ஆர்.எஸ்.எஸ்.: ஓர் எளிய அறிமுகம்

-முரளி சீதாராமன்

ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இன்று நூற்றாண்டு காண்கிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்று, அறிவிலிகளுக்கும் புரியும் வகையில் பாடம் நடத்துகிறார் திரு. முரளி சீதாராமன்….

இன்று விஜயதசமி நன்னாள்.

இதே விஜயதசமி திருநாளில் 1925இல் தொடங்கப்பட்ட RSS பேரியக்கம் இன்று முதல் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கிறது.

शाखा – ஷாகா – என்றால் கிளை என்று பொருள்.

ஒரு ஊரில், ஒரு சிற்றூரில், ஒரு வார்டில், ஒரு பேட்டையில், ஒரு தெருவில்… இடம் எதுவாயினும் அங்கே ஒரு ஷாகா இருக்கிறது என்றால் அங்கே என்னென்ன இருக்கும்? என்னென்ன இருக்காது?

அது ஷாகாவோ – பண்புப் பயிற்சி முகாமோ (CAMP) எதுவாயினும் அங்கே என்னென்ன இருக்கும்? எவை எவை இருக்காது?

***

ஷாகா நடக்கும் இடத்தில்….

1) அந்த இடத்தில் ஒரு ஷாகா அல்லது முகாம் நடைபெறுகிறது என்றால் அங்கே நமது கலாசரம் போற்றப்படும்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”- என்ற மரபு பயிற்றுவிக்கப் படும். குடும்ப உறவுகள் மீது அசலான நேசம் வலியுறுத்தப் படும்.

தாய் – தந்தையரை மதித்தல், அவர்களைப் பேணுதல், பெரியவர்களை மதித்தல் போன்ற ஒழுக்கங்கள் கற்பிக்கப்படும்.

பெண்களை  ‘மாதாஜி, பஹன்ஜி, சகோதரி’ என்று அவர்களின் பெயரோடு இணைத்து அழைக்கும் பழக்கம் வரும்!

“டேய் மாமே! ஏ பெர்சு! வாடா மச்சீ!”- போன்ற சொற்பிரயோகங்கள் அகற்றப்படும்.

அப்படிப் பேசிப் பழகியவர்கள் கூட – ஷாகாவில் பங்கேற்பதால் மெல்ல மெல்ல நமது மரபு சார்ந்த மரியாதையான அழைப்பு முறைகளுக்கு மாறுவார்கள்.

2) மாதா – பிதா என்ற வரிசையில் அடுத்தது குரு. ஆசான்! ஆசிரியன்!

அந்த ஸ்தானம் எவ்வளவு உயர்ந்தது என்பது நடைமுறையாகவே செய்து காட்டப்படும்.

சுமார் 25 வயது நிரம்பிய இளைஞர்  ‘பௌத்திக்’ எனப்படும் பாட வகுப்பை ஏதோ ஒரு தலைப்பில் நடத்துவார் – அந்த இளைஞரை விட பல வயது மூத்த கார்ய கர்த்தர்கள் அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

குரு என்பவன் அந்த இடத்தில், குருபீடத்தில் அமர்ந்து ஞானம் வழங்கும் ஆசான் – அவன் வயது இங்கே பொருட்டில்லை.

ஆசிரியர் என்பவருடைய உயர்ந்த ஸ்தானத்தை மதிப்பது இயல்பாக வரும்!

“டேய் வாத்தி! வெளியே வாடா பாத்துக்கறேன்!”- போன்ற தமிழ் சினிமா வசனக் குப்பைகளை நகைச்சுவை என்ற பெயரில் ரசித்துக் கை தட்டும் இளைஞன் கூட – இங்கே ஷாகாவுக்கு வந்த பிறகு “குருப்யோ நமஹ” என்பான்.

வெளி உலகில் பண்பாட்டுத் தளத்தில் எத்தனை குப்பைகள் கலை என்ற பெயரால், இலக்கியம் என்ற பெயரால் “லிபரல்” கழிசடைகளால் திணிக்கப்படுகிறதோ அத்தனையும் ஷாகாவில் / முகாமில் அகற்றப்படும்.

3) ஆதர்ச ஆண்மகன் என்பவன் யார்? சத்ரபதி சிவாஜியும், வீரத்துறவி விவேகானந்தரும் என்பது ஷாகாவில் அடையாளம் காட்டப்படும்!

கொடும் எதிரியான இஸ்லாமிய தளபதி ஒருவனின் மனைவி சென்ற பல்லக்கை எப்படியோ சிவாஜி மகராஜின் வீரர்கள் மடக்கி விடுகிறார்கள் – சிவாஜியிடம் கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.

சிவாஜி மகராஜ் தனது அந்த வீரர்களை கண்டித்தது மட்டுமல்ல – அந்த முஸ்லிம் பெண்மணியிடம் – “தாயே, தெரியாமல் தவறு நிகழ்ந்துவிட்டது”- என்று கூறி, தனது வீரர்களிடம் அவளை பத்திரமாக அவளுடைய கணவனிடம் கொண்டு சேர்க்கும்படி உத்தரவிட்டவர் சிவாஜி மகராஜ்!

துறவியாகிய சுவாமி விவேகானந்தரின் வசீகரமான கம்பீரமான அழகால் – ஈர்க்கப்பட்ட அமெரிக்கப் பெண்மணி ஒருத்தி – “உங்களை மணந்து உங்கள் மூலமாக உங்களைப் போன்ற ஞானமும் அழகும் கொண்ட மகனைப் பெற விரும்புகிறேன்”- என்றாள்!

அதற்கு சுவாமி விவேகானந்தர் – “அதற்கு ஏனம்மா அவ்வளவு சிரமம்? இப்போதே என்னை உன் மகனாக ஏற்றுக்கொள்!”- என்று அப்பெண்ணை நமஸ்கரித்தார்.

இவர்களே பேராண்மையின் ஆதர்ச புருஷர்கள் என்பதை ஷாகா வரும் இளைஞன் புரிந்துகொள்வான்!

ஆண்மை என்பது முற்போக்கு என்ற பெயரில் – “பெண்ணே! சமையல் கட்டை உடை! குடும்ப அமைப்பில் இருந்து வெளியே வா! ENJOYMENT WITHOUT RESPONSIBILITY! உன் உடல் – உன் உரிமை!”- என்று பேசுவதல்ல! அது புரட்சியும் அல்ல! இப்படிப் பேசுபவர்கள் ஆதர்ச மனிதர்களும் அல்லர்!

ராஜராஜ சோழன், ராமலிங்க வள்ளலார், சத்ரபதி சிவாஜி, சுவாமி விவேகானந்தர், பாரதி இப்படி எத்தனையோ ஆதர்ச மனிதர்கள் உண்டு!

ஜான்சிராணி லட்சுமி பாய், அஹல்யாபாய், சாரதாதேவியார், ஆண்டாள், ஜீஜாபாய் போன்ற ஏராளமான முன்மாதிரி பெண்கள் தாய்மார்கள் உண்டு.

இவர்களே இந்த மண்ணின் ஆதர்ச பெண்மணிகள்!

“என் உடல் என் உரிமை”- என்று எவனோடு வேண்டுமானாலும் இணைபவள் அல்ல! பீர் பாட்டிலோடு போஸ் கொடுப்பவள் அல்ல புரட்சிக்காரி!

தைரியமாக பாண்டிய மன்னன் அவையிலே சென்று – “தேரா மன்னா!”- என்று அரசனையே அழைத்து தன் கணவன் இறப்புக்கு நீதி கேட்ட கண்ணகியே புரட்சிக்காரி!

இந்தத் தெளிவு ஷாகா / முகாமுக்கு வருபவர்களுக்கு கிடைக்கும்!

***

சரி ஒரு ஷாகா ஓரிடத்தில் இருந்தால், முகாம் ஓரிடத்தில் நடைபெற்றால் அங்கே என்னென்ன எல்லாம் இருக்காது?

1) பீடி, சிகரெட், மது மற்றும் இதர போதை பழக்கம் இருக்காது.

2) சாதி பேதம், அந்தஸ்து பேதம் இருக்காது. அது ஷாகாவோ முகாமோ எவரும் எவரிடத்தும் சாதி கேட்பதில்லை!

3) படிப்பு, பணம், தொழில் இப்படி எந்த வகையான அந்தஸ்து பேதமும் இருக்காது.

எவராக இருந்தாலும் அவர்கள் சாப்பிட்ட தட்டு டம்ளர்அவர்களே கழுவி எடுத்து வைக்க வேண்டும்!

ஒரு பெரிய தொழிலதிபர் ஷாகாவில் இருப்பார், பேராசிரியர் எவரேனும் இருப்பார், டாக்டர், வக்கீல், ஆடிட்டர் இவர்களுடன் ஆட்டோ ஓட்டுநர், பெயிண்டர், கட்டிட வேலைக்கு செல்பவர், பிளம்பர்… என்று பல தரப் பட்டவர்கள் ஷாகா/ முகாமில் இருப்பார்கள்.

எவராக இருந்தாலும் வரிசையில்தான் நின்று உணவு வாங்க வேண்டும் – ஒரு எளிய தொழிலாளிக்கு பல நபர்கள் தள்ளி பின் வரிசையில் கடைக்கோடியில் ஒரு பேராசிரியரோ – தொழிலதிபரோ நின்றிருப்பார்.

NO SPECIAL TREATMENT – NO PRIORITY. (உடல் ரீதியாக ஏதேனும் உபாதைகள் இருந்தால் தவிர)

4) இந்த வேலை உசத்தி – இந்த வேலை கேவலம் என்ற பேதம் இருக்காது.

ஒரு முகாம் பத்து நாள் நடக்கிறது என்றால் நேற்று சமையல் பணி, பரிமாறும் பணியில் ஈடுபட்ட குழு, இன்று குளியலறை, கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும்.

சுழற்சி முறையில் எல்லாரும் எல்லா வேலையும் செய்தாக வேண்டும்.

செல்வாக்கு மிக்க கோடீஸ்வர பில்டிங் கான்ட்ராக்ட் நிறுவன உரிமையாளர் கையில் துடைப்பத்துடன் தரையை பெருக்கும் காட்சி சகஜமான விஷயம்.

பேராசிரியர், ஆசிரியர் என்று ஒயிட் காலர் உத்யோகத்தில் இருப்பவர்கள் இங்கே முகாம் நடைபெறும் அரங்கில் குளியலறை – கழிப்பறையை சுழற்சி அடிப்படையில் தங்கள் முறை வரும்போது சுத்தம் செய்வதைக் காணலாம்!

DIGNITY OF LABOUR – PRACTICAL ஆக கற்றுத் தரப்படும்!

உழைப்பில் உயர்ச்சி – தாழ்ச்சி இங்கே இருக்காது.

5) இல்லாத இன்னொன்று கட்சி அரசியல் பேதம்! ஏதோ RSS ஷாகா / முகாம் என்பது பாஜகவுக்கு மட்டும் நேர்ந்து விட்டது அல்ல.

அதிமுக,திமுக, காங்கிரஸ், பாமக போன்ற அபிமானிகளின் வீட்டுப் பிள்ளைகள் கூட வருகிறார்கள்.

“அங்கே போனால் என் மகன் நல்ல குடும்பப் பண்புகளை கத்துகிட்டு வருவான் சார் – இல்லாட்டி இங்கே வெட்டியா ஏதோ ஒரு சினிமாக்காரனுக்கு ரசிகனா சுத்திகிட்டு வாழ்க்கையை வீணடிச்சுகிட்டு இருப்பான் – அல்லது கெட்ட சகவாசத்தால பீடி சிகரெட்னு ஏதாவது பழகிப்பான் சார்!” என்று கூறி கோடைக்கால விடுமுறையில் RSS ன் பண்புப் பயிற்சி முகாம்களுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பல்வேறு அரசியல் கட்சி ஆதரவாளர்கள் உண்டு.

***

ஷாகாவும் முகாமும்:

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளின் இரண்டாவது பள்ளிக்கூடம்!

PARENTS ARE THE FIRST TEACHERS –

TEACHERS ARE THE SECOND PARENTS –

என்று சேலம், வித்யாமந்திர் பள்ளி நுழைவாயிலில் எழுதி இருப்பார்கள்!

நான் சொல்கிறேன்….

“ஷாகா என்பது இரண்டாவது குடும்பம்”

“குடும்பம் என்பதே முதலாவது ஷாகா “

-என்பதாக அமைந்து விளங்கினால் எதிர்கால இளைய தலைமுறை நமது கலாசாரம், ஒழுக்கம், மரபுகளின் மதிப்பறிந்து வளரும்!

“நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே!”

பாசமுள்ள தாய்மண்ணே உன்னை என்றும் வணங்குகிறேன்!

ஜெய்ஹிந்த்!

$$$

Leave a comment