியவர்களிடம் அதிக மரியாதை செலுத்தத் தொடங்கினர். பாரதம் ஒரு புகழ்பெற்ற தேசம் என்ற கருத்தை அவர்கள் மேலும், மேலும் உணர்ந்து, அதற்கு மரியாதை செலுத்தத் தொடங்கினர்.
வன்முறை ஏற்படுகிறது:
இந்த விரிவடைந்து வளர்ந்து வரும் சூழ்நிலையை அச்சுறுத்தலாக சிபிஎம் நினைத்தது. ஆர்.எஸ்.எஸ். இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என நினைத்தது. ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்களை வரவேற்றதற்காகவும், ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை அவர்களின் பகுதிகளில் ஏற்பாடு செய்ததற்காகவும் சிபிஎம் உறுப்பினர்கள் சில உள்ளூர் நபர்களை விரைவாக அடுத்தடுத்துக் கொன்றனர். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த ஆயுதங்கள், உள்ளூர் தயாரிப்பு மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள். இந்தக் கொலைகளின்போது குற்றவாளிகள் யார்டென்று தெரிந்திருந்தும் கைது செய்யாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்திய காவல்துறையின் செயலற்ற தன்மை, எதிர்த்தரப்பில் பதிலடியைத் தூண்டியது.
இருதரப்பின் மோதல்களால் அதிகரித்த இறப்பு எண்ணிக்கை மற்றும் மாநிலத்தில் பொதுமக்களின் கூக்குரல், அதன் பரவலான கண்டனம் ஆகியவை உள்ளூர் காவல்துறை தலைமையை மாற்றுமாறு மாநில அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தியது. அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்தவும் இயல்புநிலையை மீட்டெடுக்கவும், நான் தலைச்சேரிக்கு சிறப்பு அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
நான் தலைச்சேரிக்கு வந்த சில நாட்களுக்குள், கையெறி குண்டுகள் தயாரிக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த துல்லியமான தகவல்கள் பெயரிடப்படாத உள்ளூர் ஆதாரங்கள் மூலம் எனக்கு வந்தன. இந்தத் தேடுதல் நடவடிக்கைகளில், ஆளும் சிபிஎம் கட்சியின் மூத்த உள்ளூர்த் தலைவர்களின் வளாகங்களிலிருந்து, பல்லாயிரக் கணக்கில் கையெறி குண்டுகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டன. சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று தங்களை அவர்கள் மிகவும் நம்பிக் கொண்டிருந்ததால், கையெறி குண்டுகளைக் குவித்தபோது மறைத்து வைக்கவும்கூட அவர்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை! போட்டியாளர் தரப்பிலும் இதே போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், வீட்டு உபயோகப் பொருட்களான கத்திகள் மற்றும் ஆயுதங்கள் மட்டுமே அங்கு மீட்கப்பட்டன. எனவே அவை அதிக ஊடக கவனம் செலுத்தப்படவில்லை.
அரசியல் திருப்பம்:
ஆளும் கட்சித் தலைவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான குண்டுகள் மீட்கப்பட்டது அவர்களை மிகவும் கோபப்படுத்தியது. கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதலமைச்சர் ஸ்ரீ இ.கே. நாயனார், தில்லிக்கு விரைந்து சென்று, தனது மே தின பொது உரையில் என்னை ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்று மிகவும் வசைபாடி குற்றம் சாட்டினார். அவரது பேச்சைக் கேட்டதும், மாநிலத்தின் உயர் நிர்வாகி ஒருவரே, தனது கடமையைச் செய்ததற்காக ஒரு ஜூனியர் போலீஸ் அதிகாரிக்கு கொடுத்த அளவுக்கதிகமான பொது முக்கியத்துவத்தைக் கண்டு நான் திகைத்துப் போனேன். காவல் சேவையிலும், சமூகத்திலும் எனது நலம் விரும்பிகள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கடுமையான தனிப்பட்ட விளைவுகள் குறித்து என்னை எச்சரித்தனர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, நான் சிபிஎம் அரசால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, பிரதமர் திருமதி இந்திரா காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் இரண்டாவது முக்கியமான அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.
(முதலாவது அதிரடி நடவடிக்கை, ஜூலை 1959 இல், கேரளாவில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அவர் பதவி நீக்கம் செய்ததாகும்). மத்திய அரசின் மூலம், இ.கே. நாயனார் தலைமையிலான அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்து, அரசியலமைப்பு ஒழுங்கை மாநிலத்தில் நிலைநாட்டினார். அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. விரைவில் இயல்பு நிலை மீட்டெடுக்கப்பட்டது. நான் கோழிக்கோடு திரும்பினேன்.
வடகிழக்கு நாட்கள்:
ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, உள்துறை அமைச்சகத்தில் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரியாக, வடகிழக்கு பாரதத்தில் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பாரதத்திலிருந்து தங்கள் பகுதிகளுக்கு தனிநாடு சுதந்திரத்தைக் கோரும் ஆயுதமேந்திய இனக்குழுக்களின் வன்முறை இப்பகுதியில் வெடித்தது. கிட்டத்தட்ட முழு வடகிழக்குப் பகுதியும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. இது சில பகுதிகளில் அரசின் அதிகாரங்கள் இயங்குவதை உறுதி செய்ய போராடியது.
இதற்கு முன்பு இந்த பகுதிக்குச் சென்றிராத எனக்கு, வடகிழக்கு ஒரு ‘டெர்ரா இன்காக்னிட்டா’வாக இருந்தது. நிலம் மற்றும் மக்கள் பற்றிய வழக்கமான ஆரம்ப விளக்கங்களை அமைச்சகத்திலும் மூத்தவர்களிடமிருந்தும் பெற்றேன். இந்தப் பகுதியைப் பற்றிய முக்கிய அரசாங்க புரிதல் என்பது, காலனித்துவ நிர்வாகிகளால் வழங்கப்பட்ட கருதுகளின் தொகுப்பாகவே இருந்தது.
அரசாங்க பலத்தின் மொழியை மட்டுமே புரிந்துகொள்ளும் எண்ணற்ற காட்டுமிராண்டி சமூகங்களால் நிரம்பிய ஒரு பகுதியாக அந்தப் பிரதேசம் இருந்தது. எனவே அவர்களை அடக்குவதற்கு அரசு கடுமையான சக்தியை காட்ட வேண்டும். இருப்பினும், எந்தவிதமான வெளிப்படையான பாதுகாப்பும் இல்லாமல் அங்கு சென்று மக்களைப் பார்த்தபோது, பெரும்பாலும் அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் நிலவும் யதார்த்தங்களுக்கும், கதைகளுக்கும் இடையிலான வேறுபாட்டின் அளவைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். மக்கள், தங்கள் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும், முற்றிலுமாகச் சீர்குலைத்து, தங்கள் உறவினர்களை பலிகொடுத்த முடிவில்லாத வன்முறையால் துயரமடைந்திருந்தாலும், நட்பையும் விருந்தோம்பலையும் காட்டினர்.
தொழில்முறையில் இங்கு பணியாற்றியபோது, இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக மக்களுடன் சேர்ந்து, கிராமங்களில் வசித்தப்டி சமூக சேவை செய்துவந்த ஏராளமான ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்களைச் சந்தித்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் உள்ளூர் மொழிகளைக் கற்றுக்கொண்டனர். அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் உடைகளை ஏற்றுக்கொண்டனர். மேலும் அவர்களின் பூர்வீக நம்பிக்கையை பணிவுடன் மதித்தார்கள். சில நேரங்களில் அவர்களின் உடல் தோற்றத்தில் மட்டுமே உள்ளூர் மக்களிடமிருந்து அவர்கள் வேறுபடுத்திப் பார்க்க முடியாதவர்களாக மாறினர். அவர்கள் கிராமவாசிகளுடன் உள்ளூர் விளையாட்டுகளை விளையாடினர். இளம் குழந்தைகளுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுத்தனர். தேவைப்படும் நேரங்களில் அடிப்படை மருத்துவ சேவையை வழங்கினர். அவர்களின் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கும்கூட கிராம மக்களால் அழைக்கப்பட்டு மதிக்கப்பட்டனர். அரசாங்கத்தால் எட்ட முடியாத பகுதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்கள் சென்றனர். மேலும் நிர்வாகத்தால் வன்முறையாளர்களாக, காட்டுமிராண்டிகளாகக் கருதப்பட்ட மக்களின் இதயங்களை வென்றனர்.
ஒரு விரோதமான சூழல்:
ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்கள் கிராம மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் வெல்ல முடிந்தாலும், அவர்கள் மிகவும் ஆபத்தான சூழலில் வாழ்ந்து சேவை செய்தனர். இந்திய படைகளுடன் சண்டையிடும் இனப் போராளிக் குழுக்கள், ‘இந்திய நண்பர்களை’ ஏற்க முடியவில்லை. அவர்கள் அவ்வப்போது தாக்குதி வந்தனர். கிறிஸ்தவ மிஷனரிகளும், தங்கள் சுவிசேஷப் பணிக்கு தடையாக இருந்ததற்காக ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்களை வெறுத்தனர்.
ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்கள் தங்கள் நூற்றாண்டு பழமையான நம்பிக்கை, கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படுமாறு வடகிழக்கு மக்களை ஊக்குவித்து வந்தனர். இதை எதிர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இந்த விரோதப் போக்கின் விளைவாக, சில ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்கள் மரணத் தாக்குதல்களுக்கு ஆளானார்கள். திரிபுராவில் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்த ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்கள் நால்வர் ஜூலை 1999 இல் திரிபுரா தேசிய விடுதலை முன்னணியால் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டதை நான் வேதனையுடன் நினைவு கூர்கிறேன். மிஷனரிகளை ஆதரிக்கும் ஒரு இனப் போராளிக்குழு இது.
வடகிழக்குடன் நான் நீண்ட காலமாக தொடர்பு கொண்டிருந்தபோது, இன சமூகங்களுக்கிடையே வன்முறை மோதல்களின் பல சம்பவங்கள் நடந்தன. இது பலவீனமான சமூகங்கள் பெரிய அளவில் இடம்பெயர்வதற்கு வழிவகுத்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் – உணவு, தற்காலிக தங்குமிடங்கள், மருந்து போன்றவற்றை வழங்கும் இடங்களில் முதல் நபர்களாக ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.
வடகிழக்கு மாநிலங்கள், இயற்கைப் பேரழிவுகள் – பேரழிவு தரும் பருவகால வெள்ளம், பெரிய நிலச்சரிவுகளுக்கு ஆளாகின்றன. இதுபோன்ற ஒவ்வொரு பேரிடர்ச் சூழ்நிலையிலும், ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவினார்கள். சில சமயங்களில் தங்கள் உயிரைப் பணயம் வைத்தும் உதவினார்கள்.
கோவிட்-19 காலத்தில், நான் நாகாலாந்து ஆளுநராக இருந்தேன். மாநிலத்தின் பெரிய பகுதிகளில், குறிப்பாக மியான்மர் எல்லையில் உள்ள மாவட்டங்களில் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லை. பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் மருந்துகள் உட்பட தேவையான வளங்களைத் திரட்டினர். மேலும் தொலைதூரப் பகுதிகளில் பல ஆக்ஸிஜன் உற்பத்திக் கருவிகளை நிறுவி ஏராளமான விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றினர்.
நவீன அமைப்பு:
ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பதற்கு தீவிர பழமைவாத இயக்கமாகத் தெரிந்தாலும், அடிப்படையில் ஒரு நவீன அமைப்பு. அதன் இயல்புநிலையில் தனித்துவமான வேகம் உள்ளது; மேற்பரப்பில் அமைதியானது. ஆனால் அடியில் தீவிரமாகப் பாய்கிறது. அது அவ்வப்போது புதிய கருத்தியல் முன்முயற்சிகளுக்கு வழிவகுத்தது.
வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான உணர்வுரீதியான தொலைவைக் குறைக்க உதவிய, நமது தேசிய ஒற்றுமையை ஆழமாக வலுப்படுத்திய ஒரு முன்முயற்சி 1965இல் எடுக்கப்பட்டது. இது சமூகப் பொறியியலில் ஒரு தனித்துவமான பரிசோதனையாகும்.
இது பின்னர் ‘மாநிலங்கள் கடந்த மாணவர் அனுபவம்’ (SEIL – students experience interstate living) என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளம் மாணவர்கள், மாணவிகள் ஒவ்வோர் ஆண்டும் சில வாரங்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்; அங்கு அவர்களின் வாழ்க்கை இடம், உணவு, பண்டிகையைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு இடையே நீடித்த அன்புப் பிணைப்புகள் வளர்ந்தன.
இதன்மூலமாக, பல தசாப்தங்களாக தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு மோட்டார் காரையோ அல்லது ரயிலையோ கூட பார்த்திராத, வடகிழக்கு பிரதேசத்தின் ஆயிரக் கணக்கான இளைஞர்கள், இந்த மாபெரும் நாட்டின் பரந்த பரப்பில் பயணம் செய்து, அதன் அழகையும், மகத்தான பன்முகத்தன்மையையும் நேரடியாக அனுபவித்தனர். அவர்களில் பலர் வேறு சில சமூக- கலாச்சார சூழலில் ஒரு அன்பான புதிய குடும்ப உறவையும் பெற்றனர்.
அவர்களில் பலர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ராணுவம் உள்ளிட்ட துறைகளின் உச்சங்களை எட்டுவதையும், பல்வேறு நிலைகளில் தேசத்திற்கு சேவை செய்வதையும் பார்த்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவர்களில் ஒருவர் தனது வளர்ப்பு பெற்றோரை நன்கு கவனித்துக்கொள்வதைக் கண்டபோது நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன்; அந்த் வளர்ப்புப் பெற்றோரின் சொந்தக் குழந்தைகள் அவர்களை விட்டு வெளியேறி வெளிநாட்டில் குடியேறியிருந்தனர்.
எனது ஏராளமான முக்கியமான ரகசிய உளவுத்துறைப் பணிகளின் போது, பல அனுபவம் வாய்ந்த இளைஞர்களும் அவர்களது குடும்பங்களும் தங்கள் வீடுகளில் என்னை அக்கறையுள்ள விருந்தினராக வைத்திருந்தனர். வெளிப்புறத்தில் சாலைகளில் கொடிய கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தபோதும், சுற்ரிலும் தாக்குதலுக்கான பதுங்குதல்கள் இருந்தபோதும், வேறு எங்கும் நான் ஒருபோதும் பாதுகாப்பாகவும், சொந்த வீட்டில் இருப்பது போலவும் உணர்ந்ததில்லை. அவர்களின் அன்பு, கவனிப்பு, நம்பிக்கை மற்றும் விலைமதிப்பற்ற உதவியால் தான் நான் எனது சாதனைகளைச் செய்ய முடிந்தது. அவதற்கு நான் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ். பற்றிய எனது பல தசாப்த கால அனுபவம் எனது இருப்பை மிகவும் வளப்படுத்தியுள்ளது மற்றும் ஆழமாக வடிவமைத்துள்ளது. இந்த நூற்றாண்டில், இந்த அமைப்பு நாட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்கிலும் பரவியுள்ளது. மக்களிடையே தேசிய உணர்வை எழுப்ப அடிமட்டத்தில் கடுமையாக உழைத்துள்ளது. இந்த மாற்றம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான மகத்தான நேர்மறையான ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
100 ஆண்டுகாலத்தில் கொந்தளிப்பான நிகழ்வுகள் நிறைந்திருந்தாலும், ஒரே திசையை நோக்கிய பயணத்தை நிறைவு செய்ததில், ஸ்தாபகர் ஸர்சங்கசாலக் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரும் அவரது தகுதியான வாரிசுகளும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்; அவர்களை வணங்குகிறேன். அதேபோல, ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற இலக்கை அடைவதற்காக, சொந்த வாழ்க்கையில் அனைத்தையும் தியாகம் செய்த, பலரும் அறியாத லட்சக்கணக்கான பிரசாரகர்களுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் ஆர்.எஸ்.எஸ். பயணத்தில் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- குறிப்பு: திரு. ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநர்.
$$$