பெண்மை, தாய்மை, இறைமை

-கருவாபுரிச் சிறுவன்

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே!” என்று பாடிய மகாகவி பாரதியை எண்ணுந்தோறும் தாய்மையின் சிறப்பு புரிகிறது. இதோ அதனை மேலும் வண்ணமுறக் காட்டுகிறார் எழுத்தாளர் கருவாபுரிச் சிறுவன்...

“தாய் தந்தை பேண், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்,  தாயிற் சிறந்த கோயிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, பெற்றோரை நேசி; பெரியோரைப் போற்று” என்ற தெய்வீக மொழிகளை எல்லாம் இந்தக்காலக் குழந்தைகள், தலைமுறையினர் கேள்விப்பட்டுள்ளார்களா…, அது பற்றி அறிந்து வைத்துள்ளார்களா அல்லது அதைப் பற்றி படித்துள்ளார்களா… என்பது நம் மனக்கண் முன் எழும் கேள்வியாகும்.

முன்பெல்லாம் தந்தையே தன் குழந்தைகளுக்கு  மட்டும் அல்லாது பிற குழந்தைகளுக்கும் ஆசானாக இருந்து நல்லொழுக்கம், கல்வி, கேள்வியை போதித்தார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பயிலும் கல்வி முறையே முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது.

தாய்மொழியில் 45 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என நாளேடுகளில் செய்தியைப் படிக்கும் போது அந்தக் குழந்தைகளின் எதிர்காலம்  என்ன ஆகுமோ என நினைத்து மனம் வெதும்புகிறது.

யாது செய்வேன் பரம்பொருளே என சிந்தித்த போது விழைந்ததே இச்சிந்தனை சிதறல்களாகும்.  

தாயிற் சிறந்தவன்:

இவ்வுலகத்தினைப் படைத்து, காத்து, அருள் செய்யும் பரம்பொருளை, சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள்  ‘தாயிற்சிறந்த தயாவான தத்துவனே’ என்று சிவபுராணத்தில் போற்றுகின்றார்.

சிவபுராண வரிகளை நன்கு படித்துணர்ந்து ஆராய்ந்தவர் தென்காசி மாவட்டம், மேலகரத்தில் வாழ்ந்த திரிகூடராசப்ப கவிராயர் ஆவார்.

இவர் அன்றாடம் வழிபடும் கடவுளான குற்றாலநாதப்பெருமான் வரலாற்றினைப் பாடும் நுாலில் ‘தாயின் வயிற்றில் இருக்கும் கருவிற்கும் அமுதூட்டும் தாயே’ என சிவபெருமானைப் போற்றிப் பாடுவார்.

ஈயறியா பூந்தேனே எழுத்தறியா
 மறைபொருளே!
காயறியா செழுங்கனியே கற்பகத்தின்
 பசுங்கொழுந்தே!
தாயறியா கருவிலிருந்து அமுதூட்டும்
 தாய்த்துணையே!
நீயறியா செயல் உண்டோநிகழ்
 நிரல் பரமூர்த்தியே!

பேய் வடிவம் தாங்கப்பெற்ற காரைக்கால் அம்மையின் வருகையைக் கண்டு கயிலாயத்தில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானே உமையவளிடம்,  “இவள் நம்மைப் பேணும் அம்மை காண்” என்று திருவாய் மலர்ந்தார்.

அந்த உமையவளை  “அன்னையே பின்னையும் கன்னியென பேசும் ஆநந்த ரூபமயிலே” என தாயுமான சுவாமிகள் போற்றிப் பணிவார்கள்.

தாய்மையின் சிறப்பினை அறுதியிட்டு இன்னதென இவ்வளவு தான் என அளவிட்டு கூற முடியாது. இருப்பினும் முயலுகிறேன்.   

கோட்செங்க சோழனின் தாயார்:

சிவபக்தியில் சிறந்து விளங்கிய சோழர் குலத்தில் சுபதேவன் – கமலவதி தம்பதியினருக்கு நீண்ட நாள்களாக பிள்ளைப்பேறு இல்லை. அதற்காக  தில்லை அம்பலவாணனிடம் தினமும் தொழுது அழுது வேண்டினார்கள்.

அதன்பயனாக கமலவதியின் மணிவயிறு வாய்த்தது.

பிரசவத்திற்கு  நேரம் குறித்த அரண்மனை ஜோதிடர் “இன்னும் ஒரு நாழிகை கழித்து இவ்வுலகத்திற்கு உங்கள் மகன் உதித்தால்  பார் போற்றும் சிவகாரியங்கள் பல செய்வான் என்றும், சூரிய சந்திரர் உள்ளவரை அவன் புகழ் நீடித்திருக்கும்” என சொன்னார்.

அதைக்கேட்ட, தாயார் கமலவதி அந்த நாழிகை முழுவதிலும் அடியாளை தலைகீழாக கட்டித் தூக்குங்கள் என்று சொல்லி அம்மகவை குறித்த நேரத்தில் ஈன்றாள் என்கிறது பெரியபுராணம்.

கோட்செங்க சோழ மன்னனின் தாயார் போல அரிய தியாகங்களை இன்றைய தாய்மார்கள் யாரும் செய்ய வேண்டாம்.

தங்கள் குழந்தைகளை ஒழுக்கமுள்ள, கல்வி, கேள்வியுள்ளவர்களாகவும், நீதி, நேர்மை,தர்மம், அறத்தின்பால் நிற்கும் ஞானக்குழந்தைகளாக  வளருங்கள். அதற்கான விதைகளை அவர்களது சிறுவயதிலேயே விதைத்து விடுங்கள். தாய்மைக்கு மேலும் சிறப்புச் சேருங்கள்.

அப்போதுதான் இவ்வுலகம் மேன்மையுறும் என்பதே, இவ்விடத்தில் வைக்கும் பணிவான விண்ணப்பமும் வேண்டுகோளாகும்.

பாரதத்தின் சற்குரு சமர்த்த ராமதாசர்

அந்நிய மதத்தின் தாக்கத்தால் ஹிந்து மதம் சீரழிகிறது என்பதை நன்குணர்ந்து தெய்வீகம், தேசியத்தில் அக்கறை காட்டி  வெற்றியும் கண்டவர் சமர்த்த ராமதாசர்.

ராம நாமத்தின் பெருமையை மென்மேலும் இவ்வுலகில்பரப்பி ஆஞ்சநேயரின் அவதாரமாகவே கருதப்பட்டவர்.

வீரசிவாஜியின் குருவாகவும் விளங்கியவர். பல அரிய படைப்புகளைத் தந்த பெருமகனார் ஹிந்து மதத்தின் மேன்மைக்காகவும், சமுதாயம் வலிமையடையும் பொருட்டும் சிறுவயதில் வீட்டை விட்டு வந்து விட்டவருக்கு பல ஆண்டுகள் கழித்து தன் தாயின் நினைப்பு  வந்தது.

அதனால் பழைய வீட்டு வாசலுக்கு சென்று  ‘ஜய ஜய ரகுவீர ஸமர்த்த’ என்று சொன்னாராம். அப்போது திண்ணையில் இருந்த அவரது தாயார், பிச்சைக்காரன் ஒருவன் வந்து இருக்கிறான் அவனுக்கு ஏதாவது கொடுங்கள் என்றாராம்.

உடனே, ராமதாசர்…  “நாரோபா வந்து இருக்கிறேன்” என்று சொன்னார். (அவரை சிறுவயதில் இப்படித்தான் அழைப்பாராம் அவரது தாயார்)

அதைக் கேட்ட அவரது தாயார் தட்டுத்தடுமாறி எழுந்து வந்து  “உன்னைப் பார்ப்பதற்கு என் கண்கள் கொடுத்து வைக்கவில்லை, மகனே” என்றாராம்.

தன்னுடைய தவசக்தியால் தாய்க்கு பார்வையளித்த ராமதாசர்…  “தாயே உன் இறுதிக்காலத்தில் நான் வருவேன். தேசத்திற்கு சேவை செய்ய மீண்டும் அனுமதி கொடு” எனக் கேட்டு கொண்டு ஞானப்பயணம் மேற்கொண்டார் என்கிறது அப்பிரபுவின் வரலாறு.

இன்றும் பாரதம் இவ்வுலகத்தின் உயிர்ப்பாக திகழ்வதற்கு இவரைப் போன்ற மகாஞானிகளே காரணம்.

ஆதிசங்கரர்

சண்மதங்களை உருவாக்கியவர் ஆதிசங்கரர். தன்  தாயாரிடம்  “தாயே அடியேனை மும்முறை அழைத்தால் எங்கிருந்தாலும் வந்து விடுவேன்” என்று சொல்லி ஞானவேள்விக்காக இப்பாரதம் முழுதும் வலம் வந்தார்.

அந்திமக்காலத்தில்  ஆர்யாம்பாள் அழைத்த போது  “வந்து விட்டேன்” எனச் சொல்லி தாயின் அருகே சென்றார் ஆதிசங்கரர். அவரின் திருமேனியை தொட்டுப் பார்த்த ஆர்யாம்பாளுக்கு  தன் மகன் இல்லையே என்ற உணர்வு மேலிட்டது. அதற்குள்  “வந்து விட்டேன் அம்மா…”  என வாசலில் ஆதிசங்கரர் வந்து நின்றார். அவரிடம் “மகனே! உனக்கு முன்பாக உன்னை போல வந்து மறைந்தது யார்?” எனக் கேட்டாள்.

அதற்கு நம் வீட்டின் அருகில் கோயில் கொண்டுள்ள கிருஷ்ண பகவானிடம்,  “என் தாயை பார்த்துக் கொள் என்றும், நான் வர தாமதமானால் நீ முன் செல்க என்று  சொல்லியிருந்தேன். அதனால் கிருஷ்ண பகவான் வந்திருப்பார்” என வாஞ்சையுடன் சொன்னாராம் ஆதிசங்கரர்.

தாயாருக்காக ஆதிசங்கரர் இயற்றிய  ‘மாத்ரு பஞ்சகம்’ புகழ் பெற்றது.

பட்டினத்து சுவாமிகள்

துறவி தர்மத்தை மேற்கொண்ட பட்டினத்து சுவாமிகள் தாய்க்குச் செய்ய வேண்டிய அந்திம பணிவிடைக்காக  ஊர் எல்லையிலே இருந்தார்.

தாயாரின் சிதையில்  உறவினர் அடுக்கிய விறகினை அகற்றிவிட்டு பச்சை வாழை மட்டையால் தீ மூட்டி தன் தாய்க்குச் செய்ய வேண்டிய அபரக்கிரியை செய்தார்.

அப்போது அவர் இயற்றிய பாடல்கள் நிலையாமை தத்துவத்தை கண்முன் காட்டும் காலக்கண்ணாடியாகும்.

ரமண மகரிஷி

திருவண்ணாமலையில் வாழ்ந்த  ரமண மகரிஷியை யாவரும் அறிவர். அவர் தன் தாயார் அழகம்மையை அந்திமக் காலத்தில்  அருகிலேயே அமர்த்திக் கொண்டார். வேதாந்த ரகசியங்களை  அருள் உபதேசமாக தாயாருக்கு வழங்கினார். ஆசிரமத்தில் நடத்தப்படும் சத்சங்கங்களிலும் கலந்துகொள்ளச் செய்தார். நிறைவாக,  தாயாரின் இறுதிச் சடங்கினையும் உவந்து செய்தார்.   

பெருந்துறவிகளான சமர்த்த ராமதாசர், ஆதிசங்கரர், பட்டினத்து சுவாமிகள், ரமணமகரிஷி ஆகியோர் இத்தேசம் முழுவதும்  தெய்வீகத்தை வளர்த்தவர்கள். இருப்பினும், தன் தாய்க்குச் செய்ய வேண்டிய அந்திம செயல்களை காலம் தவறாமல்  குறித்த நேரத்தில் செய்தார்கள்.

இவர்களைப்போலவே, பல அடியவர்களும் பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாயின் அந்திமக்கடனை சிரத்தையுடன் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 தெய்வத்தாயால் ‛குரு’வானவர்கள் :

பாரத தேசத்தில் வாழ்ந்த எத்தனையோ  தாய்மார்களின் வாக்குகள் வேத நீரூற்றாகி பலரையும் மகான்களாக்கி  ஞான விருட்சமாக வேரூன்றச் செய்துள்ளது. அவர்களும்,  எண்ணற்றவர்கள்  மானிடப் பிறவியின் பயனை அடைந்து இந்த தேசம் சிறப்புறவும்,  அழியாப்புகழினை அடையவும் எண்ணம், சொல், செயலால் தொண்டுகள் பல செய்துள்ளார்கள்.

அப்படிப்பட்டவர்களில் சுவாமி விவேகானந்தர், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்:

தாய்மையின் மகத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஒரு சொற்பொழிவில் அழகாக விளக்கியுள்ளார்.

“எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை சமாளிக்க என் தாயும் வேலைக்கு செல்வது வழக்கம். நான் சிறுவனாக இருந்த போது ஒரு நாள் இரவுநேரம். என் தாய் சிற்றுண்டி செய்யத் தொடங்கினாள். சமைத்த பின் கருகிய ரொட்டியை எடுத்து என் கண் முன் தந்தைக்குப் பரிமாறினாள். அவரோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் எடுத்துச் சாப்பிட்டார்.  பின்னர், என்னிடம் இன்றைய பொழுது பள்ளியில் நல்ல பொழுதாக கழிந்ததா… எனக் கேட்டார். நான் என்ன பதில் சொன்னேன் என எனக்கே தெரியவில்லை. என் தந்தையிடம் கருகிய ரொட்டியைப் பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் தாய். ஆனால் என் தந்தையோ எனக்கு கருகிய ரொட்டிகள் ரொம்பப் பிடிக்கும் என்று சொன்ன வார்த்தைகளை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை.

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்திற்கு பின் என் தந்தையின் அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லி விட்டு தயக்கத்துடன் அப்பா, உங்களுக்கு உண்மையாகவே, கருகிய ரொட்டிகள் பிடிக்குமா… எனக் கேட்டேன். அதற்கு அவர் என்னை இறுக அணைத்துக் கொண்டு, உன் அம்மா தினமும் வேலைக்குச் சென்று கொண்டும் நமக்கு பணிவிடையும் செய்கிறாள். அதோடு களைத்தும் போய் விடுகிறாள். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை. கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும். இதை உன்னிடம் சொல்லுவதால் நான் ஒன்றும் சிறந்தவன் அல்ல… சிறந்தவனாக முயற்சிக்கிறேன் என சொன்னார்.”

என்று கூறிய அப்துல்கலாமின் தாயின் பணிவிடையின் வழியே  நாம் பெண்மையின்  தியாகத்தை நன்கு அறிந்துணரலாம்.

 திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்:

தன் மக்களை தர்ம நெறியில்  தழைக்கச் செய்வதில் முக்கிய பங்கு பெண்மைக்கும் உண்டு என்பதற்கு வாரியார் சுவாமிகளின் தாயார் கனகவல்லி அம்மையார் ஒரு நற்சான்று.

என் தாயாரின் அறிவுரையே அடியேன் தேசபக்தி, தெய்வீகபக்தியிலும் நிலைத்து நிற்பதற்கு மூலகாரணம் என்கிறார் வாரியார் சுவாமிகள்.

தமிழகம், வெளிநாட்டில் வாழும் எண்ணற்ற ஆன்மிக அன்பர்களை தனது எழுத்து, பேச்சினால் இறுகக் கட்டியவராகவும், முருகப்பெருமான் திருநாமத்தை உச்சரிக்க வைத்தவராகவும், நெற்றியில் திருநீறு பூச வைத்தவராகவும் திகழும் வாரியார் சுவாமிகள் தன் தாயாரைப் பற்றிக் கூறியது…

“ நான் சிறுவனாக இருந்த பொழுது ஒரு நாள் என் உடையை மடக்கிக் கொண்டு தரையில் அமர்ந்தேன். என் தாயார் என்னைப் பார்த்து  ‘தரை அழுக்காக இருப்பதால் உடையை மடக்கி உட்காருகிறாய். குழந்தையான நீயே அழுக்குத் தரையில் அமரக் கூசுகிறாய். உன் உள்ளத்திலே ஆசாபாசங்களான அழுக்குகள் இருந்தால் அந்த அழுக்குப் படிந்த உள்ளத்தில் கடவுள் இருக்க கூசுவான். ஆகவே, நீ உள்ளம் துாயவனாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

சின்னஞ்சிறு பருவத்திலே என் அன்னை கூறிய அந்த நன்னலம் மிகுந்த சொன்னலம் பசுமரத்தாணி போல் இன்றும் பதிந்து கிடக்கிறது”  என்கிறார் தன் வாழ்க்கை வரலாற்று நூலில் வாரியார் சுவாமிகள்.

சுவாமிஜி விவேகானந்தர்

வாரியார் சுவாமிகள் தன்னுடைய சொற்பொழிவுகளில் உயர்ந்த மனிதர்களைப் பற்றி அடிக்கடி உபதேசிப்பார். அவர்களில் சிவாஜி, நேதாஜி, ராஜாஜி, காந்திஜி என்று சொல்லும் போது ‘சுவாமிஜி’ என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் விவேகானந்தர் ஒருவரே என்பார்.

அவர் வாழ்வில் தன் தாயாரோடு நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு அவரை ஞானத்தபோதரனாக மாற்றி அமைத்தது என்கிறார் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஆய்வாளர் மகாலட்சுமி அவர்கள்.

விவேகானந்தரின் தாயார் புவனேஸ்வரி. அவர் ஒரு பக்தியுள்ள இல்லத்தரசி.

விவேகானந்தர் தனது தாயாரிடம் துறவறத்திற்கு அனுமதி கேட்கச் செல்லும் போதெல்லாம்,  சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வரச் சொல்லுவார்.

அவர் கத்தியின் கைபிடியை பிடித்துக் கொண்டு கூர்மையான பகுதியை தாயின் பக்கம் கொடுப்பார். இப்படி ஓரிருமுறை செய்தார். ஒவ்வொரு முறையும்  ‘சிறிது நாட்கள் போகட்டும்’ என்றே பதில் சொல்லுவார் மாதா புவனேஸ்வரி. 

தாயின் வார்த்தைகள் அவரைச் சிந்திக்க வைத்தது. மறுமுறை துறவறத்திற்கு அனுமதி கேட்டு, கத்தியை எடுத்து வந்த போது, கூர்மையான பகுதியை தன் பக்கம் வைத்துக் கொண்டு கைப்பிடிப்பக்கத்தை தாயிடம் கொடுத்தார் சுவாமிஜி.

“எப்போது கத்தியின் கூர்மைப்பகுதியைப் பிடித்துக் கொண்டு பாதுகாப்பான கைப்பிடியை என்பக்கம் நீ்ட்டினாயோ அப்போதே, பிறரைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு உன்னிடம் ஏற்பட்டு விட்டது. எப்போது பிறருக்குரிய துன்பங்களை தாங்கிக் கொள்ள பழக்கிக் கொள்கிறாயோ, அவர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்க முயற்சிக்கிறாயோ அப்போதிருந்தே துறவியாகக் கூடிய பக்குவத்தை பெற்று விட்டாய் என் அன்பு மகனே”  என தாயிடம் பாராட்டையும் ஆசியையையும் பெற்றார் விவேகானந்தர்.

அவரின் பெருமையையும் அருமையையும் உலகமே அறியுமன்றோ!

 எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் தாயின் ஈரமானஅன்பிற்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். அவர்களுடைய அன்பு எவ்வளவு பெரிய மகானையும் உருவாக்கும்  என்பதையே மேற்கண்ட செய்திகளின் சாரமாகும்.

நிறைவாக,

பள்ளியிலிருந்து திரும்பிய இளம் சிறுவன்  தன் வகுப்பாசிரியர்  கொடுத்த கடிதத்தை தன் தாயிடம் கொடுத்தான்.

அந்த கடிதத்தைப் படித்தவுடன் அந்த தாயின்  கண்களில் கண்ணீர்  ஆறாகப் பெருகியது.  “என்னம்மா? என்ன எழுதியிருக்கிறது கடிதத்தில்?” என மழலைக்குரலில் கேட்டான்.   

“உங்கள் மகன் பெரிய ஜீனியஸ். அவனுக்குக் கற்றுத் தரும் அளவுக்கு எங்கள் பள்ளியில் திறமையான ஆசிரியர்கள் இல்லை. எனவே நீங்களே உங்கள் மகனுக்கு  வீட்டிலே சொல்லி கொடுங்கள்” என எழுதியுள்ளது என்றார் அந்தத் தாய்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அன்றில் இருந்து தன் மகனை பள்ளிக்கு அனுப்பாமல், அவரே பாடங்களை  சொல்லி கொடுக்க ஆரம்பித்தார்.

அந்த சிறுவன தான் தாமஸ் ஆல்வா எடிசன். அவனுடைய தாயார் பெயர் தான் நான்சி எடிசன்.

 பல வருடங்கள் ஓடியது.

தாமஸ் ஆல்வா எடிசன் தன் வாழ்வில் பெரும் சாதனைகள் புரிந்தார். பல கண்டுபிடிப்புகள். உலகமே அவரைப் பாராட்டியது.

சில ஆண்டுகளில் அவரது தாயாரும் காலமானார்.

 பிறகு, ஒரு நாள் தாயாரின்  அலமாரியில் எதையோ தேடிய போது, பள்ளியில் அனுப்பியிருந்த கடிதம் கண்ணில் பட்டது எடிசனுக்கு. அதைப் பிரித்துப் படித்த அவர் அப்படியே உறைந்து போனார்.

“உங்கள் பையனுக்கு மனநிலை சரியில்லை. பள்ளியில் எங்களால்  அவனை வைத்துக் கொண்டிருக்க முடியாது. பள்ளியிலிருந்து நீக்குகிறோம்” என்றுன் இருந்தது.

தாமஸ் ஆல்வா எடிசன், தனது அன்னை சமயோசிதத்தால் தன் வாழ்வைக் காப்பாற்றி, தனக்கு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்தார்.

பள்ளியில் அனுப்பியிருந்த கடிதத்தை, அப்படியே படித்திருந்தால், தன் எதிர்காலமே சிதைந்திருக்கும் என்பதும்  புரிந்தது. தாயின் தியாகத்தை உணர்ந்த அவர், பின் தன் டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் :

Thomas Edition was a mentally ill child whose mother turned him into genius of this century. (மனநிலை சரியில்லாத தாமஸ் ஆல்வா எடிசனை இந்த நூற்றாண்டின் சிறந்த அறிவாளியாக அவனது தாய் உருவாக்கியுள்ளார்)  என எழுதி வைத்தார்.

ஆக, ஒரு குழந்தை சிறந்த  முறையில் திகழ்வதற்கு அவனது தாய் முதன்மைக் காரணம் ஆவார் என்பது மேற்கண்ட  நிகழ்வுகள் நமக்கு  ஒரு பாடமாகத் திகழ்கின்றன.

நல்ல நேர்மறையான  உற்சாகமூட்டும் சொற்கள் குழந்தைகளுக்கு  உத்வேகத்தைக் கொடுக்கும்; அவர்கள் வாழ்வையே மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் என்பதற்கு எடிசன் வாழ்வும் ஒரு உதாரணம்.

மகான்களுக்கு வாய்த்த அன்னையைப் போல கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ தாய்மார்கள் இவ்வுலகில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தாயன்பு, தாயின் வாக்கிற்கு நிகரானது  எதுவும் இவ்வுலகில் இல்லை. 

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவர் ஆவாதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே” என்ற பாடல் வரிகள் உங்கள் மனஓட்டத்தில் ஒலிப்பதை அடியேனால்  உணர முடிகிறது.

பெண்மை பக்குவமாகும் போது தாய்மையாகிறது. தாய்மை பக்குவமாகும் போது இறைமையாகிறது.

அந்த இறைமையின் கையில் தான் வீடும்  நாடும் போற்றும் நற்குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்று கூறி  இச்சிந்தனையை நிறைவு செய்வோம்.

வாழ்க பாரதம்! வளர்க மணித்திருநாடு!

$$$

Leave a comment