-இரா.மாது, ராம.ரவிகுமார்
சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது ஐந்தாம் பகுதி…

19. கம்பரை மீண்டும் நன்றாகப் படி!
-இரா.மாது
கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்து முடிந்த சென்னை கம்பன் விழா நிகழ்வில் உரையாற்றிய கவிஞர் திரு. வைரமுத்து அவர்கள், வாலி வதையில் இராமனின் செயல் குறித்து வாலி உரைப்பதாகக் கம்பர் எழுதிய வரிகளான
“ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை”
-என்பதனை எடுத்துக் காட்டி, இராமனைச் சித்த பிரமை உடையவனாகக் காட்டி விட்டால் வாலியை மறைந்து நின்று கொன்றான் என்ற பழியிலிருந்து எளிதாக இராமனைத் தப்பிக்க வைத்து விட முடியும் என்று கூறி, ஒரு பழியைத் தேடிக் கொண்டார்.
அவர் கூற்று சரிதானா? என்று கம்பர் வழி நின்று சிறிது நோக்குவோம்.
திகைத்தனை என்ற சொல்லை வைத்து அவர் சொற்சிலம்பம் ஆடியிருக்கிறார். ‘திகைத்தனை’ என்ற சொல்லுக்கு முன்னால் வாலி இராமனைப் பார்த்து “:உனக்கு உயிருக்கு உயிரான மனைவி சீதையைப் பிரிந்த பின்பு திகைத்தனை” என்று எழுதுகின்றார்.
சீதையைப் பிரிந்த பின்பு இராமன் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை நினைவில் கொள்வது அவசியமாகின்றது. சீதையைக் காணாது திகைத்து நின்றான் இராமன் என்பதனை
கைத்த சிந்தையன் கனங்குழை யணங்கினைக் காணான் உய்த்து வாழ்தற்கு வேறொரு பொருளில னுதவ வைத்த மாநிதி மண்ணொடு மறைத்தன வாங்கிப் பொய்த்து ளோர்கொளத் திகைத்து நின்றானையும் போன்றான்
என்று பாடுகின்றார். ‘தான் சேமித்து வைத்த பெருஞ்செல்வமாகிய பிராட்டியைப் பிரிந்த காரணத்தால் ஏக்கமுற்று என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றான் இராமன்’ என்பது திகைத்த என்ற சொல்லுக்கு இங்குப் பொருளாக அமைவதைக் காண்கின்றோம்.
அதன் பின்னர் இராவணனை எதிர்த்துப் பேராடி வீழந்து கிடக்கும் ஜடாயுவை முதலில் காண்கின்றனர். ஜடாயுவின் நிலை கண்டு பொங்கியெழும் சீற்றத்தோடு முறுவலும் சேர்ந்து தோன்ற (செந்தீப் புகையொடு பொடிப்ப பொம்மென்ற எறிப்பதோர் முறுவல் தோன்ற) இராமன் வஞ்சினம் கூறத் தொடங்கினான்.
அறிவற்ற அரக்கன் காட்டில் தனியாகயிருந்த பெண்ணை வலியத் தூக்கிச் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர்களையும் எண் திசை உலகங்களையும் அழிப்பேன் என்றான். திகைத்துக் (சித்த பிரமை) கலங்கி நின்ற ஒருவனால் இப்படி அறச் சீற்றத்தோடு பேச முடியுமா?
உடனே ஜடாயு அப்பா! இது உங்களது பிழை அதற்கு இந்த உலகத்தின்மீது கோபப்பட்டு உலகத்தையே அழிப்பேன் என்று கூறுவது சரியா? என்று கேட்டவுடன் தன் சீற்றம் தணிந்து, ‘அப் புண்ணியன் புகன்ற சொல்லை, தயரதன் பணி ஈது’ என இராமன் கொண்டான். சித்த பிரம்மை பிடித்த ஒருவனுக்கு உடனே தன்னிலை மாறல் என்பது சாத்தியமா?
ஜடாயுக்குத் தன் தந்தை தயரதனுக்குச் செய்வது போல, இறுதிக் காரியங்களை இராமன் செய்கிறான். ‘அப் புள்ளினுக்கு அரசை, கொள்க என்று, ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்த்து அன்றே!’ என்று கம்பர் எழுதியதை நோக்கும்போது சீதையைப் பிரிந்த பின்னைத் திகைத்தனைப் போலும் செய்கை (சித்த பிரமை) என்பது போல இராமன் செயல் இருக்கின்றதா?.
மற்றொன்று விசுவாவஸீ என்ற கந்தருவன் சாபத்தால் கவந்தன் என்ற அரக்கனாய் மாறியவனை இராமன் அழிக்கிறான். கம்ப ராமாயணத்தில் அமைந்துள்ள பல துதிகளில் ‘கவந்தன் துதி’யும் சிறப்புடைய ஒன்றாகும். சீதையைப் பிரிந்த பின்பு திகைத்து (சித்த பிரமை) நின்ற நடையில் நின்றுயர் நாயகனைப் பரம் பொருளாய்க் கம்பன் சித்தரிப்பதைக் காண வேண்டாமா?
முன்னை உருப்பெற்ற கவந்தன் “இரலை மலையில் இருக்கும் சுக்ரீவனை அடையுங்கள். அதற்கு மதங்க முனிவர் ஆசிரமத்தில் இராமன் வரவுக்காகக் காத்து நிற்கும் சபரியைச் சந்தியுங்கள். அவள் மூலம் சுக்ரீவன் நட்பினைப் பெறுங்கள்” என்று வழி காட்டினான். இராமனும் சபரியைச் சந்தித்து அவள் அன்பில் திளைத்து, அவளுக்கு நன்மை செய்து சுக்ரீவனை நாடிச் செல்கிறான். இதுவும் ஜனகன் பெற்ற அன்னத்தைப் பரிந்த பின்பு திகைத்துக் ( சித்த பிரமை ) கலங்கி நின்ற ஒருவன் செய்கின்ற செயலா?
கவந்தனும் சபரியும் சுக்ரீவனை விட பன்மடங்கு பலம் பெற்ற வாலியை நாடிச் செல்லுங்கள் என்று இராமனுக்கு வழி காட்டியிருக்கக் கூடாதா? காரணம் நெறியற்ற வழியில் செல்லும் ஒருவனை நாடி தங்கள் காரியத்தில் இராமன் வெற்றியடையந்து விடக் கூடாது என்ற எண்ணத்திலேயே ஆகும்.
தன் நண்பன் சுக்ரீவன் மனைவியாகிய உருமையை வாலி விரும்பிக் கவர்ந்து கொண்டான் என்று அறிந்தவுடனேயே இராமன் ‘மற்றொருவன் தாரம் வௌவினான் என்றால் அப்படிச் செய்தவனை அழிப்பேன்’ என்று முடிவு செய்து விட்டான். அறங்காத்து நின்ற அவ்வள்ளலா தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்து (சித்த பிரமை) நின்றவன்?
பிறன் மனை நயந்து, அடிபட்டு சித்தம் கலங்கி நிற்கின்ற வாலிக்கு இராமன் வேறு எப்படித் தெரிவான்? அவன் இகழ்ந்து பேசிய பேச்சை ஒரு சான்றாகக் காட்டி இராமனையும் தாழ்த்தி, கம்பரையும் தாழ்த்துவது முறையாகுமா? அதே வாலி பின்னால் இராமனை உணர்ந்து, போற்றுவதைக் காணாது போனது ஏன்?
வான்மீகியைத் தழுவி கம்பர் தம் காப்பியத்தைப் படைத்திருந்தாலும் அதில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். வான்மீகத்தில் தயரதனின் மூன்றாவது மனைவி கைகேயி. ஆனால் கம்பரில் அவள் தயரதனின் இரண்டாவது மனைவி. வாலியின் மறைவுக்குப் பிறகு, தாரை சுக்ரீவனோடு வாழ்வதாகப் படைத்திருக்கின்றார் வான்மீகி. ஆனால் கம்பரோ அவளைக் கைம்பெண்ணாகப் படைத்திருக்கின்றார்.
‘இராமனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கம்பர் அவனை சித்த பிரமைக் கொண்டவனாகக் காட்டியுள்ளார்’ என்று கூறினால், எவ்வளவோ மாற்றங்களைச் செய்த கம்பர் வாலி பெற்ற வரத்தை மறைத்து, இராமன் நேரடியாக வெளிப்பட்டுத் தான் கொன்றான் என்று சொல்லியிருந்தால் இராமனைக் காப்பாற்ற முற்படுவதாக நினைத்துக் கொண்டு பேசுபவர்கள் நிலை என்ன?
வாலி வதையில் இந்த உலகத்துக்கு ஒரு அறத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கின்றார் கம்பர். அதனை அறிவது எப்படி?
எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவும், பாரதி அன்பர் திருலோக சீதாராமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கரிச்சான் குஞ்சு “திருலோகம் பாரதியை நன்கு படித்தாயிற்று, எழுதியாயிற்று, இனி என்ன செய்யலாம்?” என்று கேட்கின்றார். திருலோக சீதாராமோ, “ஒன்று செய். பாரதியை மீண்டும் நன்றாகப் படி” என்றார்.
ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காணும் வரை படிக்க வேண்டும். காரணம் அறிதோறும் அறியாமையை உணரலாம்.
- திரு. இரா.மாது, தமிழ்ப் பேச்சாளர்; திருச்சி கம்பன் கழகத்தின் செயலாளர்.
$$$
20. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
-ராம.ரவிகுமார்
தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகன் நடத்திய கம்பன் விழாவில், கோடானுகோடி ஹிந்து மக்கள் போற்றி வணங்கும் வாழ்வியல் வழிகாட்டி, ஸ்ரீ ராமர் குறித்து கம்பன் கூறாத கருத்தை, வம்பன் போல் வைரமுத்து பேசியது, வன்மையாக கண்டிக்கக் கூடியது.
‘கோ இயல் தர்மம் உங்கள் குலத்து உதித்தோர் கட்கு எல்லாம் ஓவியத்து எழுத வொண்ணா உருவத்தாய்; உடைமை அன்றோ? ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும்’ என்பது கம்ப ராமாயணப் பாடல்.
‘சித்திரத்தில் எழுத முடியாத வடிவுடைய உங்கள் குலத்தில் பிறந்தவருக்கு எல்லாம், அரசநீதி வலுவாக இருத்தல் கடமை அன்றோ? அவ்வாறு இருக்க, ராம பெருமான் அந்த நீதியை வழங்கியது எவ்வாறு? உனது உயிருக்கு உயிரான தேவியை சனகன் பெற்ற அன்னத்தை பிரிந்ததால் செயல் இதுவென்று அறியாது தடுமாறினாய் போலும்’ என்பது கம்பன் கூறியது.
ஆனால் வைரமுத்து, திராவிட மாடல் சிந்தையோடு யோசனை செய்து, ‘சீதையைப் பிரிந்த காரணத்தால் ராமன் புத்தி சுவாதீனம் இழந்து விட்டான். புத்தி சுவாதீனம் இழந்தவன் செய்யும் குற்றம், இந்திய தண்டனைச் சட்டம் 84வது பிரிவின்படி குற்றம் ஆகாது என்று சொல்லுகிறது’ என்கிறார்.
இந்திய தண்டனைச் சட்டம், புதிய பரிணாமம் பெற்று இருப்பது, வைரமுத்துவுக்கு தெரியவில்லை போலும்.
‘கம்பனுக்கு இந்திய தண்டனைச் சட்டம் தெரியாது; ஆனால் சமூகம் தெரியும். அதனால், குற்றவாளி ராமனை கம்பன் மன்னிக்கிறான். ‘ராமன் மனிதர் ஆகிறான்; கம்பன் கடவுளாகிறான் என்று, வியாக்கியானம் கொடுக்கிறார்.
திகைத்தனை என்றால் மலைத்தனை என்று பொருள்; மதியிழப்பது அல்ல என்று அகராதி கூறுகிறது. ஆனால் வைரமுத்து, ‘திகைத்தனை’ என்ற சொல்லுக்கு, புத்தி சுவாதீனம் இழந்தவன் என்று பொருள் சொல்கிறார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் மூலப் பிரதியின் அடிப்படை உரிமைகள் பற்றிய பகுதி- 3, ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோரின் விளக்கப் படத்தை கொண்டுள்ளது. ஸ்ரீராமர், மக்களின் உரிமைகளின் உண்மை காவலராக இருந்தார் என்று குறிப்பிடுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையைப் படிக்காமல், நுனிப்புல் மேய்வது போல் ஸ்ரீராமனை குற்றவாளி என்று வைரமுத்து தீர்ப்புரை எழுதிப் பேசுவது, கம்பன் மீது பழி போடுவது எல்லாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நேரடியாக அவமதிப்பது போல இருக்கிறது. இதற்காகவே வைரமுத்து மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீராமன் குற்றவாளி என்றால் இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் குற்றம் உடையது என்று கூற வருகிறாரா?
‘உலகிலுள்ளோர், ராமனைப் போற்றி வணங்கி துதித்து, தனக்கு கதிமோட்சம் தர மாட்டானா என்று ஏங்கித் தவிக்கும்போது, அந்த அறத்தின் வடிவமே என்னை தேடி வந்து வீடு பேறு அருளியது என்றால் நான் எவ்வளவு புண்ணியம் செய்து இருப்பேன்’ என்று, வாலி தன் உயிர் நீக்கும் தறுவாயில் குறிப்பிடுகிறான்.
ராமன் புத்தி சுவாதீனம் இழந்தவன் என்றால், அவனிடம் தன் மகன் அங்கதனை எப்படி வாலி ஒப்படைத்து இருப்பான்? வாலி தன், ‘உடன் பிறப்பு’ பாசத்தால் தன் சகோதரன் சுக்ரீவனை, ராமனிடம் எப்படி ஒப்படைத்து இருப்பான்? வைரமுத்து பதில் சொல்ல வேண்டும்.
திட்டமிட்டு திராவிட மாடல் அரசின் விருதுகளையும், அரசு சுகங்களையும் ஆரம்ப காலம் தொட்டு தற்போது வரை அனுபவித்து வரவே, சர்ச்சைக் கருத்துக்களை, வைரமுத்து பேசி இருக்கிறார்.
ஒரு சொல், ஒரு இல், ஒரு வில் என்று வாழ்ந்த ராமனை, இந்த மூன்று வார்த்தைக்கும் பொருத்தமில்லாத ஒருவர் பேசுவது நல்லதல்ல.
அகங்கார எண்ணத்தோடு, அலங்கார எழுத்துக்களோடு, வார்த்தை ஜாலங்களில் வன்மத்தை புகுத்துவது சரியல்ல.
‘ஆண்டாள் பெரியாழ்வாருக்குப் பிறந்த பெண் இல்லை. ஆதலால் அவள் பிறப்பு குறித்து, ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும் குலம் அறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள, சாதிக்கட்டுமானம் உள்ள சமூகம் தயங்கி இருக்கலாம் என்பதாலும், அரசும், சமூகமும் அங்கீகரித்ததாலும், கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்கு சில ஆய்வாளர்கள் ஆட்படுகின்றனர்’ என, அமெரிக்காவில் சமர்ப்பிக்கப்படாத ஒரு கட்டுரையை குறிப்பிட்டு ஏற்கனவே பேசி இருக்கிறார் வைரமுத்து.
மேலும், ‘ராமன் அணில் முதுகில் தடவியதால் மூன்று கோடுகள் இருக்கிறது. சீதை முதுகில் எத்தனை கோடுகள் இருக்கிறது?’ என்று, கயமைப் பேச்சும் பேசியவர் இவர்.
பிற மத கடவுளர்களை, வழிபாட்டு முறையினரை, வைரமுத்து வசை மாரி பொழிந்ததாக இதுவரை எந்த வரலாறும் இல்லை.
தமிழக முதல்வர் விருது கொடுத்த மேடையில், ராம பெருமானை குற்றவாளி என்றும், புத்தி சுவாதீனம் இழந்தவன் என்றும் பேசியதை, தி.மு.க., அரசோ, விழா ஏற்பாட்டாளர்களோ, பிற கட்சியினரோ இதுவரை கண்டித்ததாகத் தெரியவில்லை.
தமிழக சட்டத்துறை அமைச்சர், தி.மு.க.,வைச் சேர்ந்த ரகுபதி, புதுக்கோட்டை கம்பன் கழக விழாவில் பேசுகிறார்… “கம்ப ராமாயணத்தை உற்று நோக்கிப் பார்க்கையில், சமத்துவம், சமூக நீதி – எல்லாருக்கும் எல்லாம் – நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள் – நமக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை கம்ப ராமாயணம் சொல்லுகிறது. ‘பரசுராமன், பலராமன், கிருஷ்ணன், ராமன் என பல அவதாரங்கள் இருந்தாலும், மனித அவதாரமாக ராம அவதாரம் இருக்கிறது. ஈ.வெ.ரா., அண்ணா, அம்பேத்கர் ஆகியோருக்கு முன்பே, சமூக நீதியை இந்த மண்ணில் தந்தது ஸ்ரீ ராமர்” என்று குறிப்பிடுகிறார்.
இதற்கு வைரமுத்து என்ன சொல்லப் போகிறார்?
தமிழக அமைச்ச ர் கே.என்.நேரு, மதுராந்தகம் ஏரி காத்த ராமர் திருக்கோவிலுக்கு 20 லட்சம் ரூபாய் பொருட்செலவில், தன் காணிக்கையாக கொடி மரத்தை அமைத்துத் தருகிறார்.
தமிழ்நாட்டில், ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாக மேற்பார்வையின் கீழ், எத்தனை ராமர் திருக்கோவில்கள் இருக்கின்றன! அத்தனை ராமர் தெய்வங்களை வணங்கக்கூடிய பக்தர்களை அவமதித்து பேசிய வைரமுத்துவுக்கு எதிராக, இதுவரை அமைச்சர் சேகர்பாபு வாய் திறக்காதது ஏன்?
சைவ சமய, வைணவ சமய மற்றும் பிற வழிபாட்டு முறையைப் பின்பற்றக்கூடிய ஹிந்துமத ஆதீனங்கள், ஜீயர் பெருமக்கள், ஆன்றோர், சான்றோர், துறவியர் யாருமே, வைரமுத்துவுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கை கூட தெரிவிக்காதது பெரும் வேதனை தருகிறது.
‘ராமன் ஒரு குடிகாரன், ராமன் எந்த இன்ஜினீயரிங் கல்லுாரியில் படித்தான்? அவன் எப்படி ராமர் பாலம் கட்டினான்?’ என்று, முன்பு கருணாநிதி பேசிய போது, கருணாநிதிக்கு எதிராக, தமிழகத்தில் இருந்த போராட்டக்களம் இப்பொழுது, வைரமுத்துவுக்கு எதிராக இல்லாதது ஏன்?
நாடாண்ட ராமன் கானகம் செல்ல வேண்டும், பதவியை பரதனிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என்ற போது, அன்று மலர்ந்த தாமரை மலர் போல முகம் மாறாது, அரச பதவியை விட்டுக் கொடுத்து, கானகம் சென்றவன் கருணை வடிவம் ராமன்!
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்ட அயோத்தி ராமன் குறித்து அவதுாறு பேசிய வைரமுத்து மீது, தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
பக்தி படைத்த ஹிந்துக்கள் சக்தி படைத்தவர்களாக மாறினால் தான், ஹிந்து மதத்திற்கு எதிராகப் பேசும் இதுபோன்ற மனிதர்கள் பேசாதிருப்பர்.
- திரு. ராம. ரவிகுமார், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர்.
- நன்றி: இந்தக் கட்டுரை தினமலர் (17.08.2025) நாளிதழில் வெளியானது.
$$$
அருமையான பகிர்வு
LikeLike