கம்பன் கழகங்களின் நோக்கம் என்ன?

-கவிஞர் சுரேஜமீ

சென்னை கம்பன் கழகம் நடத்திய விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு கம்பர் விருது வழங்கப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அதைவிட, இவ்விழாவில் வைரமுத்துவின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்? இதுகுறித்த கவிஞர் சுரேஜமீ அவர்களின் பதிவு இது…

அன்று கம்பரசம் எழுதிக் காமக் களிப்படைந்த அண்ணாவின் தம்பிகள் கம்ப ராமாயணத்தை எரிக்கத் தொடங்கியபோது எழுந்த பொறியில் விளைந்த இரத்தினம்தான் கம்பன் கழகம்.

மறைந்த தேச பக்தர், தேன்தமிழ்க் காவலர், செந்தமிழ் வார்த்த செம்மல்… நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டு, தன் சொத்துகளெலாம் சூறையாடப்பட்ட போதும், எஞ்சிய இராமாயணத்தால் இகபர சுகம் அடைந்த தியாகி: கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்கள்!

கன்னித் தமிழையும், கம்பன் நடையையும், இராமனின் அவதார நோக்கத்தையும், தமிழர் பண்பாட்டு, நாகரிக அடையாளத்தையும் ஒருசேரத் தமிழ் மண்ணில் விதைக்கப் போட்ட வித்து தான், தாய்க் கழகத்தின் தலையாய நோக்கமாக இருந்தது!

ஆனால் இன்று கழுதை தேய்ந்துக் கட்டெறும்பான கதைதான்!

**

சென்னை கம்பன் கழகப் பொன்விழா நிறைவு ஆண்டான 2025ஆம் ஆண்டுக் கம்பன் விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அளித்திருக்கிறார்களே?

ஒரு கவிஞனுக்கு அந்த விருதை அளிப்பதில் தவறில்லை; ஆனால், கம்பனின் காப்பியத்தில் நம்பிக்கை அற்ற ஒருவருக்கு,  கம்பனுக்காகத் தன் வாழ்நாளில் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாதவருக்கு, விளம்பரத்திற்காகவும், தன்னை ஓர் பேரரசாகக் கருத வேண்டும் என்ற வர்ண ஜாலத்திற்காகவும், கம்பனை அவ்வப்போது ஊறுகாய் போல தொட்டுக்கொள்பவருக்கு வழங்கப்பட்டதில் வருத்தமே!

ஆனாலும், வள்ளல் ஜெகத்ரட்சகனாயிற்றே? வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

**

கம்பன் விழாவில் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளாரே?

முத்துகளில் முரணெடுத்த சென்னை கம்பன் கழகத்திற்கு முதலில் வாழ்த்துகளைச் சொல்வோம்!

இதில் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் கலந்துகொண்டதில் தவறில்லை. அவரும், நறுக்குத் தெறித்தாற்போல,  ஈவெ.ரா, அண்ணா, கலைஞர் வழியில் நான் நடையில் நிற்கிறேன் என்று சொல்லிக் கம்பனுக்குப் புகழ் சேர்த்துவிட்டார்!

அவரை “நடையில் நின்றுயர் நாயகனாக்கி” கம்பனை விமர்சனத்திற்குள்ளாக்கினர் விழாக் குழுவினர்!

**

வைரமுத்துவின் அபத்தமான பேச்சு: அரங்கம் அதிர்ச்சி!

வாழ்த்துரையோடு நின்றிருக்கலாம்; ஆனால், வம்பு பேசியே பழக்கப்பட்ட வாயாயிற்றே! எனக்கும் கம்பனைத் தெரியும் என ஆரம்பித்து, அதற்குத் துணையாகக் கம்ப வாரிதியின் பெயரையும் அழைத்து, வைரமுத்து பேசிய பேச்சு, அரங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால் மிகையல்ல!

மேற்கோள் காட்டிய பாடல் வரிகளைப் பார்த்துவிடலாமா?

ஆவியைச் சனகன் பெற்ற
அன்னத்தை அமிழ்தில் வந்த
தேவியை, பிரிந்த பின்னை
திகைத்தனை போலும் செய்கை!

இந்த வரிகளை வைத்து,  தானும் கம்பனை ஆழங்கால் பார்த்தவன்தான் என உணர்த்த முயன்று தோற்றார்!

கலைஞர் இல்லையெனில் முகவரி இழந்திருப்பார், இந்த வைரமுத்து என்பதே உண்மை! அவர் என்ன பேசினார்?

சூரிய கிரணங்களை விடச் சொல்லின் வேகம் அதிகம் என்ற அதிசயக் கண்டுபிடிப்போடு பேசத் தொடங்கிய வைரமுத்து, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 84ஆவது பிரிவைக் குறிப்பிட்டு, இராமனை புத்தி சுவாதீனம் இல்லாதவனோடு ஒப்பிட்டுப் பேசியது அவலம்.

இனி கம்பன் மேடைகளில்  ‘புத்தி சுவாதீனமான’ வைரமுத்துவைப் பேச அனுமதிக்கக் கூடாது எனக் குமுறும் அளவிற்கு அர்த்தமற்ற உரையை நிகழ்த்தினார்.

இராமனை மன்னித்த  கம்பனைக் கடவுளாகவும், அவர் படைத்த இராமனை மனிதனாகவும் சொல்லி, தனக்குத் தானே இழிவு தேடிக் கொண்ட வைரமுத்து போன்ற அரை வேக்காடுகளை என்ன சொல்ல?

இதை வாசிக்கும் உங்களுக்கு வைரமுத்து பற்றி ஒரு அரிய செய்தியைப் பகிர விரும்புகிறேன்!

08.08.2025 அன்று நடந்த சென்னை கம்பன் விழாவில் ‘இயற்றமிழ் விருது’ பெற்ற மேனாள் காரைக்குடி கம்பன் கழகச் செயலாளர், பழ.பழனியப்பன் தான், முதன்முதலில் வைரமுத்துவுக்கு மேடை அமைத்துக் கொடுத்தவர்.

முனிவன் என்ற தலைப்பில் இரண்டு கவிதைகள் எழுதி வரச்சொன்னாராம்! இரண்டும் கவிதையே அல்ல என்பதே அன்றைய நிலை!

ஆனாலும், அவரைப் பற்றி ஒன்றும் அறியாததுபோல, இந்நிகழ்வில் பேசியது நன்றியற்ற செயல் என்பதே தமிழர் கோட்பாடு!

இனி என்ன சொல்ல?

$$$

Leave a comment