குறிஞ்சி மலர்- முடிவுரை

-நா.பார்த்தசாரதி

தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர்,  1960-இல் வெளியான  தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’.  இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெற்றுள்ளது.  இது புதினத்தின் முடிவில் திரு. நா.பா. எழுதிய முடிவுரை...

குறிஞ்சி மலர் கனவு நிறைகிறது

காலமெனும் பூச்செடியில்
கனவு மலர் பூத்தாச்சு
சாலமிகும் விதிக்கொடுமை
சார்ந்துவர உதிர்ந்தாச்சு!

இந்த முடிவுரையைப் படிக்கத் தொடங்குமுன்பே வாசகர்கள் என்மேல் சீற்றமடைந்திருப்பார்கள் என்று என்னால் உய்த்துணர முடிகிறது. ‘அரவிந்தன்’ என்ற இலட்சிய இளைஞன் ‘இறந்திருக்கக்  கூடாது’ என்று கடுமையாக வாதமிடுவார்கள், கண்டிப்பார்கள், கடிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்தக் கதையின் ஆசிரியன் ஒரே பதிலைத் தான் கூறமுடியும். அரவிந்தன் சாகவில்லை! இந்தத் தலைமுறையிலோ நாளைக்கு வரப்போகும் தலை முறையிலோ, இந்தத் தமிழ் மண்ணில் அன்பும் அருளும் பண்பும் அழகும் நிறைந்து தோன்றும் இளைஞனை – இளைஞர்களை – எங்கே கண்டாலும் அங்கே அரவிந்தன் பிறந்திருப்பதாக நினைத்து வணங்குங்கள்! வாழ்த்துங்கள்!

நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டு ஞானப் பூங்கோதையாய் நின்று நோயும், வறுமையும் நிறைந்த மனிதர்களிடையே அருளொளி பரப்பி உயரிய வாழ்வு காண ஆசைப்படும் பெண் திலகத்தை – திலகவதிகளை எங்கே கண்டாலும் அங்கே பூரணி பிறந்திருப்பதாக நினைத்து வணங்குங்கள்! வாழ்த்துங்கள்!

பூரணியும், அரவிந்தனும் வெறும் கதாபாத்திரங்களல்லர். அவர்கள் தமிழனத்து ஆண்மை, பெண்மைக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்கள். மனிதர்களுக்குத் தான் அழிவு உண்டு. தத்துவங்களுக்கு அழிவில்லை. அவை உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவை, உயர்ந்தவை. இந்தக் கதையில் பூரணி இறக்கவில்லை. அவள் என்றும் அழியாதவள்.

ஞான ஒளி பரப்பி  தமிழும் தொண்டுமாக நூறு வயதுக்கு மேலும் ஔவையார் போல் தாய்த் தெய்வமாக வாழ்ந்து கொண்டே இருக்கிறாள் பூரணி. உயர்ந்த மலைச் சிகரங்களில் பல்லாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சிறப்பாக மலரும் குறிஞ்சி மலரைப் போல் காலவெள்ளத்தில் எப்போதாவது ஒரு முறைதான் அவளைப் போல் பெண்மலர் பூக்கிறது. இலக்கியங்களில் வாழ்கிற குறிஞ்சி மலரின் பெருமை போல் காவியங்களில் வாழ வேண்டிய பெண் அவள். என்னால் அவளுடைய கதையை வெறும் வசனத்தில் தான் எழுத முடிந்தது. என்ன செய்வது? அரவிந்தனைப் போல் கவியுள்ளம் எனக்கு இல்லையே!

என் பூரணி கையில் தீபத்தையும், கண்களில் நீரையும் ஏந்திக் கொண்டு இரக்கத்துக்குரிய ஆண், பெண்களின் இருண்ட வாழ்வில் ஒளி சிதறி நடந்து கொண்டே இருக்கட்டுமென்று உங்கள் சார்பில் அவளை வாழ்த்தி முடிக்கிறேன். வாழ்க பூரணி! வாழ்க அரவிந்தன்!

-மணிவண்ணன்.

$$$

One thought on “குறிஞ்சி மலர்- முடிவுரை

Leave a comment