கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி: 1

-அரவிந்தன் நீலகண்டன், பி.ஏ.கிருஷ்ணன், இராம.நம்பிநாராயணன், துக்ளக் சத்யா, ஜெயஸ்ரீ சாரநாதன்

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு பயந்து அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது முதல் பகுதி…

1. சிறியனவே சிந்திக்கும் கீழ்மை!

-அரவிந்தன் நீலகண்டன்

வைரமுத்துவின் உரையை முழுக்கக் கேட்டேன். (என்ன ஒரு சித்ரவதை அது!) ஓர் உரை என்ற அளவில்கூட படு அபத்தமாக இருந்தது.

ஸ்ரீராமன் மீதான பழியை கம்பன் துடைத்துவிடுகிறாராம். வால்மீகியின் வாலி இராமபிரானை மன்னிக்கவில்லையாம். ஆனால் கம்பனின் வாலி இராமபிரானை மன்னித்துவிட்டானாம்.

எப்படி? மனைவியைப் பிரிந்தமையால் ஸ்ரீ ராமர் புத்தி சுவாதீனம் இல்லாமல் செயல்பட்டமையாகச் சொல்லி இராமனை வாலி மன்னித்துவிட்டானாம். கம்பனை காற்றுவாக்கில் கேட்டவர் கூட இப்படி உளற முடியாது.

இராமரின் அம்பால் அடிபட்டு மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான் வாலி. அப்போது இராமரை வாலி இகழ்ந்து அவர் செய்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறான். அதற்கு ஸ்ரீ ராமர் பதிலளிக்கிறார், இந்த உரையாடல் வால்மீகியிலும் கம்ப ராமாயணத்திலும் மாறுபடுவது உண்மையே.

ஆனால் அது நிகழ்வது மற்றொரு இலக்கிய- பண்பாட்டுப் பரிணாமத்தின் விளைவாக. கம்பரின் இராமாவதாரத்தில் காணப்படும் அந்தப் பரிணாமத்தின் விதை வால்மீகியிலேயே உள்ளது.

காண்போம்.

முதலில் ஆதிகவி வால்மீகியும் சரி, தமிழ்க்கவி கம்பரும் சரி, மன்னிப்பு என்கிற பேச்சுக்கே தங்கள் காவியங்களில் இடமளிக்கவில்லை. வால்மீகி ராமாயணத்தில் வாலியின் கேள்விகள் அனைத்துக்கும் ராம பிரான் பதிலளிக்கிறார். அவை அனைத்துமே சட்டரீதியாகவும் அறத்தின் அடிப்படையிலும் உள்ள பதில்கள்.

காட்டில் வாழும் உயிர்களும் இஷ்வாகு அரச ஆளுகைக்குள் வருபவையே. எனவே அவற்றைத் பாதுகாக்கவும் தண்டிக்கவுமான உரிமை இஷ்வாகு அரசராக தற்போது உள்ள பரதனின் பிரதிநிதியாக தனக்கு உள்ளது. வாலியோ தன் மருமகளாகக் கருத வேண்டிய சுக்ரீவனின் மனைவியிடம் முறை தவறி நடந்து கொண்டான். அது தண்டனைக்குரிய குற்றம். அதற்கான தண்டனை மரணம். வேட்டையாடுவது அரச ரிஷிகளும் செய்வதே.

வாலியோ கிளைக்குக் கிளை தாவும் விலங்கு (சாகை தாவும் மிருகம்) . எனவே மறைந்திருந்து ஒரு மிருகத்தை வேட்டையாடுவது போல வாலியைக் கொன்றது தவறில்லை.

இதில் பட்டவர்த்தனமாகத் தெரியும் மேம்போக்கான – ஓரளவு ஆழமான என்று கூட சொல்லலாம் – முரண் ஒன்று உள்ளது. கொல்வதற்கான காரணமாக சாஸ்திரங்களின் அடிப்படையிலான ஒழுக்கவிதியை இங்கு இராமபிரான் சொல்லி, அதை வாலி மீறிவிட்டதாகச் சொல்கிறார். இவை மானுடருக்கேயானது. கொல்லும் முறையை நியாயப்படுத்தும் போதோ வாலி ஒரு மிருகம் என்பதால் மனிதருக்கான போர்விதிகளைப் பின்பற்றாமல் விலங்கை வேட்டையாடும் முறையையே பின்பற்றியதாகச் சொல்கிறார்.

ஆனால் இந்த முரணுக்கான ஆழமானதோர் விளக்கத்தையும் கூட வால்மீகி முனிவர் இராமரின் பதிலிலேயே உள்ளே அமைத்துள்ளதாகக் கருத முடிகிறது. குதிக்கும் விலங்கினத்தைக் குறிக்கும் பதத்தால் வாலியை விளிக்கும் இராமர், அறம் சார்ந்த நடத்தை எதுவென அறிந்திடல் மிகவும் கடினம் என்றும், எல்லா உயிர்களின் உள்ளேயும் உறைந்திடும் ஆன்மா அறிந்திடும் எது சுபம், எது சுபமல்ல   எனவும் கூறுகிறார். (’ஹ்ருதிஸ்த ஸர்வபூதாநாம் ஆத்மா வேத ஸுப- அஸுபம்’) இங்கு ஒவ்வொரு வார்த்தையையும் கவி மிக அழகாக அமைத்திருக்கிறார்.

வாலி காமத்தாலும் கோபத்தாலும் சுக்ரவனை விரட்டியடித்து அவன் மனைவியைக் கவர்ந்து கொண்டான். அவன் விலங்காக இருந்த போதிலும் அவன் அந்தராத்மா அறியும் – அவன் செய்தது தவறென. இராமபிரான் மறைந்திருந்து வாலியை வதம் செய்தார் என்றும், தான் எவ்விதத்திலும் வேட்டையாடத் தகாத விலங்கு என்றும் வாலி கூறினாலும் கூட, வாலியின் அந்தராத்மா அறியும்- தனக்கு கிடைத்தது தக்க தண்டனையேயென்று. உபநிடதம் கூறும் உண்மை அனைத்துயிர்களிலும் ஆன்மாவாக இருப்பது ஒரே வஸ்து என்பது. அதுவே அத்தனை பன்மைகளையும் இணைக்கும் ஒருமை.

அனைத்துயிர்களிலும் ஆத்மாவாக இறைவன் உறைகிறான் என்பது இம்மண்ணின் ஞானம். எனவே சக உயிர் மீது வாலி செய்த முறையற்ற கொடுமை என்பது மானுட/விலங்கு என பிறப்படிப்படையிலான வேறுபாடுகளைத் தாண்டிய அறமின்மை.

இராமனின் உரைகளைக் கேட்ட பிறகு வாலி இராமனை மன்னிக்கிறான்/ மன்னிக்கவில்லை என்பது ஆதிகவியின் காவியத்தில் அபத்தமானது என்பது இப்போது தெளிவாயிருக்கும். மன்னிக்கவும், மறுக்கவுமான இடத்தில் வாலியை வால்மீகியும் வைக்கவில்லை; கம்பரும் வைக்கவில்லை.

வாலி இறுதியில் அதையே சொல்கிறான். தர்மத்தில் உறுதிப்பட்டவனாக தன் தவறை உணரும் வாலி, ‘இராகவனிடம் எவ்வித களங்கமும் காண்பதற்கில்லை’ (ந தோஷம் ராகவே தத்யௌ) என சொல்கிறான். பின்னர் கூப்பிய கரங்களுடன் தான் இராமனை நோக்கி தாம் முன்னர் உரைத்த வார்த்தைகள் தகாதவை எனவும் வேதனையால் அறிவிழந்து தாம் கூறியவார்த்தைகளை மன்னித்தருளவும் வேண்டுகிறான்.

கம்பன் இதை எப்படி கையாளுகிறார்?

வால்மீகி பூடகமாக இங்கே இராமனை அனைத்துயிரிலும் உறையும் அந்தர்யாமியாகக் காட்டுகிறார் என சொல்ல இடமிருக்கிறது என்றால், கம்பனுக்கு அப்படி பூடகமாகவெல்லாம் சொல்ல வேண்டிய தடை எதுவும் இல்லை. எது வித்தாக வால்மீகியின் வாலிவதை சர்க்கத்தில் உள்ளதோ அது, கம்பனின் வாலி வதைப்படலத்தில் முழு விருட்சமாக வளர்ந்து விட்டிருக்கிறது. பக்தி எனும் நீரால்.

வாலியைப் பொறுத்த வரையில் ஸ்ரீ ராமன் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் மானுடன் மட்டுமல்ல. அவர் இருள்சேர் இருவினையும் தீர அறவழி நடத்தலைக் காட்ட வந்தவர். இதனை அவன் மனைவி தடுக்கும் போதும், இராமன் என்பவனோடு சுக்ரீவன் இணைந்துள்ளான் என்பதைச் சொல்லும் போதும் கோடிட்டுக் காட்டுகிறான் வாலி. இங்கேயே இராமன் பரம்பொருள் என்பதற்கான அறிதல் வாலியிடம் இருப்பது மென்மையாக சுட்டப்படுகிறது.

எனவே ஸ்ரீராமன் எய்த பாணத்தால் தான் அடியுண்டு கிடப்பது அவனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பத்தொன்பது பாடல்களில் அவன் ஸ்ரீ ராமனை கேள்விக்குள்ளாக்குகிறான். ஆத்திரம், கேலி, ஏமாற்றம், வருத்தம் என அனைத்து உணர்வுகளையும் காட்டும் பாடல்கள் அவை. வைரமுத்து சொல்லும் பாடல் இந்த பத்தொன்பது பாடல்களில் ஒன்று.

‘ஆவியை சனகன் பெற்ற
அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்பை
திகைத்தனை போலும் செய்கை’

-இங்கு சீதை சனகன் மகள் மட்டுமல்ல அவள் இலக்குமி தேவியும் என்பதைச் சொல்கிறான் வாலி. எனவே இராமன் வெறும் மானுடனல்லன். அவன் அவதார புருஷன். ஆனால் அவன் செய்கையோ மானுடனைப் போல மனைவியைப் பிரிந்த துயரால் நிலைதடுமாறி அறத்திலிருந்து பிறழ்ந்துவிட்டது.

இது நியாயப்படுத்துதல் அல்ல; களங்கம் துடைத்தல் அல்ல; இது கூர்மையான சொல்லம்பு. இதனைத் தொடர்ந்தும் வாலி மிகக் கடுமையாக இராமனைச் சாடுகிறான். மனிதனாகவே உன்னைக் கண்டால் கூட நீ செய்தது சரியில்லை என அடுத்துச் சொல்கிறான். அரக்கர் மன்னன் செய்த குற்றத்துக்கு குரங்குகள் மன்னனைக் கொல்வதுதான் உங்கள் மானுட நெறியா? இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப்பிழை கண்டாய்? என்கிறான். இது ஒரு தொடர்ச்சி. எனவே இது குற்றம் பொறுத்தல் அல்ல, களங்கம் துடைத்தலும் அல்ல. இது குற்றம் சாட்டுதலே ஆகும்.

அடுத்த பத்து பாடல்களில் இராமபிரான் வாலிக்கு விடையளிக்கிறார். அவன் செய்த தகாத செயலைச் சுட்டுகிறார். சொந்த சகோதரன் மீது பொய் குற்றம் சுமத்தி அவன் மனைவியைக் கவர்ந்த அதர்ம செயலைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும் தம் அவதார நோக்கையும் சொல்லிவிடுகிறார்:

ஏதிலாரும், எளியர் என்றால், அவர்
தீது தீர்ப்பது என் சிந்தைக் கருத்துஅரோ.

ஆனால் வாலி வாதிடுகிறான்.  ‘நாங்கள் விலங்குகள். எங்களுக்கு உங்கள் அறமெல்லாம் பொருந்தாது’ என வாதிடுகிறான். எங்களுக்கு மண நெறிகள் இல்லை. அவையெல்லாம் மறைநெறியில் வந்தவை. புலனுணர்வுகளின் வழியே வாழ்வதே எம் வாழ்க்கை நெறி. எம் இனப் பிறப்பின் நெறியிது என வாதிடுகிறான்.

இங்கு ஸ்ரீராமர் அறம் பிறப்பின் அடிப்படையிலான வேறுபாடுகளைத் தாண்டியது என்பதை விளக்குகிறார். அனைத்து உயிர்களிலும் ஆன்மாவாக விளங்குவது- எது அறம் பொருந்திய நன்மை என்பதையும் அறம் இன்மையையும் அறியும் என்பது ஆதிகவி வாக்கு. இங்கு அதை மேலும் விரித்து இராமபிரான் வார்த்தைகளால் விளக்குகிறார் கம்ப நாட்டாழ்வார்.

யாக்கை சார்ந்த புலன்களால் அறநெறி நிர்ணயிக்கப்படுவதில்லை. அது அறிவு சார்ந்தது. ‘பொறியின் யாக்கையதோ? புலன் மேவிய அறிவின் மேலது அன்றோ, அறத்தாறுதான்?’ அறம் அறிவிலிருந்து எழுவது என்பதைக் காட்டுகிறார். அது புலன்சார்ந்த கரணங்கள் சார்ந்த அறிவல்ல. பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான அறிவு. அதுவே அனைத்துயிர்களிலும் உறையும் ஆன்மாவாக சுடர்விடும் கங்கிலா ஜோதியான அறிவு. அந்த அறிவு காட்டும் அறநெறி ஒழுகும் விலங்கும் உயர்ந்தவரே அவ்வாறு ஒழுகாத மானுடரும் கீழ்மையினரே. இதனை ஸ்ரீராமர் உதாரணங்கள் மூலம் விளக்குகிறார். கஜேந்திர மோட்சம். அங்கு யானை உணர்வற்ற விலங்கு அல்ல. உணர்வின் பயனால் வீடு பேறடைந்த ஆன்மா.

சிந்தை, நல் அறத்தின் வழிச் சேறலால்,
பைந்தொடித் திருவின் பரிவு ஆற்றுவான்,
வெந்தொழில் துறைவீடு பெற்று எய்திய
எந்தையும், எருவைக்கு அரசு அல்லனோ?

மனதை நல் அறத்தின் வழி செலுத்தி பெண்ணின் துயர் நீக்க போர் தொழில் புரிந்து உயிர்தியாகம் செய்து வீடு பேறடைந்த ஜடாயு எம் தந்தை, பறவை இனத்தைச் சார்ந்தவராவார். இங்கு பிறப்படிப்படையிலான அனைத்துப் பாகுபாடுகளையும் உறவுகளையுமே அறத்துக்குக் கீழாக கொண்டு சென்றுவிட்டார் இராமபிரான்.

இப்போது வாலிக்கு எஞ்சியுள்ள ஒரே கேள்வி, ஏன் ஸ்ரீராமன் தன்னை மறைந்திருந்து கொல்ல வேண்டுமென்பது. அதற்கு இலக்குவன் பதிலளிக்கிறார்:  நீ இராமர் எதிரில் வந்தால் சரணாகதி அடைந்துவிடுவாய். அதர்மம் செய்த நீ தண்டனை அடைய வேண்டுமென்பதால் அவர் மறைந்திருந்து கொன்றார்.

இப்போது கம்பர் வாலியிடம் ஒரு மாற்றத்தைக் காட்டுகிறார். வாலி பூரண அறிவை அடைகிறான். ஸ்ரீராமரை பரம்பொருளாக உணர்கிறான். இராமனின் கருணை அவனை மற்றொரு பிறப்புக்கு வழி வகுக்கிறது. அந்தப் பிறப்பு வீடுபேறேதான். எனவே இராமர் ‘தாய் என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும் சால்பும்’ தான் என நின்ற நம்பியாகிறார். அவன் இராமரால் அடைந்தது அவன் செய்த தவறுக்கான தண்டனை என்பதைத் தாண்டி, வீடு பேறடைவதற்கான அனுக்கிரகம். வாலியின் வார்த்தைகள் தோத்திரங்களாக விழுகின்றன:

மூவர் நீ முதல்வன் நீ... முற்றும் நீ மற்றும் நீ
பாவம் நீ தருமம் நீ... பகையும் நீ உறவும் நீ
......
யாவையும் எவையுமாய்... இருதுவும் பயனுமாய்
பூவும் நல்வெறியும் ஒத்து ஒருவ அரும் பொதுமையாய்
ஆவன் நீ ஆவதென்றுஅறிவினார் அருளினாய்
தா அரும் பதம் எனக்கு அருமையோ தனிமையோய்!

 ‘உண்டு எனும் தருமமே உருவமா உடைய’ என இராமனை விளிக்கிறான் வாலி. என்றும் உண்டு என விளங்கும் தருமம் ஸ்ரீ ராமன். சநாதன தருமம் வேறு ஸ்ரீ ராமன் வேறு அல்ல. அவனே சநாதன தருமம். உன்னை நான் கண்டுகொண்டேன். என் பழம்பெரு வினைக்கு தண்டனையாக யோகிகளும் முனிவர்களும் பெறுவதற்கு அரிய பரமபதத்தையல்லவா அளித்துவிட்டாய்!

இங்கு கம்பன் நிகழ்த்தியுள்ளது பெரும் சாதனை. ஆன்மிக இலக்கிய மாபெரும் உச்சங்களில் ஒன்று.

எளிய பக்தன், இறைவன் இதை இதை எனக்கு செய்வான் என சாதனையைத் தொடங்குகிறான். தன் புலனும் மனமும் சார்ந்த அறிவின் மூலம் பரம்பொருளின் செயல்பாட்டை வரையறை செய்கிறான். ஆனால் அந்தக் கணிப்பு தவறாகும் போது அவன் சீற்றம் அடைகிறான். தனக்கு தான் வணங்கிய பரம்பொருள் கெடுதல் செய்துவிட்டது. உன்னை நம்பினேனே கைவிட்டு விட்டாயே நீயெல்லாம் தெய்வமா? என்கிறான்.

ஆனால் உண்மையான பக்தனுக்கு, அவன் தன்னைத் தூற்றினாலும் பரம்பொருள் அவன் தகுதியின்மையை உணர்த்துகிறது. இப்போது கோபத்திலிருந்து முன்னகர்ந்து தர்க்கம் செய்கிறது மனம். அதுவே வாலியின் இரண்டாம் கட்ட நான்கு பாடல்களும். வாலிக்கு அபயம் அளித்திருந்தால் வாலி கர்ம வினைகளிலேயே கட்டுண்டு கிடந்திருப்பான். பரம்பொருளின் மறக்கருணையை விளக்கியருளினார் இளைய பெருமாள். அதன் பின்னால் வாலி தூய அறிவினை அடைகிறான். இதுவே பக்தனின் சாதனையின் பரிணாம வளர்ச்சி. நெஞ்சில் அம்பு தைத்து அந்த வலியிலும் வேதனையிலும் வாலியால் அதை அடைய முடிந்தது. பக்தனின் ஆன்ம முன்னேற்றத்தை இங்கே ஒரு வரைபட கையேடாக அளித்திருக்கிறார் கம்பர் பெருமான்.

கீழ்மையே கதியாய் வாழ்வோனாகிய வைரமுத்தால் சிறியன சிந்தியானாக கம்பர் காட்டும் வாலியை எப்படி புரிந்து கொள்ள முடியும்! போகட்டும் விடுங்கள்.

  • திரு. அரவிந்தன் நீலகண்டன், ஹிந்து அறிவியக்கச் செயல்பாட்டாளர்.

$$$

2. தடுமாறவைத்த தடித்தனம்

-பி.ஏ.கிருஷ்ணன்

இலக்கியத்தை அசாதாரணத் தடித்தனத்தோடு அணுகுவது என்பது பெரியார் கற்றுக் கொடுத்த பாடம். இப்பாடத்தை மறக்காத ஒருவர் தன்னை விடப் பெரிய கவிஞன் கிடையாது என்ற இறுமாப்போடு இருந்தால், வைரமுத்து மாதிரித்தான் உளற முடியும். கம்பனின் பாடல்களைப் படித்து உணர்வதற்கு இதிகாசம் என்றால் என்ன என்பதைப் பற்றிய அடிப்படை அறிவு வேண்டும். அறிவு இருந்தாலும் அதைத் தடித்தனமும் சுய கர்வமும் மறைத்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

கம்பனின் வாலி சொல்கிறான்:

கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்-
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை!

ராமனை நீ சீதையைப் பிரிந்ததால் திகைத்து விட்டாய் என்றுதான் சொல்கிறான். ஆனால் ஞானம் வந்த பிறகு அவன் சொல்வது இது:

"மறைகளும், முனிவர் யாரும், மலர்மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும், சொல்லும் துணி பொருள், திணி வில் தூக்கி,
அறை கழல் இராமன் ஆகி, அற நெறி நிறுத்த வந்தது"

ஞானம் இல்லாத வாலி திகைத்தனை போலும் என்று சொன்னதை மனநிலை பிறந்தவன் என்று மாற்றி உளறுவதை, பெரியாரியத் தடித்தனம் இருப்பவர்கள்தாம் செய்வார்கள்; தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவரை தூக்கிப் பிடிப்பவர்கள் மட்டுமே செய்வார்கள். இவர்கள் தமிழை வைத்துப் பிழைப்பவர்கள.

வாலியே ஞானம் பிறந்த பின் ராமனை முழு முதற் கடவுள் என்கிறான்.

இதிகாசங்களைப் படிக்கும் போது அதன் அடிப்படை அறத்தை மறக்காமல் படிக்க வேண்டும். இது கீழ்மையே கதியாய் வாழ்உடல் முழுவதும் இருப்பவர்களுக்கு புரியாததில் வியப்பே இல்லை.

  • திரு. பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்.

$$$

3. கம்பர் விருதை திரும்பப் பெறுக!

-இராம. நம்பிநாராயணன்

புத்திஸ்வாதீனம் இல்லாதவருக்கு விருது ஒரு கேடா? திருப்பப் பெறுக!

"கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!

    -நம்மாழ்வார்
"காசு இல் கொற்றத்து இராமன்"

"நடையின் நின்றுயர் நாயகன்"

    -கவிச்சக்ரவர்த்தி கம்பன்

(காசுஇல் கொற்றம்- எந்தக் குற்றமும் இல்லாத, வெற்றியும் ஆட்சி அதிகாரமும் கொண்ட இராமன் என்று பொருள்; நடையில் நின்றுயர் – நடை என்றால் நடத்தையாகும். நல்ல குழந்தை, மகன், சகோதரன், கணவன், நண்பன், எதிரி என அனைத்து பருவங்களிலும், எல்லா நிலைகளிலும், என்றும் எவர்க்கும் வழிகாட்டி வருபவர் ஸ்ரீ ராமனே)

இப்படி கம்பனாலும் ஆழ்வார்களாலும் போற்றப்பட்டவன் ஸ்ரீராமன்.

திகைத்தல் என்ற தமிழ் வார்த்தைக்கு தனக்குத் தெரியாத சம்ஸ்கிருதத்தில் “ஸ்வாதீனம் ” என்ற பொருளைத் தேடி, ராமன் புத்தி ஸ்வாதீனம் இல்லாமல் செயல்பட்டவன் என்று பேசும் எவரும் நிச்சயமாக தமிழ் அறிஞராக இருக்க முடியாது.

‘மீ டூ’ காமக் கொடூரன் தான் ராமன் மீது வெறுப்பு கொண்டு புத்திஸ்வாதீனம் இல்லாமல் பேசி இருக்கிறார்.

எனவே ஆழ்வார்களாலும் கம்பனாலும் போற்றப்பட்ட ஶ்ரீராமனை இழிவு செய்த இவருக்கு வழங்கிய விருதினை ஆழ்வார்கள் ஆய்வு மையம் திரும்பப் பெற வேண்டும். இந்த விருதினை இவருக்கு வழங்க மேடை அளித்த கம்பன் கழகம் விருதினை திரும்பப் பெறுமாறு ஆழ்வார்கள் மையத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

சென்னை கம்பன் கழகத்தின் தலைவரும் ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவனருமான ஜெகத்ரட்சகன் ஶ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு தன்னால் ஏற்பட்ட இழிவிற்கு ஹிந்து சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

  • திரு. இராம.நம்பிநாராயணன், ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியர்.

$$$

4. தமிழறிஞர்களுக்கு பொதுஅறிவும் வேண்டும்

-துக்ளக் சத்யா

கம்பர் விழாவில் ஸ்ரீராமர் பற்றிப் பேசியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. எதைப்பற்றிப் பேச, யாரை அனுமதிக்க வேண்டும் என்ற தெளிவு அழைப்பவர்களுக்கு இல்லாததன் விளைவு இது.

ராமர் கடவுளா, மனிதனா என்று முன்பொரு முறை கேட்டவர் அவர். ராமர் மனிதராக அவதரித்த கடவுள் என்றே தெரியாதவருக்கு ராமரை விமர்சிக்கும் தகுதி எப்படி இருக்கும்?

வாலியை மறைந்து நின்று கொன்ற களங்கத்துக்கு ஆளானதால்தான், களங்கம் நிறைந்த சந்திரனோடு ஒப்பிடுவதற்காக ‘ராமச்சந்திரன்’ என்று அவரை வர்ணித்தார் கம்பர் என்பது வைரமுத்துவின் கண்டுபிடிப்பு.

சூரியன் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு வெப்பம் மிகுந்தது. ஆனால், சந்திரனைப் போன்ற குளுமையான தன்மை கொண்ட ராமரை யாரும் நெருங்க முடியும் என்பதால் அவரை ராமச்சந்திரன் என்று கம்பர் வர்ணித்திருக்கக் கூடும்.

இது புரியாததால், ராமர் புத்தி ஸ்வாதீனம் அற்றவர் என்று பேசுகிற அளவுக்கு புத்தியை இழந்திருக்கிறார் வைரமுத்து.

கருணாநிதி அவர்களுடனும், ஸ்டாலின் அவர்களுடனும் மிக நெருங்கிப் பழகிய வைரமுத்து, அவர்களிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. அவர்களுடைய தவறுகளைப் பற்றி எந்த நாளும் பேசியதில்லை. திமுகவினருடன் இரண்டறக் கலந்து விட்ட வைரமுத்துவின் கண்களுக்கு திமுகவினரின் தவறுகள் தெரிந்ததே இல்லை. தன் பார்வையில் இவ்வளவு பெரிய குறைபாட்டை வைத்துக்கொண்டு, ‘ராமர் குற்றம் செய்து விட்டார்’ என்று பேசுகிறார்.

தன்னை நீதிபதியாக பாவித்துக்கொண்டு, ‘கம்பர் கடவுள். ராமர் குற்றம் செய்தவர்’ என்று அபத்தமாக தீர்ப்பளிக்கிறார்.

கம்பர் கடவுள் அல்ல, கடவுளைப் பாடியவர். ராமர், குற்றமற்று வாழ்வது எப்படி என்று தன் மனித அவதாரத்தின் மூலம் மனித குலத்துக்கு உபதேசித்தவர்.

பேச்சாளர்களுக்கு தமிழறிவு இருந்தால் மட்டும் போதாது. பொது அறிவும் கொஞ்சம் இருக்க வேண்டும்.

ஒரு விஷயம் தெரியாமல் இருப்பது குற்றமல்ல. தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்பதாவது தெரிந்திருக்க வேண்டும்.

இவருக்கு அதுவும் தெரியவில்லை. அதனால்தான் இப்படிப் பேசியிருக்கிறார்.

  • திரு. துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையாளர்.

$$$

5. A hallmark of Dravidian theology

-Jayasree Saranathan

Vairamuthu’s recent comments on Lord Rama’s mental stability are not new; he previously expressed the same misguided views in his 2019 Dinamani column and in a speech. That article was compiled into his book ‘Thamizhaatruppadai’ we never bothered to check and stop its publication. That’s our mistake.

Emboldened by that, he repeated the same now by twisting Vali’s accusation against Rama to suit his own narrative. The truth is, Vali, a wrongdoer, was being punished by Rama, the dispenser of justice. Vairamuthu’s flawed interpretation stems from his failure to grasp the context of the Ramayana.

By siding with the accused (Vaali) and maligning Rama, Vairamuthu reveals his own biases. This trend of glorifying Vaali (and Ravana also) while vilifying Rama, seems to be a hallmark of Dravidian theology. We must unequivocally reject this distorted narrative. Vairamuthu’s actions amount to hurting the religious sentiments of Hindus, warranting legal action. It’s imperative to hold him accountable for his words and bring him to justice.

  • Smt. Jayasree Saranathan is an Author and Researcher.

 $$$

Leave a comment